ஓர் ஊரில் பலவான் என்ற மல்யுத்த வீரன் இருந்தான். அவன் எப்போதும் கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான். இதனால் மிகவும் பலசாலியான அவன் போட்டிக்கு வரும் அனைவரையும் எளிதாக வென்றுவிடுவான். அவனால் பெருமையடைந்த அந்த ஊர் மக்கள் அவனைப் பாராட்டி மரியாதைச் செய்து கொண்டாடினார்கள்.
நாளடைவில் அவன் தனக்கு நிகராக எவரும் இல்லை என்ற கர்வத்தோடு ஊரில் யாரையும் மதிக்காத முரடனாக மாறினான். தனக்குப் போட்டியே இல்லாத நிலை உருவானதால் அனைவரையும் மிரட்டி தனக்குத் தேவையானதைப் பெற்று வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் அவன் சந்தையில் இருந்த ஒரு கடைக்குச் சென்றான். அங்கு முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்ற பொருட்களில் தனக்கு வேண்டியதை அப்படியே எடுத்துக்கொண்டான். பணம் கேட்ட வியாபாரியை ஏளனமாகப் பேசியதோடு, தைரியமிருந்தால் தன்னுடன் போட்டிக்கு வருமாறு அழைத்தான்.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரி கையில் வைத்திருந்த எள்ளை இறுக்கமாகப் பிசைந்தான். அப்போது, அதிலிருந்து எண்ணெய் வடிவதைப் பார்த்த பலவான் ஆச்சரியத்தோடு, “இவ்வளவு பலத்தோடு இருக்கும் நீ, ஏன் மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை” என்று கேட்டான்.
அதற்கு அந்த வியாபாரி, “மற்றவர்களைத் தாக்கி நான் பலசாலி என்று நிரூபிப்பதில் என்ன பலன் இருக்கிறது? மற்றவர்களைத் துன்புறுத்தாமல் நேர்மையாக வியாபாரம் செய்வதையே எனது பலமாக நினைக்கிறேன். அதற்கு உடல்பலமும் உறுதுணையாக இருக்கிறது” என்று கூறினான்.
இதைக் கேட்ட பலவானுக்கு உண்மைப் புரிந்தது. மக்களுக்குப் பயன்படும் வகையில் தான் எந்த நன்மையும் செய்யவில்லையே என்று நினைத்தான். தன்னிடம் அன்பாக இருந்த ஊர் மக்களையும் அச்சுறுத்தி வாழ்வது எத்தகைய கேவலமானச் செயல் என்பதை நன்கு உணர்ந்தான்.
முன்பு தன்னிடம் மகிழ்ச்சியாகப் பழகிய ஊர் மக்களே இப்போது வெறுத்து விலகுவதன் காரணம் புரிந்துகொண்டான். தன்னுடைய வலிமையை மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, சிறப்பாக வாழ்வதே மகிழ்ச்சி என்பதை உணர்ந்தான்.
தன்னுடைய தவறை உணர்ந்து திருந்திய பலவான், தான் எடுத்தப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அந்த வியாபாரியிடம் மன்னிப்புக் கேட்டான். நேர்மையாக உழைத்து, பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உறுதியான குறிக்கோளோடு ஊருக்குச் சென்றான்.
# நன்றி.