இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். WISH YOU HAPPY NEW YEAR.

 WISH YOU HAPPY NEW YEAR.

 

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

குறிக்கோளை நோக்கி நேர்மையான வழியில் அயராது உழைக்கும் நமக்கு, சிறப்பான பலன்களைத் தரவேண்டும் என்ற உறுதியோடும், சிறந்த வெற்றிகளைப் பரிசளிக்க வேண்டும் என்ற உற்சாகத்தோடும் பிறந்திருக்கும் புத்தாண்டுக்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் கூறி மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

காலம் வழங்குகின்ற கையேட்டில் நமக்காகத் திறந்திருக்கும் புதிய பக்கம் இந்தப் புத்தாண்டு.  நம்முடைய சிந்தனைகளையும் செயல்களையும் நம்முடைய தகுதிக்கான சான்றுகளாகப் பதிவு செய்ய இந்தப் புதிய பக்கம் காத்திருக்கிறது. 

நாம் எதிர்பார்க்கின்ற நல்ல வாய்ப்புகளும், வளங்களும் நம்மை விரும்பிவரும் வெளிச்சமாகத் திகழ்கின்ற இந்தப் புத்தாண்டு, புதிய வெற்றிகளும் மகிழ்ச்சிகளும் நிறைந்த ஆண்டாக, அன்பை அள்ளித் தருகின்ற ஆண்டாக விளங்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவோம்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் நல்ல அனுபவங்களை, வெற்றிகளை இந்தப் புத்தாண்டின் பதிவுகளே நிர்ணயிக்கின்றன. எனவே, புத்தாண்டு உறுதிமொழிகளை உறுதியாக்கும் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதும், தகுதிகளை மேம்படுத்தும் வாய்ப்புகளைச் சிறந்த வரங்களாக ஏற்றுக்கொள்வதும் வெற்றிக்கான பதிவுகளாக விளங்குகின்றன. 

 

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா:

வினாடி முள்ளின் இயக்கம் போன்ற ஆக்கபூர்வமான சிந்தனைகளும் அதன் விளைவால் வெளிப்படுகின்ற ஆற்றல் நிறைந்த செயல்களும் காலத்தோடு கைகோர்த்து, தன்னம்பிக்கையோடு பயணிக்கும்போது குறிக்கோளில் வெற்றி என்பது நிச்சயம் நம்வசமாகும். 

ஒரு ஆண்டுக்கு, சாதாரணமாக 3,15,36,000 வினாடிகள் எனும் குறிக்கோளை அடைவதற்கு தொடர்ந்து ஓடுகின்ற கடிகாரத்தின் வினாடிமுள், நிமிடங்கள், மணிநேரங்கள், நாள்கள் என பல நிலைகளைக் கடந்த பின்பே, டிசம்பர் 31 இரவு 11:59:59 என்ற வினாடியில் தொடரும் தனது சிறப்பான நகர்வின் மூலம் தனது குறிக்கோளின் வெற்றியை அடைகிறது.  மேலும், தொடர்ந்து அமைகின்ற தனது புதிய குறிக்கோளை நோக்கி சீராக, சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் leap வருடம் என்றால் தன்னுடைய கூடுதலான ஓட்டத்தின் மூலம் 3,16,22,400 வினாடிகளைக் கடந்து தனது வெற்றி இலக்கை அடைகின்ற வினாடிமுள், உடன் பயணிக்கும் நண்பர்களின் (நிமிட முள், சின்ன முள்) நகர்வுகளுக்கும் அடிப்படையாக இருந்து, தன்னுடைய பாதையில் சீராகப் பயணிக்கிறது.   

நாள்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என்று பெரிதாகக் குறிப்பிட்டுக் கூறப்படுகின்ற காலங்கள் அனைத்துமே வினாடிகளால் உருவாக்கப்பட்டவைதான் என்பது நாம் அனைவருமே அறிந்திருக்கும் உண்மை.  அதைப்போலவே நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரியும் வாழ்க்கையின் வெற்றிகளும், நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சிந்தனைகளால் கட்டமைக்கப்படுகின்றன என்பதும் உண்மையே.

மனதில் தொடர்ந்து ஓடுகின்ற ஆரோக்கியமான சிந்தனைகளே நம்முடைய ஆக்கபூர்வமான உணர்வுகளுக்குக் காரணமாகின்றன.  மனதின் தூண்டுகோலாகச் செயல்படும் இந்த உணர்வுகளே தீவிர முயற்சிகளாக வெளிப்படுகின்றன.  இத்தகைய தொடர் முயற்சியின் விளைவுகளே சிறந்த அனுபவங்களாக, வாழ்க்கையின் முக்கியமான சாதனைகளாக வடிவமைக்கப்படுகின்றன.

எனவே, சுயத்தை அறியும் மனதின் வளத்திற்கும், அறிவின் சிறப்புக்கும் சான்றாகும் சிந்தனைகளே, வெற்றிகரமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாகின்றன.  எனவே, சிந்தனைகளைச் சீராக செலுத்தி, தொடர்ந்து நேர்மையாகச் செயல்படும் நமக்கு மகிழ்ச்சியான வெற்றி என்பது வாழ்க்கையின் இயல்பாக அமையும் என்பதற்கு காலம் காட்டும் கருவியே சாட்சியாக இருக்கிறது.

 

#   அன்பான வாழ்த்துகளுடன், நன்றிகள். 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *