பாங்கான பால்கனியில்
புத்தம்புது பூந்தொட்டி! அதில்
நட்டு வைத்த செடியொன்று
நளினமாய்த் துளிர்விட்டது.
இலை விரித்துக் கிளைவிட்டது,
இன்பம் அதில் முளைவிட்டது.
சின்னஞ்சிறு அணில்குட்டியும்
சேர்ந்து குதித்து ஆடியது.
மனதில் பொங்கிய ஆர்வத்தோடு
மறுநாள் சென்று பார்த்தபோது,
தாவரவியல் வகுப்புப் போல
இலையும், கிளையும் தனித் தனியே!
கீழே கிடந்தன கத்தரித்த பாகங்கள்!
கடவுள் படைத்த மரங்களையே,
கதவு, சன்னல் எனக்
கைவரிசை காட்டுகின்றோம்!
நட்டு வைத்த செடிகூட
அவ்விதமே பயன்பட்டதோ!
அணிலுக்கு இந்தச் செடி
கதவா, சன்னலா, கட்டில் மெத்தையா,
கையிரண்டில் விளையாடும்
கிரிக்கெட் மட்டையா,
கடித்துப் போட்ட கரும்பு சக்கையா!
என்றே மனம் யோசிக்க,
குவளை நீர் ஊற்றி வைத்தேன்.
குதித்தோடி வந்த அணில்
குளிர்ந்த நீர் அருந்திவிட்டு,
வட்ட விழி உருட்டி,
பூஞ்சிறகு வால் உயர்த்தி,
‘நான் ரொம்ப பிசி’! என்பதுபோல்
சத்தமாகப் பேசிவிட்டு,
வேகமாய் மரத்தில் ஏறியது.
நட்டு வைக்கும் அடுத்த செடி
வளர்ந்துவர நாளாகுமென,
வாராதிருக்காதே!
வரிப்போட்ட அணிலே!
நீ எழுப்பும் வீச்சு சத்தம்
வீடெங்கும் நிறைந்திருக்கும்!
சுறுசுறுப்பாய் நீ பேச
சுற்றுப்புறம் விழித்துக்கொள்ளும்!
சுதந்திரமாய் நீ வாழ
சூழ்நிலைகள் ஒத்திசையும்.
# நன்றி.
மிக மிகப்பிரமாதம்
மிக்க நன்றி