அறிமுக அடையாளம்:
சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெளிப்படுகின்ற விவரங்கள், தகவல்கள் போன்றவை அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையின் அடையாளமாகச் செயல்படுகிறது.
இவ்வாறு பல சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகின்ற பலவிதமான புற அடையாளங்களைக் கடந்து நமக்குள் நிற்கும் சுயஅடையாளம் என்பது முழுமையான அடையாளமாக, நம்மை நாம் புரிந்துகொண்டு புதுப்பிக்கும் உண்மையான அடையாளமாக இருக்கிறது.
நடைமுறையில் உள்ள புறஅடையாளங்கள் மற்றும் நமக்குள் இருக்கும் அகஅடையாளங்கள் பற்றி இன்றைய சிந்தனைக்குச் சில கருத்துகள்.
திறன்களின் அடையாளம்:
இயல்பான சூழ்நிலைகளில் புதியதாகச் சந்திக்கும் ஒருவரிடம் நம்மை நாம் அறிமுகம் செய்துகொண்டு பேசுகிறோம். இத்தகைய அறிமுகத்தில் நம்முடைய பெயர் மற்றும் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையான அடிப்படை குறிப்புகள் போன்றவை இருக்கும்.
தொழில்முறை அறிமுகங்களில் பரிமாறப்படும் விசிட்டிங் கார்டு மற்றும் பிசினெஸ் கார்டு போன்றவை அந்தக் குறிப்பிட்ட பரிமாணத்தின் அடிப்படை அறிமுகத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும்.
வேலைக்கான நேர்காணலில் சந்திக்கும் Tell me about yourself எனும் விசாரிப்பு, கல்வி, திறமைகள், வேலையில் இருக்கும் முந்தைய அனுபவங்கள் என அந்தக் குறிப்பிட்ட வேலைக்குத் தேவையான தகுதிகளைத் தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுகிறது.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட CV எனப்படும் சுயவிவரப் பட்டியலில் இந்த விவரங்கள் அனைத்தும் இருந்தாலும், வாய்மொழியாகக் கூறுவதில் உள்ள தெளிவு, குரலின் தன்மை, உடல்மொழி போன்றவை அந்த விவரங்களுக்குக் கூடுதல் வலுசேர்க்கும் அடையாளமாக செயல்படுகிறது.
இவ்வாறு, முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே கற்றுக்கொண்ட திறமைகளும், புதிய வாய்ப்புகளுக்குத் தேவையான நுட்பங்களைக் கற்பதற்கான ஊக்கமும் நேரடியாக முன்னின்று தொழில் சார்ந்த வெற்றி வாய்ப்பை பலப்படுத்துகின்ற “திறன்களின் அடையாளம்” ஆகின்றது.
சமூக அடையாளம்:
இன்றைய சமூக நடைமுறையில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமை அட்டை என பல்வேறு அட்டைகளை அந்தந்த சூழ்நிலைகளுக்குத் தேவையான அடையாளமாகப் பயன்படுத்துகிறோம்.
இதில், வாக்காளர் அட்டைக்குப் பதிலாக ஓட்டுநர் உரிமை அட்டையைப் பயன்படுத்த முடியாது, குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட அட்டையே தகுதி அட்டையாக செயல்படுகிறது.
அதுபோலவே கல்வி, வேலை, வருமானம் சார்ந்த இடங்களுக்கு தேவைப்படுகின்ற புறத் தகுதி எனும் அடையாளம் வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் நேரடியாகப் பொருந்தி விடாது.
அதே சமயத்தில், ஓட்டுநர் உரிமை அட்டை பெறுவதற்கு அடிப்படையாக ஆதார் அட்டை பயன்படுவதுபோல, வாழ்க்கையில் புதிய தகுதியைப் பெறுவதற்கு ஏற்கனவே இருக்கும் மற்றொரு தகுதி அடிப்படையாக செயல்படுகிறது.
பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம் என ஒரு நிறுவனத்தின் பகுதியாக அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் பங்குபெரும் நபராகச் செயல்படும் இடங்களில் நுழைவதற்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் அல்லது அந்த நிகழ்ச்சியின் அடையாள அட்டையை அணிந்திருப்பது அவசியம் ஆகிறது.
இத்தகைய சூழ்நிலையில் மேற்கூறிய ஆதார் போன்ற அடையாள அட்டைகள் எதுவும் தேவைப்படுவதில்லை, அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கான அடையாள அட்டையே அந்த இடத்திற்கான நுழைவுத் தகுதியைத் தருகிறது.
இவ்வாறு, சமூகச் செயல்பாடுகளை எளிமையாகக் கையாளும் வகையில் செயல்படுகின்ற ஆதார் அட்டையிலிருந்து நுழைவு அட்டைவரை உள்ள எல்லா அடையாள அட்டைகளும், இடத்திற்கேற்றவாறு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பரிமாணத்தில் அடையாளத்தை வெளிப்படுத்தி முக்கியத்துவம் பெறுகிறது.
தகுதியின் அடையாளம்:
ஒரு மனிதனின் சமூகச் செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கு உதவும் அடையாளங்களைப் போலவே மனதின் செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கு உதவும் சில மானசீக அடையாளங்கள் மனிதனின் உள்ளார்ந்த செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கு உதவுகின்றன.
யானை என்பதை முழுமையாக அறியாதவர்கள், கால், காது, துதிக்கை, வால் என பல பகுதிகளாக இருக்கும் யானையின் படத்தைத் தனித்தனியாக வைத்துக்கொண்டு, யானை தூண் போல இருக்கும், முறம்போல இருக்கும், வளையும் தன்மையுள்ள தூண் போல இருக்கும், கயிறுபோல இருக்கும் என்று விதவிதமாகக் கூறுவது முழுமையான யானையின் உருவம் ஆகுமா?
அதுபோல நம்முடைய பரிமாணங்களைக் கூறுகின்ற புற அடையாளங்கள் எல்லாம் உண்மைதான் என்றாலும் இவை மட்டுமே முழுமை அல்ல. இவற்றையெல்லாம் கடந்து நமக்குள் இருக்கும் உயிரோட்டத்தையும் அதன் பலத்தையும் அறிந்துகொள்ளும் விழிப்புணர்வே முழுமையான சுய அடையாளத்தை அறிந்துகொள்ளும் அடிப்படை தேவையாக இருக்கிறது.
இவ்வாறு, அகத்தின் அடையாளத்தை அறிந்துகொள்ள அடிப்படையாக இருக்கும் விழிப்புணர்வே சுயபலம், பலவீனம், இயலாமை, திறமை, முயற்சிகள், தனிப்பட்ட சிறப்புகள் எனும் உண்மையான தகுதிகளைத் தானே அறிந்துகொள்ள உதவுகிறது. இதுவே இந்தத் தகுதிகளைக் காலத்துக்கு ஏற்பவும், அனுபவத்திற்கு ஏற்பவும் அவ்வப்போது புதுப்பிக்கவும் அறிவுறுத்துகிறது.
சுய அடையாளம்:
Tell me about yourself என்பதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும் முன்னேற்பாடுகள் வேலைக்கான வாய்ப்பில் வெற்றிக்குத் துணையாக இருப்பது போலவே, About Myself என நம்மை நாமே உள்ளார்ந்து உணர்ந்து தெரிந்துகொள்ளும் முயற்சிகள் மனவளர்ச்சிக்குத் துணையாக இருக்கின்றன.
தன்னை உணர்ந்து செயல்படும் தெளிவான சிந்தனைகளுக்கும் பொருத்தமான தீர்மானங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த சுய நேர்காணல் சுயத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளவும் தூண்டுகோலாக இருக்கிறது.
உள்ளார்ந்த தகுதியாக உறுதியாக இருக்கும் பண்புகள், சிந்தனைகளின் தன்மை, ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் கற்றுக்கொண்டு கட்டமைக்கப்படும் அணுகுமுறைகள் என வளரும் மனதின் தகுதிகள் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுகின்றன.
உடல், மனம், அறிவு, எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை எல்லாமே நம்முடையவைதான். ஆனால் அவை யாவையும் நாம் அல்ல.
நம்முடையது என்று கூறப்படுவதை கவனித்து வழிநடத்தும் “விழிப்புணர்வே” நாம் என்பதற்கு பொறுப்பேற்று செயல்படுகிறது. இதுவே உறக்கத்திலும் உறங்காத தன்மையுடையதாக இருந்து தன்னைத் தானே காத்து தன்னுடையதையும் விழிப்போடு காக்கிறது.
இந்த விழிப்புணர்வே நாம் யார், எத்தகையவர் என்ற சுயத் தகுதியின் அடையாளங்களை உருவாக்குகிறது.
இதுவே, தனிப்பட்ட பொழுதுபோக்குகள் மற்றும் பொழுதாக்கங்கள் பற்றிய கவனிப்புகள், தனிப்பட்ட பலம் பலவீனம் ஆகியவற்றை புரிந்துகொள்ள உதகிறது.
பலம் தருகின்ற பொழுதாக்கங்களில் பயிற்சியும், பலம் இல்லாதவற்றை பலமாக மாற்றுகின்ற முயற்சியும் பயன் இல்லாதவற்றை தவிர்க்கும் வழியையும் அறிகிறது. மேலும், உள்ளார்ந்த சுயத்தகுதி விவரங்களைத் தெளிவாக உணர்ந்து அவற்றை மேம்படுத்தவும் முயல்கிறது.
விழிப்புணர்வினால் உருவாகும் சுயஅன்பு, நமக்குள் இருக்கும் நண்பனாக, ஒவ்வொரு நிலையிலும் உண்மையைக் கவனித்து உணர்த்துகின்ற உள்ளுணர்வாகத் துணை நின்று உதவுகிறது.
இவ்வாறு உள்ளார்ந்த தகுதிகளைப் புதுப்பித்துக்கொள்ளும் விழிப்புணர்வின் கவனிப்பே நமக்காக நாம் உள்ளன்போடு செய்துகொள்ள வேண்டிய கடமையாக உள்ளது.
முழுமையின் அடையாளம்:
அமைதியான சூழ்நிலையில் தன்னைத்தானே நேர்காணல் செய்வதன் மூலம், ஆழமான நிலையில் உள்ள உணர்வுகள், அவை செயல்படும் விதம், எல்லைகளின் தூரம் என மனதின் உண்மையான விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.
தன்னிடம் தோன்றும் உணர்வுகளுக்கு, சிந்தனைகளுக்கு காரணம் என்ன என்ற புரிதலும், அவற்றை எவ்வாறு கையாளவேண்டும் என்ற நிதானமும் விழிப்புணர்வின் மூலம் கவனிக்கப்படுவதால் இவை மனவளம் என்ற சுயத்தகுதியை மேலும் வளமாக்குகிறது.
இது கல்வி, பதவி, பணம் போன்ற புறத்தகுதிகளைக் கடந்து வெளிப்படுகின்ற அணுகுமுறையாக, அகத்தகுதியின் அடையாளமாக வெளிப்படுகிறது.
புதிய சூழ்நிலைகள், புதிய சவால்கள், புதிய மனிதர்கள், புதிய பரிமாணங்கள் என எதிர்கொள்ளும் வாய்ப்புகள் ஒவ்வொன்றும் அணுமுறையில் புதிய தகுதி நிலைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
இவற்றை உணர்ந்து முறையாகப் பயன்படுத்துகின்ற விழிப்பான மனநிலையே அப்டேட் செய்யப்பட்ட உள்ளார்ந்த சுயஅடையாளமாக, சமூகத்தில் நல்ல விளைவுகளைத் தருகின்ற வெற்றியாளர்களின் முழுமையான அடையாளமாக வெளிப்படுகின்றது.
# நன்றி .
