individuality
The way of mind and attitude is creating everything

மனமும் அணுகுமுறையும்: Mind and Attitude.

சிந்தையும் செயலும்: 

ஒரு மாணவர் தெளிவாகப் பாடங்களைப் புரிந்துகொண்டு படித்து மனதளவில் முன்தயாரிப்போடு இருப்பது வெற்றிக்குத் தேவையான அடிப்படை முயற்சியாக இருக்கிறது.  ஆனாலும் இது மட்டுமே முழுமையான வெற்றிக்குப் போதுமானது இல்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.

எனவே, இந்த அடிப்படை முயற்சிகளோடு சேர்ந்து, அவர் சந்திக்கும் நிகழ்காலத்தின் சூழ்நிலைகளையும், தேர்வு நேரத்தின் சவால்களையும் மனவுறுதியோடு கையாளுகின்ற அவருடைய தனிப்பட்ட அணுகுமுறை(attitude)யும் இணைகின்ற  வெளிப்பாடே கல்வியில் அவருடைய முழுமையான வெற்றியாகக் கிடைக்கிறது.

அதுபோலவே வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் நன்கு சிந்தித்துத் திட்டமிடுவதில் தேர்ந்தவராக இருப்பவரும், நடைமுறையில் சந்திக்கும் சூழ்நிலைகளில் செயல்படுகின்ற தனிப்பட்ட அணுகுமுறையே அவருடைய வாழ்க்கையின் பலனாக விளைகிறது.

குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லும் வாழ்க்கை பயணத்தில் சிந்தனை, திட்டமிடல் என்பது ஆரம்பநிலையின் blueprint ஆகத் தெளிவாக இருந்தாலும், அதில் சந்திக்கும் எதிர்பாராதத் திருப்பங்களும், சூழ்நிலை மாற்றங்களும் அந்த நிலையிலேயே உடனடியாகச் சிந்தித்து spontaneous ஆகச் செயல்படக்கூடிய அளவில் வேகமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில் வெளிப்படுகின்ற உணர்வுகள், உடல்மொழி, பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாக, சூழ்நிலைகளைக் கையாளுகின்ற தனிப்பட்ட அணுகுமுறையே(attitude) அந்தச் சூழ்நிலையின் தன்மையைத் தீர்மானிக்கிறது. 

செயல்படுகின்ற சூழ்நிலையின் போக்கைக் கவனித்து, அதன் விளைவைக் கணித்து, வேகமாகச் சிந்தித்துச் உடனடியாகச் செயல்படுகின்ற திறன் என்பது மனமும் செயலும் இணைந்து செயல்படுகின்ற ஆழமான பயிற்சியில் வளர்கின்ற முதிர்ச்சியான அணுகுமுறை. 

எனவே, மனிதனின் உயர்வான பண்பும், வளமான மனமும், நிதானமான மனநிலையும் வாழ்க்கையில் தெளிவான பாதைகளை உருவாக்குகின்றன என்றால், அந்தப் பாதையில் பயணிக்கும் தகுதிவாய்ந்த வாகனமாக இயங்கும் சிறப்பு, தனிப்பட்ட அணுகுமுறையின் பொறுப்பில் இருக்கிறது. 

தனித்துவம்:

வாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயமாக இருந்தாலும், முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அதில் ஏற்படுகின்ற மாற்றங்கள் திருப்பங்கள் ஆகியவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. 

இவை, முன்பே கணித்துத் திட்டமிட்டதாகவும் இருக்கலாம், எதிர்பாராத மாற்றங்களாகவும் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளைக் கையாளுகின்ற நிகழ்காலத்தின் அணுகுமுறைகளே அந்தச் சூழ்நிலையின் தன்மையை வெவ்வேறு விதமாக மாற்றி, அந்தச் சூழ்நிலையின் அனுபவங்களாக உருவாகின்றன.  

ஒரு காட்சி:

ஒரு அலுவலகத்தில், நேர்காணலுக்கு வந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களிடம் சம அளவுள்ள மூன்று சிறிய குச்சிகளைக் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்தி square அமைக்க வேண்டும் என்று மேலாளர் கூறுகிறார். 

முதலில் வந்த ஒருவர், மூன்று குச்சிகளை வைத்து முக்கோணம் அமைக்கிறார், square (சதுரம்) அமைக்க முடியவில்லை என்பதால் இதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.

இரண்டாவது வந்த நபர் மூன்று குச்சிகளை வைத்து சதுரம் அமைக்கவே முடியாது என்று தீர்க்கமாகக் கூறுகிறார்.  அதோடு சாத்தியமில்லாத ஒன்றை செய்யச்சொல்லி தன்னை ஏமாற்றுவதாகக் கூறுகிறார்.

மூன்றாவதாக வந்த நபரும் மூன்று குச்சிகளை வைத்து முயற்சி செய்துவிட்டு, geomentrical வடிவமாக square அமைக்கமுடியாது என உணர்ந்ததும், சற்று வேறுவிதமாக, மாற்றி யோசித்து, எண் 4 ஐ வடிவமைக்கிறார்.  மேலும் 4 என்பது 2ன் square (வர்க்கம்) என்ற விளக்கத்தையும் தருகிறார். 

நேர்மறையான மனநிலையோடு மாற்று வழியைச் சிந்தித்து, அதை சமயோசிதமாகச் செயல்படுத்திய இந்த அனுகுமுறையினால் அவர் மேலாளரின் நன்மதிப்பைப் பெறுகிறார். 

ஒரே சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்கொள்பவரின் மனநிலைக்கு ஏற்ப, அணுகுமுறைக்கு ஏற்ப வெவ்வேறு விளைவுகள் உருவாகின்றன என இந்தக் காட்சிக் கூறுகின்றது. 

மேலும், மனமும் அணுகுமுறையும் இணைந்து செயல்படுவதில் உள்ள விகிதாச்சாரமே ஒருவருடைய தனித்தன்மையாக வெளிப்படுகிறது என்றும் கூறுகிறது.   

அடிப்படை:

மரம், உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அடிப்படையாக வைத்து வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகின்ற geometry அளவுகோல்கள், 0லிருந்து தொடங்கி குறிப்பிட்ட ஒரு எண்ணில் முடிவதாக வடிவமைக்கப்படுகின்றன. 

அத்தகைய அளவுகோலின் நுனிகளில் அதாவது, 0க்கு முன்பும் கடைசிஎண் முடிந்த பின்பும் குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு அதில் எந்த அளவீடும் இல்லாமல் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு, அளவீடுகளைத் தாங்கி நிற்பதே முதன்மையான பயனாக உள்ள அளவுகோலின் முனைகளில் அளவீடுகள் ஏதும் இல்லாத இடங்களும் விடப்படுகின்றன.  இவை பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு, முனைகளில் குறிக்கப்பட்டிருக்கும் அளவீடுகளைப் பாதுகாக்கும் வகையிலும் அமைந்து, அந்த அளவுகோல் பயன்படுகின்ற காலத்தைக் கூடுதலாக நீட்டிக்கவும் உதவி செய்கின்றன.

அதுபோல, தனித்துவமான ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும் சுயஒழுக்கம் அடிப்படையாக இருந்து அவரவர் வாழ்க்கையை வடிவமைக்கிறது.  இத்தகைய வாழ்க்கையில், நோக்கம், குறிக்கோள், முன்னேற்றம், வெற்றி ஆகியவை வாழ்க்கையின் நடைமுறை பயன்களாக இருக்கின்றன.  

வாழ்க்கையின் இத்தகைய நடைமுறை பயன்களைப் பெறுவதற்கு அடிப்படையாக இருக்கும் சுயஒழுக்கம், அதற்கான முயற்சிகளைத் தாங்கி நிற்கும் பலமாகச் செயல்படுகிறது.  மேலும், வாழ்க்கை பயணத்தில் தொடர்ந்து பெறுகின்ற வெற்றிகளுக்குப் பாதுகாப்பு அளித்து, வெற்றிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தனிப்பட்ட மனஅமைதிக்கும் துணையாக நீடித்து வந்து வாழ்க்கையின் பயனை முழுமையாக்குகிறது.  

வெகுசாதாரணமாகத் தெரியக்கூடிய அல்லது வெகுவாகக் கவனிக்கப்படாத தனிமனித ஒழுக்கம் என்பது மனதில் தொடங்கி, சிந்தனையில் சிறந்து, உறுதியான முயற்சிகளாக வளர்ந்து, அணுகுமுறைகளாக வெளிப்படுகிறது. 

இவ்வாறு, வாழ்க்கையின் பயனாக விளங்கும் சிறந்த செயல்பாடுகளுக்கும், பாராட்டுதலுக்குரிய சாதனைகளுக்கும் துணைவருகின்ற உந்துசக்தியாக இயங்கும் ஒழுக்கம், தனிப்பட்ட வெற்றிக்குத் தூண்டுகோலாக இருப்பதோடு சமுக முன்னேற்றத்திற்கும்  அரணாக இயங்குகின்றது.

முதலீடுகள்:

கடந்தகாலத்தில் முதலீடுகளாகச் செயல்பட்ட அணுகுமுறைகளின் பலன்கள் இன்றைய கையிருப்பாக, ஆற்றல் மிக்க நிகழ்காலமாக ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கிறது. 

எனவே, இன்றைய வாய்ப்பாக உள்ள நிகழ்காலத்தின் அணுகுமுறைகளை முதலீடுகளாகக் கருதி, சிறப்பாகக் கையாளுகின்ற முயற்சிகளே, எதிர்காலத்தின் விளைவுகளை இலாபகரமாகப் பெறுவதற்கான சரியான நடைமுறையாக இருக்கும்.

இயல்பாக நாம் சந்திக்கும் குடும்பம், உறவு, நட்பு, கல்வி, அறிவு, குறிக்கோள், திறன்கள், பொருளாதாரம், ஆரோக்கியம் என வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் முதலீடு செய்யப்படுகின்ற அணுகுமுறைகளும், அவற்றுடன் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்ற சிறிய மாற்றங்களும் இணைந்து, அந்தந்த நிலையின் அனுபவமாக வளர்ந்து வாழ்க்கையின் அனுபவமாக விளைகின்றது. 

இவ்வாறு, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மனமும் அணுகுமுறையும் இணைந்து செயலாற்றுவதன் விளைவாகக் கிடைக்கும் அனுபவ முதிர்ச்சியே தனித்துவமான வாழ்க்கையின் மிகப்பெரிய மதிப்புமிக்கப் பலனாக முதிர்ந்து முழுவடிவம் பெறுகின்றது. 

 

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *