எல்லை என்பது எதுவரை? How much is too much? Ellai Enbathu Ethuvarai?

உறவுக்கு மரியாதை:

குடும்பம், உறவுகள், கல்விக்கூடம், நட்பு, வேலை செய்யும் இடம், தெரிந்தவர், தெரியாதவர் என்று நாம் சந்திக்கும் சகமனிதரிடம் நாம் வெளிக்காட்டும் அணுகுமுறையே அந்த உறவுநிலைக்கு நாம் தருகின்ற மரியாதையாக வெளிப்படுகிறது.

*பறவையின் சிறகுகள் போல, ஒரு உறவை மேம்படுத்த இருபக்கமும் நல்ல புரிதலோடு அமைந்த அன்பான முயற்சிகள் தேவை.  மனமுதிர்ச்சி பெற்ற இந்த அணுகுமுறையே இருதரப்புக்கும் வளர்ச்சியைத் தந்து உறவை உயர்த்தும்.

*ஒருவருக்கொருவர் ஆதாரமாக இருந்து, ஒருவரையொருவர் சார்ந்து, ஏற்றத்தாழ்வு இல்லாமல், அனுசரணையாக வாழ்வதும் அந்த உறவை பாதுகாக்க உதவும்.

*முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்து ஏற்றிவிடுவதும், உதவுவதும், விட்டுக்கொடுப்பதும் இருவருக்குமிடையில் பாரபட்சமின்றி நிகழும் உறவுகளில் பரிமாறப்படும் அன்பு மதிக்கத்தக்க வகையில் சிறப்பானதாக அமைந்திருக்கும்.

*ஆரோக்கியமான சூழலில், விளக்கம் பெருவது, தவறுகளை நேர்மறையாக திருத்தி வழிகாட்டுவது, பயிற்சி அளிப்பது என்று (ஏர்முனையும், விளைநிலமும் போல) தகுந்த மரியாதையுடன் வெளிப்படும் அணுகுமுறை, உறவை வளப்படுத்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

*ஓடும் நதியில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், ஓடம் அந்த நதியில் பயணிப்பது போல, அவ்வப்போது சிறுசலனங்களோடு மட்டும் உடன்பயணித்துக் கடந்து செல்லும் உறவுகளும் உண்டு.

*வானத்து மனிதர்களே வந்திறங்கினார்களோ, என்று நினைக்கும் வகையில், இயல்பான உறவுகளே உன்னதமான நிலைக்கு உயர்வதும் உண்டு.

*வாழ்க்கையின் சில நல்ல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்து, மனதில் என்றும் பூரிப்பான உணர்வுகளைத் தரும் உறவுகளும் உண்டு.

இவ்வாறு, உயிரின் இயக்கமாம் அன்பின் நிலைகளில் இயங்கும் உறவுகளின் வகைகள் எண்ணற்றவை இருக்கின்றன.  இவற்றில் அடிப்படையாகப் பரிமாறப்படும் அன்பு இருதரப்பிற்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் இதமாக இருக்கவேண்டும் என்பதே உறவுக்கு மரியாதை.

கலப்படம்:

எங்கும், எதிலும் கலப்படம் இருப்பதுபோலவே, உலகத்தை நேர்மறையாக இயக்கும் அன்பானவர்களுக்கு இடையில் எதிர்மறையான சில கலப்பட மனிதர்களும் இருப்பது உண்டு.

இவர்கள், அன்பைப் பெறுகின்ற நிலையில் அதை உரிமை என்றும், அன்பைத் தருகின்ற நிலையில் அதைச் சலுகை என்றும் நினைக்கும் ஆதிக்க அணுகுமுறை உள்ளவர்கள்.

மற்றவர்கள் பாதிப்பு அடைந்தாலும் தனக்கு நல்லது செய்யவேண்டும் எனநினைக்கும் சுயநலம் (selfishness) எவ்வளவு மோசமான குணமோ, அதே அளவு மோசமான குணம்தான் சுயமதிப்பு இல்லாமல் அதிகப்படியாக எல்லைமீறி அனுசரித்துச் செல்லும்  (People Pleasing) அடிமை குணம்.

மற்றவர்களின் நியாயமான உணர்வுகளைப் பொருட்படுத்தாமல், அலட்சியப்படுத்துபவர்களிடம், உண்மையான அன்பை எதிர்பார்த்து அனுசரித்துச் செல்வது மிகவும் ஆபத்தானது.  என்றேனும் ஒருநாள் மாலைபோட்டு மெச்சுவர்கள் என்று எதிர்பார்த்து, இருக்கும்போதே மனதிற்குள் புழுங்கி, புதைந்துபோவது தனக்குத்தானே செய்யும் துரோகம். இத்தகைய சூழலில் அன்பு என்பது, ஆணவக்காரர்கள் எதிர்பார்க்கும் அடிமைத்தனம் என்ற விபரீதமான உதாரணமாக மாறிவிடவும் வாய்ப்புண்டு.

உரிமையின் எல்லை:

ஒவ்வொரு நாட்டிற்கும் எல்லை இருப்பதுபோல, ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பல்வேறுபட்ட எல்லைகள் இருக்கின்றன.  இவை உடல் அளவிலான இருப்பு, அணுகுமுறை, பழக்கம் போன்ற கண்ணுக்குத் தெரியக்கூடியவற்றில் மட்டும் அல்லாமல், வெளியில் தெரியாத, தனிமனித மனப்பான்மை மற்றும் மற்றவர் மனதில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் உணர்வுகளுக்கும் வரைமுறைகள் இருக்கின்றன.

“சுயகட்டுப்பாட்டைப் பொருத்தே, ஒரு அணுகுமுறை உரிமை அல்லது உரிமைமீறல் என்ற நிலையில் நிகழ்கிறது.  அதேபோல, சுயமரியாதையைப் பொருத்தே ஒரு அணுகுமுறையை அனுமதிப்பதும் அல்லது தடுப்பதும் செயல்படுகிறது”.

எனவே, How much is too much என்ற விழிப்புணர்வே தெளிவான வரையறைகளோடு இருதரப்பிற்கும் பொதுவாக உள்ள உரிமையை மற்றும் உரிமையின் எல்லையை வெளிப்படுத்துகிறது.

மகிழ்ச்சி:

எல்லா உணர்வுகளுக்கும் ஒரு எல்லையுண்டு என்ற கவனத்துடன் சூழ்நிலையைக் கையாள்வதும், மரியாதைக்கு உரிய வகையில் தகுதியை உயர்த்திக்கொள்வதும், சுயமதிப்பை (self esteem) உயர்த்தும் அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்துவதும் சுயமரியாதையுடன் நிமிர்ந்து வாழ்வதற்கு வழிகாட்டும்.

சகமனிதரின் உணர்வுகளை மதித்து நேர்மையான வழியில் அன்புசெய்யும் உறவே இருதரப்பிற்கும் உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.  இதை உணர்ந்து இந்த எல்லையை மீறாமல், அன்பைப் பகிர்ந்து வாழும் இணக்கமான உறவே பாதுகாப்பின் உறுதியைப் பலப்படுத்தி  மகிழ்ச்சியான உறவாக நீடிக்க உதவும்.

#  நன்றி.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *