சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
வாய்மொழி:
வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அனுபவங்கள் பெரும்பாலும் வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே அமைகின்றன. உறவின் அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு, நட்பு, ஆறுதல், வாழ்த்து மற்றும் சமூகத்தொடர்பு போன்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் வார்த்தைகளின் கோர்வையாகத்தான் நிகழ்கின்றன.
சிலவார்த்தைகள் குணத்தைக் காட்டும், சில வார்த்தைகள் பண்பைப் பறைசாற்றும். சில வார்த்தைகள் சாட்சி சொல்லும், சில வார்த்தைகள் ஆட்சி செய்யும். எனவே, சொல்லும் சொல்லின் பொருளறிந்து பேசுவது அறிவுடைமையாகும்.
மந்திரமாவது வார்த்தை:
‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்’, என்பது சான்றோர் வார்த்தை. கடவுளையே உருகச் செய்யும் சக்தியோடு வாசகம் வந்துவிட்டால் அது திருவாசகமாகப் போற்றப்படும்.
வார்த்தைகள் கடவுளையும் கண்முன்னே காட்டக்கூடிய வல்லமை பெற்றவை. இவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தைகள், அருகே இருக்கும் மனிதர்களை நெருக்கத்தில் கொண்டுவருவதும், அல்லது நெருக்கடியில் தள்ளுவதும் அவற்றைப் பயன்படுத்துவோரின் வாய்மொழிப் பலனே ஆகிறது.
வீரியவிதை:
வார்த்தை என்பது பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய விதை போன்றது. அந்த விதையின் விளைச்சல், மணம் வீசும் மலர்களைப்போல சூழலை இனிமையாக்கலாம். சுவையான கனிகளைப்போல நிறைவான பயன் தரலாம். மூலிகைபோல உயிர்காத்து மகத்துவம் ஆகலாம். நிழல் தரும் மரம் போல ஆறுதல் தரலாம். இத்தகைய ஆற்றல் கொண்ட வார்த்தை, பிறந்த இடத்துக்கும் பெருமை சேர்த்து, சென்று சேரும் இடத்தையும் உயர்த்தும் தன்மை கொண்டது.
நல்லதொரு சோலையிலே நச்சுமரம் களை ஆகும். எனவே, அல்லவை தவிர்த்து எப்போதும் நல்லவை தேர்ந்தெடுப்போம். இந்த வாய்ப்பு ஒவ்வொரு தனிமனிதரின் பொறுப்பு என்பதை உணர்ந்து பேசுவோம்.
நாகாக்க:
வார்த்தைகள் மின்சாரத்தைப் போன்றவை. எனவே, தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், இவற்றை அளவறிந்து பயன்படுத்த வேண்டும். பயனற்ற வார்த்தைகள் பாதுகாப்பற்ற மின்கம்பி போன்றவை.
பிறரைப் புண்படுத்தும் வார்த்தைகள் மின்சாரத் தாக்குதல் போல ஆபத்தானவை. பேசவேண்டிய நேரத்தில் வெளிவராத பயனுள்ள வார்த்தைகள் மின்துண்டிப்புப் போல, இயலாமையை வெளிப்படுத்தும்.
தேவையற்ற வார்த்தைகள் பேசுபவரின் மரியாதையைக் கெடுக்கும். அவசியமான இடத்தில் பேசப்படும் உறுதியான வார்த்தைகள் பாதுகாப்பு வளையமாகச் செயல்படும். எனவே, இடம், பொருள் அறிந்து பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அறிவுடைமை என்றும், சில நேரங்களில் மௌனம்கூட சிறந்த பொருளை வெளிப்படுத்தும் என்றும் அறிவிற்சிறந்த பெருமக்கள் கூறுகின்றனர்.
கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் தீக்கணலைப்போல பாரபட்சமின்றி பாதித்துவிடும். நாவினால் சுட்டவடு ஆறாமல் வேதனை செய்யக்கூடியது. வெளிவிட்ட வார்த்தைகளை உள்வாங்க முடியாது.
நல்ல வார்த்தைகள் உறவை வளர்க்கும், அல்லவை உறவை முறிக்கும். எனவே, கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்பதைப் புரிந்துகொண்டு, வார்த்தைகளின் வலிமையுணர்ந்து இனிய வார்த்தைகளையே பேசிப் பழகுவது நல்லது.
வெல்லும் சொல்:
வார்த்தை, பேசுபவரின் தரத்தைக் காட்டும் கண்ணாடி. அறிவின் ஆழம் குறிக்கும் அளவுகோல். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், நாகரிகத்தையும் இன்று நாம் அறிந்துகொள்ள பெரிதும் உதவுவது அவர்கள் விட்டுச்சென்ற ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் உள்ள வார்த்தைகளே. உலகம் போற்றும் காப்பியங்களும், காவியங்களும் வார்த்தைகளின் வண்ணக் கோலங்கள்தான்.
இன்றைய வார்த்தைகள்தான், நாளைய வரலாறு படைக்கும் சக்தி வாய்ந்தவை. காலம் கடந்தும் ஞாலம் வெல்லும் ஆற்றல் பெற்றவை. இதை நன்கு உணர்ந்து எங்கும் எப்போதும் நல்ல உணர்வைத் தரக்கூடிய ஆற்றல்மிக்க சொற்களையே பயன்படுத்திப் பலனளிப்போம், பயன்பெறுவோம்.
# நன்றி.