இந்தக் கேள்விக்கு என்ன பதில்? Intha Kelvikku Enna Bathil? What is the Answer to this Question?

உங்களுக்கு என்ன வேண்டும்?  

இந்த ஒரு கேள்வி,  பல்வேறு இடங்களில், பலவிதமான சூழ்நிலைகளில், பலவகையான மனிதர்களிடம், நாம் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி.  இந்தக் கேள்விக்கான பதில்தான், நாம் யார் என்று ‘உலகிற்கு நம்மை வெளிப்படுத்துகிறது’.  உணவகமோ, கடையோ, விண்ணப்பமோ, உறவோ, பிரார்த்தனையோ எதுவாக இருந்தாலும் இந்தக் கேள்விதான் நம்முடைய ரசனையை, விருப்பத்தை, தேவையை, தன்மையை வெளிப்படுத்த  உதவுகிறது. 

இந்தக் கேள்வி நம்மை நோக்கி வரும் நேரத்தில் அதற்குப் பொருத்தமான பதில் நம்மிடமிருந்து வெளிப்பட வேண்டும்.  அப்படியானால் நமக்கு வேண்டியதும், வேண்டாததும் எவை என்று நம்மைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தக் கேள்வியை அவ்வப்போது நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் எந்தச் சூழ்நிலையிலும் அதற்கேற்ற வகையில் ‘சிறிய முன்தயாரிப்பு’ செய்து கொள்ள உதவும்.  

உதாரணமாக, ஒருவர் ‘புதியதாக ஒரு கார் வாங்க வேண்டும்’ என்று நினைப்பது பொதுவான எண்ணம் என்று வைத்துக்கொள்வோம்.  அவரே, காரின் விலை, பிராண்ட், மாடல், நிறம், பெட்ரோலா, டீசலா, போன்ற அடிப்படை தகவல்களைக் குடும்பத்துடன் கலந்து ஆலோசித்துத்  திட்டமிட்டுத் தெளிவோடு இருந்தால்,  அவர்  இந்தக் கேள்விகளுக்கான பதில்களை  முன் தயாரிப்புச் செய்துகொள்ள முடியும். 

இந்த முன்தயாரிப்பு முன்னேற்றமான மாற்றங்களுக்கும், அவரவர் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் நெகிழ்வு தன்மையோடு இருந்தால் நடைமுறையில் சுமுகமாகவும் இருக்கும்.  அப்போதுதான், கார் ஷோரூம் சென்று இத்தகைய கேள்விகளைச் சந்திக்கும்போது, மேலும் பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் உரையாடலை நிகழ்த்த முடியும்.  இத்தகைய முன்தயாரிப்புப் பெரும்பாலான நேரங்களில்  குறிக்கோளைத் துல்லியமாகப் பார்க்கப்  பயன்படும்.  மேலும், அதற்காக விருப்பத்துடன் ‘உழைக்கும் ஆற்றலையும்  தரும்’.  

‘நமக்கு என்ன வேண்டும்’, என்ற கேள்விக்கான பதில்தான் ‘முடிவெடுக்கும் திறமையை நமக்குள் வளர்க்கும்’.  மிகச்சிறிய விஷயமாக இருந்தாலும், வாழ்க்கையின் முக்கிய முடிவுகளாக இருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதில்தான் ‘தெளிவோடு செயல்பட வைத்து நம்மை அடையாளம் காட்டும்’.  

‘நமக்கு என்ன வேண்டும்’ என்ற தெளிவுதான் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கும், தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்கும் உதவும்.  சில தவிர்க்க முடியாத சூழல்களையும் நிதானத்துடன் அணுகுவதற்குத் தேவையான ‘மனமுதிர்ச்சியையும் அளிக்கும்’.

மேலும், இந்தக் கேள்வி ஏற்படுத்தும்  உந்துசக்தியால்,  சூழ்நிலைகளில்  இருக்கும் வாய்ப்புகளைக் கடந்து ‘புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்’. நேரத்தின் அருமையை உணர்ந்து ஆக்கப்பூர்வமான  செயல்களைத்  தேர்ந்தெடுத்துச் செய்யவும் காரணமாக அமையும்.

‘ஒரு தகுதியான குறிக்கோள் இருந்தால், அது நம் இருப்பை எளிதாக்குகிறது’ என்று ஜப்பானிய எழுத்தாளர் ‘ஹருகி முரகாமி’ கூறுகிறார்.  அப்படியான தகுதி வாய்ந்த ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்வதற்கும், ‘சமுதாயத்திற்கு என்ன வேண்டும்’ என்று புரிந்துகொண்டு செயலாற்றும் தன்மைக்கும் இதுவே அடிப்படையான கேள்வியாகும்.

பெரிதினும் பெரிது கேட்ட பெருமக்களும், சமுதாய நலனே தனது நலன், என்று நாட்டிற்காக உழைத்த நல்லவர்களும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்தவர்களும், எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியாதவர்களும் இந்தக் கேள்விக்கு விடையாக வாழ்ந்தவர்களே.   

முற்றும் துறந்த முனிவரே ஆனாலும், இறைவனின் அருளை வேண்டி நின்றார்கள்.  எனவே, நமக்கு என்ன வேண்டும் என்பதில் நேர்மையான, தெளிவான, துல்லியமான பார்வையோடு இருந்தால்  உலகத்திற்கும்  பயனுள்ள வகையில் வாழலாம்.

#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *