நண்பர்கள்:
சின்னதம்பி, பெரியதம்பி என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் காட்டு வழியாக நடந்து அடுத்த ஊருக்குப் பயணம் சென்றார்கள். அப்போது மாலை வேளையாகி விட்டது. மேலும் மழையும் வந்து விட்டது. இதனால் அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குள் சென்றார்கள். மழை வேகமாக பெய்ததால் சத்திரத்திலேயே இரவு தங்கிவிட்டுக் காலையில் ஊருக்குச் செல்லலாம் என்று பேசிக்கொண்டார்கள்.
அப்போது புதிதாக ஒருவர் சத்திரத்திற்குள் வந்தார். சின்னதம்பியும், பெரியதம்பியும் புதிதாக வந்தவரிடம் அறிமுகமாகி, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு நண்பர்கள் இருவரும் சாப்பிடலாம் என்று கூறியபடி உணவு பொட்டலத்தைப் பிரித்தனர். புதிதாக வந்தவரோ தான் இரவுக்குள் வீட்டுக்குச் சென்று விடலாம் என்று நினைத்ததால் உணவு ஏதும் கொண்டு வரவில்லை என்றார்.
உடனே சின்னதம்பி தான் கொண்டுவந்த மூன்று ரொட்டிகளையும், பெரியதம்பி தான் கொண்டுவந்த ஐந்து ரொட்டிகளையும் எடுத்து வைத்தார்கள். மூவருக்கும் சமமான அளவாகப் பிரித்து உண்பது தான் நியாயம் என இரு நண்பர்களும் நினைத்தனர். பின்னர், எட்டு ரொட்டிகளையும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அதை (கேக் வெட்டுவது போல) சமமான மூன்று பாகங்களாக வெட்டினர். மூவருக்கும் தனித்தனியாக எட்டுத்துண்டு ரொட்டிகள் சமமாகப் பிரித்துத் திருப்தியாக உண்டபின்னர் மகிழ்சியாகப் பேசிவிட்டு இரவு தூங்கினார்கள்.
காலையில் நண்பர்கள் இருவரும் விழித்தபோது புதிதாக வந்தவரைக் காணவில்லை. ஆனால் அவர் படுத்திருந்த இடத்தில் ஒரு கடிதமும், சிறிய துணி முடிப்பும் இருந்தது. அந்தக் கடிதத்தில் இரு நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தும், இருவருக்கும் தன் அன்பு பரிசாக எட்டுப் பொற்காசுகள் துணி முடிப்பில் வைத்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதைப் படித்தப் பெரியதம்பி, எட்டுப் பொற்காசுகளை இருவருக்கும் சமபங்காகப் பிரித்து, நான்கு பொற்காசுகளைச் சின்னத்தம்பிக்குக் கொடுத்தான். ஆனால் சின்னதம்பியோ, ஒரு ரொட்டிக்கு ஒரு காசு என்று கணக்குப் போட்டு, தனக்கு மூன்று பொற்காசுகள் என்றும், பெரிய தம்பிக்கு ஐந்து பொற்காசுகள் என்றும், பிரிப்பதுதான் நியாயம் என்றான். இதுவே வழக்காகி விசாரணைக்குச் சென்றது.
விசாரனை முடிவில் தீர்வும் கூறப்பட்டது. அதாவது, பொற்காசுகளைக் கொடுத்தவர், தான் சாப்பிட்ட எட்டு ரொட்டி துண்டுகளுக்காக எட்டுப் பொற்காசுகளைக் கொடுத்தார் எனில் சின்னதம்பியின் மூன்று ரொட்டிகளை மூன்று பாகங்களாகப் பிரித்தால் ஒன்பது துண்டுகள் வந்துவிடும். அதில் எட்டு துண்டுகள் அவருடைய பங்கு போக மீதம் இருந்த ஒரு துண்டுதான் அவர் புதியவருக்குக் கொடுத்தார் என்பதால் சின்னதம்பிக்கு ஒரு பொற்காசு என்று கூறினார்.
அதேபோல, பெரியதம்பியின் ஐந்து ரொட்டிகளை மூன்றாக பிரித்தால் பதினைந்து துண்டுகள் கிடைக்கும். இதில் அவருடைய பங்கு எட்டு துண்டுகள் கழித்து விட்டால், புதியவருக்குக் கொடுத்தது ஏழு துண்டுகள். எனவே பெரிய தம்பிக்கு ஏழு பொற்காசுகள் சேரவேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். அதோடு சேர்த்து பணத்திற்கு ஆசைப்படாத அவர்களின் நட்பையும் அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
அதன் பின்னர், இந்தத் தீர்ப்பில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட இருவரும் தமக்குக் கொடுத்தப் பொற்காசுகளை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக ஊருக்குச் சென்றனர். ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு முடிவுகள், சாதாரண மனிதர்களுக்குத் தோன்றுகின்றன. ஆனால் நீதியின் பார்வையில் வழங்கப்படும் நேர்மையான தீர்ப்புகள் அனைவருக்கும் நியாயமானவை என இந்தக் கதை உணர்த்துகிறது.
மேலும், எந்த நிகழ்வுக்கும் பல்வேறு வாய்ப்புகளும் வழிகளும் இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உண்மையான நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
# தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.