குழந்தைகள்:
பரிசுத்தமான வெள்ளைக் காகிதம் போல குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களைச் சிறந்த ஓவியமாக உயர்த்தும் வாய்ப்பு, பெரும்பாலும் அந்தக் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்தே அமைகிறது.
இன்றைய நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் சற்றுக் கூடுதலான அக்கறையுடன் கவனிக்கப் படவேண்டியுள்ளது.
நியாயமாக, எந்த விளைவுகளைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத குழந்தைகளின் மனதில், பலவிதமான பதிவுகள் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. வயதுக்கு மீறிய, அலட்சியமான பேச்சுகள், அலட்டலான நடவடிக்கைகள் போன்ற அவர்களது செயல்களுக்கு, ஒரு சதவிகிதம் கூட குழந்தைகள் காரணம் அல்ல.
இந்நிலையில், அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதும், அவர்களை நல்ல வழியில் வளர்க்க வேண்டியதும் அந்தக் குழந்தைகளைச் சுற்றியுள்ள மனிதர்களும், அவர்களின் அணுகுமுறைகளும்தான். இதையே பின்வரும் மூன்று கதைகளும் விளக்குகின்றன.
1. சுற்றுச்சூழல்:
ஒரு மன்னர் தனது நாட்டில் வாழும் மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் வந்துக்கொண்டிருந்தார். களைப்பாக இருந்ததால் சற்று நேரம் இளைப்பாறிவிட்டுச் செல்லலாம் என நினைத்து ஒருவீட்டின் திண்ணையில் அமர்ந்தார்.
அப்போது, “யார் நீ?” என்ற குரல் கேட்டுத் திகைத்துத் திரும்பினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. ஒரு கிளி மட்டும் கூண்டில் இருந்தது. பேசியது கிளியா! என்று மன்னர் பார்க்கும்போதே, “நான் கேட்பது உன் காதில் விழவில்லையா?” என்று மிரட்டும் தொனியில் கிளி கேட்டது.
கிளி பேசியதை ஆச்சரியமாகப் பார்த்த மன்னர், “நான் ஒரு வழிப்போக்கன். சற்று ஓய்வெடுக்கவே இங்கு அமர்ந்தேன்” என்றார். “இது என்ன சத்திரமா ஓய்வெடுப்பதற்கு, உடனே இங்கிருந்து செல்!” என்று கிளி விரட்டியது.
இந்தப் பேச்சு சத்தம் கேட்டு வீட்டின் உள்ளிருந்து ஒருவன் வந்தான். பார்த்தவுடனே அவன் ஒரு வேடன் என்பது மன்னருக்குப் புரிந்தது. வந்தவனும் கிளி கேட்டதுபோலவே “யார் நீ?” என்று தொடங்கி, (மாறுவேடத்திலிருந்த) மன்னரை விரட்டினான்.
வேடனின் மரியாதையற்றப் பேச்சும், அதை அப்படியே பழகியிருந்த கிளியின் பேச்சும் மன்னருக்குத் திகைப்பை அளித்தது. அங்கிருந்து கிளம்பிய மன்னர், சிறிது தூரத்தில் இருந்த மற்றொரு வீட்டிற்கு அருகில் சென்றார்.
அப்போது அங்கே, “ஐயா!” என்ற அழைக்கும் குரல் கேட்டு நின்றார். அந்த வீட்டின் திண்ணையில் ஒரு கிளி அமர்ந்திருந்தது. அது மன்னரைப் பார்த்து “ஐயா, தாங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்களே, வந்து அமருங்கள். எங்கள் வீட்டுப் பெரியவர் வெளியே சென்றிருக்கிறார், இப்போது வந்து விடுவார். தாகத்திற்குக் குடுவையில் உள்ள மோரை அருந்துங்கள்”, என்று உபசரித்தது.
இதைக்கண்ட மன்னருக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கிளி இவ்வளவு பண்போடு பேசுகிறதே என்று மகிழ்ச்சியடைந்தார்.
அப்போது அந்த வீட்டுப் பெரியவர் அங்கு வந்தார். தன் வீட்டுத் திண்ணையில் புதியவர் ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரித்தார். பின்னர் அவர் மன்னருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மன்னர், தான் முன்பு பார்த்த வேடன் வீட்டுக் கிளியைப் பற்றி கூறி, இரண்டு கிளிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும், அதன் காரணத்தையும் பெரியவரிடம் கேட்டார்.
