பெரும்பாலான மக்களுக்கு, எந்த வயதினராக இருந்தாலும் விடுமுறை நாட்கள் என்றதும் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது. ஒரே மாதிரியான, கட்டுப்பாடுகளின் ஓட்டத்திலிருந்து சற்றுத் தளர்த்திக்கொள்ளும் வாய்ப்பில் கிடைக்கும் மகிழ்ச்சி என நாம் நினைக்கிறோம்.
இந்த உணர்வு குழந்தைப் பருவத்தில் தொடங்கிய பள்ளி விடுமுறை உணர்வின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம். தேர்வுகள் முடிந்தவுடன் தொடங்கும் விடுமுறையின் இலகுவான உணர்வு அலாதியான சுகம் என்பது எல்லோரும் உணர்ந்திருப்போம்.
ஆனால், காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளில், கேள்வி தாள்களுக்கு விடை எழுதி வரவேண்டும் என்ற நிபந்தனையைப்போல, இன்றும் விடுமுறை நாட்களில் எதிர்கொள்ளும் ஒருசில தாக்கங்கள் அமைதியான மனநிலையை மாற்றுகின்றன. இதனால் நேரம் வழக்கத்தைவிட வேகமாக ஓடுவதாகத் தோன்றுகிறது.
பள்ளி, கல்லூரி காலங்களின் விடுமுறை நாட்கள் என்பவை மாணவப் பருவத்தின் பொதுவான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் மாறுகின்ற வாழ்க்கை சுழற்சியில், அவரவர் காலமும் நேரமும் வெவ்வேறாக இயங்குகின்ற சூழ்நிலையில், விடுமுறை மகிழ்ச்சி என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக வெவ்வேறு விதமாக இருக்கிறது என்பதுதான் நடைமுறையில் நாம் காணும் நிதர்சனமாக இருக்கிறது.
மேலும், அனுதினமும் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளவர்கள், பொதுமக்களைக் காக்கும் பொறுப்பான கடமையில் இருக்கும் பெருமக்கள் என விடுமுறை என்பதை அரிதான வாய்ப்பாகக் கொண்டுள்ள மக்களின் விடுமுறை மகிழ்ச்சி என்பது மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றிருக்கிறது என்பதையும் உணரமுடிகிறது.
பண்டிகைக்கால விடுமுறை நாட்களில் அவற்றுக்கே உரிய சிறப்பு வேலைகள் ஆக்ரமித்துக்கொள்வதால், பொதுவான வார விடுமுறைகளும், பள்ளி விடுமுறைகளும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மகிழ்ச்சியைப் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாக உள்ளது. இதனால் இத்தகைய விடுமுறைகளைப் பிள்ளைகள் மட்டுமல்லாமல் குடும்பமே எதிர்நோக்குவது என்றும் வழக்கமாக இருக்கிறது.
சராசரி மனிதன் மனதளவில் தன்னை சார்ஜ் செய்து கொள்வதற்கு, இயல்பான வாழ்க்கையில் சற்று நிதானத்துடன் இயங்குவதற்கு, புத்தகங்கள் படிப்பதற்கு, மனஅமைதியோடு இருப்பதற்கு எனத் தனிப்பட்ட ஆரோக்கியத்தைச் சற்று கவனிப்பதற்கு விடுமுறைகள் உதவுகின்றன.
இவை மட்டுமல்லாமல், குடும்பத்தினரோடு பழகுவதற்கும், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், விடுமுறைக்குப் பிறகு அவரவர் வேலையில் மேலும் ஊக்கத்துடன் செயல்படுவதற்கும் உதவுகின்ற விடுமுறைகள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெறுவதற்கும் அவசியமானது என்று கூறலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வேகமாக ஓடுகின்ற இன்றைய வாழ்க்கை சூழலில் குடும்பமாக இணைந்து பிள்ளைகளோடும், பேரக்குழந்தைகளோடும் கொஞ்சி மகிழும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கும் முதியவர்களுக்கு, வாழும் காலத்தின் அனுபவங்களை அன்பின் வசந்தகால அனுபவங்களாக உயர்த்துகின்றன.
இவ்வாறு, மூன்று தலைமுறைகளுக்கும் ஊக்கத்தைத் தருகின்ற விடுமுறை நாள்களின் நினைவுகள், அனைவருக்கும் மகிழ்ச்சியான அனுபவங்களைத் தருகின்ற நிலையில், இவை வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைத் தருகின்ற நல்ல வாய்ப்புகள் ஆகும்.
# நன்றி.

