⌚காலத்தை வென்றவர். யார்? Kaalaththai Vendravar. Yaar? Time Creates The Power.

சுற்றும் பூமி:

தினமும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் வரிசையாக இருக்கின்றன.  இவற்றை எப்போது, எப்படிச் செய்வது என்று திட்டமிடும்போதே மேலும் இரண்டு வேலைகள் வரிசையில் வந்து சேர்ந்து விடுகின்றன.  நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லையே என்று தோன்றுகிறதா?  

அதற்குக் காரணம், வழக்கமான வேலைகளுக்கே ஒருநாளின் பெரும்பகுதி நேரம் தேவைப்படுவதால் நோக்கத்திற்காக உழைக்கும் நேரம் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது.

இதைச் சரிசெய்வதாக நினைத்து (விளையாட்டு வகுப்பையும் தனது வகுப்பாகச் சேர்த்து எடுக்கும் கணக்கு ஆசிரியர் போல) மற்ற அடிப்படை வேலைகளிலிருந்து நேரத்தை எடுத்துக்கொண்டால் உடல் நலமும், மனநலமும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

எனவே, “குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் நமது வேலைகளைத் திட்டமிட்டு ஆற்றலுடன் செய்தால் மட்டுமே”, அந்த நாளைப் பயனுள்ளதாக மாற்ற முடியும்.  ஆனால் இதை எப்படிச் செய்வது?

அமைதி ஆக்கம் தரும்:

ஒவ்வொரு நாளும் அடுத்த நாளுக்கான வேலைகளைத் திட்டமிடுதல், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த உதவும்.  அமைதியான சூழலில் “தனித்திருந்து, விழித்திருந்து” சரியாகத் திட்டமிட்டு நடந்துகொண்டால் “எண்ணிய குறிக்கோளை எட்டும் வரை நில்லாது செல்ல முடியும்”.

விளக்கின் ஒளி:

நேரத்தைத் திட்டமிட்டு, வேலைகளைப் பட்டியலிட்டு, எந்தக் குழப்பமும் இல்லாமல்  செயல்படுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் குறிக்கோளே நம்மைத்  தெளிவாக வழி நடத்தும்.  

அறையின் இருட்டைப் போக்க விளக்கின் ஒளி உதவுவதுபோல சரியான வேலைகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் செய்வதற்கு உறுதியான நோக்கமே சரியான விளக்காக இருக்கும். 

எனவே, அவரவர் தன்மைக்கேற்பப் பொருத்தமான நேர்மையான குறிக்கோளைத்  தேர்ந்தெடுப்பது முக்கியம். வெளிப்பார்வைக்கு எளிதாக தெரியும் வெற்றி எதுவாயினும் மலையளவு உழைப்பை மறைத்துக்கொண்டுதான் நிற்கும். எனவே, எதிர்பார்க்கும் பலனை அடைவதற்கு மிகக் கடுமையான உழைப்பே முக்கியமான முதலீடு ஆகும். 

முன்னேற்பாடுகள்:

தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அதன் வெற்றிக்கு உதவுவது போல, எந்த வேலைக்கும் அதன் முன்னேற்பாடுகள் தான் வெற்றியின் அடிப்படை காரணமாக அமைகின்றன.

நேரத்தை மதித்துச் சரியான நேரத்தில் செயல்படுவதும், அந்தச் செயல்களை மேலும் மேம்படுத்தக் கடினமாக உழைப்பதும்தான் வெற்றியைத் தரும்.

நேர நிர்வாகம்:

நேர நிர்வாகம் என்பது நேரத்தை நாம் நிர்வாகம் செய்வது அல்ல.  குறிப்பிட்ட நேரத்திற்குள் திட்டமிட்டு நம் “வேலைகளை நிர்வாகம்” செய்வதுவே ஆகும்.  

காலையில் முன்னதாக எழுவது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் வேலைகளைத் திட்டமிடுவது,  கடினமான வேலைகளை முன்னதாக செய்வது, நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்துவது என்ற நமக்குத் தெரிந்த அனைத்து வழிகளும் சிறப்பானவைதான். 

எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும், அதை எப்போது செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் ஒரு நேரத்தைக் குறித்துவைத்துக் கொள்வது அந்த வேலையை வேகமாகச் செய்வதற்கு மிகவும் துணைசெய்யும். 

உதாரணமாக, நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட மூன்று மணி  நேரத்திற்குள்  தேர்வை முடிக்க வேண்டும் என்ற எண்ணமே,  நம்மை  ஆரம்பத்திலிருந்தே வேகமாக எழுத வைக்கிறது.  

