தெளிவான சிந்தனைகள்.Clear Thoughts.Thelivaana Sindhanaigal.
1.தனித்துவம்:
அரசவையில் கூடியிருந்த அமைச்சர்களும் தெனாலிராமனும் நீண்டநேரம் மன்னரின் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது வேகமாக உள்ளே வந்த மன்னர், “நேற்றிரவு ஒருவன் என்னை கால்களால் எட்டி உதைத்து விட்டான், அதோடு முகத்திலும் உமிழ்ந்து விட்டான். அவனை என்ன செய்வது சொல்லுங்கள்!”, என்று சத்தமாகக் கேட்டார்.
இதைக்கேட்ட அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்து, “அவனை சிறையில் அடைக்க வேண்டும், … அடிக்க வேண்டும், … உடைக்க வேண்டும்”, என்று தாங்கமுடியாத கோபத்தில் கொதித்தனர்.
மன்னரின் மீது இருக்கும் அன்பினால் அமைச்சர்கள் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்க, தெனாலிராமன் மட்டும் அமைதியாக இருப்பதை மன்னர் பார்த்தார். அமைச்சர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கையசைத்த மன்னர், தெனாலிராமனைப் பார்த்து, “அவனை என்ன செய்யலாம் கூறுங்கள்?” என்று கேட்டார்.
“தங்களை எட்டி உதைத்த கால்களுக்குப் பொன்னாலான தண்டையும், உமிழ்ந்த வாயில் முத்தமும் கொடுக்க வேண்டும்” என்று தெனாலி ராமன் கூறியதும் அமைச்சர்கள் அதிர்ந்து போனார்கள். “இந்த ராமனுக்கு என்ன ஆயிற்று, ஏன் இப்படி மதியிழந்து உளறுகிறார்!” என்று பதறினார்கள்.
ஆனால், மன்னர் மிக அமைதியான முகத்தோடு, “ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?”, என்று கேட்டார். தெனாலி ராமனும் எந்தப் பதட்டமும் இல்லாமல், “பலத்த பாதுகாப்புடன் இருக்கும் அரண்மனைக்குள் காவலை மீறி யாரும் உள்ளே நுழைய வாய்ப்பில்லை. அதோடு, வீராதி வீரரான தங்களைத் தாக்குவதற்கும் யாராலும் நிச்சயமாக முடியாது. எனவே, தங்களை எட்டி உதைக்கும் வல்லமை, பாலகனாக இருக்கும் தங்கள் குழந்தைக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் அந்தக் கால்களுக்குத் தண்டையும், வாயில் முத்தமும் கொடுப்பதுதான் சரி”, என்று மன்னரின் முகத்தைப் பார்த்துப் புன்முறுவலோடு கூறினார்.
உணர்ச்சி வசப்பட்டு ஆக்ரோஷமான நிலையில் இருந்த அமைச்சர்கள், தெனாலி ராமன் சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யத்தோடு மன்னரைப் பார்த்தனர். பதட்டத்தோடு கூறப்படுகின்ற வார்த்தைகளானாலும் அவற்றை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், சூழ்நிலையின் பின்புலத்தை ஆராய்ந்த தெனாலி ராமன், சரியாகக் கணித்துக் கூறுவதை மன்னர் மலர்ந்த முகத்தோடு ஆமோதித்தார்.
தெளிவான சிந்தனையால் தனித்துவமாகச் செயல்படுகின்ற தெனாலி ராமனின் அணுகுமுறையைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மன்னன் அவரை வெகுவாகப் பாராட்டினார்.
2.முகராசி:
காலையில் முதன்முதலில் பார்க்கும் காட்சியே அந்த முழுநாளையும் நிர்ணயிக்கும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கும் ஒரு மன்னருக்கு, காலையில் எழுந்ததும் மாடத்தில் நின்றவாறு தோட்டத்து மலர்களைப் பார்த்து மகிழ்வது வழக்கமாக இருந்தது.
அப்படியே, ஒருநாள் காலையில் கண்விழித்த மன்னர் மலர்களைப் பார்க்க மாடத்திற்கு வந்தார். அந்த நேரத்தில், முதல்நாள்தான் பணிக்குப் புதிதாகச் சேர்ந்திருந்த தோட்டக்காரனும் தூங்கியெழுந்து வெளியே வந்தான். வந்தவன் மாடத்தில் மன்னர் இருப்பதைப் பார்த்ததும் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அப்போது மலர்களைப் பார்க்க வேண்டுமென நினைத்த மன்னரோ தோட்டக்காரனைப் பார்த்துவிட்டார். இதனால் அவருக்குத் தோட்டக்காரன்மீது எரிச்சலாக இருந்தது. அந்த மனநிலையோடு அவர் நகரும்போது அங்கிருந்த தூணில் பலமாக இடித்துக்கொண்டார்.
இடித்துக்கொண்டதால் தலையில் ஏற்பட்ட வலியில் கோபம் இன்னும் அதிகமாகியது. இவ்வளவுக்கும் காரணம் அந்தத் தோட்டக்காரன் முகத்தில் விழித்ததுதான் என்று நினைத்த மன்னர், உடனடியாக அவனை வரவழைத்து நூறு கசையடிகள் கொடுப்பதற்கு ஆணையிட்டார்.
தோட்டக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் மன்னர் கோபமாக இருக்கிறார், எதற்காக நூறு கசையடிகள் கொடுக்கச் சொல்கிறார் என்ற குழப்பத்தில், மன்னரிடமே அதற்கான காரணத்தைப் பணிவோடு கேட்டான்.
மன்னர், தன்னுடைய வழக்கத்தையும், இன்று அவனுடைய முகத்தில் விழித்ததால், தூணில் இடித்துக்கொண்டதையும் கூறி தோட்டக்காரனின் முகராசிக்கு இந்தத் தண்டனையைத் தருவதாகக் கூறினார்.
இதைக் கேட்டவுடன் தோட்டக்காரன் சிரித்துவிட்டான். கசையடிக்குக் காரணம் கேட்டவன் வருத்தம் அடையாமல் சிரிப்பதைப் பார்த்த மன்னர் ஆச்சர்யத்துடன் அவனை விசாரித்தார்.
“என் முகத்தைப் பார்த்ததால்தான் நீங்கள் தலையில் இடித்துக்கொண்டதாகக் கூறுகிறீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்தவனக்கு நூறு கசையடிகள் என்றால் உங்கள் முகராசியை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது” எனக் கூறினான்.
தோட்டக்காரன் கூறிய வார்த்தையில் இருந்த உண்மை மன்னரின் மனதில் தெளிவை ஏற்படுத்தியது. உடனடியாகத் தன்னுடைய தவறை உணர்ந்து வருந்தினார். இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் தெளிவாகச் சிந்தித்து, நியாயமான கருத்தைக் கூறிய அவனுடைய தைரியத்தை மன்னர் பாராட்டினார்.
பார்க்கும் காட்சிகளை நேர்மறையாகச் சிந்திக்கும் பழக்கமே ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக உருவாக்குகின்றது என்பதை மன்னர் புரிந்துகொண்டார். மேலும், தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்ற முக்கியமான பாடத்தையும் கற்றுக்கொண்டார்.
பரிசு:
ஒரு நாட்டில் சதுரங்க விளையாட்டில் நன்கு தேர்ந்த மன்னன் தன்னிடம் சதுரங்கம் விளையாட வருபவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கும் வழக்கம் கொண்டிருந்தான். இதனால் தன்னுடைய நாட்டில் மட்டுமல்லாமல் வேற்று நாட்டில் உள்ளவர்களும் மன்னனோடு விளையாட வந்தார்கள்.
ஒருநாள் அரசவையில், ஞானிபோல மிக எளிமையான தோற்றத்தில் இருந்த ஒருவர் சதுரங்கம் விளையாட வந்திருப்பதாகக் கூறினார். அவருடைய எளிமையான தோற்றத்தைக் கண்டு மிகச் சாதாரணமாக நினைத்த மன்னன், தன்னை வென்று விட்டால் அவர் விரும்பி கேட்கும் பரிசு எதுவாக இருந்தாலும் தருவதாகக் கூறினான்.
வந்தவர் சில நகர்வுகளிலேயே தன்னை வென்றது மன்னனுக்கு வியப்பாக இருந்தது. எனவே, வாக்குக் கொடுத்தபடிப் பரிசளிக்க நினைத்த மன்னன், அவர் விரும்புகின்ற பரிசு என்ன என்று கேட்டான். மன்னரின் முகத்தை நேராகப் பார்த்த அந்த ஞானி “நான் பரிசு கேட்டாலும் அதை உன்னால் தரமுடியாது” என்றார்.
இதைக்கேட்ட மன்னனுக்குச் சற்று கோபம் வந்தது, “இந்த நாட்டிற்கே மன்னன் நான், இவ்வளவு எளிமையாக இருக்கும் உங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்ய என்னால் முடியாதா? என்ன வேண்டும் கூறுங்கள்!”, என்று ஆணவமாகக் கூறினான்.
வந்தவர் மிக அமைதியாக மன்னனைப் பார்த்து, “சதுரங்கப் பலகையில் உள்ள முதல் கட்டத்தில் ஒரு தானியம், அடுத்த கட்டத்தில் இரண்டு, அடுத்ததில் நான்கு, அடுத்ததில் எட்டு, அடுத்ததில் பதினாறு,… என ஒவ்வொரு அடுத்த கட்டத்திலும் இரண்டு மடங்காக பெருக்கி கடைசி கட்டத்தில் வருகின்ற அளவுக்குத் தானியம் வேண்டும்” என்று கூறினார்.
இதைக்கேட்ட மன்னனுக்கு நகைப்பாக இருந்தது. ‘சதுரங்கத்தில் என்னையே வெல்லும் அளவுக்குத் திறமை இருந்தாலும், இவருக்கு உருப்படியான நல்ல பரிசுகளைக் கேட்கத் தெரியவில்லையே’ என்று நினைத்துக்கொண்ட மன்னன், அவர் கேட்கும் அளவுக்குத் தானியம் கொடுக்கும்படி அதிகாரியிடம் கூறினார்.
மறுநாள் மன்னனைப் பார்க்க அவசரமாக ஓடிவந்த களஞ்சிய அதிகாரி, “நேற்று அந்த ஞானி கேட்டதுபோல தானியத்தைக் கொடுப்பதற்கு முடியவில்லை”, என்று பதட்டமாகக் கூறினான். “ஏன் முடியவில்லை?”, என்று கேட்ட மன்னனிடம் “ஒவ்வொரு கட்டத்திற்கும் இரண்டு மடங்காகப் பெருக்கி வைத்தால் அறுபத்தி நான்காவது கட்டத்தை நெருங்கும் முன்பே, கட்டத்தை நிரப்புவதற்கு களஞ்சியத்தில் உள்ள தானியம் போதாது!” என்று பதட்டத்துடன் கூறினான்.
இதை நம்பமுடியாத அளவு மன்னனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பார்ப்பதற்கு மிக எளிமையாக இருக்கும் மனிதர் விளையாட்டில் சிறப்பாக வென்றதோடு, எளிமையான பரிசுப்போல ஒன்றைக் கேட்டு இப்போது தன்னை பிரமிக்க வைத்துவிட்டாரே என்று வியந்தான். யாரையும் உருவத்தைக் கண்டு எளிமையாக நினைப்பதோ, தானே பெரியவன் என்ற ஆணவமோ இருக்கக் கூடாது என்பதை உணர்ந்தான்.
அப்போது அங்கு வந்த ஞானியை வணங்கிய மன்னன் தன்னுடைய அறியாமையால் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். உண்மையை உணர்ந்த மன்னனைக் கருணையோடு பார்த்த ஞானி, தனக்கு எந்தப் பரிசும் வேண்டாம் என்றும், மன்னனுக்குத் தன்னிலை உணர்த்தவே அவ்வாறு கேட்டதாகவும் கூறி, எல்லா வளங்களோடு மனவளமும் பெற்று சிறப்பாக வாழ அன்போடு வாழ்த்தினார்.
# நன்றி.