வள்ளுவர் சொல்லும் வாழ்வியல்:
எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையாற்-
என்று மதுரை தமிழ்நாகனார், திருக்குறளின் சிறப்பைக் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் விவசாயம் மற்றும் தாவரங்களைப் பற்றி கூறும்போதும், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துக்களாக வள்ளுவர் சொல்லும் வாழ்வியலை இயற்கையோடு இயைந்து காணலாம்.
மூலதனம்:
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
தொடர்ந்து சுழன்று இயங்கி, தன்னுள்ளே உயிர்களை உருவாக்கும் ஆக்கசக்தியான பூமித்தாய், தன்னை அகழ்வாரையும் தாங்கிக்கொள்ளும் பொறுமை நிறைந்தவள். அத்தகைய நல்லாளே, மனிதன் தன் ஆற்றலை உணராமல், தன்னிடம் ஏதும் இல்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாகக் கிடந்தால், அவனை இழிவாக எண்ணி ஏளனமாகச் சிரிப்பாள் என்று கூறும் வள்ளுவர், மனிதன் தன்னையே மூலதனமாக நினைத்துத் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
கடமை:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஓடி விடும்.
உழவுநிலத்துக்கு உரியவன் அக்கறையோடு நாள்தோறும் தானே சென்று நிலத்தைப் பராமரித்து வளமாகப் பேணிகாக்க வேண்டும். அவ்வாறு அக்கறை காட்டாமல், பொறுப்பாகக் கவனிக்காமல் பயிர்விளையும் நிலத்தை விட்டுவிட்டால், கடமை மறந்தவனுடைய மனைவியைப் போல வளமின்றி வாடி, பலனின்றி வீணாகிவிடும் என்கிறார்.
பயிர்விளையும் நிலத்தைப் பருவத்திற்கு ஏற்ப முறையான கவனிப்பும், பாதுகாப்பும் அளித்தால் உரியவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறும் வள்ளுவர், அதனுடனே மனைவியிடம் கணவனுக்கு உள்ள கடமையை உணர்த்தி, வளம் தரும் வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார்.
முதன்மை:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழவுத்தொழில் செய்து வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறவர் ஆவார்கள். மற்றவர்கள் எல்லாம் உழவர்களைத் தொழுது அவர்களுக்குப் பின்னே செல்பவர்கள்.
இன்றைய நிலையில் வீதிக்கு நான்கு உணவகங்களும், அவற்றில் நிரம்பி வழியும் கூட்டமும் உணவுத் தேவையின் உச்சத்தைக் காட்டுகின்றன. ஆனால் இதற்கு அடிப்படையாக இருக்கும் உணவுப் பொருட்களின் விலைக்கும், உழவர்களின் நிலைக்கும் உள்ள வேறுபாடு வியப்பை அளிக்கிறது.
உழைத்து வாழ்வதில் முதன்மையானவர்கள் பிழைத்து வாழ்வதே பெரிய சவாலாக இருக்கும் நிலை மாற வேண்டும். உழவுத்தொழில் முதன்மையான தொழில் என்றால், உழவர்கள் சிறப்பான, முதன்மையான வாழ்க்கை நிலையைப் பெறவேண்டும்.
அடக்கம்:
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.
ஐம்பொறிகள் வழியாக ஐம்புலன்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிக வலிமையானவை. இவற்றை திடமான மனஉறுதி கொண்டு காப்பவன், மனிதன் எனும் நிலையை விட உயர்ந்த நிலையின் ஒரு விதை போன்றவன் ஆவான்.
ஐம்புலன்கள் வழியாகத் தொடர்ந்து பெறப்படும் தகவல்களே மனிதனுக்குள் பலவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றன. இயல்பான மனிதனாக ஒழுக்கமாக வாழ்வதற்கே ஐம்புலன்களையும் கவனமாகக் காக்க வேண்டிய நிலையில், ஐம்புலன்களால் தன்னிச்சையான எந்தத் தாக்கமும் நிகழாத வகையில் ஐம்புலன்களையும் முறையாகக் கட்டுப்படுத்தி, அவற்றை மனவுறுதியோடு கையாளத் தெரிந்தவன் மனிதன் என்ற நிலையைவிட உயர்ந்த நிலையை அடைந்தவன் ஆவான்.
பாதுகாப்பு:
நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
மிகுந்த செல்வம் பெற்றிருந்தாலும், வறியவர்களுக்குத் தேவையான நேரத்தில் தந்து உதவாதவனின் செல்வம் ஊர்நடுவில் பழுத்து நிற்கும் நச்சுமரம் போன்றது என்று வள்ளுவர் கூறுகிறார். நச்சுமரம் என்று கூறியதன் மூலம், அதன் தன்மையையும் உணர்த்துகிறார்.
உயர்வு:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
தாமரை போன்ற நீர்ப்பூக்களின் காம்பின் நீளம், அவை வளர்ந்திருக்கும் நீரின் ஆழத்தின் அளவேயாகும். அதுபோல மாந்தரின் வாழ்வின் உயர்வு என்பது அவருடைய மனதின் ஊக்கத்தின் அளவேயாகும்.
வாழ்க்கையில் உயர வேண்டும் என நினைப்பவர் தம் உள்ளத்தில் உயர்ந்த நோக்கமும், அதற்காக அயராது உழைக்கும் ஊக்கமும் கொண்டிருந்தால், அந்த ஊக்கத்தின் அளவு உயர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்.
சொற்சுவை:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவர்ந் தற்று.
இனிமையான சொற்கள் இருக்கும்போது, இனிமையற்ற சொற்களைப் பேசுவது, இனிய கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்து உண்பது போன்றது.
(இனிமையான சொற்கள், சொற்சுவையும் தந்து, கேட்பவருக்குச் செவிக்கின்பமும் தரக்கூடிய தன்மை உடையவை.)
பலன்:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
நிலத்தை ஆழ உழுவதினும், அதற்கு வளமான உரமிடுதல் நல்லதாம். பயிர் வளர்ந்து களையெடுத்தபின், நீர் பாய்ச்சுவதினும் தக்க காவல் செய்தல் மிக நல்லதாம்.
இவ்வாறு, பலனை நோக்கி பாடுபடும்போது அந்தப் பலனை காவல் செய்து பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமானது என்று வலியுறுத்திக் கூறுகிறார்.
திருக்குறள் முழுவதுமே மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றில் விவசாயத்தோடும், தாவரங்களோடும் தொடர்புடைய சில வாழ்வியல் கருத்துக்கள் நம் மனதில் பசுமையாக எளிதில் பதிகின்றன.
# நன்றி.