உலகம் பிறந்தது நமக்காக. The World Made for Us. Ulagam Piranththathu Namakkaaga.
நாம் பிறப்பதற்கு முன்பே பல காலங்களாக உலகம் இருக்கிறது. நமக்கு முன்னே பலகோடி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது “உலகம் பிறந்தது எனக்காக…” என்ற பாடல் வரிகளுக்கு என்ன பொருள்?
கேட்கின்றபோதே உற்சாகத்தைத் தருகின்ற இந்தப் பாடலின் உணர்வு, நமக்குள் நிரந்தரமாக இருந்துவிட்டால் எந்த நேரமும் நமக்குள் நாமே உற்சாகத்தைப் பெறமுடியும். எந்த அறிமுகமும் இல்லாத இந்த உலகத்தில் முதன்முதலாக காலடி எடுத்துவைக்கும் ஒரு குழந்தைக்காக (மனிதனுக்காக) என்னவெல்லாம் புதிதாகப் பிறக்கின்றன?

உலகில் பிறந்த புதிய உயிரின் பசியை உணர்ந்து, அன்பினில் ஊறுகின்ற அமிர்தம் சுரந்து அமைதி அருளும் அற்புதம் முதலில் பிறக்கிறது.
கால் தொடும் இடமெலாம் நிலமென தாயும், கூரையாய் விரிந்து உயர்த்திடும் தந்தையும், அரண் என காக்கும் உடனுறை உறவும் குடும்பமாகக்கூடி குழந்தையை வரவேற்க வீடு என்னும் உறவு வரமாய்ப் பிறக்கிறது.
குழந்தைக்கு முதன்மையான உறவுகள் ஏற்படுவது போலவே பெரியவர்களுக்கும் அந்தக் குழந்தையோடு புது உறவு ஏற்படுகிறது. பல உறவுகள் பதவி உயர்வுகள் பெறுகின்றன. புதிய அங்கத்தினரின் பெயரைத் தனது குடும்பத்தின் மகிழ்ச்சியாகச் சேர்த்துக்கொண்டு, புதிய நடைமுறைகளோடு சற்று விரிந்து நிற்கும் வீட்டில் அன்பு எனும் ஒரு புதிய உலகம் பிறக்கிறது.
அனுபவம் சொல்லும் உறவுகளின், அறிமுக மொழியின் துணையோடு நிமிர்ந்து நிற்கும் பருவத்தில், விரல் பிடித்து நடப்பதற்கும், வேடிக்கைகள் காட்டுதற்கும் வெளியே இருக்கும் புதுஉலகம் புன்னகையோடு பிறக்கிறது.
கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், புத்தகங்கள், அறிவார்ந்த பெரியவர்களின் மொழிகள் என வளரும் பருவத்தில், தொடரும் பயணத்திற்குத் துணையாக வருகின்ற, முயற்சிக்கு ஏற்ற வளர்ச்சியைத் தருகின்ற அறிவு உலகம் நவீனமாகப் பிறக்கிறது.
கற்ற அறிவைக் காட்டுகின்ற களமாக, பெற்ற அறிவைப் பயன்படுத்தும் பாதையாக, தகவமைப்பைச் சொல்லித்தருகின்ற சூழ்நிலைகளின் கூடமாக அலுவலகம், வணிகம், சமுதாயம் என வகைவகையான மாற்றங்களைத் தருகின்ற வாய்ப்புகளின் வாசல் விசாலமாகப் பிறக்கிறது.
அன்பு, நட்பு, காதல், விருப்பு, மறுப்பு, வெற்றி, தோல்வி, கோபம், குழப்பம், தெளிவு, விளைவு என மனிதன் தன்னுடைய உணர்வுகளின் ஊஞ்சலில் அனுதினமும் முன்னும் பின்னுமாக ஆடுகின்றான். இந்நிலையில் அறிவையும் உணர்வையும் அளவாய்ப் பங்கிட்டு வாழ்க்கையை வடிவமைக்கும் மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவம் பிறக்கிறது.
இதுவரை கூறிய அனைத்துமே ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகப் பிறந்துவிட்டால் வாழ்க்கை என்பது அதிர்ஷ்டத்தின் வாய்ப்பாக அமைந்துவிடும். ஆனால், அத்தகைய வாய்ப்பு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இதை புரிந்துகொண்டு வாழத்துணிந்தால் மனதில் உறுதி வலிமையாகப் பிறக்கிறது.
