BODMAS:
கணிதத்தில், பல எண்கள், பல குறியீடுகள் உள்ள ஒரு சமன்பாட்டைத் (equation) தீர்வுகாண உதவும் எளிய முறையாக BODMAS எனும் முன்னுரிமை வரிசை உள்ளது.
இது, குறியீடுகளின் அடிப்படையில் Bracket, Order, Division, Multiplication, Addition, Subtraction என்ற வரிசையில் முன்னுரிமை கொடுத்து, சமன்பாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதியாக எளிமைப்படுத்தி, சரியான தீர்வு காணும் நிலையான முறையாக இருக்கிறது.
வாழ்க்கையிலும், பல சவால்கள் இணைந்த சூழ்நிலைகளைக் கையாளுவதற்கும் இதுபோன்ற முன்னுரிமை வரிசை செயல்படும்போது தீர்வுகள் சீராக இருக்கும் என்று தோன்றுகிறது.
அவ்வாறு சூழ்நிலைகளை எளிமைப்படுத்தி, முறையாகக் கையாளுவதற்கு BODMAS உதவுவதாக இருந்தால், அதை Be yourself, Optimism, Decisions, Mindful, Attitude, Submit என வகைப்படுத்தலாம் என்ற சிந்தனையே இந்தப் பதிவு.
Be yourself:
தன்னை அறிந்தவன் தரணியையும் ஆளமுடியும் என்பதால், தனிப்பட்ட சுயவலிமைகள், தனித்திறமைகள் மற்றும் வலிமையாக்க வேண்டியவைக் குறித்தும் ஆய்வுசெய்து அறிந்துகொள்ளும் சுயமதிப்பீடு, சுயஅக்கறையில் தொடங்குகிறது.
இந்த அக்கறையே தூண்டுகோலாகச் செயல்பட்டு, புதிய சூழ்நிலைகள், புதிய அனுபவங்கள், புதிய பயிற்சிகள் மூலமாக தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது.
இதனால் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து, சுயமதிப்பீடுகளைப் புதுப்பித்து, நமக்குள் வலிமையாகும் விழிப்புணர்வு, நம்முடைய தகுதிகளை மேலும் உறுதியாக்கும் வகையில் செயல்பட்டு தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
இவ்வாறு வாழ்க்கையின் எல்லா நன்மைகளுக்கும் அடிப்படையாக சுயபுரிதல் இருந்தாலும், தன்னை தான் முழுமையாகப் புரிந்துகொள்வது மிகப்பெரிய சாதனைதான். ஏனெனில், நம்மை நாம் புரிந்துகொள்வது என்பது நான்கு நிலைகளில் செயல்படுவதாக உளவியல் கூறுகிறது.
1. நம்மைப் பற்றி நமக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்த விவரங்கள்.
இது பெரும்பாலும் உறவுகள், நண்பர்கள் என அனைவருக்கும் தெரிந்த பொதுவான புரிதல்களாக இருக்கும்.
2.நம்மைப் பற்றி நமக்கு மட்டும் தெரிந்து, ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாத விவரங்கள்.
இது தனிப்பட்ட அளவில் நமக்குள் நடக்கும் சிந்தனைகள், பண்புகள், பகிரப்படாத தனிப்பட்ட விவரங்கள் ஆகியவையாக இருக்கும். இத்தகைய தனிப்பட்ட உண்மைகள் தெரியாத மற்றவர்கள் கூறுவது வெறும் ஊகமாகவே இருக்கும்.
உதாரணமாக, புலி தனது உணவுப்பாதையின் சிக்கல்களை நீக்கிக்கொள்ள (புலி மட்டுமல்ல மற்ற விலங்குகளும்) அவ்வப்போது புல்லைத் தின்று ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றது என்பது விலங்கியல் உண்மை. ஆனால், புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கூறுவது அறியாமை.
3.நம்மைப் பற்றி நமக்கே தெரியாத ஆனால் மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் விவரங்கள்.
இது, நம்மோடு நெருங்கிப்பழகும் உறவுகள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியவர்கள் நமக்கே தெரியாத நம்முடைய பண்புகளை, திறமைகளைக் கண்டறிந்து கூறுவதும், நேர்மறையாகத் திருத்திக்கொள்ள வேண்டியவற்றை குறிப்பிட்டுக் கூறுவதுமான வளர்ச்சி நிலையில் வெளிப்படுகிறது.
4.நம்மைப்பற்றி நமக்கும் தெரியாத மற்றவர்களுக்கும் தெரியாத விவரங்கள்.
அரசியல் முதல் அன்றாட வாழ்க்கை வரை, அனைவருமே இன்று எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகள், அணுகுமுறைகள் போன்றவை கடந்தகால விருப்பங்களாக, கணிப்புகளாக இருந்திருக்கலாமே தவிர, அவற்றை முன்கூட்டியே யாரும் முழுமையாக அறிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.
ஒரு கண்டுபிடிப்பு நடக்கும்வரை அதை யார், எப்போது, எப்படிக் கண்டுபிடிப்பார் என்று முன்கூட்டியே உறுதியாகக் கூறமுடியாது அல்லவா, அதுபோலவே நமக்குள் ஏற்படுகின்ற மாற்றங்களும் புரிதல்களும்கூட நமக்கோ, மற்றவர்களுக்கோ முன்பே உறுதியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, நம்மைப் பற்றிய நம்முடைய புரிதல் என்பது கடந்தகாலத்தின் உறுதியான தகவல்களாக, நிகழ்காலத்தின் அணுகுமுறைகளாக, எதிர்காலத்தின் கணிப்புகளாக இருக்கின்ற நிலையில் நம்மை நாம் புரிந்துகொள்வதும் சுயமதிப்பீடு செய்வதும் வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டிய முதன்மையான கடமையாகும்.
“தன்னை அறிதலே தன்னம்பிக்கையின் அடிப்படை என்பதால், எத்தகைய சூழ்நிலையிலும் மனவுறுதியோடு நின்று தன்னுடைய செயல்பாட்டைப் பொறுப்போடு நிர்வாகம் செய்வதே நாம் நாமாக இருப்பதன் வெற்றியாகும்”.
Optimism:
எல்லாவற்றிலும் நன்மை தருகின்ற வாய்ப்புகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையே optimism ஆகும்.
தன்னைக் கடந்து, வெளியே இருக்கும் சூழல், மனிதர்கள், உணர்வுகள், நிகழ்வுகள், சவால்கள் என சுற்றியுள்ள சூழ்நிலையின் நிலவரம் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனாலும், அந்தச் சூழ்நிலையில் “நேர்மறையான வாய்ப்புகளைக் கவனிக்கும் அணுகுமுறையும், அதை சுமுகமாகக் கையாளும் திறமையும், விளைவுகளை நேர்மறையாகப் பெறுவதற்கான முயற்சிகளாகும்”.
உறியடிக்கும் விளையாட்டில், பங்குபெறுபவரின் கையில் நீளமான கம்பு எனும் வாய்ப்பு இருந்தாலும், அதைப் பயன்படுத்திப் பலமுறை முயன்றாலும் பெரும்பாலான நேரத்தில் சரியாக உறியடிக்க முடிவதில்லை.
ஏனெனில், பங்குபெறுபவரின் கண்கள் கட்டப்பட்டிருப்பது, சுற்றி உள்ளவர்கள் ஆளுக்கொரு திசையைக் கூறி கூச்சலிடுவது, முயற்சிகள் தவறும்போது கேலியாகச் சிரிப்பது போன்ற குறுக்கீடுகள் அந்த விளையாட்டிற்கே உரிய சவால்களாக இருக்கின்றன.
