சிந்திக்கத் தெரிந்த மனிதன்:
மனிதன் தன் வாழ்க்கையில் உயர்வதற்கு அவனது சிந்தனைகளே முதன்மை காரணமாக இருக்கின்றன. சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு, சிந்தனைகளின் தன்மைகளைத் தெரிந்து சிந்திக்கும் பக்குவம் இருந்துவிட்டால் வாழ்க்கையை அவன் நினைத்தபடி திட்டமிட்டு வாழமுடியும்.
மனிதனின் தகுதியை வகைப்படுத்திக் காட்டுகின்ற சிந்தனைகள், அவை செயல்படுகின்ற விதத்தைப் பொருத்தும், ஏற்படுத்துகின்ற விளைவுகளைப் பொறுத்தும் பலவகையான தன்மைகளில் உள்ளதாக அறியப்படுகின்றன.
இருந்தாலும், என்னுடைய எளிமையான புரிதலின் அடிப்படையில் இவற்றை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று வெளியிலிருந்து வருகின்ற சிந்தனைகள், மற்றொன்று மனதிலே தோன்றுகின்ற சிந்தனைகள்.
அன்றாட வாழ்க்கை சூழலிலிருந்து தொடர்ந்து பெறப்படுகின்ற பல்வேறு தகவல்கள் பலவிதமான சிந்தனைகளாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
இந்தத் தாக்கங்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் நிலையில், அவற்றை புரிந்துகொண்டு சூழ்நிலைகளைக் கையாளவும், தெளிவாகச் செயல்படவும் மனதில் தோன்றுகின்ற சிந்தனைகள் துணையாகச் செயல்படுகின்றன.
வெளியிலிருந்து பெறுகின்ற சிந்தனைகளின் உண்மைத்தன்மை, சார்புநிலை, உணர்வுகள், காரணங்கள், விளைவுகள் ஆகியவற்றை கண்டறிந்து, மாறுபட்ட சிந்தனைகளோடும் ஆய்வு செய்து அறியப்படும் தகவல்கள் பகுப்பாய்வு சிந்தனையைத் தூண்டி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
இத்தகைய சிந்தனைகள் அன்றாட சூழ்நிலைகள் முதல் அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை வாழ்க்கையின் எல்லா வாய்ப்புகளிலும் ஆழமாகச் செயல்படுகின்றன. இந்தச் சிறப்பான சிந்தனைகள், நடைமுறைக்கு உகந்த வழியில் வெளிப்படுகின்ற லாஜிக்கல் சிந்தனையாக சமுதாயத்திலும் பலவிதமான முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் (driving force) உந்துசக்தியாகச் செயல்படுகின்ற சிந்தனைகள் எப்போதும் நேர்மறையாக இயங்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.
ஆனால், பாதுகாப்பான எல்லைக்குள் நல்ல பலன்களைத் தருகின்ற சிந்தனைகள், நேர்மறையான நிலையிலிருந்து தடம் மாறும்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இதை கருத்தில்கொண்டு நேர்மறையான சிந்தனைகளைப் போலவே வேடமிட்டு நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதீத சிந்தனை மற்றும் அலைபாயும் சிந்தனைகளை இனம்கண்டு கையாள்வது பற்றி இந்தப் பதிவில் சற்று சிந்திக்கலாம்.
தடம் மாறும் சிந்தனைகள்:
சூழ்நிலையிலிருந்து பெறப்படுகின்ற கருத்துகளின் தாக்கத்தால் மனதிற்குள் அதிகரிக்கும் சிந்தனைகள், அவை தொடர்ந்து மனதிலேயே சுழன்று, ஒரு சிந்தனை வளையத்தை உருவாக்கி அந்த வளையத்திற்குள் (loop) தொடர்ந்து ஓடுவது.
முடிவற்ற இந்த ஓட்டத்தில் பலவிதமான கற்பனைகள், ஊகங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை கூடுதலாகச் சேர்த்து வளையத்தை இன்னும் பெரிதாக வளர்த்து, சூறாவளியில் சிக்கிய மரத்துண்டு போல மாட்டிக்கொண்டு அதீத சிந்தனையாக மாறுகிறது.
மனதை ஒருநிலையில் வைக்க முடியாமல் அலைபாயும் சிந்தனைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத, ஒன்றை ஒன்று குறுக்கீடு செய்கின்ற சிந்தனைகளாக, தரையில் கொட்டப்பட்ட நெல்லிக்காய்களைப்போல திசைக்கொன்றாய் ஓடுகின்ற சிந்தனைகளாக வேகமாக ஓடுகின்றன.
இத்தகைய சிந்தனைகள் எத்தனை மணி நேரம் தொடர்ந்தாலும் நேரம் வீணாகுமே தவிர உருப்படியான பலன்கள் ஏதும் ஏற்படுவதில்லை. இவை மனதில் பதட்டத்தை ஏற்படுத்தி மனநிலையைத் தாக்குவதோடு உடல்நிலையிலும் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மேலும், மனதில் உருவான குழப்பத்தின் காரணமாக, பொறுமையின்மை, தேவையற்ற விவாதங்கள், கோபம் போன்ற வேகமான வெளிப்பாடுகளோடு சூழ்நிலைகளில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி விளைவுகள் தடம்மாற காரணமாகின்றன.
மனதின் சக்தியை உறிஞ்சுகின்ற இத்தகைய எதிர்மறை சிந்தனைகளின் தன்மை அறியாமல் பழக்கமாகி அதுவே வழக்கமாவதால், எளிமையான சூழ்நிலைகளும் கடுமையானதாக மாறி எதிர்மறையான விளைவுகளுக்கே வழிவகுக்கின்றன.
பெரும்பாலான சமயங்களில், கடந்தகாலத்தின் பதிவுகள் மற்றும் வருங்காலத்தின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றில் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஈகோவின் தேவையற்ற முயற்சி இத்தகைய குழப்பமான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய சிந்தனைகளால் affect ஆகாமல், அவற்றை effectiveஆகப் பயன்படுத்துகின்ற முயற்சிகளால் நன்மையான விளைவுகள் ஏற்படுகின்றன.
குறிப்பிட்ட நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சீராக சிந்திப்பது என்பது முயற்சியால் வருகின்ற பழக்கம். எனவே, சிந்தனைகளைச் சீராக்க நடைமுறைக்கு உதவுகின்ற எளிமையான சில வழிகளைக் காண்போம்.
எளிமையான படிகள்:
தன்னந்தனியே அமைதியாக அமர்ந்து,
மனதில் அலைபாயும் எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக எழுதுவது.
அவ்வாறு முழுவதையும் எழுதிய பிறகு,
அவற்றுள் இருக்கும் தேவையற்ற, பயனற்ற சிந்தனைகளை, கட்டுப்பாட்டில் இல்லாதவற்றின் மீதான சிந்தனைகளை உணர்ந்து நீக்குவது.
மனதை பாதித்த பதிவுகளை மனஅமைதிக்கு ஏற்றாற்போல வேறு கோணத்தில் மாற்றுவது.
அச்சுறுத்தும் கற்பனைகள், வீணான குழப்பங்களை உடனே நிறுத்தி,
அவற்றையே நேர்மறையாக, நடைமுறைக்குச் சாத்தியமான வழியில் மாற்றி எழுதுவது.
முக்கியமான எண்ணங்கள், அவசியமான சிந்தனைகள் எவை எனக் கண்டறிவது.
அவற்றை முன்னுரிமை (Priority) கொடுத்து வகைப்படுத்துவது.
முடிந்தவரை சிறு சிறு படிநிலைகளாகப் பிரித்து அணுகுவது.
நேர்மறையான நம்பிக்கையோடு சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்வது.
தேவையான சூழ்நிலைகளில் நம்பிக்கையானவர்களின் துணையை நாடுவது.
மனவுறுதியோடு ஆக்கபூர்வமாகச் செயல்படுவது.
இவ்வாறு,
மனதில் ஓடுகின்ற சிந்தனைகளைப் படிப்படியாக எழுதி, சிறுசிறு நிலைகளாகத் தீர்வு காண்பது, சிந்தனைகளை சீராக்குவதற்கான சிறந்த வழியாகும். சீரான சிந்தனைகள் உள்ள மனமே நிகழ்காலத்தின் சூழ்நிலையோடு அமைதியாக வாழ்வதற்கான மனநிலையைத் தருகின்றது.
சீரான சிந்தனை:
நிகழ்காலத்தில் செயல்படுகின்ற சிந்தனைகள் என்பவை, எதிர்காலத்தின் எல்லையில் பொருத்தி வைத்திருக்கும் குறிக்கோளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புப் பெற்றவை. இந்தப் பயணத்திற்கு உதவுகின்ற அக்கறையோடு துணையாக வருகின்ற அனுபவத்தின் வழிகாட்டல்கள் கடந்தகாலத்தின் பதிவுகளாக இருக்கின்றன.
நிகழ்காலம் எனும் சரியான பேருந்தில் பயணிக்கும்போது, எதிர்காலத்தின் குறிக்கோள் எனும் பயணச்சீட்டு அவசியம் வேண்டும். மேலும், அந்தப் பேருந்தில் பாதுகாப்பாக நடந்துகொள்ளவும், நிறுத்தங்களை அறிந்து நிதானமாக அணுகவும் கடந்தகால அனுபவம் உதவுகின்றது.
இவ்வாறு நிகழ்காலப் பயணத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, தேவைப்படுகின்ற மாற்றங்களோடு ஒத்துழைத்து உதவ வேண்டுமே தவிர, பழைய பயணத்தோடு அப்படியே பொருத்திப் பார்த்துத் தற்போதைய சூழ்நிலையைச் சிக்கலாக்கக் கூடாது.
நிகழ்காலத்தின் பயணத்தை இனிமையான அனுபவமாக்கும் இந்தச் சிந்தனையே நடைமுறைக்கு உதவுகின்ற சீரான சிந்தனையாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
குறிக்கோள்கள்:
குறிக்கோளைப் பற்றிய சிந்தனைகளில் கூடுதலாக ஒரு தெளிவு தேவைப்படுகிறது.
அதாவது,
1.குறிக்கோளின் வெற்றி இதுதான் என குறிப்பிட்ட ஒரு தீர்வு என்பது தீர்மானிக்கப்பட்ட நிலையில் பயணிக்கும் சிந்தனைகள். 2.புத்தம்புதிய தீர்வைக் கண்டறியும் பயணமாகச் செயல்படும் சிந்தனைகள் என இருவகையாக உணர முடிகிறது.
உதாரணமாக,
x = 1 அல்லது x = 2 என தீர்வு என்பது தீர்மானிக்கப்பட்ட நிலையில், கையிலிருக்கும் வாய்ப்பிலிருந்து ஒவ்வொரு படியாக முன்னேறுவது தீர்வை நோக்கிய முயற்சியாகச் சிந்தனைகள் சீராகச் செயல்படுகின்றன.
உதாரணமாக, கல்வி நிலையில் சந்திக்கும் பொதுவான தேர்வுகள்.
x = ? என்று, தீர்வு என்ன என்று தெரியாத நிலையில், ஒவ்வொரு படியிலும் கவனமாகச் செயல்பட்டு, அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றபடி வெவ்வேறு விதமான, தனித்துவமான தீர்வைக் கண்டறியும் முயற்சியில் சிந்தனைகள் ஆழமாகச் செயல்படுகின்றன.
உதாரணமாக, வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட தேர்வுகள்.
குறிப்பிட்ட குறிக்கோளில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தீவிரமாகச் செயல்படும் சிந்தனை ஆழமான சிந்தனையாகிறது. இந்தச் சிந்தனையின் பலன்கள் மனதிற்கு நேர்மறையான மகிழ்ச்சியையும், சமூகத்தில் நடைமுறைக்குச் சாத்தியமான பயன்களையும் விளைவிக்கின்றன.
ஆழமான சிந்தனை:
உலகத்தின் பலவிதமான முன்னேற்றங்களும், பெரும்பாலான கண்டுபிடிப்புகளும் ஆழமான சிந்தனைகளின் விளைவாக விளைந்த நன்மைகள் எனலாம்.
உதாரணமாக, தையல் மெஷின் ஊசி கண்டுபிடித்த கதை என்று சிறு வயதில் கேட்ட கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. (இந்தக் கதை ஓரளவிற்கு உண்மையாகவும் இருக்கலாம்.)
தையல் மெஷினை வடிவமைத்துக் கண்டுபிடித்தவருக்கு அதில் நூல் கோத்து தைக்கும் ஊசியை வடிவமைக்க முடியவில்லை. கையால் தைக்க பயன்படும் ஊசியை மெஷினில் பயன்படுத்த முடியவில்லை.
இதனால் மெஷினில் தைப்பதற்கு ஏற்றபடி ஊசியை எப்படி வடிவமைப்பது என்று தெரியாமல் திணறினார். தொடர்ந்து பல முயற்சிகள் செய்தும் சரியான தீர்வு கிடைக்காத அசதியில் சற்று கண் அயர்ந்து விட்டார்.
அப்போது, அவர் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொண்டது போல அவருக்கு ஒரு கனவு வந்தது. தான் மரத்தோடு சேர்த்து கட்டிவைக்கப்பட்ட நிலையில், ஒரு காட்டுவாசி கையில் உள்ள ஈட்டியைத் தன் முகத்திற்கு அருகில் கொண்டுவருவதுபோலக் கண்டவுடன் கண்விழித்து விட்டார்.
சற்று நேரம் நிம்மதியாக உறங்க முடியவில்லையே என்று அலுத்துக்கொள்ளாமல், தன்னுடைய பிரச்சனைக்குச் சரியான தீர்வு கண்டுவிட்டதாக நினைத்து மகிழ்ந்தார்.
ஏனெனில், கனவில் அவர் முகத்தருகே நீட்டப்பட்ட கூர்மையான ஈட்டியின் நுனியில் ஒரு துளையிடப்பட்டு அதில் சிவப்புநிற கயிறு கட்டப்பட்டிருந்தது நினைவுக்கு வந்ததும், தான் கண்டுபிடித்த மெஷினுக்கு பொருத்தமான ஊசியை வடிவமைத்து, வெற்றிபெற்றார் என்று தீர்வுகளைத் தேடி சிந்தனைகள் ஆழ்மனதிலும் வேலைசெய்யும் என்று கூறுகின்ற கதை.
எனவே, இது தீவிரமான முயற்சியில் தீர்வு கிடைக்காத நிலையிலும், அதை நோக்கிய ஆக்கபூர்வமான, ஆழமான சிந்தனை நேர்மறையான விளைவைத் தரலாம் என்ற ஊக்கத்தைத் தருகிறது.
சிந்திக்க தெரிந்திருப்பது மனிதனின் இயல்பு. குறிக்கோளின் வழியில், விளைவுகளை நோக்கி, தெளிவாகச் சிந்திக்க தெரிந்திருப்பது அறிவார்ந்த மனிதனின் சிறப்பியல்பு.
# நன்றி.