நலம் இருக்கும் இடத்தைத் தவிர்த்துவிட்டு, இல்லாத இடத்தைக் கிளறும் மனதை இழுத்துப் பிடித்து நல்வழிப்படுத்தி, நடக்கும் அனைத்திலும் நமக்குத் தெரியாத நன்மைகள் இருக்கும் என்று ஏற்றுக்கொண்டு நேர்வழியில் முன்னேறி செல்பவர் மனதில் என்றும் அமைதிப் பிறக்கிறது.
மேடுபள்ளங்கள் நிறைந்த இந்த நடைமுறை வாழ்க்கையில் கிடைக்கும் அனுபங்களைப் பக்குவமாக ஏற்றுக்கொள்கின்ற, தனக்கென்று கிடைக்கும் நல்ல வாய்ப்புகளுக்கு, வெற்றிகளுக்கு, துணையாக இருப்பவர்களுக்கு மனதார நன்றி கூறுகின்ற நிறைவான தெளிந்த மனதில் என்றும் மகிழ்ச்சி பிறக்கிறது.
நேர்மறையான அன்புதான் மனிதனை இயக்கும் அடிப்படையான சக்தியாக இருக்கிறது. நேர்மையான பொருளாதாரம்தான் மனித வாழ்க்கையின் ஆதார சக்தியாக இயங்குகிறது. முன்னேறுகின்ற ஒவ்வொரு நிலையிலும் இந்த இரண்டு சக்திகளையும் சீராக சமன்செய்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்பவன் மனதில் நிம்மதி பிறக்கிறது.
உயர்த்தும் உயர்ந்த பண்புகளும், விழிப்புடன் உதவும் வழிகளும், முன்னே நகர்த்தும் பழக்கங்களும் இணைந்த வாழ்க்கை அமைத்துக்கொண்டால் வாழும் வாழ்க்கை என்பதே வெற்றியாகப் பிறக்கிறது.
தனக்குள் பதிந்த பண்புகளைத் தலைமுறைக்கும் கடத்துகின்ற, இயற்கையின் அதிசயம் புரிந்துகொண்டால், நேர்படவாழும் நெறிதனையே நேர்த்தியாகச் செயல்படுத்தும் நேர்மறை எண்ணம் வளர்ந்துவிடும். இவ்வாறு தன்னைத் தானே வார்த்தெடுக்கும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் மனிதன் மனதில் சிந்தனை என்றும் சீராகப் பிறக்கிறது.
ஓடும் நதிகள், மலரும் மலர்கள், காற்றில் ஒலிகள், கடலின் அலைகள் என எங்கும் காணும் இயற்கையின் வடிவத்தில் இறைவன் இருப்பதை உணர்ந்துவிட்டால், பார்வைக்கு எளிமையாகக் காட்சித்தருகின்ற இந்த உலகம் பிரமிக்கத்தக்க பிரமாண்ட ஆற்றலின் ஊற்றாகப் பிறக்கிறது.
காலை சூரியன் தனக்காகவே பிறந்திருக்கிறது என்று வரவேற்கும் மனதின் உற்சாகம், பொறுப்பை உணர்ந்து செயல்படும் கடமையிலும் சிறப்பாக வெளிப்படுகிறது. இந்த மகிழ்ச்சியில் மலரும் நன்றிக்குப் பரிசாக இயற்கையின் வாழ்த்தும் பிறக்கிறது.
சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் வாழ்க்கை வழங்கும் வாய்ப்பு என உணர்ந்து, சவால்களில் ஒளிந்திருக்கும் தீர்வுகளைக் காண்பவன் வாழ்க்கை வளமான வாய்ப்புகளின் அணிவகுப்பாகப் பிறக்கிறது.
நாளும் முறையாக உழைக்கும் முயற்சி, காலத்தோடு இணைந்து வளர்ந்து, கண்களில் காணும் உலகத்தைக் கைகளிலே தருகிறது. கையில் பெற்ற உலகத்தைக் கையாளும் திறத்தாலே, விளையும் வாழ்க்கை வெற்றியின் பலனாகப் பிறக்கிறது.
ஒவ்வொரு நாளும் இயற்கை தருகின்ற வாய்ப்புகளில் நன்மைகள் பெற்று வளர்கின்ற மனிதன், தருகின்ற பண்பைப் பெறும்போது, சிறந்த வாழ்க்கையின் நோக்கம் முழுமையாகப் பிறக்கிறது.
ஆண் பெண் என்ற பேதமுமில்லை, இளமை முதுமை என்ற மாறுபாடுமில்லை. உலகம் பிறந்தது நமக்காக என்று உணர்வோம் உயர்வோம் சிறப்பாக. இந்த இயற்கை தருகின்ற பரிசுகளை உணர்ந்து ஏற்றவர் வாழ்க்கையில் இன்பம் என்றும் இனிமையாகப் பிறக்கிறது.
# நன்றி.