மரமே நீ அழகு! Oh! Tree You Are Beautiful. Marame Nee Azhagu!
பனிக்காற்றின் பெருமூச்சில்
உதிர்ந்து பறந்தன பழுத்த இலைகள்.
நிழல் தந்த நிலைமாறி
நிலத்தில் கிடந்தன முதிர்ந்த இலைகள்.
மிரட்டும் குளிரில் முகம் காட்டாமல்
பதுங்கிக்கொண்டன பசுந்துளிர்கள்.
ஒற்றைக்கால் ஊன்றி நின்று
உயர்தவம் ஏற்ற முனிவர் போல,
போர்த்தியிருந்த இலைகள் உதிர்த்து,
கிளைகள் விறைக்கும் – கடுங்குளிரை எதிர்த்து.
வேருடன் நிலத்தை இறுக்கிப் பிடித்து,
உறுதியை என்றும் உணவாய் எடுத்து
திடமாய் நின்று வலிமை காட்டியது
இயற்கை வரைந்த கோட்டு ஓவியம்.
நடுங்கும் குளிரிலும் நட்பாக
காதில் சொன்னது காற்று!
மரமே நீ அழகு!
இலையுதிர்க் காலத்திலும்
உதிராத உன் நம்பிக்கை அழகு.
வசந்தகாலம் வரும்வரை
வாழும் காலத்தின் வாய்ப்புகளை
விரிந்து ஏற்கும் உன் வலிமை அழகு.
மாறுகின்ற பருவத்தை மறுக்காமல்,
தன்னிலை தவிப்பிலே தளர்ந்து போகாமல்
வருகின்ற வாய்ப்பையே வளர்ச்சியாக்கும்
உனக்குள் இருக்கும் இயக்கம் அழகு.
பழையன கழிந்தன புதியவை தோன்றின.
இளம் வெயில் வந்ததும் இளமை பூத்ததும்,
கிளைகளில் எங்கும் பசுமை துளிர்த்தன.
துளிர்த்த இலைகளின் காட்சிகள் வளர்ந்தன.
பறவைகள் சேர்ந்து கூடுகள் அமைத்தன.
கோடையின் கொடைக்கு அணிகலன் ஆக்கின.
அணில்கள் ஓடும் கிளைகள் எங்கும்
குருவிகள் கூட்டம் கூடிச் சிரித்தன.
கிளைகள் நுழைந்து, இலைகள் தழுவி – புது
வாசம் வாங்கி, சுவாசம் நிறைத்து
மீண்டும் சொன்னது காற்று.
மரமே! நீ அழகு!
வெளியே தெரியா வேர் அழகு!
கிளைகள் அழகு! இலைகள் அழகு!
காலம் வரும்வரை காத்திருந்து
வாழ்ந்து காட்டும் உன் வலிமை மிக அழகு!!
# நன்றி.