கடந்த காலத்திலிருந்து கற்றதும், பெற்றதும் என்ன? Kadantha Kaalaththilirunthu Katrathum, Petrathum Enna?

தன்னம்பிக்கையின் பதிவுகள்:

நாம் அனைவருமே, காலம் நடத்தும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அடுத்தநாளைச் சந்திக்கிறோம். இதுவரை நாம் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு வகையில் நம்மை வடிவமைத்து வளர்த்திருக்கின்றன.  

கடந்துவந்த நினைவுகளை வாழ்க்கையின் அனுபவங்களாக மாற்றும் சக்தி காலத்திற்கே உண்டு.  இன்றைய காலகட்டத்தில் நாம் மிக நிதானமாக இருந்து சுற்றி உள்ள நிகழ்வுகளைப் புதுப் பார்வையோடு எதிர்நோக்குவது நமக்குத் தேவையான மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்தும். 

நம்மை விட அதிக அளவில் பாதிக்கப் பட்டவர்களும், சாதகமான எந்த சூழ்நிலையும் இல்லாதவர்களும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு வாழ்க்கையை மனஉறுதியோடு எதிர்கொள்வதையும் கவனிக்க முடிகிறது.  ஒருவருடைய நேர்மறையான தன்னம்பிக்கையான அணுகுமுறை மற்றவர்களுக்கும் ஊக்கத்தையும், புத்துணர்ச்சியையும் தருகிறது.

வெளிச்சம்:

கடந்தகாலம் நமக்கு விட்டுச்சென்ற செய்தி, “விழிப்புணர்வு” எனும் வெளிச்சமாகும்.  கண்களும், காதுகளும் கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒவ்வொரு செய்தியும் உணர்த்தியது.  ஆரோக்கியம், வீடு, உறவுகள், வேலை, வணிகம், வாழ்க்கை முறை என்று எல்லாப் பக்கங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.  

வாழ்க்கைக்கு மிக அவசியமான தேவைகள் எது என்று தெரிந்தது.  தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் புரிந்தது. 

அடிப்படை தேவைகள்கூட கிடைக்கப் பெறாதவர்கள் என்ன செய்வார்களோ என்று நினைக்கும்போதே,  அவர்களுக்காக ஓடி சென்று உதவிய “ஆக்கபூர்வமான” கருணை உள்ளங்களை, செயல் வீரார்களைக் காணமுடிந்தது.

கற்றது:

ஒவ்வொரு நிகழ்வும் தன்னளவில் ஏதாவது ஒரு செய்தியை நமக்கு விட்டுச் செல்கிறது. அதுபோல இப்போதும் நமக்கானப்  பாடங்கள் நிறைய உள்ளன. 

ஆரோக்கியம் என்பது தனிப்பட்ட நபரின் பாதுகாப்பு என்று இல்லாமல், சமூக சார்ந்தப் பாதுகாப்பாக, உலகம் எங்கும் ஒரே மொழியாகப் பேசப்பட்டது.  

ஆயிரக் கணக்கில் செலவு செய்து துணிகளோ, பொருட்களோ வாங்கினாலும்,  அவைகளைப் போட்டு தரும் பைகளுக்குப் பத்து ரூபாய், இருபது ரூபாய் என விலை நிர்ணயிக்கும் கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் மற்றும் ஒன்று இலவசம் என்று (விலை உயர்ந்தவைகளுக்கும்) தாராள மனம் காட்டுவது எப்படி, என்று யோசிக்க நேரம் கிடைத்தது.  

தரமற்ற, தேவையற்ற  பொருட்களை வாங்கிச் சேர்ப்பது குடும்பப்  பொருளாதாரத்தை பலவீனமாக்கும் என்று புரிந்தது.  அதே நேரத்தில்  சேமிப்பின் அவசியத்தை மிக ஆழமாக அறிந்து கொள்ள முடிந்தது. 

உண்மைகள்:    

வீட்டுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் வீட்டை ஒரு பொருட்டாக நினைக்காதவர்களையும், வீடுதான் வாழ்க்கையின் வேர் என்று வீட்டிற்குள் இருக்கவைத்து உணர்த்தியது.  

ஒவ்வொரு மனிதரையும் அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர் என்றும் அவரே சமூகத்தின் ஒரு பகுதி என்றும் புரிய வைத்தது.  ஒருவருடைய பேச்சு, மூச்சு, அருகாமை, செயல்கள் அனைத்தும் எத்தனை சக்தி வாய்ந்தவை என்றும் உணரவைத்தது.   

மேலும், அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் அவருடைய செயல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வையும்  ஏற்படுத்தியது.

இதனால், ஒருவரை ஒருவர் அக்கறையுடன் கவனித்துக் கொண்டோம்.  ஆரோக்கியம் என்பதன் அவசியத்தை அனுதினமும் எண்ணியிருந்தோம்.  உணவு விஷயத்தில் எந்த அளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.

வலைதள வகுப்புகள்:

ஒருமாத கோடை விடுமுறைக்காக வருடம் முழுதும் காத்திருக்கும் மாணவர்களுக்கு, ஆரம்ப கால தொடர்விடுமுறைகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியில் செல்ல முடியாவிட்டாலும், அனைவரோடும் சேர்ந்து ஆன்லைன் வகுப்புகள் படிக்கும்  புதுமையான அனுபவம் ஏற்பட்டது.

இதுவரை மரத்தடியில் நடந்த வகுப்புகளில் படித்திருப்போம்.  இப்போது  வலைதள சிக்னல் கிடைக்கவேண்டும் என்பதால் மரத்தின் மீதிருந்து படித்த, “on tree” வகுப்புகளும் ஆங்காங்கே நடந்தேறின.

புதிய பழக்கங்கள்:

வீட்டுக்கு வந்த பாக்கெட் பொருட்களை சானிடைசர் தெளித்து வரவேற்கிறோம்.   காய்கறிகள், பழங்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில், பாத்டப்பில் நீராட்டி, பின்னர் சன்பாத் எடுக்க வைத்துச் சீராட்டுகிறோம்.  அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவிக்கழுவி, இந்தப் பழக்கம் இப்போது கையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது.

காய்ச்சிய குடிநீரைக் குடிக்க மறுத்தவர்கள்கூட கபசுர குடிநீரை ஒரே மடக்கில் குடிக்கின்றனர்.  இதுவரை கண்ணின் பிரச்சனைக்கு அணியும் கண்ணாடியைத் தாங்கிய காதுகள், இப்போது முகக் கவசங்களையும் தாங்கி கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டன.  

இந்த அவசர காலத்தில் காதுகள் செய்யும் ஒத்துழைப்பை மதிக்காமல், மாஸ்க்கை காதுகளில் தொங்க விடுவதும், காதுகளை  கொக்கிகள்  போல பயன்படுத்தி முகத்திற்கு ஊஞ்சல் கட்டுவதும் நம்முடைய புதிய திருவிளையாடல்கள்.  போகிறபோக்கில், காதுகள் முன்னோக்கி வளைந்து புதிய மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

புதிய வரவுகள்:

வாழ்க்கையை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் ஒரு பார்வை நம்மிடையே ஏற்பட்டுள்ளது.  திரைகடல் ஓடி திரவியம் தேடினாலும் நாம் அனைவரும் அன்பெனும் ஒரு கூட்டுக்குள் அடங்கும் பறவைகள் தான் என்பதை உணர்ந்தோம்.  நமக்கு நாமே உறுதுணையாக இருந்து சமூகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கிறோம் என்பதை நினைவு படுத்திக்கொண்டோம்.

எந்த நிகழ்வுகளும் நமக்கு நன்மையை விளைவிக்கும் பொருட்டே நிகழ்கின்றன என்று நாம் ஏற்றுக்கொண்டால் எந்தச் சூழ்நிலையையும் நமக்கு நன்மையாக உணர முடியும். இதில் ஒவ்வொறு நிகழ்விற்கும் அதற்குத் தேவையான ஒரு கால அளவு மாறுபடும்.  

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, கடந்த காலம் என்பது நம் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்திருப்பது உண்மைதான்.  அந்தத் திருப்புமுனையை நம்முடைய நம்பிக்கையின் ஆரம்பமாக நினைத்து உழைத்தால், “எங்கே போய்விடும் காலம், அது நம்மையும் வாழவைக்கும்” என்ற புதிய நம்பிக்கைப் பிறக்கிறது.  இந்தப் புதிய நம்பிக்கையை நல்ல வரவாக நினைத்து உழைப்போம், உயர்வோம்.   

சுபதினம்:

“ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி,

ஆயிரம் இருக்குது சுபதினம்,

அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு 

ஆயுள் முழுவதும் சுபதினம்”.

என்று பாடியது போல, அடுத்தவர் நலனையும் நினைத்து, நம்மால் முடிந்த உதவிகள் செய்வது, நம்முடைய நாட்களைச் சுபமான நாட்களாக உயர்த்தும் வழியாகும்.  

நம்முடைய நலனை நினைப்பவர்களுக்கு அன்பான நன்றி தெரிவிப்போம்.  நாமும் சமூக நலனை மதித்து வாழ்வோம்.  ஒவ்வொரு நாளையும் நம் வாழ்க்கையில் சுபதினம் என்றே மகிழ்ச்சியோடு வரவேற்போம், நம்பிக்கையோடு வாழ்வோம், வாழவைப்போம்.   நன்றி.

# மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டு, தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *