🌹மலருக்கு வாழ்த்து மடல்: Malarukku Vaazhthumadal : Greeting Card for Flower.
மலரே உன் பயணம்
மானிடர்க்குப் பாடம்தான்!
பிறர் வாழ வாழ்த்தும்போதும்
நீ வாழ்ந்து காட்டுகின்றாய்!
நானிலத்தை உன் அழகால்
உன்னதமாய் மாற்றுகின்றாய்,
நீ கொண்ட நறுமணத்தைக்
காற்றோடு கரைக்கின்றாய்.
குழந்தைகளின் கைகளிலே
குதித்து விளையாடுகின்றாய்,
கோவில் விழா என்றாலும்
குதூகலத்தைத் தருகின்றாய்.
கன்னியரைக் கவர்வதற்குக்
களிப்போடு இருக்கின்றாய்,
அழகுக்கு அழகூட்ட
உன்னழகை அளிக்கின்றாய்.
திருமணம் என்றாலும்
நறுமலராய்த் திகழ்கின்றாய்,
வாழ்த்துப் பல கூறிடவே
வனப்பாய் வருகின்றாய்.
மங்கையரின் கூந்தலுக்கு
அணி செய்து மகிழ்கின்றாய்,
தெய்வத்தின் திருமேனியில்
திருப்பொருளாய்த் தவழ்கின்றாய்.
பெரியோரை வரவேற்க
பெருமையோடு வருகின்றாய்,
அரசியல் பேசினாலும்
அன்போடு அணைக்கின்றாய்.
அனைத்தும் முடியும்முன்னே
அறிவுரையும் கூறுகின்றாய்,
ஆடி முடிந்து விட்டால்
ஆரத் தழுவுகின்றாய்.
வாழ்க்கை முடிந்த பின்னும்
வழி அனுப்பி வைக்கின்றாய்,
வாழ்க்கையின் தத்துவத்தை
நீ வாழ்ந்து காட்டுகின்றாய்.
வாழ்க்கை எனும் பயணத்தில்
வழித்துணைக்கு வருகின்றாய்,
வழிபாடு என்றவுடன்
பக்தி மணம் கமழ்கின்றாய்.
வகைவகையாய் வளம்காட்டி
உளம் மகிழச் செய்கின்றாய்,
வாழ்நாள் முழுதும் உனைநாடும்
வாய்ப்புத் தந்து வாழ்த்துகின்றாய்.
வாழ்க்கை முழுவதும் பிறர் மகிழ
வண்ணம் பல காட்டுகின்றாய்,
மணம் பரப்பி தேன் கொடுத்து
மனதில் நீ நிறைகின்றாய்.
மென்மைக்கு மேன்மையான
சாட்சி சொல்லிச் சிரிக்கின்றாய்,
ஐம்புலனும் இன்பம் பெற
அணிவகுத்து மலர்கின்றாய்.