உணவும் உணர்வும்:Food and Emotion:Unavum Unarvum
உணவு.
உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையாக இருக்கும் உணவு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கிறது.
காட்டில் விலங்குகளைப் போலவே வாழ்ந்த ஆதிமனிதனை, நெருப்பின் பாதிப்பு அச்சுறுத்தினாலும், அதுவே உணவைப் பதமாக்கி, சுவையைக் கூட்டுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
இதனால் அவனே நெருப்பை உருவாக்கவும், அதை பாதுகாத்து வைக்கவும், இரவின் இருளில் ஒளியாகப் பயன்படுத்தவும் அறிந்துகொண்டான்.
நாளடைவில், உணவின் தேவை உயர்ந்தவுடன் அதற்கு தேவையான பானைகள், கருவிகள், சக்கரம் என வளர்ந்த உணவு சாம்ராஜ்யம் அதனோடு இணைந்த விவசாயம் வியாபாரம் என வாழ்வியலும் சிறப்பாக வளர்ச்சியடைந்தது.
உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருந்த உணவு நாளடைவில் குறிப்பிட்ட பகுதி மக்களின் சுவைக்கேற்ற அடையாளமாக அமைந்தது. இதனால் இது ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும் சொந்தமான தனித்தன்மையுள்ள உணவாக (cuisine) சிறப்புத் தன்மையோடு விளங்குகிறது.
அன்று அறுசுவைக்குள் இருந்த உணவு இன்று சைவம், அசைவம், வீகன்(vegan), பீகன்(Beegan), பெஸ்கேட்டரியன்(pescatarian), பிளிக்ஸிடேரியன்(flexitarian),… போன்ற விதவிதமான உணவுகளாக, தனிமனித தேர்வுக்கு ஏற்ற வகையில் பலவிதமாக விரிவு அடைந்திருக்கிறது
பாரபட்சம் இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் உயிர்த்தேவையாக இருக்கும் உணவை அடிப்படையாக வைத்து வாழ்வியலில் வளர்ச்சியடைந்த மனிதன், “உயிர் வாழ்வதற்கான திறன்களை உருவாக்கியதோடு உயர்ந்து வாழ்வதற்கான திறன்களையும் சிறப்பாக வளர்த்து வெற்றிகண்டான்”.
இதனால், கலை வடிவங்களை உருவாக்கவும் சுயசிந்தனையுள்ள நாகரிகமான வாழ்க்கையைக் கட்டமைக்கவும் உதவும் உணவே சமுதாய வெற்றிக்கும் அடிப்படையாக இயங்குகிறது.
உணர்வு:
உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள விதவிதமான ஒலிகளை எழுப்பிய ஆதிமனிதன், ஒவ்வொரு வார்த்தையாக உருவாக்கிப் பேசத் தெரிந்தவுடன் மொழியின் ஆற்றலை உணர்ந்தான்.
சமகாலத்தில் வாழ்பவர்களோடு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்மொழி மனிதனின் சிந்தனையை மேலும் வளர்த்தது. இதனால் உருவான எழுத்து வடிவங்கள் மனிதனின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் பதிவு செய்யும் வாய்ப்பாக அமைந்து, எண்ணும் எழுத்தும் கண்ணாக அமைந்த நாகரிகம் சிறப்பாக வளர்ந்தது.
மலைகளில், குகைகளில் வண்ணக்கட்டிகளைப் பயன்படுத்தி வரைந்த கோட்டுச் சித்திரங்கள் மனிதன் தன் உணர்வுகளை, சிந்தனைகளைக் காட்சிகளாகப் பதிவு செய்யும் வழிக்குத் தொடக்கமாக அமைந்தன.
பலதரப்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் நுட்பம் மேலும் வளர்ச்சியடைந்து, எழுத்து வடிவங்களில் பதிவான கதைகள், காப்பியங்கள், வரலாற்று செய்திகள் என விரிந்து சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது.
ஓவியக்கலையில் தொடங்கி வெவ்வேறு வடிவங்களில் வளர்ந்த காட்சிகள், நாடகம், சினிமா போன்ற ஊடகங்களின் வளர்ச்சியாகத் தொடர்ந்தன. பிரமாண்டமான, அழகிய இயற்கை காட்சிகள், ஆறுகள், மலைகள் என காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் அவற்றை நேரில் பார்த்திராத மக்களும் இன்புறும் வகையில் இரசனைக்கு உரியதாக, கண்ணுக்கு விருந்தாக இருக்கின்றன.
இத்தகைய ஊடகங்கள் பார்வைக்கு இனிமையான காட்சிகளைத் தேடிப்பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்ல பல நிலைகளில் உள்ள உணர்வுகளின் நுணுக்கங்களையும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கி வாழ்க்கையின் நவரசங்களை விளக்கிக் காட்டுகின்றன.
உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் மனிதனின் இயல்பான முயற்சியால், காலம்காலமாகத் தொடர்ந்து வருகின்ற செவிவழி கதைகள், பாடல்கள் போன்ற அரிய கலைகள் பேச்சுவாக்கில் வளர்ந்து பல தலைமுறைகள் கடந்துவந்தும் செவிக்கு இன்பம் தருகின்றன.
தாலாட்டு, நடவு, கும்மி எனத் தொடங்கும் வாய்மொழிக் கலைகளின் சுவாரஸ்யமே கேள்வி ஞானமாக வளர்ந்து, கல்வியின் விளக்கமாக வளர்ந்து, வாசிப்பின் பயனாகத் தொடர்ந்து சிந்தனையைச் செம்மையாக்குகிறது.
சங்கீதம் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர்களும் இனிமையான இசையை, பாடலை இரசிப்பதைப்போல, சிறந்த நூல்களைக் கற்றறிந்த ஆன்றோர் பெருமக்கள் எளிமையாகக் கூறுகின்ற மேன்மையான செறிவுள்ள கருத்துகள் அனைவரும் மனவளத்தோடு வாழ்வதற்கு உதவுகின்றன.
இவ்வாறு, வெவ்வேறு வாய்ப்புகளின் வழியாக பல வடிவங்களில் நாம் பெறுகின்ற தகவல்கள் நமக்குள் இரண்டற கலந்து நம்முடைய சிந்தனையைச் சீராக்குகின்றன. இத்தகைய சிந்தனையின் அடிப்படையில் உருவாகும் உணர்வுகள் வாழ்க்கையின் சுவையாக வெளிப்படுகிறது.
அடர் நிறத்துக்கும் வெண்மைக்கும் இடையில் பலவிகிதங்களில் உருவாகும் நிறக்கலவையின் shades பல நிறங்களை உருவாக்குவதுபோல, மனஉணர்வுகளின் அடர்த்தியும் தனிப்பட்ட மனிதரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு விகிதங்களில் எண்ணங்களாக உருவாகி அதுவே வாழ்க்கையின் வண்ணங்களாக நிறைகின்றன.
இவ்வாறு, உலகை உயர்த்தும் பயனுள்ள கண்டுபிடிப்புகள், சமுதாயத்திற்கு பயனுள்ள படைப்புகள், தொழில்முறை முன்னெடுப்புகள் என வாழ்க்கையை உயர்த்தும் அனைத்துப் பரிமாணங்களும், முறையாகக் கையாளப்பட்ட உணர்வுகளால் கிடைத்த முன்னேற்றங்களே.
வளர்ச்சி:

சிந்தனையை வளர்க்கும் எழுத்து வடிவத்திற்கு பல சிறப்புகள் இருப்பதுபோலவே, காட்சி வடிவத்திற்கும் பல சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டும் இருக்கின்றன.
ஒரே சங்கதியாக இருந்தாலும் புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொள்வதும், அதையே காட்சியாகப் பார்ப்பதும் வெவ்வேறு விதமான சுவையோடு இருக்கிறது.
ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பதன் மூலம் கிடைக்கும் அனுபவம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் அனுபவமாக, சிந்தனையை விரிவாக்கி, கருத்துக்கு விருந்தாக அமைகிறது. இதனால் ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும் மனதின் வேகத்தைக் கட்டுப்பாட்டோடு செலுத்துவதற்கான நல்ல பயிற்சியாக வாசிப்பு அமைகிறது.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் சுய சிந்தனைகளை வளர்க்கும் நல்ல வாய்ப்பாக இருக்கிறது. அதையே காட்சியாகப் பார்க்கும்போது அது பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்ட சிந்தனைகளின் வாய்ப்பாக முற்றிலும் வேறுபட்ட சுவையோடு இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்திருப்போம்.
உதாரணமாக, சுவாரஸ்யமான பல திருப்பங்களோடு கல்கி எழுதிய பார்த்திபன் கனவு என்ற நாவலில், ஆழமான அழுத்தமான உணர்வுகளை நுணுக்கமாக விவரித்த விதமும், சிவனடியார் யாராக இருக்கும் என்ற சஸ்பென்ஸைக் கடைசிவரை தொடரமுடிந்த வாய்ப்பும், அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கும் அளவுக்கு இனிமையான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருந்தது.
அந்தக் கதையைக் காட்சி வடிவத்தில் திரைப்படமாகப் பார்க்கும்போது, சிவனடியார் யார் என்று (சஸ்பென்ஸ் இல்லாமல்) பார்க்கும் நமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவதும், படத்தின் மற்ற கதாப்பாத்திரங்களுக்குத் தெரியாது என்பதும் நாவல் படிப்பதிலிருந்து மாறுபட்ட கோணத்தில், வேறுவகையான சுவையோடு இருந்தது.
அதே நேரத்தில், இயற்கை கட்சிகளின் அழகு, மாமல்லபுரத்துச் சிற்பங்கள் என அவற்றை பார்த்தறியாத மக்களும் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இருந்ததோடு, இனிமையான பாடல்கள், நடனக் காட்சிகள் என கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமைந்தது.
மேலும், கதையின் சுவை கூட்டும் ஓடக்காரப் பொன்னன், வள்ளி உட்பட்ட பல கதாப்பாத்திரங்கள் புதுவடிவம் பெற்றுக்கொண்டார்கள் என்ற உண்மை காட்சி ஊடகத்தின் வலிமையாக இருக்கிறது.
வயிற்றுப் பசியைப் போக்கி உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவு ஆரோக்கியத்திற்கும் அவசியமாக இருப்பதுபோலவே, அறிவுப்பசிக்கு உணவாகும் கருத்துகள் சீரான சிந்தனை வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான உணர்வுகளுக்கும் அவசியமானதாக இருக்கின்றன.
விதவிதமான சுவையோடு உணவுகள் கிடைக்கும் இடத்தை உணவகம் என்கிறோம். அதுபோல அறிவுக்கு விருந்தளிக்கும் வாய்ப்புகளை உணர்வகம் என்று கூறுவது பொருத்தம் என்றே நினைக்கிறேன்.
நல்ல உணவகம் ஆரோக்கியமான உடல்நலத்தை மேம்படுத்தும். நல்ல உணர்வகம் மனவளத்தையும், அறிவு நலத்தையும் மேம்படுத்தும் என்பது உறுதி.
முன்னோர், பெற்றோர் எனும் கட்டுப்பாட்டில் இல்லாத மரபணு அடையாளங்களை ஏந்திக்கொண்டு உருவாகின்ற உடலின் ஆரோக்கியம், இன்று நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள உணவு, பழக்கவழக்கம், பராமரிப்பு எனும் வாய்ப்புகளிலும் இருக்கின்றது.
அதுபோலவே, பிறந்து வளரும் சூழ்நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றின் பதிவுகளைத் தாங்கி உருவாகும் வாழ்க்கை என்பதும் தனிப்பட்ட ஒழுக்கம், பண்பு, சிந்தனை, உணர்வு போன்றவைகளால் கையாளப்படுகின்ற வாய்ப்பாக, வாழ்க்கையின் வெற்றியாக வளர்கிறது.
வெற்றி:
உண்மையான வெற்றி என்பது அவரவர் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதால் வெற்றிகளும் விருதுகளும் பலவிதங்களில் வெளிப்படுகின்றன. இருந்தாலும் நுட்பமான உணர்வுகளை முறையாகக் கையாளும் திறனே சிறப்பான வெற்றியைத் தருகிறது என்று பெரும்பாலான நிகழ்வுகள் கூறுகின்றன.
வாழ்க்கையில் சந்திக்கும் உணர்வுகள் பொதுவானவை என்றாலும் அந்த உணர்வுகளைச் சிறப்பாகக் கையாளும் திறன் வாழ்க்கையில் வளர்ச்சியைத் தருவதோடு தனித்துவமான வெற்றிக்கும் காரணமாக இருக்கிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Vanderlei Cordeiro de Lima என்ற மராத்தான் வீரர், 1996ல் நடந்த ஒலிம்பிக்கில் 47வது இடத்தையும், 2000ல் 75வது இடத்தையும் பெற்றிருந்த அவர், தனது கடினமான முயற்சியால் 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு முதல் இடம் நிச்சயம் என்ற நிலையில் முன்னிலையில் ஓடிக்கொண்டிருந்தார்.
இன்னும் முப்பது வினாடிகளில் முதலிடம் உறுதி என்ற நிலையில், பார்வையாளர் கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்த ஒருவன் Vanderlei ஐ ஓரமாக இழுத்துவிட்டான்.
திடீரென்று ஏற்பட்ட அந்தத் தாக்குதலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் சில வினாடிகள் சென்றதோடு ஓட்டத்தின் வேகமும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ஓடி போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அவர் அதை புன்னகையோடு ஏற்றுக்கொண்டார்.
போட்டியின்போது, திடீரென்று ஏற்பட்ட அந்தத் தாக்குதலைச் சமாளித்து, சில வினாடிகளில் வேகமாகத் தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டு, போட்டியில் தொடர்ந்து ஓடிய அவருடைய மனநிலையையும், தங்கப்பதக்கம் வாங்க வேண்டியவர் வெண்கலம் வாங்கிய நிலையிலும் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட அவருடைய விளையாட்டு உணர்வையும் (sportive) பாராட்டிய ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு Pierre de coubertin medal என்ற உயர்ந்த விருதை அளித்து கவுரவித்தது.
அதன்பிறகு அவர் 2016ல் பிரேசில் நாட்டில் நடந்த ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் பெருமையும் பெற்றார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது பெரிய வெற்றி என்றாலும், தன்னுடைய உணர்வுகளைச் சில வினாடிகளில் சமநிலைப்படுத்தி அந்தச் சவாலான சூழ்நிலையை வென்ற அவருக்குக் கிடைத்த இந்த விருதும் பெருமையும் அவரை மிகச் சிறந்த வெற்றியாளராக தனித்துவமாக வெளிப்படுத்துகின்றன.
குறிக்கோளை நிறைவேற்றுவதும் சாதனைகளை நிகழ்த்துவதும் நாம் இயல்பாக எதிர்பார்க்கும் சிறந்த வெற்றிகள். ஆனால், திடீரென்று எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையிலும் உடனடியாக தன்னிலைக்கு மீள்வதும், நிதானமான மனநிலையோடு உணர்வுகளைக் கையாளுவதும் பெருமைகளைத் தரக்கூடிய முழுமையான வெற்றிகள் என்பதை Vanderlei சந்தித்த இந்த நிகழ்வுகள் கூறுகின்றன.
ஆரோக்கியமான உணவும் உணர்வும் எல்லா நிலைகளிலும் மனிதனின் வளர்ச்சிக்குத் துணையாக இயங்குகின்றன என்பது முற்றிலும் உண்மை. அத்தகைய உணவையும் உணர்வையும் மேன்மையாகக் கையாளும் நுட்பமே வாழ்க்கையின் வெற்றியாக இயங்குகிறது என்பதும் நாம் சாட்சிபூர்வமாகக் காணும் உண்மை.
# நன்றி.