நாயகன் ஈஷான் பல்பாலே .The Hero Eshan Balbale.
உண்மை கதை:
மும்பை தானேவைச் சேர்ந்த ஈஷான் பல்பாலே (Eshan Balbale) 2015ல், பதினேழு வயது, பன்னிரண்டாம் வகுப்பு மாணவராக இருந்தார்.
அப்போது மும்பையில், மான்குர்ட் என்ற ஊரில் உள்ள சாத்தே நகர் என்ற 1500 குடும்பங்கள் வசிக்கும் பகுதி மிகவும் மாசுபட்ட பகுதியாக இருப்பதை ஈஷான் அறிந்தார்.
அங்கு வாழும் மக்கள் வேலைக்கு, இரயில் நிலையத்திற்கு, பள்ளிக்கு, மருத்துவமனைக்கு என வெளியே எங்கு செல்வதற்கும் ஒன்றரை கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டிய நிலை இருந்தது.
அவ்வாறு நீண்ட தூரம் நடக்க முடியாத மக்கள், தொழிற்சாலையின் ஆபத்தான கழிவுகள் கலந்து சாக்கடையாக ஓடுகின்ற கழிவுநீர் ஓடைக்குள் இறங்கி குறுக்கே நடந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இதில் முக்கியமாக, பள்ளிக்குச் செல்கின்ற இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் சுகாதாரம் அற்ற அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க முடியாமல் தினமும் அதை இருமுறை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர் என்பது மிகப்பெரிய அவலமாக இருந்தது.
இந்தக் கடுமையான நிலையைக் கண்ட ஈஷான் பல்பாலே இதற்கு நல்ல தீர்வு காணும் நோக்கத்தோடு பொறுப்பில் இருந்தவர்களை அணுகி பலவிதமான முயற்சிகள் செய்தார்.
அப்போது அவர் நிர்பய் யுவ ப்ரதிஷ்தான் எனும் NGO அமைப்பை உருவாக்கி, அதன் மூலமாக அந்தப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து மனுக்கள் கொடுப்பது வேண்டுகோள் விடுப்பது என தொடர்ந்து செய்த விடாமுயற்சிகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
பள்ளி செல்லும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் ஓடையின் குறுக்கே பாலம் கட்டுவது மிகமிக அவசியம் என உணர்ந்த ஈஷான், அதை தனது பொறுப்பாக எடுத்துக்கொண்டார்.
ஆனால், அந்தக் குறிப்பிட்ட நகர் பகுதி ஆக்கிரமிப்புப் பகுதி என்பதால் அரசாங்கத்தின் உதவிகள் ஏதும் கிடைப்பதில்லை என்பதோடு கான்கிரீட் பாலத்தைக் கட்டுவதற்கு BMC அதிகாரிகளின் மறுப்பும் உறுதியாக இருந்தது.
எனவே, அனுமதி பெறுவதற்கான முயற்சியும், நேரமும் கூடுதலாகத் தேவைப்படும் என்பதால் தற்காலிக நிவாரணமாக, உடனடியாக ஒரு மூங்கில் பாலம் கட்டுவதற்கு ஈஷான் துணிந்தார்.
தானே பகுதியில் ஏழை குழந்தைகளுக்கான பள்ளியை நடத்துகின்ற தனது பெற்றோர் நிதி உதவி தந்த நிலையில், மூங்கில் பாலம் கட்டும் வேலைக்கான ஒப்பந்ததாரர்களை நியமித்து, தேவையான பொருட்களை வாங்கி 100அடி நீளமும் 4அடி அகலமும் கொண்ட ஒரு மூங்கில் பாலத்தை 8 நாட்களில் கட்டி முடித்தார்.
2015 ஆகஸ்ட் 29ஆம் நாள் திறந்து வைக்கப்பட்ட அந்த மூங்கில் பாலம் தாற்காலிகமானதுதான் என்றாலும், ஒரே சமயத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நடந்தாலும் தாங்கும் அளவுக்கு உறுதியான கட்டுமானமாக உருவாக்கினார்.
தொடர்ந்து, பாலத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்று நடத்திய ஈஷான், அந்த நகர் மக்களுக்குக் கழிப்பிட வசதிகளும் செய்து கொடுத்து அங்கு வாழ்பவர்களும் மனிதர்கள்தான் என்ற உணர்வைத் தனது செயல்கள் மூலம் வெளிப்படுத்தி அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கல்லூரி படிப்போடு சேர்த்துச் சமூகப் பணியும் செய்த ஈஷான், அடிப்படை வசதிகள் இல்லாத வேறுபல பகுதிகளையும் மேம்படுத்த தன்னோடு இணையும் மற்ற இளைஞர்களையும் ஊக்குவித்தார். பத்திரிக்கைகள், சமூக ஊடகங்கள் வழியாகப் பல பாராட்டுகளைப் பெற்ற ஈஷான், பெற்றோரின் வழியில் பாரம்பரிய பள்ளியை நடத்துவதன் மூலம் எளிய குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாகவும் செயல்படுகிறார்.
மேலும், Balbale Welfare Foundation மூலமாக பள்ளி குழந்தைகள் நலன், பெண்கள் முன்னேற்றம் என பின்தங்கிய மக்களின் நலன் நாடும் சமூகச் செயல்பாடுகளுடன் தன்னை இணைத்துக்கொண்ட ஈஷான் மும்பையின் உண்மையான நாயகனாக உயர்ந்து விளங்குகிறார்.
# நன்றி.