நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
WISH YOU HAPPY NEW YEAR.
புதிய ஒளி:
புதிய உறுதிமொழிகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கைகள் என பொங்கிவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்று வாழ்த்தி கொண்டாடி மகிழும் நமக்காக, புத்தாண்டின் சிறந்த பரிசுகள் வரிசையில் தயாராக இருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் வெளிப்படுகின்ற புதிய சிந்தனைகளும், ஆக்கபூர்வமான புதிய செயல்பாடுகளும், புதிய பரிசுகளைப் பெறுவதற்கான தகுதியையும் பரிசுகளின் எண்ணிக்கையையும் உயர்த்துகின்றன.
இதுவரை பெற்றிருக்கும் பரிசுகளுக்கும் அனுபவங்களுக்கும் மனதார நன்றி கூறும் நமக்கு இந்தப் புத்தாண்டு நமக்கான புதிய வளங்களையும் நலன்களையும் புதிய வெற்றிகளையும் தரவேண்டும் என்ற பிரார்த்தனையோடு வணங்குகிறேன்.
என்றும் புதியது:
மக்கள் பெருமையோடு வாங்குகின்ற லேட்டஸ்ட் மாடல் செல்பேசி, அனைவரும் வியந்து மகிழும் பல நுணுக்கங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், புதிய நுட்பங்களின் மூலம் தொடர்ந்து புதிப்பித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் புதிய திறன்களோடு அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கிறது.
இவ்வாறு தொடர்ந்து தன்னுடைய தகுதியை மென்மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கும் இதன் சிறந்த தன்மையால், போட்டி நிறைந்த வணிகத்தில் மட்டும் அல்லாமல் மக்கள் மனதிலும் முதன்மையான இடத்தில் நிலையான தன்னுடைய இருப்பை, தேவையை, பெருமையை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.
தொடர் வெற்றிக்கான இந்த வழிமுறையை வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்களே சமூகத்தில் தங்களுக்கான புதிய தேவையை (demand) உருவாக்குகிறார்கள். அதற்கான உழைப்பில் உருவாகும் சாதனைகளைச் சரித்திரமாக மாற்றி சிறந்த வெற்றியாளர்களாக ஒளிவீசுகிறார்கள்.
உலகமே கூடி நின்று, வெற்றியின் உச்சத்தில் உட்காரவைத்து, பாராட்டு மழையில் நனைய வைத்தாலும் நிதானமான மனநிலையோடு, திடமான மனஉறுதியோடு தெளிவாகச் செயல்படுகிறார்கள்.
இதனால், வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு திருப்பத்திற்கும் ஏற்ப கூர்மையாகும் புதிய பார்வையின் பலனை குறிக்கோளுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். காற்றினால் அலைபாயாத லேசர் ஒளியின் focus போன்ற தீர்க்கமான பார்வையுடன் புதிய பாதையில் பயணத்தைத் தொடர்கிறார்கள்.
இத்தகைய தொடர் பயணத்திற்கு தேவையான உடல்சக்திக்கு ABC ஜுஸ் பலன் தரும் என்று கூறுவதுபோல, மனதின் சக்தியை மேம்படுத்துகின்ற ABC எனும் யுக்தி காலத்துக்கேற்ற நுட்பங்களைக் கூறுகின்றன.
Ability (திறன்):
அவரவர் சார்ந்த துறைக்குப் பொருத்தமான, புதிய திறன்களே என்றும் புதிய வெற்றிகளைத் தருகின்றன. உதாரணமாக,
அறிவியலின் புதிய வரவாக அறிமுகம் ஆகி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியோடு கைகோர்த்து வளர்ந்து, இன்று அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற AI எனும் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவதே பெரும்பாலான துறைகளில், வளர்ச்சிக்குத் தேவையான புதிய அறிவு.
இந்த அறிவின் நுட்பத்தை, காலம் தருகின்ற நல்ல வாய்ப்பாக ஏற்றுக்கொண்டு, இணையற்ற புதுமையான சிந்தனைகளோடு இணைத்து, நேர்மறையாகச் செயல்படுத்துவதே, வெற்றிக்குத் தேவையான புதிய திறனாக உள்ளது.
இவ்வாறு காலத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மை உயர்த்துகின்ற சிந்தனைகளின் சக்தியை இன்றைய நவீன தொழில் நுட்பங்களின் உதவியோடு செயல்படுத்தி நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ளும் திறனே வெற்றிக்கான முதல் தகுதியாக உள்ளது.
Behavior (நடத்தை):
இயல்பான நல்ல பண்புகளும், அவ்வாறே வெளிப்படுகின்ற அணுகுமுறைகளும், சிறந்த பழக்கவழக்கங்களும் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு எந்நாளும் துணைநின்று வெற்றிக்கும் வலுசேர்க்கும் சிறந்த நடத்தைகளாகும்.
நாட்டை ஆண்ட மன்னர்களாக இருந்தாலும், அரசியல் தலைவர்களாக இருந்தாலும், அண்டை அயலார், நண்பர், உறவினர் என யாராக இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட பண்புகள் மூலமே என்றும் நம் மனதில் நிற்கிறார்கள், எனும்போது பண்புகளின் வலிமை என்பது காலங்கள் கடந்தும் நிலைத்த புகழ்த் தரக்கூடியது என்று புரிகிறது.
சுயமதிப்பை உயர்த்துகின்ற நிலையான நல்ல பண்புகளை, காலமாற்றத்தோடு அனுசரித்து உறுதியோடு பின்பற்றியவர்களைக் காலமும் உறுதியாக உயர்த்தியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.
Circumstance (சூழல்):
வெற்றியைப் பெறுவதற்கு ஏற்ற சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கும் நம்முடைய விழிப்புணர்வுதான் (Choose your environment) வெற்றி நம்மைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான கூறாக உள்ளது.
சிறிய தொட்டிக்கும் நிலத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவற்றில் வளரும் செடிகள் உணர்த்துகின்றன. மேலும், வளர்ச்சிக்கேற்ற இடத்தைத் தேர்ந்தடுக்கும் மனிதனின் சுதந்திரத்தையும் நினைவு படுத்துகின்றன.
வெல்லத்தின் மீது ஒட்டியிருக்கும் சிறிய லேபிள் அதன் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை, ஆனால் தங்கத்தின் மீது ஒட்டியிருக்கும் சிறு துரும்பும் அதன் விலையில் குறிப்பிட்ட அளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனும் சிந்தனை, இடத்திற்கு ஏற்றவாறு விளைவுகள் மாறக்கூடும் என்ற கவனத்தை ஏற்படுத்துகிறது.
மாற்றம் என்பது தகுதியை உயர்த்தக்கூடிய முன்னேற்றமாக இருக்க வேண்டும் என்பதை, சதுரங்க விளையாட்டில் கடைநிலையில் இருக்கும் pawn தனது நிதானமான நகர்வின் மூலம், வலிமை நிறைந்த இராணியின் உயர்ந்த ஆற்றலையும் பெறமுடியும் என்று உணர்த்துகிறது.
இது, சுயமதிப்பை உயர்த்துகின்ற சூழலைச் சரியாக அறிந்து அதில் கவனமாக முன்னேற வேண்டும் என்ற சிந்தனைக்கு மேலும் வலுசேர்க்கிறது.
புதிய வெற்றிகள்:
சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது, பார்வை புதிது என ஒவ்வொரு நாளும் தனது எல்லையை உயர்த்தி, தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கும் புதிய சிந்தனைகள் புத்தாண்டின் புதிய பரிசுகளைப் பெறுவதற்கு தேவையான தகுதிகளைத் தருகின்றன.
சிறந்த குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக நாளும் முழுமையான கவனத்தோடு உழைப்பவர்கள், ABC எனும் புதிய நுட்பங்களையும் கவனத்தில் கொண்டு பொருத்தமான வெற்றிகள் பெற வேண்டும் என்ற வாழ்த்துகளுடன் நன்றி கூறுகிறேன்.
# நன்றி.