குழப்பம், தோல்வி பயம், அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தூண்டக்கூடிய இத்தகைய சூழ்நிலையை எப்படி நேர்மறையாக எதிர்கொள்வது?
இத்தகைய சவால்கள் விளையாட்டின் ஒரு பகுதி என்ற புரிதலோடு, சூழ்நிலையைத் துணிவோடு எதிர்கொள்ளும் மனநிலையே வெற்றியின் முதல் நிலையை உறுதியாக்குகிறது.
தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை மனதில் நிறுத்தி, ஆழ்ந்த சுவாசத்தால் மனதை அமைதிப்படுத்தி, கையிலிருக்கும் வாய்ப்பைக் கையாளும் முயற்சியே, தெளிவான மனநிலையின் வெற்றி ஆகும்.
ஒரு செயலைக் கவனமாகச் செயல்படுத்த வேண்டும் என்ற பொறுப்பைத் தருகின்ற நிலைவரை பயம் நல்லதுதான். ஆனால், அதுவே அளவுக்கு மீறிய நிலையில் பதட்டத்தை ஏற்படுத்தும்போது மனதிற்கு நேர்மறையான மாற்றம் தேவைப்படுகிறது.
அது, உலகில் தோல்வியே காணாத வெற்றியாளர் என யாரும் இல்லை என்று புரிந்துகொள்வதோடு, வெற்றியோடு இணைந்தே இருக்கும் தோல்வி ஏற்பட்டாலும், அதனால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்று துணிந்து நிற்பது.
முதலில் நமக்குத் துணையாக நாம் உறுதியாக நின்று, கூடுதல் முயற்சியோடு குறிக்கோளை நோக்கி கவனமாகச் செயல்படுவது வெற்றியை நோக்கி முன்னேறுவதற்கு நிச்சயம் உதவுகிறது .
எந்தச் சூழ்நிலையானாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ளும் சரியான வழிமுறையின் மூலம் பெருமையாக வெற்றி பெறலாம் என்ற நேர்மறையான மனநிலை, இந்தப் போட்டிக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் எந்தச் சவாலிலும் வெற்றி பெறுவதற்கு அவசியமான மனநிலையாகும்.
அதே நேரத்தில், சூழ்நிலை புலியாக இருந்தால் அதை பசுவாகப் பார்ப்பது optimism அல்ல. சரியான நேரத்தில் புலி என்று உணர்வதும், தற்காத்துக் கொள்வதுதான் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையான optimism ஆகும்.
எத்தகைய சூழ்நிலையிலும், உள்ளேயிருக்கும் விழிப்பும், கையில் உள்ள வாய்ப்பும், கவனமாகச் செயல்படுகின்ற நிதானமும், உறுதியான முயற்சியும் வெற்றியை நோக்கி முன்னேறுவதற்குக் கூடுதல் வலுசேர்க்கின்றன.
இயல்பாக நடைமுறையில் சந்திக்கும் மாற்றுக் கருத்துகள், எதிரான நிலைப்பாடுகள், சாதகமற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றை நம்பிக்கையோடு கையாளுகின்ற optimism வெற்றிக்குத் துணையாகச் செயல்படுகிறது.
உடல்வலிக்கும், மனவலிக்கும் நிவாரணம் தருகின்ற மருந்தாகப் பக்குவமாகச் செயல்படுகின்ற நேர்மறை உணர்வு (optimism) மகத்தான மனநிலையைத் தருகிறது.
மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது பேட்டியில் கூறியிருந்த விஷயம் இங்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அப்போது அவர் சென்னைக்கு வந்துவிட்டதால் வடநாட்டில் (பாம்பே என்று நினைக்கிறேன்) இருந்த அவருடைய அடுக்குமாடி குடியிருப்பைப் பராமரிக்க முடியாத காரணத்தால் அதை விற்றுவிட முடிவு செய்தாராம்.
அப்போது, அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உதவியாளர், வீட்டைப் பார்க்க வந்தவர்களிடம், அந்த வீட்டின் இருப்பிடம், அழகு, பால்கனி வசதி, காற்றோட்டம், வெளிச்சம் என, வீட்டைப்பற்றி நேர்மறையாகக் கூறிய விவரங்களைக் கேட்கும்போது, தானே இதுவரை இவற்றைப் பெரிதாகக் கவனிக்கவில்லையே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது என்று கூறியதாக என் நினைவில் உள்ளது.
இந்தச் செய்தி வீட்டிற்கானது மட்டுமல்ல, இப்போது நம்மிடம் கைவசம் இருக்கின்ற வாய்ப்புகள் அனைத்திலும் உள்ள நேர்மறையான அமைப்புகளைக் கவனித்து, மனதை ஆக்கபூர்வமாக, அமைதியாக வைத்துக்கொள்வதற்கு optimism எனும் மனநிலை பெரிதும் உதவுகிறது.
மேலும், புதிய வாய்ப்புகளை நம்பிக்கையோடு அணுகவும், கடினமான சூழ்நிலைகளைத் தைரியமாகக் கடக்கவும், சவால்களைச் சாமர்த்தியமாகக் கையாளவும் என எல்லாச் சூழ்நிலைகளிலும் அனைவருக்கும் அவசியமான மனநிலை என்பதால் இது வாழ்க்கையின் வெளிச்சமாக விளங்குகிறது.
Decisions:
உண்மையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் சிறிதும் பெரிதுமாகத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முடிவுகளை நாம் எடுக்கிறோம்.
இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் உள்ள முடிவெடுக்கும் திறனே, அந்தச் சூழ்நிலையைக் குறிப்பிட்ட திசையில் செலுத்தவல்ல அடித்தளமாகவும், அந்தச் சூழ்நிலையின் விளைவுகளைத் தீர்மானிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.
இவ்வாறு, வாழ்க்கையின் முக்கியமான நிலைகளிலும், அன்றாடச் சூழ்நிலைகளிலும் செயல்படு களத்தைத் தீர்மானிக்கும் சக்தியுள்ள முடிவெடுத்தல் என்பதை அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1.தற்போதைய உணர்வுகள், தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் முடிவெடுத்தல்.
2. உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவெடுத்தல்.
3.தரவுகளின் அடிப்படையில் பகுத்து மதிப்பீடு செய்து, விளைவுகளைச் சிந்தித்து, ஆதாரபூர்வமாக முடிவெடுத்தல்.
மேற்கண்ட மூன்று நிலைகளுமே அந்தந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமான நல்ல விளைவுகளைத் தரக்கூடிய முடிவுகளாக இருக்கலாம். இதில் நமக்கும்கூட தனிப்பட்ட அளவிலான பல அனுபவங்கள் இருக்கலாம் என்பதால் எதையும் குறைவாக நினைக்க முடியாது.
என்றாலும், சாதக பாதகங்களைச் சிந்திக்காமல் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதோ, ஆதாரம் இல்லாத உள்ளுணர்வை மட்டும் அதிகமாக நம்பி முடிவெடுப்பதோ எல்லாச் சூழ்நிலைகளிலும் பாதுகாப்பானது அல்ல.
எனவே, முடிந்தவரை “சூழ்நிலையைப் பகுத்தாய்ந்து, விளைவுகளைச் சிந்தித்து, அறிவார்ந்த நிலையில் எடுக்கும் முடிவுகள் வெற்றியின் வாய்ப்பை அதிகமாக்கும்” என்பது நிலையான கருத்தாக உள்ளது.
அவ்வாறு அறிவார்ந்து சிந்தித்து எடுக்கப்படும் நேர்த்தியான முடிவாக இருந்தாலும் அதுவும் உள்ளுணர்வையும் வலிமையான உணர்வுகளையும் கவனத்தில் கொண்டே பொருத்தமான முடிவு எடுக்கப்படுகிறது என்பது என்னுடைய கருத்து.
இதை சற்றுச் சுவாரஸ்யமாகச் சிந்திக்க, திருவிளையாடல் படத்தின் காட்சிகளைத் துணையாகக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.
தன்னுடைய பாட்டுக்குப் பாண்டியநாடே அடிமை ஆகவேண்டும் என்று முடிவெடுத்தது ஹேமநாத பாகவதரின் ஆணவம். எப்படியாவது அந்தப் போட்டியில் வென்று நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று பாணபத்திரருக்கு ஆணையிட முடிவெடுத்தது மன்னனின் அதிகாரம்.
தமிழுக்குப் பழிநேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை என்று இறைவனிடமே பொறுப்பை ஒப்படைக்க முடிவெடுத்தது பாணபத்திரரின் பக்தி. சூழ்நிலையைச் சுமுகமாக்கும் வகையில் உணர்வுகளைக் கருவியாகக் கையாள முடிவெடுத்தது, இறைவனின் கருணை.
Mindful:
தேர்ந்தெடுத்த குறிக்கோளை நோக்கி முழுமையான கவனத்தோடு lacer light focusபோலச் செயல்படும் முயற்சியே முழுமையான செயல்பாடாக இருக்க முடியும்.
இதை விளக்குவதற்கும் திருவிளையாடல் இறைவனே துணைவருகிறார்.
மிகக் கவனமாகத் தன் பொறுப்பை நிறைவேற்ற நினைத்த இறைவன், போட்டி நாள்வரைக் காத்திருக்காமல், முதல்நாளே எளிமையான விறகு வெட்டியாக வெளிப்பட்டு, பாட்டில் சிறந்த பாகவதரின் ஆணவத்தைத் தன் பாட்டால் அடக்க முடிவு செய்தார்.
தன் அசைவினால் அகிலம் எல்லாம் அசைய வைக்கும் சக்தியுள்ள இறைவனே, மனிதனுக்கு இணையாகத் தன்னை எளிமையாக்கி, இத்தனை முன்னேற்பாடுகளும், முயற்சிகளும் செய்து விளைவுக்குப் பொறுப்பேற்றுக் கவனமாக உழைக்கிறார் என்றால், நம்முடைய மனநிலையும், முன்னேற்பாடுகளும், முயற்சிகளும் எந்த அளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுகிறது.
அதுசரி, ஆனால் கவனமாகச் செயல்படுவது என்றால் எப்படி?
கால் பந்தாட்டத்தில், எத்தனை கால்கள் குறுக்கே வந்தாலும் விளையாடுபவரின் கவனம் கோல் போஸ்ட்டினுள் அடிக்க வேண்டிய அந்தப் பந்தின்மீதே இருப்பதுபோல, குறிக்கோளை நோக்கிப் பயணிக்கும் முயற்சியில் குறுக்கிடும் தடைகளைக் கடந்து, மனக்குவிப்போடு செயல்படுவது வெற்றியை நெருங்குகின்ற கவனம் ஆகும்.
நம்முடைய வாழ்க்கையில் இதுவரை, ஒவ்வொரு துறையிலும் நாம் எப்போதெல்லாம் கவனமாகச் செயல்பட்டிருக்கிறோம் என்ற விவரமும், அதனால் கிடைத்த நன்மைகளும் நம்முடைய பொறுப்புக்குக் கிடைத்த progress card ஆகும். இப்போது அதில் முன்னேற்றம் கிடைத்திருந்தால் அதுவே கூடுதல் வளர்ச்சியாகும்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் “எது முக்கியம் என்று உணர்ந்து, அதில் கவனமாகச் செயல்படுகின்ற தனிப்பட்ட தீர்மானத்தின் மனக்குவிப்பு, நம்முடைய செயல் திறனைச் சிறப்பாக வெளிகாட்டுகிறது”.
Attitude:
Attitude என்பது சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனப்போக்கின் தனிப்பட்ட அணுகுமுறை என்பது நமக்குத் தெரியும். இது “ஒருவருடைய பண்பு, திறமை, மனமுதிர்ச்சி, மரியாதை ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்துகின்ற சுயநிர்வாகம் ஆகும்”.
இது, உள்ளார்ந்த உறுதியான மனநிலையாக, நிதானமான அணுகுமுறையாக வெளிப்படுவதே சிறந்த attitude ஆகும்.
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நாடாளுமன்றத்தில் பங்கேற்கும்போது, எதிர்கட்சியிலிருந்த ஒருவர் எழுந்து லிங்கனைப் பார்த்து, “உங்கள் தந்தை எங்கள் குடும்பத்திற்கு காலணிகள் தைத்துக் கொடுத்ததை நீங்கள் மறந்துவிடாதீர்கள்”, என்று ஆணவமாகக் கூறினார்.
அதற்கு லிங்கன் தனது பதிலுரையாக, என் தந்தை நேர்த்தியான உழைப்பாளி, ஒருவேளை ஏதாவது பழுது ஏற்பட்டாலும் தயங்காமல் என்னிடம் கூறுங்கள், என் தந்தையின் நேர்த்தி என்னிடமும் இருக்கிறது. என்னால் காலணியும் சரி செய்ய முடியும் என்று கூறியதாக ஒரு ‘கதை’ உள்ளது.
இது, எதிரான சூழ்நிலையிலும் வெளிப்படுகின்ற உறுதியான நேர்மறையான attitude என்பதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்ற கதை. ஆணவத்தின் ஆக்கிரமிப்பினால் தாக்கப்பட்டு மூழ்கி விடாமல் தற்காத்துக்கொள்ள உதவும் இந்தச் சுயநிர்வாகம் தனிமனித பாதுகாப்புக் கவசம் ஆகும்.
இதுபோல, புகழ்ச்சியாகவோ இகழ்ச்சியாகவோ, கதையாகவோ நிஜமாகவோ பலர் பலவிதமான கருத்துகள் கூறினாலும், உண்மையில் தான் யார், எத்தகையவர் என்று உணர்ந்து, நேர்மையான உறுதியோடு செயல்படுகின்ற தனிப்பட்ட அணுகுமுறையே வலிமையான attitude ஆகும்.
இத்தகைய அணுகுமுறையின் விளைவு நேர்மறையான பலனை ஏற்படுத்துகின்ற நிலையில் அது உயர்ந்த அணுகுமுறையாகப் போற்றப்படுகிறது.
Submit:
உலகின் ஒவ்வொரு இயக்கமும் ஏதோ ஒருவகையில் சமர்ப்பணமாக இருக்கிறது என்பது என்னுடைய உணர்வு. உலகியல் இயக்கமாக உள்ள அன்பும் இன்னொரு உயிரை மதித்துச் செய்யப்படும் செயல்களின் வழியாக சமர்ப்பிக்கப்படும் உணர்வு ஆகும்.
நடைமுறையில் கல்வி நிலையில் சந்திக்கும் தேர்வுகளை இதற்கான உதாரணமாகப் பார்த்தால், நாம் நம்மைப் புரிந்துகொண்டு நமக்கேற்றவாறு திட்டமிட்டுப் படித்து, தேர்வுகளை நேர்மறையாக எதிர்கொள்வது முதலில் மனநிலையைச் சீராக்குகின்றன.
நன்கு தெரிந்த கேள்விகளையும், சரியாக விடை எழுதும் முறையையும் தேர்ந்தெடுத்து, கவனமாக எழுதுவது செயல்பாடுகளைச் சீராக்குகின்றன.