அதுபோலவே, ஒவ்வொரு வேலைக்கும் அதற்குத் தேவையான நேரம் நிர்ணயித்து, நினைவூட்டலுக்கு அலாரம் அமைத்துக் கொண்டால், அன்றைய வேலைகளை ஒரு கட்டுப்பாட்டுடன் செய்வதற்குப் பயிற்சியாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம்  செயல்திறனும் அதிகரிக்கும்.

சரியான நேரத்திற்குள் திட்டமிட்டு வேலைகளை நிர்வாகம் செய்தவர்களையே சிறந்த நிர்வாகத் திறமைக் கொண்டவர்களாக காலம்தோறும் சரித்திரம் சொல்கிறது. 

விருப்பம்:

நோக்கத்தின் மீது நாம் கொண்டுள்ள விருப்பமே உழைப்பதற்கு உந்து சக்தியாகச் செயல்படும்.  இயலாமையால் தள்ளிப்போடும் காரணங்களைத் தவிடுபொடியாக்கும்.  விருப்பமான செயல், வெற்றி பெறும்வரை தூங்க விடாமல் அறிவைத் தூண்டிவிடும்.  

முக்கிய வேலைகளைத் தயக்கத்தினால் தள்ளிப் போடுவது பின்னடைவுக்குக் காரணமாக இருக்கும். எனவே, செய்யவேண்டிய வேலைகளைப் பற்றிய  தெளிவும், சில தவிர்க்கவேண்டிய வேலைகளை இனம் கண்டு மறுப்பதும் செயல்திறனை அதிகரிக்கும்.

 நிதானம்:

நோக்கத்துடன் உழைக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் நேரமில்லாதது போல, கடுப்புடன் நடந்துகொள்வது விரைவிலேயே அயர்வைத் தரும்.  எனவே, சரியான, தரமான வேலைகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் செயல்படுவதுதான் வெற்றிக்குச் சரியான முறையாக இருக்கும். அப்போதுதான் அந்த வெற்றி மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும்.    

ஓடும் நதியைப் போன்ற, “நிதானமான செயல்கள்” சிறந்த நோக்கத்தோடு இருந்தால் அவை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

செயலின் முழுமை:

நம்முடைய செயல் “Perfection”னுடன், சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு வகையில் நல்லதுதான்.  ஆனால் அந்த எண்ணமே செயல்பட விடாமல் தயக்கத்தை ஏற்படுத்தினாலோ, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினாலோ அதைச் சரி செய்ய வேண்டியது அவசியம்.  

முறையான பயிற்சிப்  பெற்று,  அதிக கவனத்துடன், கடின உழைப்பை முதலீடு செய்தால், தொடர்முயற்சியின் விளைவாகச் செயல்கள் மேம்படும்.  perfection என்பது ஒரு நிலையில் இல்லாது உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், “perfectionஐ நோக்கிய செயல்பாடுகள்தான் நாளடைவில் அனுபவத்தால் சிறப்படையும்”.

ஒரு விதை, முளை விட்டு வரும்பொழுதே முழுமையான பெரிய மரமாக, பருத்த அடி தண்டுடன் இருப்பதில்லை.  எத்தனை பெரிய மரமாக இருந்தாலும், விதையிலிருந்து முளைக்கும்போது மெல்லிய பட்டுப்போன்ற துளிர்களாகத்தான் வெளிவருகின்றன.  பருவ மாற்றத்தைத் தாங்கி, தொடர்ந்து வளர்ந்து, சில காலம் சென்ற பின்னரே முழுமையான மரமாக நிலைபெற முடியும்.  எனவே “தடைகளைக் கடந்து தொடர்ந்து செயல்படுத்தும் பயிற்சியே செயலின் முழுமையை உருவாக்கும்”.

கால நிர்ணயம்:

ஒவ்வொரு வேலைக்கும் அதற்குத் தேவையான நேரத்திற்குள் செய்வதுதான் திறமை.  மிகச்சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக அளவுக்கதிகமான நேரம் செலவிட்டால்  அதுவே மலைப்பையும், பெரிய சோர்வையும் தரும். இதுவே, தாழ்வு உணர்ச்சியையும் ஏற்படுத்தும்.  மேலும், காலதாமதம் நல்ல விளைவுகளையும் திசைமாற்றி விடும் தன்மைக் கொண்டது. 

“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்ற வாக்கியம், எதையும் அதற்குரிய காலத்தில் செய்வதன் அவசியத்தை உணர்த்துகிறது.  இவ்வாறு நேரத்தோடு செய்வதில் உருவாகும் மகிழ்ச்சி அடுத்த வேலைக்கான ஆற்றலையும், நம்பிக்கையையும் உருவாக்கும்.

காலம் phone போன்றது:

நேரத்தை நாம் எப்படி பயன் படுத்துகிறோமோ அதற்கேற்றபடி அது நமக்குப் பலன் தரும்.  வாய்ப்புகளைக் கண்டறிந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அதில் வழி இருக்கிறது.  வீணாகப் பொழுதைக் கழித்துவிட்டு வாய்ச்சொல் வீரராக வலம் வரவும் வழி இருக்கிறது.  

ஓட்டப்பந்தயத்தில் அனைவருமே தூரத்தை ஓடிக் கடக்கிறார்கள்.  அவர்களுள்  விரைவாக ஓடி கடப்பவர்களே வெற்றியாளர்கள்.  உலகத்தில் அனைவருமே வாழ்கிறார்கள். அவர்களுள் “வாழ்க்கையை அனைவருக்கும் பயனுள்ள வகையில் வாழ்பவர்களே சாதனையாளர்கள்” ஆகிறார்கள். 

“நாம் எதைத் தேர்ந்து எடுக்கிறோமோ, அதுவே நம்மை தேர்ந்து எடுக்கும்” என்பது உண்மை.  இதை உணர்ந்து முயற்சியை முதலீடு செய்து உழைத்தவர் எல்லாம் வாழ்ந்து வழிகாட்டியிருக்கிறார்கள். காலத்தை மதித்து வாழ்ந்தவர்களுக்குக் காலமும் அவர்களை மதித்து மரியாதைக் கொடுத்திருக்கிறது.  அவர்களைக் காலம்தோறும் நினைக்கும் வண்ணம் வரலாற்றுக் குறிப்பிலும் நிலைபெறச் செய்திருக்கிறது.

காலத்தை வென்றவர்கள்:

இந்த உலகில், யாரும் வருவார், யாரும் போவார்;  வருவதும், போவதும்  தெரியாது.  ஆனால் ஒரு சிலர் மட்டும் தங்களுடைய பிறப்பையும், இறப்பையும் உலக வரலாற்றின் காலக்குறியீடாக பதிவிடுகிறார்கள்.  

அவ்வாறு பதிவிட்டவர்களுள், தாமஸ் ஆல்வா எடிசன் முக்கியமானவர்.  இவர், தன்னுடைய அரிய கண்டுபிடிப்புகளின் மூலம் உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,  இந்த உலகிற்கே ஒளியேற்றி வைத்தவர். 

நூல் பல கற்றவர்:

அமெரிக்காவில் பிறந்த இவர்,  நான்கு வயதுக்குபிறகே பேசத்தொடங்கியதால், எட்டு வயதில் பள்ளிக்குச் சென்றார்.  பின்னர் மந்தமான மாணவன் என்ற அபிப்பிராயக் கடிதத்தோடு ஆசிரியரால் வெளியேற்றப்பட்டார்.  

(இவரே, பின்னாளில் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டமாக உருவாகிய சிறந்த கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்திருக்கிறார்.)  

தாயின் விவேகமான அன்பினால் கற்றல் தொடங்கி, தந்தையின் வழிகாட்டல் மூலம் கிடைத்தப் புத்தகங்கள், நூலகங்கள் இவற்றின் பயன்களை இளவயதிலேயே முழுவதும் பெற்றார்.  

இவருடைய “சுய சிந்தனைக்குத் தூண்டுகோலாக இருந்த நூலகங்களே”,  பின்னாளில் இவருடைய கண்டுபிடிப்புகள் அடங்கிய புத்தகங்களை தம்முள் பெருமையாகச் சேர்த்து வைத்துக்கொண்டன. 

எதிர்காலச் சிந்தனை:

இவருக்குக் காது கேட்பதில் சற்றுப் பிரச்சனை இருந்தாலும், உலக மக்கள் அனைவரும் இனிமையான பாடல்களைக் கேட்கும் வண்ணம் “கிராமபோன்” கண்டுபிடித்தார்.  

“இயங்கும் திரைப்படக் கருவி”, “பேசும்படக் கருவி” போன்ற  இவருடைய கண்டுபிடிப்புகளே, இன்றைய திரைப்படக் கருவிகளின் முன்னோடி ஆகும்.  திரைப்படத்துறை இன்னும் எத்தனை முன்னேற்றமான இடத்துக்கு உயர்ந்தாலும், எடிசனின் பெயரை “எடிட்” செய்யவே முடியாது என்று சொல்லும் வகையில், அவருடைய கண்டுபிடிப்புகள், “கான்கிரீட்” போல உறுதியாக உள்ளன.

