ஒரு காட்டில் நீண்ட வருடங்களாக கடுந்தவம் செய்துகொண்டிருந்த கொங்கன முனிவர் ஒருநாள் தன்னுடைய தவம் கலைத்தார். அந்தச் சமயத்தில் மேலே பறந்துகொண்டிருந்த கொக்கின் எச்சம் அந்த முனிவரின் மீது விழுந்தது. அதனால் முனிவர் அந்தக் கொக்கைக் கோபத்துடன் பார்த்தார்.
அப்போது, தவ வலிமையுள்ள அவருடைய பார்வை பட்டவுடன் அந்தக் கொக்கு எரிந்து விட்டது. இதனால் தன்னுடைய தவத்தின் சக்தியை உணர்ந்த கொங்கணருக்குச் சற்று கர்வம் ஏற்பட்டது.
பின்னர், அருகில் இருந்த ஊருக்குள் சென்ற அவர் அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பு நின்று உணவு வேண்டும் என்று குரல் கொடுத்தார். அப்போது உள்ளேயிருந்து வந்த ஒரு பெண் அவரைப் பார்த்ததும் உணவு கொண்டுவருவதாக மரியாதையுடன் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
ஆனால், உள்ளே சென்ற அந்தப் பெண், தனது வழக்கமான கடமையில் கவனத்தைச் செலுத்தியதால் வெளியில் காத்திருக்கும் முனிவரை மறந்துவிட்டாள். சற்று நேரத்தில், முனிவர் காத்திருப்பது நினைவுக்கு வந்தவுடன் அவருக்கு உணவு கொண்டுவந்தவள் தான் தாமதமாக வந்ததற்கு அவரிடம் வருத்தம் தெரிவித்தாள்.
ஆனால், சிறிது நேரத்திற்கு முன்பு தனது பார்வையில் பட்ட கொக்கின் நிலையை எண்ணி கர்வத்துடன் இருந்த முனிவரோ அவளைக் கோபமாக முறைத்துப் பார்த்தார். ஆனால், அவள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அப்படியே நின்றாள்.
அப்போது ஆச்சரியம் அடைந்த முனிவரைப் பார்த்த அந்தப் பெண், “கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே”, என்று கேட்டவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய தவத்தின் சக்தியைத் தாங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு காட்டில் நடந்த நிகழ்வையும் உடனுக்குடன் எப்படித் தெரிந்து கொண்டாள் என எண்ணி வியப்படைந்தார்.
பின்னர், அவருடைய சந்தேகத்தை அவர் அவளிடமே நேரடியாகக் கேட்டார். அதன் மறுமொழியாக வளர்கின்ற இந்தக் கதை முழுவதும், “தமது கடமைகளை உள்ளன்போடு உணர்ந்து முறையாகச் செய்கின்றவரின் மனவலிமை கடுந்தவத்தினால் கிடைக்கும் வலிமைக்கு நிகரானது” என்று கூறுகிறது.
இறைவனின் அருளைப் பெறுவதற்கு நேரடியாக முயற்சிக்கும் மனிதன், உலகவாழ்க்கையைத் துறந்து, பலவகையான விலங்குகள் வாழ்கின்ற காட்டிற்கு சென்று மழை வெயில் குளிர் என்று பார்க்காமல் கடுந்தவம் செய்வதற்கு மிகமிக கடுமையான முயற்சியும் மனவலிமையும் வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதேபோல தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக ஏற்றுக்கொண்ட கடமையை, நிறைவேற்றியே ஆகவேண்டும் என உறுதியாக நினைத்து, மனவலிமையோடு வாழ்பவர்களும், தவ வலிமைக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இக்கதை கூறுகிறது.
பார்வையால் எரிப்பது, பாதிப்பை ஏற்படுத்துவது என மனவலிமையை வீணாக்காமல் நேர்மையான வழியில், கண்ணும் கருத்துமாகச் செயல்படுத்துவதன் மூலமாக வெளிப்படும் ஆற்றல் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிகிறது.
பல காலமாகச் சொல்லப்படுகின்ற இந்தக் கதை (மகாபாரதத்தில் வருகின்ற கிளை கதை) ஏட்டுச்சுரைக்காய் அல்ல இன்றும் நடைமுறையில் நடக்கின்ற கதைதான் என்ற எண்ணத்தை உருவாக்கியது “லதா பகவான் கரே” என்ற 60 வயது நிரம்பிய ஒரு பெண்ணின் உண்மையான வாழ்க்கை நிகழ்வு.
காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவிலும் கைக்கொடுப்பதையே தன் கடமையாகக் கொண்டு வாழும் இவர், தனது கணவர் பகவான் கரேவின் மருத்துவ செலவைத் தன்னுடைய கடமையாக எடுத்துக்கொண்டு செயல்பட்ட கடுமையான முயற்சி அவருடைய மனவலிமையைக் கூறுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு கிராமத்தில், தன் கணவனுக்குத் துணையாக விவசாயக் கூலிவேலை பார்க்கும் இந்தப் பெண்ணின் குடும்பச் சூழ்நிலை மிகமிக எளிமையானது. இந்நிலையில் 2013ல் உடல்நிலை பாதிக்கப்பட்ட பகவான் கரேவின் மருத்துவ பரிசோதனைக்காக ஐந்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.
ஆனால், அந்தக் கிராமத்தில் அவர்களுக்குத் தெரிந்தவர் அனைவருமே அவர்களைப் போலவே எளிமையான நிலையிலேயே இருந்ததால் அவருக்கு தேவையான பணஉதவி கிடைக்கவில்லை.
அப்போது அந்த ஊரில் இருந்த இளைஞர்கள், 60 வயது மேற்பட்டவர்களுக்கு மாரத்தான் போட்டி ஒன்று நடக்கவிருப்பதாகவும், அதில் வெற்றி பெற்றால் பரிசுத் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள் என்றும், ஆனால், அதற்கு 3கிமீ தொடர்ந்து ஓடி முதலிடம் பெறவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அந்த மாரத்தான் போட்டியைப் பற்றி எந்த விவரங்களும் அறிந்திராத அவர், அந்த இளைஞர்களின் துணையோடு அந்தப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று, அதன் மூலம் தனது கணவனை நலம்பெற செய்துவிட்டார்.
மாரத்தான் போட்டியைப் பற்றிய விவரங்கள் நன்கு தெரிந்து, தகுந்த உடை, சரியான காலணிகள், முறையான பயிற்சி என சிறப்பாகத் தயார் செய்து வந்த போட்டியாளர்களோடு, புதிதாகச் சேர்ந்த இவர், போட்டிக்கான எந்தப் பயிற்சியும் இல்லாமல், காலில் செருப்பு கூட அணியாமல், வழக்கமான முறையில் சேலை உடுத்தி, 3கிமீ தொடர்ந்து ஓடி, போட்டியில் வென்று அந்தப் பரிசுத்தொகையைப் பெற்றார்.
முதுமையின் முழுமையான காதலை, தன்னுடைய கடமையாக ஏற்று நிறைவேற்றிய இந்தப் பெண்ணின் மனவலிமையை, நவீன் தேஷ்போனியா படமாகக் காட்சிப்படுத்த நினைத்தார்.
அந்தப் படத்தில் லதா பகவான் கரேயின் பாத்திரத்தை அவரை வைத்தே இயக்கி, தேசிய விருது பெற்ற படமாக உருவாக்கிய முயற்சி, மற்றொரு துறையிலும் அந்தப் பெண்ணின் மனவலிமை வெளிப்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
இவ்வாறு, தான் ஏற்றுக்கொண்ட கடமையை உணர்ந்து அதில் முறையாக உழைப்பைச் செலுத்துகின்ற மனிதனின் மனவலிமை, கடுந்தவத்திற்கு சற்றும் குறைவில்லாத கவனத்தோடு செயல்பட்டு வெற்றி பெறும் என்பதற்கு காலம்காலமாக பல சாட்சிகள் உள்ளன. அவற்றுள் வெளிச்சத்திற்கு வந்த நவீனகாலச் சான்றுகளுள் ஒன்றாக இந்த நிகழ்வும் இருக்கிறது.
அறிவியல், மருத்துவம் என உலகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகின்ற இன்றைய நிலையில், சமுதாய நிலையை உயர்த்துகின்ற பொறுப்பில் உள்ளவர்களின் கடமையுணர்வும், இத்தகைய மனவலிமையோடு நேர்மையாக முழுமையாக வெளிப்படும் நிலையில் ஆற்றல் மிக்க வளமான உலகத்தை எல்லோரும் வரமாகப் பெறமுடியும்.
# நன்றி.