தேர்வுக்கான சிறப்பு அணுகுமுறைகளை முறையாகப் பின்பற்றி விடைத்தாள் முழுமை செய்யப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட தேர்வு அறைக்கான தகுந்த மேற்பார்வையாளரிடம் சரியான நேரத்தில் விடைத்தாளை ஒப்படைக்கும் நிலையில்தான் தேர்வுக்கான செயல்பாடுகள் அனைத்தும் முழுமையடைகின்றன.
இதுபோலவே, வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலையிலும் அதற்குரிய வரிசையில் செயல்பாடுகள் முறையாக செய்திருந்தாலும், அதை உரிய இடத்தில் உரிய நேரத்தில் முறையாக வெளிப்படுத்துகின்ற நிலையில்தான் அது முழுமையடைகிறது.
இவ்வாறு முழுமையடைந்த செயலே எதிர்பார்க்கும் வெற்றியை நோக்கி பயணிக்கும் தகுதியைப் பெறுகிறது.
Success:
உலகில் பிறந்த அனைவருமே வெற்றியாளர்கள்தான் என்பது அடிப்படையாகத் தீர்மனிக்கப்பட்ட ஒன்று என்பதால் எல்லா செயல்களுமே வெற்றியை நோக்கி முன்னேறுகின்ற முயற்சிகளாகவே இருக்கின்றன.
இந்த முயற்சியில், Be yourself, Optimism, Decisions, Mindful, Attitude, Submit எனும் வரிசை, செயல்களைக் கையாளுவதில் உள்ள முன்னுரிமை வரிசையாக முயற்சிகளுக்கான தீர்வின் முதல் வெற்றியாக இருக்கும்.
இந்த முதல் வெற்றியோடு தொடர்ந்து, தனிப்பட்ட குறிக்கோளிலும் வெற்றிப் பெறுவதற்கு அடிப்படையாக ஒழுக்கம் இருக்கிறது என்று கூறுகின்றனர். இது, மனம், சிந்தனை, உடல் என தனிப்பட்ட அளவிலான ஒழுக்கம் மட்டும் அல்ல.
முறையாக நேரத்தைப் பயன்படுத்துவதிலும், சரியான உணவு உண்பதிலும், நேர்மறையான உணர்வு நிலையிலும், பொறுப்போடு செயல்படுவதிலும், உண்மையான உழைப்பிலும், நம்மை வெளிப்படுத்திக் கொள்வதிலும் என வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இயங்கும் ஒழுக்கமே, அவரவர் தீர்மானிக்கும் குறிக்கோளுக்கு ஏற்றவாறு வெற்றியின் அளவுகோலாக இயங்குகிறது.
வெற்றியின் அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும், “அனைவருக்கும் நேர்மறையான விளைவைத் தருவதே நல்ல வெற்றி” என்ற இலக்கணம் மட்டும் என்றும் நிலையாக உள்ளது.
நாம் இதற்குமுன் சிந்தித்தத் திருவிளையாடல் காட்சியிலும்கூட, சிறப்புக்கு ஏதும் குறைவு ஏற்படாமல் அமைதியான முறையில் ஆணவம் அகன்ற நிலை ஹேமநாத பாகவதருக்குக் கிடைத்த வெற்றி.
பாண்டியநாடு பாட்டுக்கு அடிமையாகாமல் காப்பற்றப்பட்ட நிலை மன்னனுக்குக் கிடைத்த வெற்றி. அரசக் கட்டளையால் மனம்கலங்கி இறைவனிடம் முறையிட்ட பாணபத்திரரின் மனநிம்மதி அவருடைய பக்திக்குக் கிடைத்த வெற்றி.
ஏற்றுக்கொண்ட கடமையின் மூலம் அனைவருக்கும் நன்மை எனும் நேர்மறையான விளைவைத் தந்த ஆளுமை இறைவனுக்குக் கிடைத்த வெற்றி. இதை சிந்திக்கும் மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது நம் அனைவருக்கும் கிடைக்கும் வெற்றி.
# நன்றி.
