Nature
Nature represents the God is omnipresent

சுவையான கதை.Interesting Story.Suvai.

முன்னொரு காலத்தில்,

ஒரு அழகான நதிக்கரையில் ஆசிரமம் ஒன்று இருந்தது.  அந்த ஆசிரமத்தில் இருந்த குரு இராமபக்தர் என்பதால் தன்னுடைய சீடர்களுக்கு இராமனின் பெருமைகளைக் கூறுவதும் பாடுவதுமாக இருந்தார்.  அவற்றோடு, நாள்தோறும் வரிசைப்படி பூசைகள் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு இருப்பார்.  சீடர்களும் குருவின் வார்த்தையை அப்படியே கேட்கும் விதத்தில் பணிந்து நடந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, புதியவன் ஒருவன் அந்த ஆசிரமத்திற்கு வந்து குருவை வணங்கினான்.  தனது பெயர் கோவிந்தன் என்று கூறிய அவன், தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு குருவை வேண்டினான்.  குரு அவனைச் சீடனாகச் சேர்த்துக்கொண்டாலும் இவன் ஆசிரம வாழ்க்கைக்கு ஒத்துவருவானா என்ற சிறிய சந்தேகமும் இருந்தது.  குருவின் சந்தேகம் சரிதான் என்பதுபோல கோவிந்தனின் செயல்பாடுகளும் இருந்தன. 

ஒருநாள் காலை கோவிந்தன், வழக்கம்போல உணவுத் தயாரிப்பதற்கு உதவி செய்யலாம் என்று நினைத்துச் சமையல் கூடத்திற்கு சென்றான்.  ஆனால் அங்கு யாரும் இல்லை என்பதோடு சமையலுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றதும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

அவன் எப்போதும் பசிதாங்க மாட்டான் என்பதால் உடனே மற்ற சீடர்களிடம் சென்று ஏன் இன்னும் சமையல் ஆரம்பிக்கவில்லை என்று கேட்டான்.  அவன் கேட்பதைப் பொருட்படுத்தாத அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

ஒன்றும் புரியாமல் வேகமாகச் சென்று குருவிடம் காரணம் கேட்ட கோவிந்தனை, குரு ஆச்சர்யமாகப் பார்த்தார்.  பின்னர், “இன்று ஏகாதசி விரதம் என்பதால் ஆசிரமத்தில் சமைக்க மாட்டார்கள்.  விரதம் முடிந்த பின்னர் நாளைதான் சாப்பிட வேண்டும்”, என்றார். 

இதைக்கேட்ட கோவிந்தனுக்குக் கூடுதலாகப் பசியெடுத்தது.  எனவே, “என்னால் பசிதாங்க முடியாது, எனக்கு மட்டும் ஏதாவது சமைத்துக்கொள்கிறேன்”, என்று குருவிடம் கெஞ்சிக்கேட்டான்.  இவனைச் சமாளிப்பது பெரிய வேலையாக இருக்கிறதே என்று நினைத்த குரு, ஒரு சீடனை அழைத்து அவன் ஒருவனுக்குப் போதுமான அளவு அரிசி பருப்புப் போன்ற பொருட்களை எடுத்து வந்து கொடுக்கச் சொன்னார்.

அவ்வாறு அந்தப் பொருட்களைக் கோவிந்தனிடம் கொடுத்தபிறகு அவனிடம், “ஆசிரமத்தில் எல்லோரும் விரதம் என்பதால், சமையல் வாசனையே இங்கு வராத அளவு உள்ள தூரத்திற்கு சென்று சமையல் செய்துகொள்.  ஆனால், இறைவனுக்குப் படைத்துவிட்டுதான் நீ சாப்பிட வேண்டும்”, என்று குரு கண்டிப்புடன் கூறினார்.

அதற்கு ஒத்துக்கொண்ட கோவிந்தன், குரு கூறியபடியே அந்தப் பொருட்களை எடுத்துக்கொண்டு நீண்டதூரம் சென்று சமைத்தான்.  பின்னர் இலை போட்டு உணவு பரிமாறிவிட்டு, “இராமா வந்து சாப்பிடு!” என்று அழைத்தான். 

அவ்வாறு அவன் பலமுறை சத்தமாக அழைத்த பிறகும் யாரும் வரவில்லை.  தனக்கோ பசி தாங்க முடியவில்லை, இந்த இராமனும் வந்தபாடில்லை என்ற உணர்ச்சி மிகுதியில் “இராமா! இராமா!!” என்று வேகமாக அழைத்து அலறினான்.

அப்போது, இராமன் அவன் முன்னே நின்றதைப் பார்த்ததும், “அப்பா, ஒருவழியாக வந்துவிட்டாயா, சரி சாப்பிடு!”, என்று கூறி அன்போடு எடுத்துவைத்து பரிமாறினான்.  பின்னர் சிறிதளவு மீதம் இருந்த உணவை கோவிந்தன் சாப்பிட்டு, உறங்கி, காலையில் ஆசிரமத்திற்கு சென்றான். 

அங்கு இருந்த சீடர்கள் கோவிந்தனைக் கொஞ்சமும் மதிப்பதில்லை.  அதன் காரணமும் கோவிந்தனுக்கு தெரியவில்லை.  ஆனாலும் ஆசிரமத்தின் வேலைகளைத் தானே வலியச் சென்று செய்து வந்தான்.   

இப்படியே நாள்கள் நகர்ந்தன, அடுத்த ஏகாதசி வந்தது.  கோவிந்தன் மறுபடியும் குருவிடம் போய் நின்றான்.  குருவுக்கு இவனைப்பற்றி தெரியும் என்பதால் ஒரு சீடனை அழைத்து, சமையல் பொருட்களைக் கொடு என்றார்.  அப்போது கோவிந்தன் குறுக்கிட்டு, இராமனுக்கும் சேர்த்து இருவர் சாப்பிடும் அளவு தருமாறு கேட்டான்.

தான் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக ஏதோ கூறுகிறான் என்ற நினைத்த குரு, கோவிந்தன் கூறியவாறே இருவருக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்து அனுப்பினார்.  

கோவிந்தன் வழக்கம்போல அதே இடத்திற்கு சென்று சமைத்துவிட்டு இராமனைக் கூப்பிட்டான்.  இப்போது இராமன் சீதையுடன் வந்திருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்று இருவருக்கும் உணவு பரிமாறிய பின்பு மீதம் இருந்த உணவை தான் உண்டு, உறங்கி, மறுநாள் ஆசிரமம் சென்றான்.

அதற்கடுத்த மாதத்தில் ஏகாதசி, வழக்கம்போல் உணவுப்பொருள் கேட்கும்போது, “இராமன் சீதையுடன் வருவதால் மூன்றுபேர் சாப்பிடும் அளவுக்குப் பொருள் வேண்டும்”, என்று கேட்டான்.  இவன் சொல்வதைக் கேட்டு மற்ற சீடர்கள் கோபம் அடைந்தார்கள்.  குரு அவர்களைச் சாந்தப்படுத்தி, “சாப்பிடுவதற்குத்தானே கேட்கிறான் கொடுத்தனுப்பு”, என்று கூறினார்.

இந்தமுறை கோவிந்தன் சமைத்துவிட்டு, இராமா, சீதா என்று உரக்க அழைத்தான். இப்போது இராமன், சீதையுடன் சேர்ந்து இலட்சுமணனும் வந்து உண்டு மகிழ்ந்த பின்னர், மறுநாள் கோவிந்தன் ஆசிரமம் சென்றான்.  அவன் மீது மற்ற சீடர்கள் வெறுப்பையே காட்டினார்கள், ஆனாலும் அவன் தன் வேலையை வழக்கம்போலச் செய்துகொண்டிருந்தான்.

அடுத்த ஏகாதசி வந்தது, வழக்கம்போல உணவுப்பொருள் கொடுக்கும்போது கோவிந்தன் குறுக்கிட்டு, “இராமன், சீதையுடன் இலட்சுமணனும் வருவதால் நான்குபேர் சாப்பிடுவதற்கு ஏற்ற அளவு பொருள் வேண்டும்”, என்று கேட்டான்.  இம்முறை குருவுக்கே கோபம் வந்தது.  “ஏன் இப்படிப் பொய் மீது பொய் சொல்கிறாய்?  அங்கு நீ என்னதான் செய்கிறாய்?”, என்று கோபமாகக் கேட்டார். 

கோவிந்தனோ வெகு சாதாரணமாக, “நான் என்ன செய்வது, இராமன்தான் ஒவ்வொருமுறை வரும்போதும் ஒருவரைக் கூடுதலாக அழைத்து வருகிறார், அதனால்தான் நானும் ஒவ்வொருமுறையும் கூடுதலாகக் கேட்க வேண்டியதாக உள்ளது”, என்று அமைதியாகக் கூறினான். 

அவன் கூறிய பதிலில் வியப்படைந்த குரு, அவன் கேட்டவாறே உணவுப் பொருட்களைக் கொடுக்கும்படி கூறிவிட்டு, அவன் அங்கிருந்த சென்ற பின்னர் அவனுடைய இடத்திற்கு சென்று மறைந்திருந்து பார்த்தார்.  அப்போது கோவிந்தன் சமைத்து முடித்து, இலைகளில் பரிமாறிவிட்டு இராமா! சீதா! இலட்சுமணா! என்று உரக்க அழைத்தான். 

இந்த முறை அவர்களோடு அனுமனும் சேர்ந்து வந்ததைப் பார்த்த கோவிந்தன் மிகவும் மகிழ்ந்து வரவேற்று உபசரித்து, அன்போடு உணவு பரிமாறினான்.  அப்போது அங்கு மறைந்துநின்று பார்த்துக்கொண்டிருந்த குரு இந்தக் காட்சியைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்து கண்ணீர் மல்க நின்றார்.

இராமன் வந்ததாக முதல்முறையாக கோவிந்தன் கூறியபோது, தானே கடவுளை நேரில் பார்த்திராதபோது மற்றவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்த தன்னுடைய அறியாமையை எண்ணி வருந்தினார்.  தான் பெரிய பக்திமான் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு செய்த பூசைகள் எல்லாம் வெளியில் தெரியும் ஏற்பாடுகள்தான் என்பதை உணர்ந்து மனம் கலங்கினார். 

“கடவுள் என்ற இலக்கை அடைவதற்கு, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத தூய்மையான அன்பும், திடமான நம்பிக்கையுமே எளிமையான வழி” என்று உணர்த்துகின்ற காட்சியை, தானும் காண முடிந்ததே என்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க ஓடிவந்து வணங்கி நின்றார்.

 

#   நன்றி. 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *