மனஅழுத்தம் எனும் stress. தவிர்க்க வழி இருக்கிறதா? Mana Azhuththam Enum Stress. Thavirkka Vazhi Irukkirathaa? Way To Handle the Stress.

முன்குறிப்பு:

சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் சூழல்களில், மனஅழுத்தம் ஏற்படாமல் அவற்றைக் கையாள முடியுமா என்ற சிந்தனையே இந்தப் பகிர்வு. 

மனஅழுத்தம் இருப்பதாக உணர்ந்தால் துறைசார்ந்தவர்களை அணுகுவதே முறையானது.  

காரணங்கள்:

இன்றைய வேகமான உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை  அனைவரது இயல்பு வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மனஅழுத்தம் ஏன் ஏற்படுகிறது?  மனஅழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களையும், அவற்றைத் தவிர்ப்பதற்கு உள்ள வழிகளையும் (மிகச் சிலவற்றை மட்டும்) சற்று எளிமையாகச் சிந்திக்கலாம்.

முதலில், நம்முடைய பொறுப்புகள் என்று நாம் நினைக்கும் அனைத்தையும், ஒரு பட்டியலிட்டு, இந்தப் பொறுப்புகளில் நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளவை மற்றும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாதவை என இருவகைகளாகப்  பிரித்து வகைப்படுத்தலாம்.  

உதாரணமாக, ஒரு மாணவர் தேர்வுக்காகத் தயார் செய்துகொள்வது, அதை முறையாக வெளிப்படுத்துவது போன்ற கடமைகள் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளவை. இவற்றால் ஏற்படும் அழுத்தத்தை, அனுபவமும் அக்கறையும் உள்ளவர்களுடன் கலந்துபேசி, (மாணவருடைய) மனநிலைக்கு ஏற்ற வகையில் முறையாக அணுகும்போது, அந்தச் சூழலைச் சுமுகமாகக் கையாள வாய்ப்பு உள்ளது.

ஆனால், மதிப்பெண்கள் மற்றும் விரும்பும் துறையில் இடம் கிடைப்பது  போன்றவை, முழுவதும் மாணவரின் கட்டுப்பாட்டில் இல்லாதவை.  இவ்வாறு, மாணவரின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத ஒரு நிலையை, மாணவரும், மற்றவர்களும் அதிக எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கும் சூழல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் மொத்தமாக சம்பந்தப்பட்ட மாணவர்மீதே குவிவதால், அது அந்த மாணவருக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 

இதைப்போலவே, எந்த வயதிலும், எந்த நிலையிலும், கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற பொதுவான மனநிலையை, அழுத்தம் தராத வகையில் மாற்றிக்கொள்வதும், வருவதை நல்லதாக நினைத்து (accept) ஏற்றுக்கொள்வதும் ஓரளவு மனச்சுமையைக் குறைக்கும்.

மலையில் பிறந்த தண்ணீர் எதிர்பாராத பள்ளத்தில் பாய்ந்த நிலையில் அதை வீழ்ச்சியாகக் கருதாமல், தொடர்ந்து நடைபோடும்  தன்னுடைய இயல்பால் தனக்கென்று புதியபாதை அமைக்கிறது.  அதுபோல எதிர்பாராத சில மாற்றங்களிலும் நிச்சயம் புதியவழி பிறக்கும் என்ற நம்பிக்கையே தொடர்ந்து நடைபோடுவதற்கான துணிவை ஏற்படுத்துகிறது.

 

கட்டுப்பாட்டில் இருக்கும் பொறுப்புகள்:

கட்டுப்பாட்டில் இருக்கும் பொறுப்புகளில், மனஅழுத்தம் ஏற்படுத்துகின்ற சூழல்களும், அவற்றை கையாளும் வழிகளும். 

இயல்புக்கு மீறிய அதிகபடியான முக்கியத்துவம்:

“Making things more important than they really are.” என்பதே மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம் என்று ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.  பலநேரங்களில் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்படுகின்ற சாதாரண விஷயங்களே மனஅமைதியைக் குலைக்கின்றன என்ற இந்தப் பார்வையைச் சற்று நினைவில் கொள்ளும்போது நம்மை நாம் காத்துக்கொள்ள வழி கிடைக்கும்.

கல்வி கண் போன்றது என்பது உண்மைதான்.  ஆனால், குழந்தைகளின் விருப்பங்களில் உள்ள வேறுபாடுகள் தெரியாமல், அனைவருக்கும் பொதுவான தேர்வுகளுக்கும், மதிப்பெண்களுக்கும்  இயல்புக்கு மீறிய அதிகப்படியான முக்கியத்துவம் தருவது, சில குழந்தைகளுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதைப்போலவே, 

“அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் வேறு பல விஷயங்களும்”, 

“இயல்பைவிட அதிகமாகவோ குறைவாகவோ கொண்டுள்ள சுயமதிப்பீடுகளும்”, 

“பொருத்தமற்ற எதிர்பார்ப்புகளும்”, 

“சுயகட்டுப்பாட்டில் இல்லாத egoவும்” 

மனதில் படபடப்பை ஏற்படுத்தி இயல்பை மீறி செயல்படத் தூண்டுகின்றன.  

இவ்வாறே peer pressure என்ற சூழலில் சிக்கிக்கொண்டு சமுதாயத்திற்காக  அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் பெரும்பாலான விஷயங்கள், தனிப்பட்ட வாழ்க்கை ஓட்டத்தில் மதிப்பிழந்து, பின்னாளில் அர்த்தமற்றுப் போகின்றன.  

வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய இயல்பான நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல இருக்கின்றன.  அவை, நம்மை வரவேற்க  தொகுப்புகளுடன் (with package) காத்திருக்கின்றன என்பதை உணர்ந்தால் அவற்றை எதிர்நோக்கும் தைரியம் உருவாகும்.  இதனால் சிந்தனையில்  தெளிவான வழி பிறக்கும்.  தனிப்பட்ட இயல்புக்குப் பொருத்தமான  முறையில், வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்ற விழிப்புணர்வே இதைச் சரியாக வழிநடத்தும்.

அமுதமே ஆனாலும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பாகச் செயல்படுவது மனஅழுத்தத்தைத் தவிர்க்க உதவும்.

எதிர்பாராத சிக்கல்: 

பிரச்சனைகளே ஏற்படாது என்ற நம்பிக்கையைத் தவறாக்கும் வகையில் எதிர்பாராத சிக்கல் எதிரில் நிற்கும்போது மனஅழுத்தம் ஏற்படுகிறது. 

மரம், தான் இருக்கும் இடத்தைவிட்டு நகர முடியாதபடி கெட்டியாகப் பிடித்திருக்கும் வேர்களை, தடைகளாக்கி பலவீனப்பட்டுப் போகாமல், அந்த வேர்களையே தன்னுடைய பலமாகப் பயன்படுத்தி, இயற்கையை நேரடியாகச் சந்தித்துத் தன்னுடைய ஆற்றலை வலிமையாக நிலைநாட்டுகிறது.  

மரம் எப்படி வேர்களைத் தவிர்க்க முடியாதோ அதுபோல வாழ்க்கையிலும்  சில பிரச்னைகளைத் தவிர்க்க முடிவதில்லை.  வேர்களை மரங்கள்  நேர்மறையாக அணுகுவதைப்போல, தவிர்க்க முடியாதப்  பிரச்சனைகளையும் நேர்மறையாக அணுகுவதுதான் மனதிற்குப் பலம் சேர்க்கும் வழியாகும்.

நடைமுறையில் இதைச் செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாகத்தான்  இருக்கும் என்றாலும், எதிர்பாராத சிக்கலும் நல்ல வாய்ப்புக்குக் காரணமாக அமையலாம் என்ற  மனநிலையே வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும் ஊட்டசக்தியாகும்.

எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் தொய்வு:

ஒரு கூட்டுமுயற்சியில் மற்றவர்களின் ஒத்துழைப்பு இன்மையோ, சில சூழ்நிலை மாற்றங்களோ, அல்லது வேறு காரணங்களோ சேர்ந்து செயலின் வேகத்தைத்  தாமதப்படுத்தலாம்.  இதன்  விளைவுகள், ஒருவரை மட்டும் சார்ந்து இருப்பதில்லை என்றாலும், அதற்கான பொறுப்பில் உள்ளவர்களுக்கு அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

எனவே, வழக்கமான சமயங்களில், கூட்டுமுயற்சியின் விளைவுகள் நன்மையாக இருக்கும் சூழ்நிலைகளில் ஏற்படும் மகிழ்ச்சியை, அதற்குக் காரணமான ஒத்துழைப்புத் தந்தவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பகிர்தலும், குறைவான ஒத்துழைப்புத் தந்தவர்களும் தங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் புத்துணர்ச்சி ஏற்படுத்துதலும் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியே.  

குழுவின் மனநிலையை முக்கியமாகக் கருத்தில் கொள்ளும், பொறுப்பில் உள்ளவர்களின் இத்தகைய அணுகுமுறை, குழுவின் செயல்வேகத்தைச் சிறப்பாக அதிகரிக்கும்.  இத்தகைய நல்லிணக்கமான குழுவினர் ஒன்று சேர்ந்து செய்யும் வேலையில் எப்போதேனும் தொய்வு ஏற்பட்டாலும் அதையும் எதிர்கொள்ள இணக்கமான  குழுமனப்பான்மையே  தயார்நிலையில் இருக்கும்.  ஒரே குறிக்கோளுக்காக இயங்கும் குழுவினரின் ஒருமித்த மனநிலையே மனஅழுத்தத்தைத் தவிர்க்க உதவும் சிறந்த வழியாக இருக்கும். 

முடிவற்ற சிந்தனை: 

சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்பது மிகச் சிறந்த பண்பு.  ஆனால் செயலாற்ற வேண்டிய நேரத்தில் செயல்பட முடியாத over thinking எனும் சுழல், மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.  இதில், சிந்தனைக்கு உரிய விஷயத்தைவிட, சிந்தனைக்காக எடுத்துக்கொள்ளும் அதீத நேரமும், எந்த முடிவும் எடுக்க முடியாத குழப்பமும் முக்கிய காரணமாக உள்ளன.

உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள பொருளை ஐந்து நிமிடம் தலையில் வைத்திருந்தால் பெரிய தாக்கம் ஏற்படாது.  ஆனால் அதே பொருளை ஐந்து மணிநேரம் தலையில் சுமந்தால் உடல் முழுதும் தாங்கமுடியாத வலி ஏற்பட்டுவிடும்.  இத்தகைய பாதிப்புக்கு ஒருகிலோ எடையுள்ள அந்தப்  பொருள் காரணமல்ல,  அதை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருந்தோம் என்பதுதான் முக்கியக் காரணம். 

எனவே, மனவலியை ஏற்படுத்தும் முடிவற்ற தொடர்சிந்தனைகளைச் சற்று இறக்கி வைப்பதுதான் இதற்கு அவசியமான முதலுதவி ஆகும்.  ஆழ்ந்த சுவாசத்துடன் சேர்ந்த தேவையான அளவு ஓய்வும், மனதிற்குப் பிடித்த, ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட, பலவிதமான நல்ல வேலைகளில் மனதை ஈடுபடுத்தி சிந்தனைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதும், சின்ன சின்ன செயல்களிலிருந்து சந்தோஷத்தை உணர்வதும் மனநிலையை ஆரோக்கியமாகப் பாதுகாக்க உதவும் சிறந்த வழிகளாக இருக்கும்.

#  நட்புடன் நன்றி.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *