தன்னம்பிக்கையும், தைரியமும் யாருக்கு அதிகமாக வேண்டும்? Who Needs More Confidence and Courage ? Thannambikkaiyum Dhairiyamum Yaarukku Adhigamaaga Vendum?

சமூகம்: 

ஒரு வகுப்பில் உள்ள ஆசிரியர் அனைவருக்கும் பொதுவாகவே பாடம் நடத்தினாலும், அவர் கூறுகின்ற கருத்துகளை மாணவர்கள் அவரவர் தன்மைக்கு ஏற்பவே உள்வாங்குகிறார்கள்.  அதுபோலவே வாழ்க்கை நெறிகள், பண்புகள் போன்ற நல்ல ஒழுக்கங்கள் சான்றோர்களால் பலவகையில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவற்றை பின்பற்றுவது என்பது ஒருவருடைய தனித்தன்மையைப் பொறுத்தே அமைகிறது .

எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் நல்ல குணங்கள் இருந்தால் மட்டுமே நம்பிக்கைக்கு உரிய மனிதர்களாக மதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.  என்றாலும் உலகம் நல்லவர்களால் மட்டுமே நிறைந்தது இல்லை என்பதும் நாம் அனைவரும் அனுபவத்தில் அறிந்திருக்கின்ற உண்மை. 

நல்லது என்ற வார்த்தை உருவாகும்போதே அதற்கு எதிரான வார்த்தையும் உருவாகிவிட்டது என்பதால், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் அதே நேரத்தில் எதிர்மறையானவர்களையும் வலிமையோடு எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது.

வலிமை: 

தன்னம்பிக்கையும், மனஉறுதியும், சுயமரியாதையும் இல்லாத பலவீனமானவர்களே சுயநலத்திற்காக மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள்.  இத்தகையவர்களே, நல்லவர் போல நடித்து ஏமாற்றும்  ஆபத்தானவர்களாக, உதவி செய்தவர்களுக்கே உபத்திரவம் செய்பவர்களாக தங்கள் பலவீனங்களை வெளிப்படுத்துகிறார்கள் .

நேர்மையான மனஉறுதியும், வலிமையான தன்னம்பிக்கையும், நிறைந்த சுயமரியாதையும் உள்ளவர்கள் தாங்கள் நிர்ணயித்த குறிக்கோளை நோக்கி போராடுகின்ற அதே நேரத்தில், குணக்குறை உள்ளவர்களினால் ஏற்படுகின்ற பலவகையான இடையூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

வெளியில் இருக்கும் வைரஸ் கிருமிகளினால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு ஆரோக்கியமானவர்களும் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதைப்போல, எதிர்மறையானவர்கள் ஏற்படுத்தும் சூழ்நிலைகளை எச்சரிக்கையோடு கையாள்வதற்கும், மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் மன ஆரோக்கியம் உள்ளவர்களுக்கே கூடுதலான எதிர்ப்புசக்தித் தேவைப்படுகிறது.

எனவே, நல்ல குணங்களோடும், சிறந்த பண்புகளோடும் வெற்றிகரமாகவாழ முயற்சி செய்பவர்களுக்குதான் மேலும் கூடுதலான தன்னம்பிக்கையும், தைரியமும் தேவைப்படுகிறது என்பது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய உண்மையாகும். 

எதிர்மறையான சந்தர்ப்பவாதிகள் தங்கள் பண்பற்ற மனதின் இயலாமையை மறைத்து, குற்றவுணர்ச்சி இன்றி செயல்படும்போது, நல்ல பண்புகளோடு நேர்மறையான செயல்கள் செய்பவர்கள் கூடுதலான தன்னம்பிக்கையோடும், மனவுறுதியோடும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டியது சமூகத்தின் சமநிலைக்கு அவசியமான ஒன்று .

இத்தகைய நேர்மறையான, தைரியமான பண்புகளே இயல்பான நல்ல குணத்தை வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் வலிமையான அறிவாகச் செயல்படுகிறது.  நல்லவர்கள் வல்லவர்களாகச் செயல்படுவதற்கு உதவும் இந்த அறிவு நடைமுறையில் எப்படி இருக்க வேண்டும் என்று மிக எளிமையாகக் கூறுகின்ற பலவிதமான கதைகளிலிருந்து ஒரு கதையை இன்று நாம் பார்க்கலாம்.

சிறுகதை:

ஒரு ஊரில் இந்திரன், சந்திரன் என்று அண்ணண் தம்பி இருந்தனர்.  மிகவும் அன்பாகப் பழகும் இருவரும் ஒரே இடத்தில் அருகருகே வீடு கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தனர்.  இந்திரன் மனைவி சாந்தி மிகவும் பொறுப்பாகவும் பொறுமையாகவும் இருந்து குடும்பத்தைக் கவனிப்பதோடு அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருப்பதற்கும் உதவியாக இருந்தாள்.  சந்திரன் மனைவி செல்வி தன்னுடைய கும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொண்டாள் என்றாலும், தன்னுடைய கணவன் அவனுடைய அண்ணனுடன் அன்பாகப் பேசுவதையும்,  அண்ணி சாந்திக்கு மரியாதை கொடுப்பதையும் வெறுத்தாள்.

இந்நிலையில், சாந்தி தன்னுடைய வீட்டிற்கு பின்புறம் சிறிய தோட்டம் போட்டிருந்தாள். அதிலிருந்து கிடைக்கும் கீரை, காய்கறிகளை இரண்டு குடும்பத்திற்கும் சமமாகப் பங்கிட்டு சந்திரன் வீட்டிற்கும் கொடுத்து விடுவாள்.  இவ்வாறு சாந்தி ஒவ்வொருமுறை கொடுக்கும்போதும் செல்விக்குப் பொறாமை அதிகம் ஆனதே தவிர நல்ல எண்ணமோ, அன்போ வரவில்லை.  மேலும், சாந்தியின் மனம் நோகவேண்டும் என்ற நோக்கில் குத்தலாகவும் ஏதாவது பேசுவாள்.

அவள் பேசுவதை சாந்தி கணவனிடம் கூறினாலும், சகோதர்களுக்குள் மனவேறுபாடுகள் ஏதும் ஏற்படாதபடி கவனமாக இருந்தாள். அதேநேரத்தில் செல்வியின் பொறாமை நாளுக்குநாள் அதிகமாவதை செல்வியின் கணவன் சந்திரன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால் அதை எப்படி சரிசெய்வது என்று தெரியாமல் இருந்தான்.

ஒருநாள் காலை வழக்கம்போலத் தோட்டத்திற்கு வந்த சாந்தி, அங்குப்  புதிதாக ஐந்தாறு கோழிகள் இருப்பதைப் பார்த்தாள்.  அவை அங்கிருந்த கீரைகள், செடிகொடிகள் அனைத்தையும் கிளறிவிட்டு மேய்ந்து கொண்டிருந்தன.  இதனால் வேர்கள் பிய்ந்து கீழேகிடந்த செடிகளைக் கண்டதும் சாந்திக்கு மனம் பதறியது.  இந்தக் கோழிகள் யாருடையவை தெரியவில்லையே என்று நினைத்தாள்.

அண்ணன் தம்பி இருவர் வீட்டையும் சுற்றி உயரமான சுற்றுச்சுவர் இருக்கிறது.  எனவே கோழிகள் வெளியிலிருந்து வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் செல்வியை அழைத்தாள்.  செல்வி இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்தவள் என்பதால் எந்தக் கேள்விக்கும் பதில் இருக்கிறது என்ற நினைப்போடு தைரியமாக இருந்தாள்.

நிதானமாக வெளியே வந்த அவளிடம் கோழிகளைப் பற்றி கேட்டாள் சாந்தி.  அதற்கு அவள்,  “பொழுபோக்குக்கு நீங்கள் தோட்டம் போடுவதுபோல நான் கோழி வளர்க்க நினைத்தேன்.  அதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை”, என்றாள் .

 

அதற்கு சாந்தி, “நான் தோட்டம் போடுவதால் உனக்கும் நன்மைதான் செய்கிறேன்.  நீ கோழி வளர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு அவற்றை தோட்டத்தில் மேயவிட்டு இப்போது தோட்டமெல்லாம் வீணாகிவிட்டது” என்று கூறினாள்.  பதிலுக்கு செல்வியோ, “அதற்கு நான் என்ன செய்ய முடியும், வேண்டுமானால் தோட்டத்திற்குப் போகாதீர்கள் என்று கோழிகளிடம் சொல்லிவைக்கிறேன்”, என்றாள்.

செல்வி வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறாள் என்று சாந்திக்குப் புரிந்தது.  இவளிடம் பேசுவது அர்த்தமற்றது என்று நினைத்த சாந்தி இதை வேறுவிதமாகவே அணுக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.  முதலில் தோட்டத்திற்கு ஒரு வேலி அமைத்து செடிகளை ஓரளவு பாதுகாத்து வளர்த்துவந்தாள்.  ஆனாலும் சில நாட்களில் கோழிகள் அந்த வேலிக்குள்ளும் நுழைவதற்கு வழி ஏற்படுத்திவிட்டன. 

இப்படியே சிலநாட்கள் சென்ற பின்னர் கோழிகளும் நல்ல வளர்ச்சியடைந்து விட்டன.  பிறகு ஒருநாள் காலை, கோழிகள் மேய்ந்து கொண்டிருக்கும் தோட்டத்தை நோட்டம் விட்டபடி செல்வி நின்றிருந்தாள். அந்தச் சமயத்தில் சாந்தி தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த செடிகளுக்கிடையிலிருந்து  இரண்டு முட்டைகளை எடுத்துக்கொண்டு உள்ளேப் போனாள்.

அப்போது அவளை அழைத்த செல்வி,  “அந்த முட்டைகள் என்னுடையக் கோழிகள் போட்டவை அதனால் என்னிடம் கொடுங்கள்”, என்றாள்.   இதைக்கேட்ட சாந்தி புன்னகையோடு அவளைப்பார்த்து, “இந்தத் தோட்டத்தில் வந்து மேய வேண்டாம் என்று நீ கோழிகளிடம் சொன்னது போலவே முட்டைகளை இந்தத் தோட்டத்தில் இடவேண்டாம் என்று நீயே உன் கோழிகளிடம் சொல்லிவிடு.  அதைவிட்டு என்னிடம் ஏன் சொல்கிறாய்”, என்றாள் சாந்தி.  இதைக்கேட்ட செல்வி கோபத்தில் கத்தினாள்.  பதில் ஏதும் பேசாமல் சாந்தி அமைதியாக உள்ளே சென்று விட்டாள்.

மறுநாளும் செல்வி கோழிகளைத் திறந்துவிட்ட பின்னர் சிறிது நேரம் கழித்துத் தோட்டத்திற்கு வந்த சாந்தி செடிகளுக்கு இடையிலிருந்து இரண்டு முட்டைகளை எடுத்துவந்தாள்.  இப்போது செல்விக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  சாந்தியின் தோட்டத்தை வீணாக்க வேண்டும் என்று நினைத்து செலவு செய்து கோழிகளை வாங்கி வந்த செல்விக்கு, கோழிமுட்டைகள் சாந்திக்கே செல்கிறதே என்று நினைத்துக் கோபப்பட்டாள். உடனே கோழிகளை அடைத்து வளர்க்க பெரிய கூடைகள் வாங்கி தன் வீட்டின் பின்பகுதியில்  வைத்து அதற்கு அங்கேயே தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தாள்.

சாந்தி, தான் கடையிலிருந்து வாங்கிவந்த முட்டைகளைத் தன்னுடைய தோட்டத்தில் மறைத்து வைத்து, செல்வி பார்க்கும்போது, கோழிகள் இட்ட முட்டைகள்போல எடுத்துக்கொண்டாள்.  யாருக்கும் பாதிப்பு இல்லாத சாந்தியின் இந்தச் செயலால் தோட்டம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறது.  என்றாலும் பொல்லாத எண்ணம் கொண்ட செல்வியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உணர்வும் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

நல்லவரே வல்லவர்:

மற்றவர் உணர்வுகளை, எல்லைகளை மதிக்காமல் பொல்லாத எண்ணத்தால் தொந்தரவு செய்பவர்களை எதிர்கொள்வதற்கு, தைரியம் எனும் தற்காப்பும், சூழ்நிலையை முறையாகக் கையாளும் புத்திசாலித்தனமும், நேர்மறையானவர்களுக்குக்  கூடுதலாகத் தேவைப்படுகிறது .

சுயநலம், பொறாமை போன்ற பலவீனங்கள் கொண்ட எதிர்மறையானவர்களே துணிச்சலுடன் செயல்படும்போது, நல்லவர்கள் மேலும் மனவுறுதியோடும், புத்திசாதுரியத்தோடும் இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்ற எளிய கதை. சரிக்குச்சரியாக நின்று கத்தி, கூச்சல் போட்டு, சக்தியை வீணாக்காமல் அமைதியாக சிந்தித்து மனசாட்சியோடு செயல்பட்டால் மனஉறுதியும் அதிகமாகும், நேர்மறையான விளைவுகளும் வளரும் என்று உணர்த்தும் சிறுகதை.

எவரும் முழுமையான நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ இருப்பதில்லை என்று கூறுகிறார்கள்.  அப்படியானால் சிறந்த பண்புகளை, நல்ல குணங்களை வளர்க்க நினைத்து, முழுமையான மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒவ்வொருவரும் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வலிமையாகச் செயல்படும்போது முழுமையான நேர்மறையான விளைவுகள் உருவாகும். 

எனவே, நேர்மறையான சிந்தனைகள் உள்ள நல்லவர்களுக்கே கூடுதலான தன்னம்பிக்கையும்,  தைரியமும் வேண்டும் என்பது இன்றைய நடைமுறைக்குத் தேவையான கருத்து என்று நினைக்கிறன்.

 

# நன்றி .

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *