நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி.Being Friendly to Ourselves is the Primary Victory. Namakku Naam Natpaaka Iruppathe Muthanmaiyaana Vetrie.

நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி.

பரிமாற்றம்:

 

 

நாம் பிறந்ததுமுதல் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துப் பழகியிருக்கிறோம்.  அவ்வாறு பழகுகின்றவர்களை உறவினர், நண்பர் மற்றும் இந்த நபர் இந்த வகையில் தெரிந்தவர் என்று நமக்குள் சில அடையாளங்களை வைத்திருக்கிறோம்.  இந்த அடையாளங்களோடு சேர்த்து, ‘நம்முடைய புரிதலுக்கு ஏற்றபடி’ இவர் இப்படிப்பட்ட பண்புகளும் குணங்களும் உள்ளவர் என்ற ஒரு வரையறையை மனதில் வைத்திருப்போம்.  மேலும், அதில் ஏற்படுகின்ற புதிய மாற்றங்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் சூழ்நிலைகளைக் கையாளுகிறோம்.

இவ்வாறு, மற்றவர்களிடம் பழகுவதற்குத் தேவையான வரைமுறைகளையும், அணுகுமுறைகளையும், நுணுக்கமான உணர்வுகளின் அடிப்படையில், முறையான எல்லைகள் அமைத்து வைத்திருக்கும் நாம், நம்மை எப்படி அணுகுகிறோம்? நமக்கு நாம் யாராக இருக்கிறோம்?  நமக்குள், நமக்கான உரிமைகளும் எல்லைகளும் எந்த நிலையில் செயல்படுகின்றன? நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் அன்பும், நம்பிக்கையும், பொறுப்பும், மதிப்பும் நமக்குள் நாம் முறையாகப் பரிமாறுகிறோமா? 

பலவகையான சூழ்நிலைகளால் நமக்கு ஏற்படுகின்ற அனுபவங்களை நாம் நம் மனதோடு பகிர்ந்துகொள்வதும், நம்முடைய அணுகுமுறையில் இருக்கும் குறைநிறைகளை மனம் நம்மிடம் உணர்த்துவதும், நமக்கு நம்மைப்பற்றிய புரிதல் ஏற்படுவதற்குத் தேவையான அடிப்படையான பரிமாற்றமாகும்.  இதன் விளைவாக,  நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.  இதனால் மனதில் உருவாகும் நேர்மறையான சிந்தனைகள் நமக்குள் ஊக்கத்தை ஏற்படுத்தி அதை நம்முடைய செயலிலும் வெளிப்படுத்துவது பரிமாற்றத்தின் முக்கியமான பலன் ஆகிறது. 

மேலும் மனவளம் பெறுவதற்கும், பயனுள்ளவராக வாழ முயற்சி செய்வதற்கும் நம்மை நாம் புரிந்துகொள்வது அடிப்படையான மிகமிக அவசியமான செயலாக இருக்கிறது.

நம்பிக்கை:

கரைகளுக்குள் கட்டுப்பட்டு அமைதியாக ஓடுகின்ற ஆற்றுநீராக இருந்தாலும் பரந்துவிரிந்திருக்கும் அலைகடல் நீராக மாறிவிட வேண்டும் என்ற  தனது குறிக்கோளை நோக்கி ஆற்றலாடு பயணிக்கிறது.  இந்த வலிமையான குறிக்கோள் தருகின்ற சக்தியால், தனக்கென்று வகுத்துக்கொண்ட பாதையில் மேடுபள்ளங்களை எதிர்கொண்டு, குறுக்கிடுகின்ற உறுதியான பாறைகளைக் கடந்து, தடைகளைத் தாண்டி தனது குறிக்கோளை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறது. 

இடத்திற்கு ஏற்றபடி வளைந்து பார்வைக்கு மென்மையாக சலசலத்து ஓடும் நதி, தொடர்ந்து சீராக அதன் சக்தியைத் தக்கவைத்துக்கொள்ளும் வலிமையால் கொண்ட குறிக்கோளில் நிச்சயம் வெற்றி அடைகிறது. 

நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் நாமும் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கையாளுவதற்கு மனதோடு உள்ள புரிதல் உதவுகின்றது.  குறிக்கோளை நோக்கி ஓடுகின்ற நதியாக இருந்தாலும் பயணிக்கும் பாதையெங்கும் பலன்களைத் தருவதுபோல, நாமும் பயனுள்ளவர்களாக வாழ்வதற்கு மனதின் இந்தப் புரிதல் நிலையான நம்பிக்கையாக இயங்குகிறது. 

சூழ்நிலைக்கேற்றவாறு ஒத்திசைந்து பொருத்தமாக இயங்கும் மனம், சவால்களைச் சந்தித்தாலும் அமைதியாக ஓடும் நதியைப் போல விடாமுயற்சியோடு தொடர்ந்து பயணிக்க உதவுகிறது. 

நம்முடைய உணர்வுகள், முயற்சிகள், செயல்கள், விளைவுகள் மற்றும் பலம் பலவீனம் என்று நம்மைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கும் மனம், நம்மிடம் இருக்கும் குறைகளையும் நிறைகளையும் அறிந்து, உண்மையில் நாம் யார், எத்தகையவர் என்ற தெளிவோடு, நமக்குள் ஏற்படுத்துகின்ற நம்பிக்கையே தன்னம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கின்றது. 

வாழ்க்கை முழுவதும் நம்மை வழிநடத்துகின்ற தன்னம்பிக்கையைத் தருகின்ற மனம் நம்மிடம் கொண்டிருக்கும் நம்பிக்கையே நாம் தினமும் சந்திக்க வேண்டிய முதல் நம்பிக்கையாகும். 

நட்பு:

பலவிதமான நண்பர்கள் உறவுகள் என்று குழுவாக இயங்குபவர்களாக இருந்தாலும், தனக்குள் இருக்கும் மனம், அறிவு, உள்ளுணர்வுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக நிர்வகிக்க வேண்டிய கடமை தனிநபரின் பொறுப்பாக உள்ளது.

அன்போடு அரவணைக்கும் உறவுகள் நண்பர்கள் என்று ஆயிரம் உதவிகள் கூடியிருந்தாலும், பெரும்பாலான சூழ்நிலை தேர்வுகளைத் தனிப்பட்ட வகையில் ‘முதன்மையாக’ நேருக்குநேராக எதிர்கொள்ள வேண்டிய நிலை எல்லோருக்கும் இயற்கையான ஒன்று.  

பொதுவாக அனைவரும் உணர்ந்திருக்கக்கூடிய அன்பு, கருணை, ஏமாற்றம், பசி, சுவை, வலி, தூக்கம், துக்கம், பயம், வருத்தம், மகிழ்ச்சி, பூரிப்புப் போன்றவை அவரவர் தனிப்பட்ட உணர்வுகளாகத் துவங்குகின்றன.  இவை போலவே, மனதில் தோன்றுகிற மேலும் சில நுணுக்கமான உணர்வுகளைப் பாதுகாப்பாகக் கையாளுவதற்கு ஏற்றநிலையில் ஒவ்வொருவரும், அவரவர் மனதோடு நட்பு நிலையைப் பேணவேண்டியது அவசியமாகிறது.  

மேலும், நமக்குப் பக்கபலமாக இருந்து தோளோடுதோள் நிற்கும் நண்பர்களும், உறவுகளும்கூட நமக்குள் இருக்கும் மனதிற்கு ஊக்கம் தறுவதற்கே முயற்சிக்கிறார்கள். அத்தகைய ஊக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கும், நண்பர்கள் கூறுகின்ற நல்ல சிந்தனைகளைப் பக்குவமாகச் சிந்திப்பதற்கும் மனதின் நட்பு அவசியமாகிறது.  இத்தகைய நட்போடு இருக்கும் மனம் நம் முன்னேற்றத்திற்காக இயங்குவதே உற்ற நண்பன் உள்ளிருப்பது போன்ற பலத்தை உருவாக்கும்.     

இவ்வாறு, அன்பைப் பெறுகின்ற சூழ்நிலைகளுக்கே நமக்குள் நாம் நட்பாக இருக்க வேண்டும் என்றால், நமது நண்பர்களுக்கும், அன்பானவர்களுக்கும் நாம் துணையாக இருந்து, அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்பைத் தருகின்ற சூழ்நிலைகளுக்கு மனதின் நட்பு மேலும் வலிமையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

எனவே, வாழ்க்கையின் பலவிதமான சூழ்நிலைகளைத் தனியொருவனாக எதிர்கொள்ளும் நிலையில், நம்மோடு நட்பாக ஒருங்கிணைந்து, அவற்றை திறனோடு சந்திக்கும் சக்தியைத் தருகின்ற மனதின் நட்பே என்றும் நமக்கு முதன்மையான நட்பாகும். 

உதவி:

முழுமையான நம்பிக்கையோடு, ஆழமான அன்பும், நேர்மையான கண்டிப்பும், சுயமரியாதைக்கு இதமான ஆறுதலும், சுயநலமற்ற வழிகாட்டுதலும், ஊக்கம் தரக்கூடிய தூண்டுதலும், இணைபிரியாத தோழமையும் பூரணமாக சாத்தியமாக முடியும் என்ற நிலையில் மனதின் நட்பே என்றும் நமக்கு முதன்மையான உதவியாகும்.

மனதோடு வளர்கின்ற இந்த நட்பு, எந்நிலையிலும் உடனிருக்கும் என்பதால், மனதில் தோன்றும் எந்த எண்ணங்களையும், உணர்வுகளையும் அலட்சியப்படுத்தாமல், அது தோன்றும்போதே அதன் சாதகங்களையும் பாதகங்களையும் சிந்தித்துத் தெளிவுகாண்பது மனதிற்கு நாம் செய்ய வேண்டிய உதவியாகும்.

அதேநேரத்தில், மனம் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, மனம் போன போக்கிலே நடப்பது தெளிவற்ற, முதிர்ச்சியற்ற செயல்களுக்குக் காரணமாக அமையக்கூடும்.  இதனால் உருவாகும் சூழ்நிலைகள், உணர்ச்சி வசப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தி, அந்நாள்வரை மனதோடு இருந்த நட்பையும் பாதித்துவிடும். 

எனவே, இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் உணர்வுபூர்வமான சவால்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே சந்தித்த சான்றோர்கள் அதற்குத் தீர்வுகளும் கூறியிருக்கிறார்கள்.  அத்தகைய அனுபவம் மிக்க பெரியவர்களின் நல்ல கருத்துக்களைத் துணைகொண்டு, ‘சுயஅறிவின்’ வழியில் இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி சிந்தித்துத் தேவையானது, தேவையற்றது என்று உணர்வுகளைப் பகுத்தறிவதும், நமது சிந்தனைகளை ஆக்கப்பூர்வமாக  முறைப்படுத்துவதும் மனதை மேம்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய எளிமையான முதல் உதவியாகும்.

வாழ்த்தும் நன்றியும்.

வெளியிலிருந்து நம்மை வாழ்த்தும் வாழ்த்துகள் நமக்கு உற்சாகத்தைத் தருவதுபோலவே, நமக்கு நாம் தெரிவிக்கும் முதல் வாழ்த்து நம்முடைய செயலின் உத்வேகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.  

நிர்ணயித்துக்கொண்ட முக்கியமான குறிக்கோளை நோக்கி உழைக்கும்போது அதற்குத் தேவையான, முக்கியமான, பயனுள்ள வேலைகளில் அதிக கவனம் செலுத்துவதும், ஆக்கப்பூர்வமான செயல்களில் நம்மை இணைத்துக் கொள்வதும்  வெற்றியின் பாதையில் நாம் பயணிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

நம்முடைய செயலில் ஏற்படுகின்ற தவறை உணர்ந்து, நம்மை திருத்திக் கொள்வதைப்போலவே, செயலின் வெற்றிக்கு இயல்பாக மகிழ்வதுபோலவே, நம்முடைய தனிப்பட்ட முயற்சிகளின் நுணுக்கங்களை முழுவதும் புரிந்துகொண்டு உணரப்படும் ஆழ்மனதின் வாழ்த்துகள் கூடுதல் ஆற்றலைக் கொடுக்கின்றன.  இதனால் ஏற்படுகின்ற ஊக்கம் வெற்றி தோல்விகளைக் கடந்து நம்முடைய திறனை மேலும் வளர்த்துக்கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் நமக்கான தகுதித் தேர்வாகத் தீர்மானிக்கப்படுகின்ற வாழ்க்கை சூழலில், நம்முடைய உணர்ச்சிகளை, உணர்வுகளைக் கூடுதல் பலத்தோடு கையாளுகின்ற தெளிவான மனதின் வாழ்த்து நமக்கு முழுமையான முதல் வாழ்த்து ஆகும்.

வெளியிலிருந்து நம்மை வாழ்த்தும் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பது முக்கியமான நாகரிகங்களுள் ஒன்று எனும்போது, நம்மை வாழ்த்தும் நம்முடைய உள்ளத்திற்கும் நன்றி தெரிவிப்பது முக்கியமான உணர்வுகளுள் ஒன்று ஆகும்.

வாகனம்:

வாகனத்தைச் சிறப்பாகச் செலுத்துபவர், சாலையின் போக்குவரத்துக்கு ஏற்றபடி வாகனத்தின் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும், தேவைக்கு ஏற்றபடி திருப்பத்தைத் தேர்வு செய்து இடது வலது என்று முறையாக செலுத்தியும் வாகனத்தைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செலுத்துவதுபோல, மனதை நம்மோடு இணைத்துக்கொண்டு தோழமையாகப் பயணிக்கும்போது வாழ்க்கை பயணம் இயல்பாக அமையும்.

ஒரு வாகனத்திற்கு எரிபொருள் மற்றும் முறையான பராமரிப்புப் போன்ற கவனிப்புகள் வாகனத்தின் செயல்பாட்டிற்கு அவசியம் என்பதுபோல மனதிற்கும் அறிவார்ந்த வளர்ச்சி, உணர்வுகளை, உணர்ச்சிகளைக் கையாளும் பயிற்சி போன்ற கவனிப்புப் பணிகளும் அவசியம் தேவைப்படுகின்றன.

வாகனத்தில் விளக்குகள், பிரேக், ஆக்சிலேட்டர், ஒலிப்பான், இண்டிகேட்டர் உள்ளிட்ட போக்குவரத்து மொழிகள் பலவகையாக இருந்தாலும்,  அவை தேவைப்படுகின்ற சூழல்களை உணர்ந்து அளவறிந்து பயன்படுத்துவதே வாகனத்தை ஓட்டுவதில் சரியான முறையாக இருக்கிறது.  அதுபோலவே மனதில் உள்ள பல்வேறு உணர்வுகளை உணர்ந்து பாதுகாப்பாகவும் விழிப்பாகவும் செயல்படுத்துவது மனதைக் கையாளுவதில் உள்ள திறமையை வெளிப்படுத்துகிறது.

மனிதனின் வளர்ச்சிக்குக் காரணமாக, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் துணையாக இருக்கும் வாகனத்தின் தரத்தைப் பொருத்தும், எதிர்கொள்ளும் சூழலுக்கேற்ப அதை இயக்குபவரின் திறமையைப் பொருத்தும், பயணம் அமைகின்றது.

இதைப்போலவே, நம்முடைய மனதைப் பொருத்தும், எதிர்கொள்ளும் சூழலுக்கேற்ப அதை கையாளுகின்ற நம்மைப் பொருத்தும் வாழ்க்கைப்பயணம் அமைகின்றது.

நமக்கு மட்டுமே சொந்தமாகவும், உரிமையாகவும் உள்ள மனம் என்ற வாகனத்தை நல்ல நிலையில் பராமரிப்பதும்,  தவிர்க்க முடியாத நிலையில் அதில் ஏற்படுகின்ற பழுதுகளை அவ்வப்போது சரிசெய்து பயணத்திற்கு ஏற்றவகையில் தயார் செய்வதும் நம் அன்றாடக்  கடமையாகிறது.  

மனம் என்னும் வாகனத்தைப்பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும் நாம் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் அதை புரிந்துகொள்வது நம் பயணத்தை எளிமையாக்கும் என்று நம்புகிறேன்.

மரியாதை:

‘நம்மை நாம் மதிப்பதுதான் முதல் மரியாதை’ என்றுதான் நான் சொல்லப்போகிறேன் என்று இப்போது நீங்கள் மிகச்சரியாக யூகித்திருப்பீர்கள்.  உங்களுடைய சரியான யூகத்திற்கு மிக்க நன்றி.

நாம் நினைப்பதுபோல, நம்மை நாம் மதிப்பது என்றால் என்ன?  எத்தகைய சூழ்நிலைகளில் நம்முடைய மதிப்பு நமக்குள் உயர்கிறது? என்று நாம் சற்று சிந்திப்போமா!

சுயஒழுக்கம் எனப்படுகின்ற நேர்மையான பண்புகளும், புறஒழுக்கம் எனப்படுகின்ற நல்ல பழக்கங்களும், அன்பு எனும் உயிர்ப்போடு ஒன்றிணைந்து, உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் எல்லைகள் வகுத்து, சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் கண்ணியமாக வாழும் முறையை உணர்த்தும் விழிப்புணர்வே சுயமதிப்பு ஆகும்.

இந்த விழிப்புணர்வே, ஆறறிவு கொண்ட மனிதன் நேர்மையாக வாழ்வதற்கான வாய்ப்புகளையும், நியாயமான உரிமைகளையும் பெறுவதற்கான தகுதிகளைத் தருகின்றது.  மேலும், தனக்கும், மற்றவர்களுக்கும் உள்ள உரிமைகள் மற்றும் எல்லைகள் போன்றவற்றில் தெளிவையும், மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் அறிவையும், அணுகுமுறைகளை உணர்ந்து செயலாற்றும் திறனையும் தருகின்றது.  இந்தச் சுயமதிப்பு எனும் தனிமனித விழிப்புணர்வு பாதுகாப்பின் அரணாக நின்று ஒழுக்கமான சமுதாயத்தின் மதிப்பாகவும் உயர்ந்து நிற்கிறது.

வெற்றி:

நமக்குள் நாம் அன்பாகவும் சுயமதிப்போடும்  இயங்குவது என்பது இணைப்பில் இருக்கும் Power bank போல எப்போதும் மனம் ஆற்றலோடு செயல்படுவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. அந்தச் சக்தியைக் குறிக்கோளை நோக்கி உழைப்பதற்கு, திறன்களை மேம்படுத்துவதற்கு என்று ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்துவது வெற்றிக்கு வழியாக அமையும்.

நம்மை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதும், மனவளர்ச்சிக்கு ஏற்ற வகையில் குறைகளை நிறைகளாக மாற்றும் முயற்சியில் பயிற்சி பெறுவதும் வாழ்நாள் பயணம் ஆகும்.  இந்தப் பயணத்தில் உணர்ச்சிகளைக் கையாளும் மனமும், அறிவார்ந்த சிந்தனைகளும் ஒருங்கிணைந்து குறிக்கோளை நோக்கி செய்யப்படும் ஒவ்வொரு சிறுமுயற்சியும் வெற்றிக்கான முன்னேற்றமே ஆகும்.

நாம் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெறுவதற்கான தகுதியும், நேர்மையான உழைப்பும், தொடர்ந்து செயலாற்றும் மனஉறுதியும் தன்னம்பிக்கையால் தான் விளைகிறது.  இத்தகைய தன்னம்பிக்கையைத் தருகின்ற மனதைப் புரிந்துகொண்டு நட்பாகப் பழகி அறிவோடு சிந்தித்துச் செயல்படுவதே நம்முடைய வாழ்க்கையில் முதன்மையான வெற்றியாகும்.

 

#   நன்றி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *