மிகச் சிறந்த அறிவுரை. The Best Advice. Mikachirandha Arivurai.

அறிவுரைகள்: 

மனிதன் உலகத்தில் தோன்றிய நாள்முதல், தான் அறிந்துகொண்ட, கற்றுக்கொண்ட தகவல்களைத் தன்னுடைய குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறான்.  இந்தத் தகவல்கள், குழுவினர் தங்கள் முயற்சியில் எளிதாக பயனடையும் வகையில் வழிகாட்டுதலாகவோ, ஆபத்திலிருந்து காக்கும் எச்சரிக்கையாகவோ அமைந்து, கூடிப் பயன்பெறும் சிறந்த நோக்கத்தை இயல்பாகக் கொண்டிருக்கின்றன.

அனுபவத்தால் வலிமை பெற்ற இந்தத் தகவல்கள் தற்காலிகப் பயன்களாக நின்றுவிடாமல், தொடர்ந்து வருகின்ற தலைமுறையினரின் வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் இருப்பதால், இவை வாழ்க்கையை மேம்படுத்தும் அறிவுரைகளாகச் சிறந்து விளங்குகின்றன.  இதனால் இன்று நாம் பார்க்கும் அறிவு நிறைந்த இந்த உலகம் பலதலைமுறைகளால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு, பலவகையில் மேம்படுத்தப்பட்டு நம்முடைய கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

 

வளர்ந்து முதிர்ந்த மரம் தன்னலமற்றுத் தருகின்ற சுவையான கனிகளைப்போல, வருகின்ற தலைமுறைகளுக்கு நலம்தரும் மொழிகளாக முன்னோர்களின் அனுபவங்கள் விளங்குகின்றன.  எந்தக் கட்டாயத்தையும் ஏற்படுத்தாத இந்த வாழ்க்கை சுவைகள் தன்னார்வத்தோடு தேடிப் பயன்பெறுவோர் மனதில் தேன் துளிகளாக இனிமை சேர்க்கும் தன்மையுடையவையாக இருக்கின்றன. 

தங்கள் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து தெரிந்துகொண்ட அனுபவங்களை, அறிவுபூர்வமாகச் சிந்தித்து, அவற்றை எளிமையான கையேடுகளாக, சிந்தனைகளைச் சீராக்கும் இயந்திரங்களாக, சூழ்நிலைகளை முறையாகக் கையாள உதவும் கருவிகளாகப் பலவகைகளிலும் பதிவுசெய்து அமைக்கப்பட்ட படிக்கற்களே நம்முடைய இன்றைய உயரத்திற்கு அடிப்படையாக இருக்கின்றன. 

ஒரே முயற்சியை ஒவ்வொரு தலைமுறையும் மீண்டும் மீண்டும் அனுபவித்து அறியாமையால் வாழ்நாளை வீணாக்க வேண்டாம் என்ற அக்கறையோடு அன்பின் வெளிப்பாடுகளாக முன்னோர்களின் வார்த்தைகள் வழிகாட்டுகின்றன. அறிவிற்சிறந்த சான்றோர்களின் நீதிநெறிகளும், வாழும் ஒழுங்கு முறைகளும், வாழ்வியல் அறமும் மனித சமுதாயத்தின் மீது உள்ள அன்பின் மிகுதியால் வாழும் நன்னெறிகளாக வாழ்க்கையை எளிமையாக்கும் எண்ணத்தோடு படைக்கப்பட்டிருக்கின்றன.

முதன்மை: 

 

சான்றோர்களின் வார்த்தைகள், இயல்பு வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுகளைக் கூறுவதன் மூலம் (do’s & don’ts) எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதற்கான குறிப்புரைகளாக இருக்கின்றன. 

புதிதாகப் பிறக்கும் ஒரு குழந்தையைப் பாதுகாத்து, வெளிஉலகத்தை எதிர்கொள்ளும் அளவுக்குத் தகுதியுடைய பிள்ளையாகப் பண்போடு வளர்க்க வேண்டியதும், அவ்வாறு வளரும் பிள்ளையைக் கற்றோர் அவையில் முந்தி நிற்கும் வகையில் கல்விபெறச் செய்வதும் பிள்ளையைப் பெற்றவர்களின் கடமை என்று சான்றோர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.

அதேபோல, சிறப்பாகக் கல்வி கற்று, பண்போடு வளரும் பிள்ளை, சமுதாயச் சூழல்களைப் போராடி வென்று சிறந்த மனிதனாக உயர்ந்து, பெற்றோர் மனம் மகிழும் வகையில் புகழ்பெற்று, மிகச் சிறப்பாக வாழவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

ஒரு மனிதனை மேன்மையான நிலைக்கு உயர்த்தும் அடிப்படை கருவிகளான பண்பும், கல்வியும் அவனுடைய வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்ற குடும்ப வாழ்க்கையின் நோக்கத்தை வலியுறுத்திக் கூறும் அறிவுரைகள் நாகரிகமான மனிதகுலத்துக்குத் தேவையான முதன்மையான அறிவுரைகள் ஆகும்.

பொறுப்பு : 

உலக இயக்கத்திற்காகப் பொதுவாகப் பெய்யும் மழை, வானம் பார்க்கும் விளைநிலத்தில் பயிராக வளர்கிறது. அலைகடலில் விழுந்த மழைநீர் உப்பாக  விளைகிறது.  ஓடும் ஆற்றில் ஒன்றாகக் கலந்து உயிர்கள் தாகம் தீர்க்கிறது.  இவ்வாறு வானத்திலிருந்து பொழியும் அமுதநீர், அது சேர்கின்ற இடத்தைப்பொறுத்து பலன்களைத் தருவதுபோல, பொதுவான அறிவுரைகளாக இருக்கும் சான்றோர்களின் கருத்துகளும் பெறுபவரின் தன்மைக்கு ஏற்ப பயன்களைத் தருகின்றன.

மழை வரும்போது நேரடியாக நீர் பெறுகின்ற ஆறு, ஏரி, குளம், கண்மாய், கிணறு போன்ற நீர் நிலைகளில் நிறைகின்ற நீர், ஒவ்வொரு வீட்டின் மேற்தொட்டியிலும், குடத்திலும் நிறைந்து தேவையான சமயத்தில்  தேவைக்கேற்ப உதவுகிறது.  அதுபோலவே சான்றோர்கள் தந்த அமுதமாக விளங்கும் அறிவுரைகள், பலவடிவங்களில் உருமாறி இன்றைய சூழலுக்கேற்ற வகையில் எளிமையாக வந்தடைகின்றன. 

மக்களை வழிநடத்தும் புத்தகங்களாக, காட்சிப்பதிவுகளாக, பெரியோர்களின் பேருரைகளாக, ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களாக, பெற்றோர்களின் வளர்ப்பாகப் பலவகையில் வழிகாட்டும் அறிவுரைகள் ஒவ்வொரு மனிதனின் சுயசிந்தனையிலும் ஊடுருவி நின்று கையில் உள்ள குடிநீர்போல உடனடி உதவி செய்ய வல்லது. 

புதிதாகப் பயணப்படுகின்ற ஊரில், கண்ணில் தெரிகின்ற வழிகாட்டுப் பலகைகளைப் போல எந்த நிர்பந்தமும் இல்லாமல் தூரமாக நின்று வழிகாட்டுகின்ற இத்தகைய அறிவுரைகள் நம்முடைய குறிக்கோளுக்கும், தேவைகளுக்கும் ஏற்றபடி நமக்கான திசைகளைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையோடு நிதானமாக வழிநடத்துகின்றன.

பாதுகாப்பு:

முன்னோர்கள் கூறிய அரிய வளமான கருத்துகளை அறிந்திராத பச்சிளம் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு உதவும் நல்ல கருத்துகளை, நல்ல சிந்தனைகளைக் கதைகளின் மூலம் அறிமுகப்படுத்துவதே குழந்தைகளிடம் பேரன்பு கொண்ட பெற்றோர் மற்றும் பெரியவர்களின் கடமையாகும்.

 

 

இத்தகைய நல்ல கருத்துகளைச் சொல்வதற்கு மட்டுமல்ல கேட்பதற்கும் புரிந்துகொள்வதற்கும்கூட பக்குவம் வேண்டும்.  எனவே, பச்சிளம் குழந்தைகளாக இருந்தாலும், கதை சொல்பவரின் நிதானமும் கேட்பவரின் மனநிலையும் இணையும் புள்ளியில், மிகுந்த அன்பும் அக்கறையும் நிறைந்து கூறப்படும் கருத்துகளே குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் வளமோடு வாழ்வதற்கு வழிகாட்டும்.

தன்னுடைய நிழலைப் பார்த்து மிரண்டுபோன குதிரையின் கட்டுப்பாடற்ற செயலைக் கண்டு, அந்தக் குதிரையைத் திசைதிருப்பி நிற்க வைத்துக் கட்டுப்படுத்திய வீரனின் புத்திசாலித்தனம், வளரும் குழந்தைகளை லாவகமாகக் கையாளுவதர்க்கும் தேவைப்படுகிறது.

 

 

வளரும் இளம் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ள, அவர்கள் சொல்வதை மட்டும் அல்லாமல் சொல்லாத சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ள பொறுமையுடன் முயற்சி செய்வதே அவர்களது மனநெருக்கடியைக் குறைக்க உதவும் வழியாகும். 

இளம் குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உறுதுணையாக நின்று, சரியான நேரத்தில் கூறப்படும் பொருத்தமான ஆலோசனைகளே அவர்களுக்குப் பாதுகாப்பான முதல்உதவியாக நல்ல வழிகாட்டலாக, தாகம் அறிந்து கொடுக்கப்படும் தண்ணீர் போல இன்னல் தீர்த்து இதமளிக்கும் வழியாக இருக்கிறது. 

சிறப்பு:

வேகமான வாழ்க்கை அமைப்புகள், புதிய சூழ்நிலை மாற்றங்கள் என இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் பலவிதமான வாழ்க்கை தேர்வுகளுக்கு, மாதிரி வினாத்தாட்கள் போல உதவும் சான்றோர்களின் அறிவுரைகள் நம்முடைய சிந்தனைகளைச் சீராக்க உதவுகின்றன.

வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையையும் நேர்மறையாக அணுகுவதற்கும் நம்முடைய குறிக்கோளில் வெற்றி பெறுவதற்கும், நாம் செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும் மிகச்சரியாக அறிந்திருப்பதுதான் மிக நுட்பமான அறிவு.  இத்தகைய அறிவைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் கருவிகளே சான்றோர்களின் அறிவுரைகள் ஆகும்.

அனைவருக்கும் கூறப்பட்ட பொதுவான அறிவுரையானாலும், தனிப்பட்ட வகையில் உள்ள சூழலைப் புரிந்துகொண்டு கூறப்படும் பொருத்தமான ஆலோசனையானாலும், மனதை ஊக்கப்படுத்தும் வகையில் நேர்மறையான விளைவுகளைத் தருவதே சிறந்த அறிவுரையாகும். 

மேன்மக்களின் அறிவுரைகள் யாவும், நம் வாழ்க்கை நம்முடைய பொறுப்பு என்ற கவனத்தைத் தருவதால் அவை தன்னம்பிக்கையை உயர்த்துவதாக இருக்கின்றன.  மேலும், “யாருடைய அறிவுரையாக இருந்தாலும், அதில் கூறப்படும் கருத்து எதுவாயினும் அதன் மெய்ப்பொருள் உணர்ந்து சிந்தித்துத் தேர்ந்தெடுப்பதே அறிவு” என்று வலிமையாக உணர்த்துகின்ற இந்தக் கருத்து சுயஅறிவைத் தூண்டுகின்ற மிகச் சிறந்த அறிவுரையாக உள்ளது.  

 

# நன்றி .

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *