முயற்சி திருவினை ஆக்கும். எப்படி? Muyarchi Thiruvinai Aakkum. Eppadi? Effort Will Pay Off.

முயற்சி உடையார்:

நாம் அனைவருமே எப்போதும்,  ஏதாவது ஒரு செயலில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறோம்.  ஆனால் எல்லோருடைய செயல்களும் எல்லா நேரத்திலும் திருவினைகளாக வெற்றி அடைகின்றனவா?  

இன்று, வெற்றியின் வெளிச்சத்தில் பிரகாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், உறுதியான மனநிலையும் தான், அவர்களை அந்த இடத்திற்கு உயர்த்தி இருக்கின்றன.

வெற்றி பெற்றவர்களின் வெளிப்படையான பலனை மட்டும்  காணும் நாம் அவர்களின் தனிப்பட்ட முயற்சிகளின் ஆழத்தையும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். 

முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்:

நம்முடைய குறிக்கோளில் முன்னேறுவதற்காக, நாம் செய்யும் முயற்சிகள் தான் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைகின்றன.  காலையில் நாம் முன்னதாக எழுவதற்கு செய்கிற முயற்சியும்,  ஒரு விஞ்ஞானி தன் கண்டுபிடிப்புக்காக செய்யும் முயற்சியும் “வெவ்வேறு வீரியம்” கொண்டவை.  

  • இயல்பாக ஒரு வேலையைத் தொடங்கவும்,   எண்ணங்களைச் செயல் வடிவமாக்கவும் முக்கியமாகத் தேவைப்படுவது “முயற்சி”.  
  • குறிக்கோளுக்காக உழைக்கும்போது, உண்டாகும் தடைகளினால் மனதில் சுணக்கம் ஏற்படாமல், தொடர்ந்து உழைப்பதற்குத் தேவைப்படுவது “விடாமுயற்சி”.  
  • வெற்றிப்பாதையை எட்டிப்பிடித்தவுடன் அதில் கிடைக்கும் பெருமையினால் அங்கேயே நின்று விடாமல் தொடர்ந்து செயல்படத்  தேவையானது “தொடர்முயற்சி”.
  • இந்தப் பயணத்தில் வெற்றியில் பின்னடைவு ஏற்பட்டால் அல்லது தோல்வியைச் சந்தித்தால் அந்த நிலையிலிருந்து மீண்டு,  நம்பிக்கையோடு மீண்டும் பயணத்தைத் தொடர்வதற்குத் தேவையானது “கடின முயற்சி”.
  • வெற்றி பெற்ற பின்னர் அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள எப்போதும் தேவைப்படுவது  “அயராத முயற்சி”.
  • உலகத்தின் தேவைகளை, உணர்ந்து உருவாக்கும் உன்னதமான கண்டுபிடிப்புகள் விஞ்ஞானிகளின் “அரிய முயற்சி”.
  • புகழின் உச்சிக்குச் சென்ற பின்னரும், அனைவருக்கும் பயனுள்ள வகையில் வாழ்பவர்களிடம் இருப்பது “முழுமையான முயற்சி”.
  • பின்னுக்கு இழுக்கும் பல காரணிகள் வாழ்க்கையில் இருந்தாலும் தன்னம்பிக்கையால் அவற்றைக் கடந்து வாழ்க்கையில் முன்னேற தேவைப்படுவது “தீவிரமான முயற்சி”.

ஒரு துறையில் ஊக்கம் இருந்தால் நன்கு முயற்சி செய்தால் அந்தத் துறையில் நுழைந்து கால் பதித்து விடலாம்.  ஆனால் அந்தத் துறையில் காலூன்றி நிற்கவும், வெற்றி தோல்விகளைச் சமாளித்து, உயர்வு பெறவும் இத்தகைய “வீரியமான முயற்சிகள்” பெரிதும் தேவைப்படுகின்றன.  

இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தக்கபடி மனிதர்கள் செய்யும் முயற்சிகளின் வீரியமே அவர்களின் செயல்களைத் திருவினை ஆக்குகின்றன.  இவ்வாறு ஒரு பெண்மணியின் வாழ்க்கையில், அவருடைய தீவிரமான முயற்சிகள் எத்தகைய சிறந்த வெற்றிகளைத் தந்தன என்று பார்க்கலாம்.

தோல்விகளை வெல்லும் கருவி:  

“ஜே. கே. ரௌலிங்”, என்ற பெயரைச் சொன்ன உடனே அவர் Harry Potter என்ற நாவலை எழுதியவர் என்பது இன்று நமக்குத் தெரியும்.  ஆனால் இந்த நிலைக்கு உயர்வதற்கு அன்று அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அவருடைய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

அவர் பிறந்தபோது அவருடைய குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி இருள் சூழ்ந்த சுரங்கமாக  இருந்தது.  தன் தந்தையின் அன்பு கூட கிடைக்காதத் தனது இளமைப் பருவத்தை இருண்ட காலம் என்று குறிப்பிடும்  அவர்,  தன் வாழ்க்கையில் “மிகச் சிறிய வெளிச்சம்கூட தனக்கு மிகப் பெரிய நம்பிக்கையை அளித்ததாகக் கூறுகிறார்”. 

இந்நிலையில், பெற்றோருக்கு எந்தச் சுமையும் இல்லாத வகையில் அரசு பள்ளியில் ஆர்வமுடன் படித்த அவர், தன்னுடையச் சிறந்த சிந்தனை வளத்தை ஆசிரியர்களின் பாராட்டுகள் மூலம் அறிந்து கொண்டார்.  

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் எழுதிய நுழைவுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவர் நிராகரிக்கப்பட்டார்.  இந்தத் தோல்வியின் அதிர்ச்சியைத்  தாங்கிக்கொண்டு வேறு கல்லூரியில் படித்துத் பட்டம் பெற்றார்.

ஒருநாள், மான்செஸ்ட்டரிலிருந்து லண்டன் நோக்கிச் செல்லும் ரயிலின் நான்கு மணி நேர தாமதத்தின்போது, தனது சிந்தனையில் உதித்தக் கதையைத் தனது கைக்குட்டையில் குறிப்பெடுத்துக்கொண்டார். 

பின்னர் அதை முழுமையாக்க நினைத்து எழுதத் தொடங்கிய சில மாதங்களில் ஏற்பட்ட தன் தாயின் இழப்பின் வேதனையால், அவரால் கதையைத்  தொடர முடியவில்லை.

இந்நிலையில் ஏற்பட்ட காதல் திருமணத்தில் கனிந்தாலும் பதினெட்டு மாதங்களில் கசந்து விட்டது.  இதன் பரிசாக ஒரு பெண் குழந்தையையும், கொடுமைபடுத்திய கணவனிடமிருந்து விவாகரத்தையும்  பெற்றார்.  வாழ்க்கையில் வறுமை, தனிமை, விரக்தி, ஏமாற்றம், தோல்வி, மனஉளைச்சல்  என்று வாழ்க்கையின் எல்லாத் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவித்தார்.  

துன்பத்திற்குத் துன்பம்:

வாழ்க்கையில் “அவரை மற்றவர்கள் நிராகரித்தபோதும், அவர் தன்னை நிராகரிக்கவில்லை”.  இதனால் தன்னுடைய மிகக் கடினமான முயற்சியினால் அவர் ஹாரி பாட்டர் நாவலைத் தொடர்ந்து எழுதினார்.  பன்னிரண்டு பதிப்பகங்களின் தொடர் நிராகரிப்புகளுக்குப் பின்னர், ஒரு சிறிய பதிப்பகம் அந்த நாவலை வெளியிட்டது.

இந்த முதல் பதிப்பின் அமோக வெற்றியினால், இது தொடர்ந்து ஏழு பதிப்புகளாக வெளிவந்தது.  இந்த நாவலின் ஒவ்வொரு பதிப்புகளும் சாதனைப் படைத்தது மட்டுமல்லாது விற்பனையில் ஒன்றை ஒன்று மிஞ்சி சாதனையை முறியடித்தது. 

கடின முயற்சிக்குக் கிடைத்தப் பரிசு:

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 

தாழாது உஞற்று பவர்.

என்று திருவள்ளுவர் கூறியது போல, தோல்விகளால் எழுதப்பட்ட விதியைத் தனது தீவிரமான முயற்சியால் அபாரமாக வென்று காட்டியவர் ஜே. கே. ரௌலிங்.

இந்த நாவல் எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஐந்தாயிரம் கோடிக்கு மேல் பணமும் பல்வேறு உயரிய விருதுகளையும் அள்ளித் தந்தது.  இவை அனைத்துமே ஜே.கே.ரௌலிங்கின் தன்னம்பிக்கைக்கும், அவருடைய மிகக்கடினமான முயற்சிகளுக்கும் கிடைத்த பரிசுகள்.  

உலகில் உள்ள பணக்காரர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்ற இந்தச் செல்வ சீமாட்டி தனது  சொத்துகளின் பெரும் பகுதியைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்து மனித நேயத்தில் மிக உயர்ந்து ஜொலிக்கிறார்.

முழுமையான வெற்றி:

முன்பு: முதல் பதிப்பை எழுதகூட இடம் இல்லாமல் காபி ஷாப்பில் கைக்குழந்தையுடனும் கடுங்குளிரிலும் எழுதியவர்; 

பின்பு:  ஏழாவது பதிப்பிற்கு எழுதும்போது சொகுசு ஹோட்டலின் சிறப்பு அறையில் எழுதினார்.  இரண்டையுமே சுற்றுலா இடம்போல மக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிடுகிறார்கள். 

முன்பு: கொடிய நோயால் பாதிக்கப்பட்ட தன் தாயைக் காப்பற்ற முடியாமல் தவித்தவர்; 

பின்பு: தன் தாயைப் போலவே  உடல் நலம் மிகவும் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துச் சிகிச்சைக்கு உதவினார்.

முன்பு:  தன் குழந்தையை வளர்க்க அரசாங்க உதவியை நாடியவர்; 

பின்பு:  கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆதரவு அற்ற குழந்தைகளுக்குத் தனது சொத்தின் பெரும்பகுதியைக் கொடுத்தார்.  

வாழ்க்கையில் ஏற்பட்ட அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக்கி,  துரத்திய தோல்விகளை வெற்றிகளாக்கிய ஜே.கே.ரௌலிங்கின் வாழ்க்கை  முயற்சியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. 

எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் வாழ்க்கை நமது முயற்சிகளின் தீவிரத்திற்கு ஏற்றபடி நிச்சயம் வெற்றியைப் பரிசாகத் தரும் என்பதற்கு இவருடைய வாழ்க்கைச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.  

எனவே, “முயற்சி முழுமையாக இருந்தால், பலனும் முழுமையாக இருக்கும்” என்பதை நினைவு படுத்திக் கொள்ளவே இந்தப் பதிவு.  தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *