Specs shows the clear vision
Perspective is the specs to look something

பார்வைகள். Perspectives. Paarvaigal.

இயல்பாக உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு காட்சியும், பார்ப்பவரின் தனிப்பட்ட பார்வைக்கு ஏற்பவும் அவரது கண்ணோட்டத்திற்கு ஏற்பவும் வெவ்வேறு விதத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது.

இந்தப் பார்வை என்பது பெரும்பாலும், அவரவர் இயல்பில் அமைந்திருக்கும் பதிவுகள், உறவுகள் நண்பர்கள் என வாழும் சூழ்நிலை, வளர்ப்பு, வாழ்க்கை அமைப்புப் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. 

பரவலான பார்வை, மேலோட்டமான பார்வை, குறுகிய பார்வை, கூர்மையான பார்வை, விரிவான பார்வை, ஆழமான பார்வை என விதவிதமாக வகைப்படுத்தப்படுகின்ற பார்வைகள் காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு உட்படுகின்றன.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகின்ற பார்வை (Perspective) அந்த மனிதரிடம் தனித்தன்மையை உருவாக்கி, அதுவே அவரது வாழ்க்கையை வடிவமைக்கவும், சூழ்நிலைகளைக் கையாளவும் உதவுகின்ற “அடிப்படையான attitude” ஆக வெளிப்படுகிறது. 

நேர்மறையான சிந்தனைகள், ஆரோக்கியமான மனவளர்ச்சி, நல்ல மனிதர்கள், சிறந்த புத்தகங்கள் மற்றும் அறிவார்ந்தவர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் வழியாக மேலும் தெளிவான நிலையை அடைகிறது.

வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்திலும் சுயக்கருத்தை ஏற்படுத்துகின்ற பார்வை, தன்னை அவதானிக்கும் உள்நோக்குப் பார்வையாகவும், மற்றவர் பார்வைகளைப் புரிந்துகொள்ளும் அடிப்படை அளவுகோலாகவும் இயங்குகிறது.   

கணித வடிவியல் வரைபடம் (geomentry) உருவாக்கும்போது, ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் பலகோடுகள், அவை தேர்ந்தெடுக்கும் கோணங்களைப் பொறுத்து குறுங்கோணம் (acute angle), செங்கோணம் (right angle), விரிகோணம் (obtuse angle) என்ற வெவ்வேறு டிகிரியில் அமைகின்றன.

அதுபோலவே, மனம் என்ற ஒரு புள்ளியில் தொடங்கும் பார்வை தனது கோணத்திற்கு ஏற்ப உணர்வுகள், உறவுகள், நண்பர்கள், சமுதாயம், கல்வி, வேலை, குடும்பம் என வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஏற்படுகின்ற மாற்றங்களையும் அதற்கேற்ற அனுபவங்களையும் உணர்வதற்கு அடிப்படையாக இருக்கின்றன. 

சந்திக்கும் நிகழ்வுகளைச் சில வினாடிகளில் கடந்துவிடுவதோ, கற்றுக்கொள்வதோ, விவாதத்திற்கு உரியதாக எடுத்துக்கொள்வதோ, வியப்பதோ, விஸ்வரூபமாக்குவதோ பார்க்கும் கோணத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.

பழைய கருத்துக்களைத் தன்னுடைய பார்வையோடு சேர்த்துக் காலத்துக்கு ஏற்றபடி சிந்திக்கவும், மற்றவரின் பார்வையில் உள்ள புதுமைகளை வரவேற்கவும், நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ள மனதில் புதிய நேர்மறையான வளர்ச்சிகள் ஏற்படுகின்றன.

தெளிவான காட்சிகளைக் காட்டுகின்ற இந்தப் பார்வை மாற்றமே, மாறுகின்ற சூழல்களைக் கையாளுவதற்கான அடிப்படை சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் தீர்மானித்து அதற்கேற்ற வகையில் முன்னேற்றமான அணுகுமுறைகளைத் தொலைநோக்குப் பார்வையோடு தீர்மானிக்கிறது

உதாரணமாக,

ஒருவர் மற்றவருக்கு உதவுகின்ற காட்சியைப் பார்க்கும் நபர், அவரைப்போலத் தானும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பதோ, அதுபோன்ற உதவி தனக்கும் வேண்டும் என நினைப்பதோ, அனைவரும் தன்னிறைவு பெற்று வாழ தன்னாலான முயற்சி செய்வதோ அல்லது புதுமையான கோணத்தில் வேறுவிதமாகக் கவனித்து செயல்படுவதோ அவரது தனிப்பட்ட பார்வையின் அடிப்படையில் இருக்கிறது.  

இத்தகைய பார்வை இயல்பானதாக இருந்தாலும் அல்லது மாறுபட்ட கோணமாக இருந்தாலும் அதற்கேற்ற சிந்தனையை உருவாக்கி, அதை செயல்படுத்துவதற்கு தேவையான வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் அந்தப் பார்வையே காட்டுகின்றது. 

எனவே, அவரவர் பார்வையின் தன்மைக்கு ஏற்ப உள்ளார்ந்த தகுதிகளின் வளர்ச்சி அமைகிறது.  இதனால் பெரும்பாலான சூழ்நிலைகளில் ஒருவருடைய தன்மையை, முன்னேற்றத்தை, வாழ்க்கையை அவருடைய பார்வையே நிர்ணயிக்கிறது.  

குறுகிய எண்ணங்கள், சுயநலச் சிந்தனைகள் இல்லாத விரிவான பார்வை என்பது ஆரோக்கியமாகச் சிந்திக்கும் தன்மையுள்ள மனதின் பார்வையாக 360 டிகிரியிலும் இயங்குகிறது.  இது, நாகரிகமான நடத்தைகளை, ஆக்கபூர்வமான வளர்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மனதின் மிகச்சிறந்த attitude ஆக வெளிப்படுகிறது.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையாக செயல்படுகின்ற முப்பரிமாண பார்வை, முழுமையான பார்வையாக விரிந்து வியக்கத்தக்க விளைவுகளின் தொடக்கமாகச் செயல்படுகிறது.

முறையான பயணச்சீட்டுடன் தென் ஆப்பிரிக்கா இரயிலில் பயணம் செய்தபோது வெளியே தள்ளப்பட்ட காந்தி, தனக்கு நேர்ந்த நிகழ்வை மாறுபட்ட கோணத்தில் பார்த்த பார்வையே, அவரை தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தியது.  மோகன்தாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக உயர்த்தியது.

நேருவின் பதவி காலத்தில், இராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு அமெரிக்க அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாலும், இந்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுக்க அமெரிக்க வங்கிகள் தயாராக இல்லை. 

இந்தச் சிக்கலான சூழ்நிலையை மாறுபட்ட கோணத்தில் பார்த்த காமராஜர், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க வங்கிகளின் அனுமதியை ரத்து செய்யுமாறு நேருவிடம் கூறினார்.

காமராஜரின் ராஜதந்திரமான இந்த அரசியல் பார்வை, அமெரிக்க வங்கிகளினால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்ததாகக் கூறுகின்ற இந்தச் செய்தி, மாபெரும் வெற்றிகளும் சாதனைகளும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் முழுமையான பார்வையால் சாத்தியமாகிறது என்பது தெளிவாகிறது.

இவ்வாறு, உலக வளர்ச்சியை, சமுதாய முன்னேற்றத்தை முழுமையாகப் பார்க்கும் பார்வையின் சக்தி உலகத்திற்கே வழிகாட்டுகின்ற மனதின் தெளிவான பார்வையாக வெளிப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், வள்ளல்கள், தத்துவ மேதைகள், அருளாளர்கள் என முழுமையாக ஒளிவீசி வாழ்ந்தவர்கள் அனைவரும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த மேஜிக் மூவ்மெண்ட்களுக்கு அடிப்படையாக இருந்தது அவர்களது முப்பரிமாண பார்வை எனும் லாஜிக்தான் என்பது இன்றைய நம்முடைய பார்வையில் புரிகின்றது.

#   நன்றி. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *