அறியாமையும் அறிவும். Ignorance and Knowledge. Ariyaamaiyum Arivum.

அறியாமையும் அறிவும்:
ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒருவருடைய வெற்றிக்கு முதல்தடையாக நிற்பது அவரது அறியாமையே என்று புரிந்துகொண்டு, தனக்குள் மறைந்திருக்கும் அறியாமையை உணர்ந்து, துணிந்து அதை அகற்ற நினைப்பதே அறிவின் அடிப்படை நிலையாக இருக்கிறது.
அறியாமையை உணர்கின்ற இந்த நிலையே அறிவின் அவசியத்தை உணர்ந்து, அதை பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறது. அறியாமையின் விளைவுகளையும், அறிவைப் பெறுவதனால் உண்டாகும் நன்மைகளையும் அறிவால் உயர்ந்த பெரியவர்கள் காலம்தோறும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால்தான் அறிவார்ந்த சமூகம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
“வாழ்நாள் முழுவதற்கும் தேவையான பாதுகாப்பைத் தரவல்ல கருவியாக, பகையை உள்ளே நுழையவிடாமல் காக்கவல்ல வலிமையான அரணாக அறிவு செயல்படுகிறது” என்று உணர்த்துகின்ற வள்ளுவர்,
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
என்று அறிவோடு வாழ்வதே உண்மையான நிறைவான வாழ்க்கை என்றும் கூறுகிறார்.
அன்பும் அறிவும்தான் முன்னேற்றத்திற்கான வலிமையான ஆயுதங்கள் என்று கூறிய மார்ட்டின் லூதர் கிங், “Nothing in all the world is more dangerous than sincere ignorance and conscientious stupidity” என்று அறியாமையின் ஆபத்தையும் குறிப்பிடுகிறார்.
“இந்த உலகத்தில் இருக்கும் ஒரே ஒரு நன்மை என்றால் அது அறிவு, ஒரே ஒரு தீமை என்றால் அது அறியாமை” என்று சாக்ரடீஸ் கூறுகிறார். இவ்வாறு உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக கூறப்படுகின்ற அறியாமையும், அறிவும் எவை என்பதே நம்முடைய இன்றைய சிந்தனை.
மனிதன், ஒன்றும் அறியாத குழந்தையாகப் பிறந்தாலும் அனைத்தையும் அறிந்துகொள்ளும் திறன்கொண்ட மூளையின் பலத்தோடு வளர்கிறான் என்பது உண்மை. ஆனால், மிகப்பெரிய கண்டுபிடிப்பாளராகவோ அறிஞராகவோ இருந்தாலும்கூட அந்தத் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை என்று கூறுகிறார்கள்.
எனவே, குறிப்பிட்ட வாழ்நாள் அளவுக்குள் எவ்வளவு முடியுமோ அவற்றை முயன்று தெரிந்துகொள்வதும், தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வதும், புத்துணர்ச்சியோடு வாழ்வதற்கு பெரிதும் உதவுகின்ற முயற்சிகளாகும். அவரவர் விரும்புகின்ற ஆக்கபூர்வமான வழியில், வாழ்க்கைக்குத் தேவையான, நேர்மையான முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய அறிவார்ந்த கருத்துகளைத் தெரிந்துகொள்வது அறிவான செயலாக இருப்பதுபோலவே, நன்மை இல்லாதவற்றை, தீமையானவற்றை மறுப்பதும் அறிவுடைய செயலாக இருக்கிறது.
அறிவைப் பெறுதல்:
அறிவைத் தருகின்ற ஒன்றிலிருந்துதான் அறிவைப் பெறமுடியும் என்பதால் அத்தகைய வாய்ப்புகளைத் தேர்வு செய்வது அறிவின் முதல்நிலையாகும்.
ஒளிர்கின்ற விளக்கு மற்ற விளக்குகளையும் ஒளிரச்செய்யும் பண்பைப் பெற்றிருப்பதுபோல, நன்மக்கள் அறிவும் பல திசையில் பலன் தரும் விளக்காக ஒளிர்ந்து மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் தன்மை கொண்டது.

1. பெரியாரைத் துணைக்கோடல்:
கற்று, அறிந்து, அறத்தின்வழி நிற்கும் பெரியவர்களைத் துணையாகக் கொண்டு நமது அறியாமையைப் போக்கி அறிவு பெறுவது மிகச்சிறப்பு. பெற்றோர், பெரியவர், ஆசிரியர், புத்தகம் என்ற எல்லைகளைக் கடந்து, துறைசார்ந்த வல்லுநர்களே வழிகாட்டும் வாய்ப்பு இருக்கக்கூடிய இன்றைய உலகில் அத்தகைய பெருமக்களின் சிந்தனைகளைச் சுயசிந்தனையோடு ஏற்றுக்கொண்டு அறிவைப் பெறுவது முன்னேற்றத்திற்கு உதவும் முயற்சிகளாகும்.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் அவரவர் துறையில் அறிவு நிறைந்தவராகவே இருந்தாலும், நம்முடைய தேடலின் நோக்கம் அறிந்து, நமது அறியாமையைப் போக்கவல்ல அறிவார்ந்தவர்களின் அனுபவங்களை, சிந்தனைகளின் போக்கைப் புரிந்துகொள்ளும் முயற்சியே, நமக்குள் தொடர்ந்து பல கேள்விகளை உருவாக்குகின்ற, மேலும் அறிவை வளர்க்கின்ற சிறந்த வழியாக இருக்கும்.
2. அனுபவத்தில் பெறுகின்ற அறிவு:

அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கின்றன. ஆனால் அந்த அனுபவங்களின் மூலம் எத்தகைய பாடங்களைப் பெறுகிறோம் என்பதைப் பொறுத்து அவற்றிலிருந்து அறிவு பெறப்படுகிறது.
மனதிற்கு பிடித்த நல்ல நிகழ்வுகள், வெற்றிகள் போன்றவற்றை கிடைக்கவேண்டிய உரிமைகளாக எடுத்துக்கொண்டு எளிதாகக் கடந்துபோகாமல் அந்த நிகழ்வுகளின் பின்புலத்தில் மறைந்திருக்கும் பலரது அனுபவங்களை உண்மையாகத் தெரிந்துகொள்வது கிடைத்த அந்த வெற்றியின் சிறப்பை உணர்த்துகின்ற அறிவாக இருக்கும்.
மனதிற்கு சங்கடமான நினைவுகள், பின்னடைவுகள் போன்ற அனுபவங்களில் மற்றவர்களைக் குறை கூறுகின்ற ஒவ்வொரு முறையும் அந்த எண்ணங்களின் தாக்கம் மனதில் ஒன்றன்மீது ஒன்றாகப் படிந்து இயலாமையின் வடுக்களாகத் தடித்துவிடுவதுண்டு. இத்தகைய அணுகுமுறையால் அந்த அனுபங்களால் எந்த அறிவும் கிடைப்பதில்லை.
ஆனால், கடந்தகாலத்தில் சந்தித்த நிகழ்வுகள், மாற்றமுடியாதக் கடுமையான அனுபவங்களை இன்றைய அறிவின் மூலம் சிந்தித்து, அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்வது மற்றும் தன்னை உயர்த்தும் பாடங்களைப் பெறுவது என்ற நேர்மறையான அணுகுமுறை அனுபவங்களின் அறிவாக வளர்கிறது.
3. விழிப்புணர்வு:

செயற்கை அறிவு கோலோச்சுகின்ற இன்றைய சூழலில், இயற்கை அறிவு என்பது பண்பான வாழ்க்கையை மேலும் விழிப்போடும் தெளிவோடும் மனநிறைவோடும் வாழ்வதற்கு அனைவருக்கும் தேவைப்படுகின்ற அவசியமான கருவியாக உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க அறிவைப் பெறுவதற்கான விருப்பமும், முயற்சியும் ஓவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமாக செயல்படுகிறது. அறிவை நோக்கி தீவிரமாகப் பறந்து பயணிப்பவர்கள் புதிய உலகத்தைப் படைக்கும் தங்கள் அறிவால் ஒளிவீசுகிறார்கள். அவ்வாறு பறக்க முடியாத பெரும்பாலானவர்களுள் ஓடமுடிந்தவர்கள் ஓடுகிறார்கள். நடக்க முடிந்தவர்கள் நடக்கிறார்கள். சிலர் அவரவர்க்கு தெரிந்த வகையில் அசைந்து கொண்டிருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் அறிவைப் பெறுகின்ற முயற்சி மட்டும் என்றும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அறிவார்ந்தவர்களின் மொழியாக இருக்கிறது.
அறிவின் இயக்கம்:
நாளைய மன்னர்களை உருவாக்குகின்ற இன்றைய மன்னர்களும், மன்னருக்கான நல்ல தகுதிகளோடு இருப்பதுதான் முழுமையான பலனைத் தருகின்ற செயலாக இருக்கும்.
அதுபோலவே, தம்மின் தம்மக்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வதே உயிருக்கு இன்பம் தரக்கூடிய நிலை என்று உணர்கின்ற ஒவ்வொரு மனிதரும் தமது அறிவின் உயரத்தை உயர்த்துவதற்கு தொடர்ந்து இயங்குவதுதான் வருங்காலச் சமுதாயத்தின் அறிவை உயர்த்துகின்ற வழியாக இருக்க முடியும். இதுவே உலகத்து உயிர்களுக்கு இன்பம் தருவதாகவும் இயங்க முடியும்.
நமக்குள் கொட்டிக்கிடக்கும் வினாக்களுக்கு விடைகளாக, மண்டிக்கிடக்கும் இருளைப் போக்கும் விளக்காக விளங்குகின்ற அறிவு எனும் ஒளியைத் தேடுகின்ற முயற்சியே நமது வாழ்நாள் இயக்கமாக செயல்படுகிறது.
சந்திக்கின்ற சூழ்நிலைகளைக் கண்திறந்து பார்த்து, அவற்றில் நமது அறியாமையை அறிந்து, அதை அறிந்துகொள்ளும் தைரியம் அறிவைத் தருகிறது. இத்தகைய அறிவே வெற்றியின் முதல்படியாக அமைகிறது. இந்த அறிவின் வெளிச்சத்தில் வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு, முறையான இடத்தில் செலுத்தப்படும் கடுமையான உழைப்பு முழுமையான பலனைத் தருகிறது.
இன்றைய வேகமான வளர்ச்சிக்குத் தேவையான கருவிகளை அறிந்துகொள்ளும் அறிவும், புதிய வாய்ப்புகளில் துணிச்சலாக இயங்கும் மனவலிமையும் இயல்பான வாழ்க்கைக்கும் அவசியம் தேவைப்படுகின்ற முயற்சிகளாகும். காலத்தோடு இணைந்து இயங்கும் இத்தகைய தொடர் முயற்சிகளே வாழ்க்கையின் படிக்கட்டுகளாக இருந்து நமக்குள் நாம் வெற்றியைப் பெறுவதற்கு காரணமாக இருக்கின்றன.
# நன்றி.