தானியங்கி வாக்களிக்கும் கருவி, எக்ஸ்ரே படங்களைப் பார்க்க உதவும் கருவி, கெலடாஸ்கோப், டைனமோ, இன்னும் பல்வேறு அளக்கும் கருவிகள்  என்று “ஆயிரத்து முன்னூறு” கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர். 

பயனுள்ள கண்டுபிடிப்புகள்:

“மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தனது கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்” என உறுதியாக நினைத்த எடிசன் சிறந்த கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல, சிறந்த வியாபாரியும் ஆவர். 

தன்னுடைய ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் பொருட்செலவுக்குத் தேவையான தொழிலும் செய்து வந்தார். இதனால் இவர் மக்களின் தேவைகளைத் தொலைநோக்கு பார்வையோடு அறிந்து செயல்பட்டார். எனவே இவர் கண்டுபிடித்தப் பொருட்களை மக்கள் எளிதில் வாங்கக்கூடிய வகையில் எளிமையாகவும் வடிவமைத்தார்.  

மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட “மின்சார பல்பு” உலகத்தில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.  மக்களின் இயங்கும் நேரம் அதிகரித்தது.  வீடுகளிலும், வேலை, வியாபார இடங்களிலும், மக்களின் உழைப்பு நேரமும் அதிகரித்தது. இதன் பலனாக, இரவை பகலாக்கும் ஒளி வெள்ளத்தில் உலகப் பொருளாதாரமே உயர்ந்தது. 

இதனால்தான், அமெரிக்காவில் இவருக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது ஒரு நிமிடம் நாடு முழுவதும் விளக்குகளை அனைத்து, இப்படி இருண்டு இருந்த உலகத்தை ஒளிரச் செய்த மாமனிதர் எடிசன் என்று  உணர்த்தி, பின்னர் விளக்குகளை ஒளிரச்செய்தது அமெரிக்க அரசாங்கம்.

தெளிந்த சிந்தனை:

தன்னுடைய ஒவ்வொரு ஆய்விலும் வெற்றிக்கு முன் எத்தனை முறை முயற்சி செய்திருந்தாலும், அதைத் தோல்வியாக நினைக்காமல், “எந்தெந்த வாய்ப்புகள் எல்லாம் உதவாது என்று தெரிந்து கொண்டதாகக்” கூறினார்.  இந்த எண்ணமே அவருடைய தீவிரமான முயற்சிக்கு அடிப்படையாக இருந்தது எனலாம். 

உலகம் அவருடைய கண்டுபிடிப்புகளை பாராட்டி, புகழும்போதும், அவர் அடுத்த ஆரய்ச்சியில் உழைத்துக் கொண்டிருப்பார்.  “நேற்றைய வெற்றிகளுக்காக இன்றைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை”, என்று கூறி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே தன் கடமை என முழு ஈடுபாட்டுடன் உழைத்தார். 

வெற்றிகள்:

“அறிவியலின் தந்தை” என்று உலகமே போற்றும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளர் எடிசன்.  இவர் தன் இளவயதிலேயே, தன் உடல்நலக் குறைபாடுகள், மற்றவர்கள் தன் மீது சுமத்திய அபிப்பிராயங்கள், கல்வி நிலையத்தின் புறக்கணிப்புப் போன்ற “சிக்கல்களை வென்றிருக்கிறார்”.  

நேரத்தை வீணாக்கும் கேளிக்கைகள், புகழ்ச்சி விழாக்கள், போதை தரும் பாராட்டுகள் போன்றவற்றை ஒதுக்கி தள்ளி “தன் மனதை வென்றிருக்கிறர்”.

இவர், தன்னுடைய கண்டுபிடிப்புகளின் வெற்றிக்கு “அறிவை விட கடுமையான உழைப்பே” காரணம் என்று கூறி நம்மை வியக்க வைக்கிறார். அவருடைய வலிமையான உழைப்பிற்கு இன்று உலகமே ஊதியம் (நன்மை) பெறுகிறது. 

“காலத்தின் அருமை”யை நன்கு உணர்ந்து, ஒவ்வொரு வினாடியும்  அயராது உழைத்தவர் எடிசன்.  இதனால் எடிசனின் பெருமையை உலகம் உள்ளவரை காலம் பறைசாற்றும்.  தன் வாழ்நாளில் எத்தனையோ வெற்றிகளை கண்டவர் எடிசன், அவரே, தன் செயற்கரிய செயல்களினால் “காலத்தையும் வென்றவர்” என்று கூறுவது பொருத்தமானதுதானே.

*இந்தப் பதிவு அனைவருக்கும் பயனுள்ள சிந்தனைகளை உருவாக்கும் என்று நம்புகிறேன், தொடர்ந்து படிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *