இயற்கை வளம் காப்போம்: Iyarkkai valam kaapom. Let’s Save Natural Resources.
வாழைமரம் வளர்ந்து நின்று
காய்கனிகள் தந்த பின்னே
கன்றுக்கு வழிகாட்டி
தன்னிருப்பை எருவாக்கும்.
ஓரறிவு உயிர்கள் எல்லாம்
உயர்ந்து நின்று வழிகாட்ட
ஆறு அறிவு மனிதன் மட்டும்
அரை அறிவாய் குறைந்தது ஏன்?
அலை புரளும் ஆற்றோரம்
மணல் திருடிப் பிழைப்பதும் ஏன்?
மலைவெட்டி வரும் பணத்தை
மலையாகக் குவிப்பதும் ஏன்?
கலைபேசும் சிலை கடத்தி
விலைபேசி விற்பதும் ஏன்?
ஆற்று நீரை மாசாக்கி
வேற்று நீரைக் கலப்பதும் ஏன்?
நாட்டின் நலன் சிதைத்து
வீட்டு வளம் பெருக்குவது ஏன்?
தன்னைத் தாங்கும் நிலத்துக்குத்
தானே கேடு விளைவிப்பது ஏன்?
நல்லதொரு வாழ்க்கைக்கு
நன்னெறிகள் தவிர்ப்பதும் ஏன்?
பொருள் சேர்க்கும் ஆசையினால்
பொறுப்புகளை மறப்பதும் ஏன்?
மாறுகின்ற வாழ்க்கையிலே
மனித மனமும் மாறட்டுமே!
இணையில்லாப் பொருளிருந்தும்
துணை வராது என்றுணர்ந்து
இருக்குமிடம் பயனளித்து
இயற்கை வளம் காத்திடுவோம்.
# நன்றி.