கொரோனா: இதுவும் கடந்து போகும்: CORONA: Ithuvum Kadandhu Pogum: Passing Cloud:

கொரோனா:
இந்த ஒற்றை வார்த்தை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை இருமலும் தும்மலும்  சாதாரண ஜலதோஷமாக இருந்தது, இன்று ஜகத்துக்கே தோஷமாகிப்போனது. ஊரடங்கு சட்டம் போட்டும் அடங்காமல் உலகையே முடக்கி விட்டது.  நாடு, இனம், மொழி, மதம், பணம் என்ற எந்த பாகுபாடும்  காட்டவில்லை என்றாலும் தொட்டால் ஒட்டிக்கொள்ளும், தொடாமலும் தொற்றி, கொல்லும் என்று தீண்டாமையின் உச்சத்துக்கே  சென்று  உலகையே ஒதுக்கி வைத்துவிட்டது .
ஊரடங்கு:

குழந்தைகளின் விடுமுறை  வீடுகளில் அடங்கிப்போனது, பயமுறுத்தியத் தேர்வுகள்கூட பயந்து ஓடிவிட்டன, மதிப்பெண்கள் மதிப்பிழந்து போய்விட்டன. அலுவலகங்கள் அந்தரத்தில் ஆடுகின்றன, மனதில் எப்போதும் இனம்தெரியாத பயம் நிழலாடுகிறது. இவை எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு கூரைக்குள் அழுத்துகிறது.

கொரோனாவுக்கு பின் :

உலக வரலாற்றில் முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் . மனிதனின் மனஉறுதிக்கும் மீண்டுஎழும் முயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் காலகட்டத்தில் இப்போது இருக்கிறோம். இதனால் தன்னம்பிக்கையுள்ள தலைமுறையாக நம் வரலாற்று பக்கங்களில் இடம்பெறுவோம்.  
இந்த இருள் மறைந்து நிச்சயம் ஒளி பிறக்கும் அடைக்கப்பட்ட எல்லாக் கதவுகளும் திறக்கும். அதற்கு சிறிது காலம் ஆகலாம், அதுவரை நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம்.
நம்பிக்கை:
காத்திருப்புக் காலத்தை இதுவும் கடந்து போகும், என்று புரிந்துகொண்டு நம்பிக்கையோடு நகர்த்துவோம்.  எதிர்பாராத இந்தப் போராட்டத்தை வெற்றிகொள்ள, வாழ்வின் எல்லையில் நின்று நம்மைக் காக்கப் போராடும் எண்ணற்ற வீரர்களின் மனவுறுதியை எண்ணிப்பார்ப்போம். 
அறிவியல், மருத்துவத் துறையில் உள்ளவர்கள், உலகையே திணறடிக்கும் அந்த ஒற்றை கிருமியை ஆராய்ந்து அதை எதிர்க்கும் மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்க இரவுபகலாகப் போராடுகின்றனர். 
அவர்களுடைய உழைப்பையும் மனஉளைச்சலையும், அவர்களுடைய குடும்பத்தாரின் மனநிலையையும் கருத்தில் கொண்டு சமூக பாதுகாப்புக்குத் துணைசெய்வோம்.  நம்மை விட அதிகம்  பாதிக்கப் பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த  உதவி செய்து, நமக்கு நாமே நிம்மதி நாடுவோம்.  
இந்தக் கூட்டுப்புழு நிலைமையில் மனஉறுதியோடு இருந்து அன்பையும் நம்பிக்கையும்  பகிர்ந்து  வண்ணத்துப் பூச்சியாகப் பறப்பதற்குத் தேவையான முழு ஆற்றலையும் உருவாக்குவோம்.
#  நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *