கிரிஸ் என்ற ஒரு சிறுவன் தேவாலயத்தின் மணி ஒலிக்கும் வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது அந்தத் தேவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு புதிதாக ஒருவர் வந்தார். அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அங்கு வேலை என்று புதிய நிபந்தனையைக் கொண்டுவந்தார்.
அந்தச் சிறுவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் அவன் அங்கு தொடர்ந்து பணிசெய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதுவரை அந்தத் தேவாலயத்திலேயே வளர்ந்த அவன் வேறு என்ன வேலை செய்வது என்று தெரியாத நிலையில் வெளியே வந்தான். அதுவரை பணிசெய்தற்கு கூலியாகக் கையில் கொஞ்சம் பணமும், கடவுள் நல்ல வழி காட்டுவார் என்ற நிறைய நம்பிக்கையும் இருந்தன.
ஆனாலும், இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாள் தள்ள முடியும். எங்கு செல்வது, யாரிடம் வேலை கேட்பது, என்ற அவனுடைய யோசனையைக் குறுக்கிட்டு வயிறு பசிப்பதாகக் கூறியது. எனவே முதலில் எதாவது சாப்பிடலாம் என்று நினைத்து உணவுப்பொருள் விற்கும் கடை ஏதாவது இருக்கிறதா என்று தேடிச்சென்றான். மிக நீண்ட தூரம் நடந்து சென்றபின்னர் அங்கு ஒரு மிட்டாய்க் கடை இருப்பதைப் பார்த்தான்.
அங்கு சென்று இரண்டு வேர்க்கடலை மிட்டாய் பாக்கெட்கள் வாங்கி ஒன்றை சாப்பிட்டு விட்டு, மற்றொன்றை பிறகு சாப்பிடலாம் என நினைத்துச் சட்டை பையில் வைத்துக்கொண்டு, எங்கு செல்வது என்று தெரியாததால் மீண்டும் அந்தத் தேவாலயத்தின் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்து கொண்டான்.
அப்போது தேவாலயத்திற்கு புதிதாக வந்திருந்த ஒரு சிறுவன், கிரிஸ்ஸிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டைப் பார்த்தவுடன், பக்கத்தில் கடை எங்கு இருக்கிறது என்று கேட்டான். அப்போது கிறிஸ் அவனிடம் கடை நீண்ட தூரத்தில் இருப்பதைக் கூறிவிட்டு, வேண்டுமானால் தன்னிடம் இருக்கும் ஒரு மிட்டாய் பாக்கெட்டை வாங்கிக்கொள்ளும்படிக் கூறினான்.
அந்தப் புதிய சிறுவனும் பணம் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொண்டான். இப்போது கிரிஸ்ஸின் மனதில் வெளிச்சம் வந்தது. தனக்குப் புதிய வழி பிறந்து விட்டதை உணர்ந்தான். எனவே, தேவாலயத்திற்கு மக்கள் வருகின்ற நேரத்தில் அவர்கள் வாங்குகின்ற வகையில் பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வந்து விற்க தொடங்கினான்.
சில வருடங்களில் அவனுடைய உழைப்பிற்கும் வியாபார நுணுக்கத்திற்கும் ஏற்ற வகையில் இலாபம் பன்மடங்காகப் பெருகி அதே இடத்தில் பெரிய கடையைத் திறந்து வியாபாரம் செய்து வளமாக வாழ்ந்து வந்தான்.
இந்தக் கதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும், இது கதையல்ல உண்மையின் ஒரு பகுதிதான் என்பதற்கு சாட்சியாக நான் பார்த்த சில காட்சிகள் நினைவுக்கு வந்தன.
ஒரு ஊரின் முக்கியமான தெருவில் வரிசையாக மரக்கன்றுகள் நட்டுவைத்து அதைச்சுற்றி கம்பி வலையும் கட்டி வைத்திருந்தார்கள். மூன்று தெருக்கள் சேருகின்ற குறிப்பிட்ட இடத்தில், நான்கு அடி உயரத்திற்கு மட்டுமே வளர்ந்திருந்த ஒரு மரக்கன்றின் சிறிய நிழலில் புதிதாக ஒரு ஆள் காலையிலிருந்து உட்கார்ந்திருந்தான்.
அவன் ஏன் இந்த வெயிலில் அந்த சிறிய மரத்தடியிலேயே இருக்கிறான் என்று பார்த்தபோது, அவன் பக்கத்தில் ஒரு பழைய தராசும், அடுக்கி வைக்கப்பட்ட பழைய நாளிதழ்களும் இருந்தன. மரக்கன்றின் கம்பி வலையில், பழைய பேப்பர் வாங்கப்படும், கிலோ –/ரூபாய் என்று எழுதப்பட்ட ஒரு பழைய சிலேட்டும் இருந்தது.
தொடர்ந்து வளர்கின்ற அந்த மரத்தடியே தனது வாழ்விடம் என்பது போல விடியற்காலை முதல் இரவுவரை அங்கேயே ஏதாவது வேலை செய்துகொண்டே இருந்தான். பேப்பர், பிளாஸ்டிக் என்று எந்தப் பொருளுக்கும் மனதிலேயே கணக்குப் போட்டு வியாபாரம் செய்ததில் வாங்குகின்ற பொருள்களின் பட்டியலும் வேகமாக வளர்ந்தது.
அந்த மரக்கன்று சில ஆண்டுகளில் தாராளமாக நிழல் தருகின்ற பெரிய மரமாக வளர்ந்தது. அதைப்போலவே அந்தப் பழைய பேப்பர் கடையும் வளர்ந்தது.
அவன் அந்த மரத்திற்கு பின்னால் இருந்த இடத்தை முதலில் வாடகைக்கு வாங்கி, பின்னர் அதை விலைக்கு வாங்கி, அங்கு நிஜமான கடையைக் கட்டி, அதற்கு மேலேயே வீடும் கட்டியதைப் பார்த்தபோது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. வியாபாரத்திற்கு ஏற்ற அணுகுமுறையோடு மிகக் கடுமையான உழைப்பின் உன்னதம் கண்கூடாகப் புரிந்தது.
அந்த மனிதன் தனது அயராத உழைப்பில் கட்டிய வீட்டின் “புதுமனை புகுவிழா” அழைப்பிதழ் கவரில், தான் பெயர் எழுதத் தெரியாத நிலையைத் தன்னுடைய பிள்ளைகளின் படிப்பின் மூலம் ஈடு செய்து மகிழ்ந்ததை நன்றாக உணர முடிந்தது.
வாழ்க்கை, வாழ்வதற்கான வாய்ப்புகளோடு இருக்கிறது என்ற நம்பிக்கையே, நம்மிடம் இருக்கும் உண்மையான திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது. இதுவே, குறிப்பிட்ட நோக்கத்தோடு பயணிக்கும் மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற வழியாகச் செயல்படுகிறது.
# நன்றி.