தனித்துவம்:
உலகில் கோடிக்கணக்கான மக்கள்தொகை இருந்தாலும், ஒருவர் மற்றவரைப் போல இருப்பதில்லை. இரட்டையர்களாக இருந்தாலும் தனித்துவமான கைரேகையைப் போலவே, தோற்றத்திலும், சிந்தனையிலும், செயலிலும் சிறிதளவேனும் வேறுபட்டு இருக்கின்றனர்.
நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புத் தன்மைப் பெற்றிப்பது போலவே, மனிதர்களும் தங்களது தனித்தன்மையால் பலகோடி ரத்தினங்களாக ஜொலிக்கிறார்கள்.
விவசாயம், பொறியியல், மருத்துவம், கல்வி போன்ற துறைகளின் மூலம் மக்கள் சமூகத்தின் ஒருபகுதியாக இயங்குகிறார்கள். இவர்களில் தன்னிகரற்ற தனித்தன்மை கொண்டவர்கள், அவர்கள் சார்ந்த துறைகளை மேலும் சிறப்பாக்குகிறார்கள்.
பளுவான பொருட்களை எடுத்துச் செல்ல பழங்காலத்தில் பலவகையான முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள். தனித்துவமான சிந்தனை கொண்ட மனிதன் தன் முயற்சியால் சக்கரத்தைக் கண்டுபிடித்து, அதை எளிமை ஆக்கினான். அந்தச் சக்கரமே இன்றைய நவீன உலகின் ஓட்டத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தான் இந்த உலகில் பிறந்ததற்குப் பயனாக உலகிற்குத் தன் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறான். இதனால்தான் உலகம் தோன்றிய நாள்முதல் உணவு, உடை, மொழி, நாகரிகம் என்று மனிதகுலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டே இருக்கிறது.
சமூகத்தில் ஒருவருக்கொருவர் தங்கள் சிந்தனையைப் பகிர்ந்து, முறையாகப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தனிமனித ஒழுக்கமும், சீரிய சிந்தனைகளும்தான் உலகம் பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சியடைய காரணமாக விளங்குகின்றன.
இயல்பாகவோ, பயிற்சியினாலோ, அல்லது கடினமான முயற்சியினாலோ தனிப்பட்டத் திறமைகள் வெளிப்படலாம். எப்படியிருந்தாலும் அவை மக்களுக்குப் பயனளிக்கும் வகையினால் சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மகத்துவம்:
நூறு சதவீதம் தன்னைப்போல் இன்னொருவரைக் காண முடியாதத் தனித்துவம் பெற்று விளங்கும் மனிதன், சமுதாயம் எனும் பொதுத் தன்மையால் ஒன்றிணைந்து செயல்படுகிறான். எல்லா விதமான செயல்களிலும் மாறுபட்ட சிந்தனைகள் ஒருங்கிணைந்து இருப்பதால்தான், அவை பல கோணங்களில் ஆராயப்பட்டு பல்வேறு தளங்களில் மேம்படுத்தப் படுகின்றன. மனிதனின் தனித்துவமான இந்தப் பண்பே சமுதாய வளர்ச்சிக்கு மேலும் உதவுகின்றது.
நுண்ணோக்கி பார்க்கும் அறிவு அனைவருக்கும் பொதுத்தன்மையாக இருக்கிறது. அந்தத் தன்மையால் எதைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. தனித்துவமான மக்கள் இணைந்து செயல்படும்போது, மகத்துவமான மாற்றங்கள் நிகழ்கின்றன.
தனியொரு மனிதனின் உணவும், நியாயமான உரிமைகளும் பாதுகாக்கும் வகையில் நம்பிக்கையோடு செயல்படும் சமுதாயமே ‘தன்னிறைவு பெற்ற சமுதாயமாக’ விளங்க முடியும். அதேபோல், தனித்துவமாகச் சிறந்து விளங்கும் மக்கள் மற்றவர் சிந்தனைகளை மதித்து, அன்பால் இணைந்து, ஒற்றுமையாக இயங்கும் சமுதாயமே ‘தன்னிகரற்று விளங்க’ முடியும்.
மாறுபட்ட சிந்தனைகள்தான் உலகில் புதுமைகளை ஏற்படுத்துகின்றன. ஒருங்கினையும் தனித்தன்மைகளே சமுதாய அறிவின் விரிவாக்கமாகச் செயல்படுகின்றன. பலவகையான வண்ணங்கள் சேர்த்த ஓவியம் அழகாக இருப்பது போல பலதரப்பட்ட எண்ணங்கள் சேர்ந்த சமுதாயமே உலகை வளமாக்குகிறது. தனித்தன்மை என்பது அவரவர் உள்ளுணர்வுக்கேற்ற வகையில் இருப்பதால், அது வானவில் போல அழகாக வெளிப்படுகின்றது.
மனிதன் குழுவாக இணைந்து செயல்படும் நேர்த்தியால் வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தி, உலகின் உயர்ந்த பல பிரமிப்பூட்டும் செயல்களைச் செய்து உயர்ந்து நிற்கிறான். சமுதாயத்தில் ஒரு அங்கமாக இணைந்து செயல்படும்போதும், தன் தனித்தன்மையால் சிந்திக்கும் மனிதன் ஆயிரத்தில் ஒருவனாக உயரும் வாய்ப்பைப் பெறுகிறான்.
எனவே, எந்தத் துறையாக இருந்தாலும் ஒருவருடைய தனித்துவமான சிந்தனைகளும், சூழ்நிலைகளை அணுகும் முறைகளும், பயனுள்ள சிறப்பான செயல்களுமே, அவரைத் தன்னிகரற்ற தலைவராக உயர்த்துகின்றன.
சமத்துவம்:
“வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன் சிலம்பி யாவர்க்கஞ் செய்யரிதால் – யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது”.
என ஒளவையார் பாடியதைப்போல், ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்புத் தகுதி இருக்கும். இதில் ஒருசிலவற்றை மட்டும் உயர்வென்று கொண்டாடுவது பாரபட்சமானது. உலகத்திற்குப் பயன்படும் நேர்மையான சிந்தனைகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை ஆராய்ந்து கொள்ளத்தக்கவை.
பலதரப்பட்ட மக்களும் தங்களுடைய தனித் தன்மையால் பல்வேறு வகையான சாதனைகளைப் படைக்கின்றனர். இவற்றில் எல்லா சாதனைகளும் உடனடியாக வெளியுலகத்துக்குத் தெரிந்து விடுவதில்லை.
தினமும் கடினமாக வேலை செய்யும் மனிதர்கள் தங்கள் உழைப்பால் கிடைத்தப் பணத்தை ஒரு ரூபாய் கூட தவறான வழியில் வீணாக்காமல், குடும்பத்தின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்துவதே ஒரு சாதனை என்ற நிலையில் வாழ்கின்றனர். தங்களுடைய மனஉறுதியால், குடும்பத்தின் நிலையை மேலும் உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு, நேர்மையாகப் பாடுபடும் சாமான்யர்கள் அனைவருமே சமூகத்தை உயர்த்தும் சாதனையாளர்களே.
வரவுக்குள் செலவு செய்து, உறவுகளையும் அனுசரித்து, ஒழுக்கமான தலைமுறைகளை உருவாக்கி, குடும்பத்தைத் திறம்பட நிர்வகிக்கும் இல்லத்தரசிகளும் இனிமையான சாதனையாளர்களே.
‘உள்ளுணர்வில் விழிப்போடு இருந்து சமூக பொறுப்போடு செயல்பட்டு’ தங்கள் நிலையில் முன்னேறுவதோடு, மற்றவர்களுக்கும் உதவி செய்பவர்கள் அனைவருமே சமூகத்தை உயர்த்தும் சாதனையாளர்களே.
இத்தகைய சாதனையாளர்களின் பெயர்கள் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறா விட்டாலும், வருங்காலத் தலைமுறைகள் பேசும் வரலாற்று பக்கங்களில் தலைநிமிர்ந்து உச்சரிக்கப் படுவார்கள்.
ஏனெனில், இதற்கான முயற்சிகள் என்பவை மலை உச்சியை ஏறுவதற்கும், கடலை நீந்தி கடப்பதற்கும் உள்ள மனஉறுதிக்குச் சற்றும் குறைந்தது இல்லை. எனவே, ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து, தன் தலைமுறைகளை உயர்த்துவதற்குத் தன்னையே ஆயுதமாக பயன்படுத்தும் ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தை உயர்த்தும் தனித்துவமான சாதனையாளர்தான்.
# தனித்துவமான சாதனையாளர்கள் அனைவருக்கும் வளமான வாழ்த்துகள். நன்றி.