அதற்குப் பெரியவர், “எல்லா உயிரினங்களும், அவற்றை நாம் எப்படி நடத்துகிறோமோ அவ்வாறே அவையும் நடந்து கொள்ளும். வேடனின் கடுமையானப் பேச்சைக் கேட்டு வளர்ந்த கிளி, தன் பாதுகாப்பை ஒருபோதும் உணர முடியாததால் எப்போதும் ஒரு பதட்டத்துடன் இருக்கிறது. அதனால், அந்தக் கிளியும் வேடனைப்போலவே மரியாதை இல்லாமல் பேசுகிறது” என்றார்.
மேலும், “நம் வீட்டில் உள்ள இந்தக் கிளி முழுமையான சுதந்திர உணர்வுடன் இருப்பதால், அன்பிற்குப் பழக்கமாகி, பண்போடு நடந்துகொள்கிறது” என்று பெரியவர் விளக்கம் கூறினார்.
இந்த விளக்கத்தால் மிகவும் தெளிவடைந்த மன்னர் பெரியவருக்கும், அன்பான கிளிக்கும் நன்றி கூறினார்.
பெரும்பாலும் குழந்தைகளைச் சுற்றி உள்ள சூழ்நிலைகளே அவர்களுடைய குணத்தை வளர்க்கும். எனவே, நல்ல அன்பான மனிதர்களோடு பழகுவதும், பண்பை உயர்த்தும் செயல்களைப் பழக்கப்படுத்துவதும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். இதையே இந்தக் கிளிக்கதை உணர்த்துகிறது.
எப்போதும் வீடுகளில் ஒலிக்கப்படும் பேச்சுகளும், பாடல்களும் நம் மனதிற்கு நல்ல உணர்வுகளைத் தரக்கூடியவைகளாக இருந்தால், அது நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கும். இதுவே நாளடைவில் நம்மிடையே நல்ல சூழல்களை உருவாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும்.
2. பொறுப்பும், கடமையும்:
ஒரு சிறுவன் பள்ளியிலிருந்து வரும் வழியில் உள்ள கடையில், கடைக்காரர் வேறு கவனத்தில் இருக்கும்போது வாழைப்பழத்தைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். அதுபோல் ஒருநாள் திருடியப் பழத்தை வீட்டில் போய் சாப்பிடலாம் என்று நினைத்துப் பைக்குள் மறைத்து வைத்தான்.
வீட்டிற்குச் சென்றதும் அவனுடைய தாய் அந்த வாழைப்பழத்தைப் பார்த்ததும் அது “எப்படிக் கிடைத்தது?”, என்று கேட்டாள். அவனும் பயந்துகொண்டே அதுவரை நடந்ததைச் சொன்னான். ஆனால் அவளோ, தன் மகனைத் திறுத்தாமல், “கடைக்காரர் பார்த்துவிட்டால் அடித்துவிடுவார் ஜாக்கிரதை”, என்று கூறிவிட்டு, அவளும் அந்தப் பழத்தைச் சாப்பிட்டாள்.
நாட்கள் செல்லசெல்ல அவனும் வளர்ந்தான், அவனுடைய குற்றங்களும் வளர்ந்தன. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதால் அவன் செய்த பெரிய திருட்டுக்கு அவன் போலீசில் பிடிபட்டான். அவர்கள் அவனை அடித்து, உதைத்துக் காவலில் வைத்தனர்.
அப்போது அவனைப் பார்க்க அவனுடைய தாய் வந்தாள். “இந்த நிலைக்கு யார் காரணம்?” என்று பதட்டத்துடன் கேட்டாள். அவளைப் பார்த்த மகன், “நான் சிறிதாகத் தவறுகள் செய்தபோதே, அதன் விளைவுகளைக் கூறி, கண்டித்துத் திருத்தாமல், உன் கடமையைப் பொறுப்பாகச் செய்யாத நீயே இந்தக் கேவலமான நிலைக்கு முழுவதும் காரணம்” என்று கூறி வருந்தினான்.
சில சமயங்களில் சமூகத்தினாலும், கூடாநட்பினாலும், தவறான வழிக்காட்டுதலினாலும் தேவையற்ற வழிகளில் திசைமாறும் பிள்ளைகளை நல்வழிபடுத்த, நிலையான அன்பும், கடிவாளம் போன்ற கண்டிப்பும், முறையான வழிகாட்டுதலும் சற்றுக் கூடுதல் கவனத்துடன் தேவைப்படுகின்றன.
3. அணுகுமுறை:
அடிக்கடி தன் பேனாவைத் தொலைத்துவிட்டு வரும் ஒரு சிறுவன் தன் தந்தையிடம், வழக்கம்போல தன் பேனா தொலைந்து விட்டதால் புதிதாக வேறு வாங்கி தரும்படி கேட்டான். தந்தை சிறிது நேரம் யோசித்தார், தனது மகன் அடிக்கடி பேனாவைத் தொலைத்து வருவதும், பின்னர் தான் வாங்கி தருவதும் வாடிக்கையாகி விட்டதை உணர்ந்தார்.
எனவே, தன் மகனுக்குப் பொருட்களைப் பொறுப்பாகப் பாதுகாக்கும் தன்மையை வளர்க்க ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்தார். இதனால் தன் மகனை கடைக்கு அழைத்துச் சென்று, ஒரு நல்ல விலை உயர்ந்த பேனாவை வாங்கினார். அதைத் தன் மகனிடம் கொடுத்து, “நீ மிகவும் நல்லவனாகவும், எப்போதும் உண்மை பேசுபவனாகவும் இருப்பதால், உனக்கு இந்த அழகான பேனாவைப் பரிசாகத் தருகிறேன்” என்றார்.
மகனுக்கு மனதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், கூடவே கொஞ்சம் பயமும் இருந்தது. அவன் அதைத் தன் தந்தையிடமே கூறினான். “இந்தப் பேனாவையும் நான் தொலைத்து விட்டால் என்ன செய்வது, அதனால் இது வேண்டாம். எனக்கு எப்போதும்போலவே விலை குறைந்த பேனாவே வாங்கிக் கொடுங்கள்” என்றான்.
ஆனால் தந்தையோ, “இந்தப் பேனா நான் உனக்காக அன்போடு வாங்கி, அதை உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். இதை வாங்கிக்கொள். நிச்சயம் இதை நீ பத்திரமாகத்தான் வைத்திருப்பாய். ஒருவேளை இதை நீ தொலைத்து விட்டாலும் பரவாயில்லை. ஆனால் எப்படி, எங்குக் காணாமல் போனது என்று கவனித்து எனக்குச் சொல்லவேண்டும்” என்றார்.
வாரத்திற்கு ஒரு பேனா காணவில்லை என்று சொல்லும் தன் மகன், இப்போது சில மாதங்கள் சென்றும் புதிதாகப் பேனா கேட்கவில்லையே என்று நினைத்துத் தன் மகனை அருகில் அழைத்தார். பேனாவை மகன் பத்திரமாக வைத்திருப்பது கண்டு பாராட்டினார்.
அப்போது மகன் தன் தந்தையைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியோடு, “அடிக்கடி பேனாவைத் தொலைத்தது எனக்கும் மனதிற்கு வறுத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமலிருந்தேன்”.
“ஆனால், நீங்கள் என்னை நம்பி, உங்களுடைய அன்பு பரிசாக நல்ல பேனாவைக் கொடுத்தீர்கள். அதுமட்டுமல்லாமல் தொலைந்தாலும் தண்டிப்பேன் என்று சொல்லாமல், எப்படித் தொலைந்தது என்று கவனிக்கச் சொன்னீர்கள். அன்பான உங்களுடையப் பேச்சு என் மனதில் இருந்ததால், நான் எப்போதும் கவனமாக இருந்தேன். அதனால் இந்தப் பேனாவையும், இதுபோன்ற எந்தப் பொருட்களையும் மிகப் பொறுப்பாக வைத்துக்கொள்வதுதான் நல்லப் பழக்கம் என்பதை உணர்ந்தேன்” என்றான்.
நினைப்பதே நடக்கும்:
நம் பெரியவர்கள், எப்போதும் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசினால்தான் நல்லதே நடக்கும் என்றனர். நம்முடைய பேச்சும் செயலும் தனிப்பட்ட நம்முடைய விருப்பமாக இருந்தாலும், அது மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் நேர்மறையான நமது பேச்சும்,செயலும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதிலும் குழந்தைகளின் மனம் மென்மையானது என்பதால் எதையும் நன்கு யோசித்து நிதானமாகச் சொல்ல நமக்கு மிகவும் பொறுமை வேண்டும். குழந்தைகளின் மனதில் தேவையற்ற பயமோ, எண்ணங்களோ இருந்தால் அதைப் பக்குவமாகச் சரி செய்வதுதான் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் மனம் முகம் பார்க்கும் கண்ணாடியைப்போல தன் எதிரில் இருப்பவர்களைப் பிரதிபலிக்கும் இயல்புடையது. மேலும் அதையே மனதில் பதியவைத்துக் கொள்ளும் தன்மையும் கொண்டது. எனவே குழந்தைகளின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை.
இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைமுறைகளாகத் தழைத்து வரவேண்டியவர்கள். அவர்களை மனிதநேயம் மிக்க, தன்னம்பிக்கையுள்ள நல்ல மனிதர்களாக வளர்ப்பதுதான் நம்முடைய பொறுப்பாகும். அப்போதுதான் குழந்தைகளின் உலகம் ஆரோக்கியமான மகிழ்ச்சியோடு இருக்கும்.