உரைகல்:
தங்கத்தின் தரத்தைக் காட்டுகின்ற உரைக்கல்லைப் போல, வாழ்க்கையின் தரத்தைக் காட்டுகின்ற உரைகல்லாக செயல்பாடுகள் இருக்கின்றன. இத்தகைய செயல்பாடுகள் அனைத்துமே சூழ்நிலைகளை அணுகும் தனிமனித மனப்பான்மையின் (attitude) முதிர்ச்சியைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றன.
உரைகல்லுக்கு மாற்றாக இப்போது புழக்கத்தில் இருக்கும் நவீனக்கருவிகளும் தங்கத்தின் தரத்தையே துல்லியமாக அளவிட்டுக் கூறுகின்றன. அதுபோல செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் ஆட்சி செய்கின்ற இன்றைய உலகிலும், மனித மனப்பான்மையின் தரத்தை அறுதியிட்டுக் கூறுகின்ற செயல்களே சான்றுகளாக இருக்கின்றன.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக, தனித்துவமாக இருந்தாலும், மனப்போக்கு மற்றும் தனிப்பட்ட அணுகுமுறைக்கு (attitude) ஏற்றாற்போல மாற்றங்களைப் பெறுகின்ற தன்மையில் ஒத்த பண்பைக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு சூழ்நிலையையும், மனிதர்களையும் (நேர்மறையாக அல்லது எதிர்மறையாக) அணுகும் தனிநபர் மனப்பான்மை, அவர் செயல்படுகின்ற விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதால், அதற்கேற்றவாறு வாழ்க்கையின் நிகழ்வுகளும் மாற்றங்கள் பெறுகின்றன.
சவால்களைச் சந்தித்து வெற்றிபெறும்போது அந்த வெற்றிக்கான காரணிகளை உணர்வது அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. அதுபோலவே வெற்றியைத் தவறவிட்ட வாய்ப்புகளை இழப்புகளாகக் கருதாமல், வெற்றிக்கான முயற்சியில், குறிக்கோளின் பாதையில் சந்திக்கின்ற மைல்கல்லாக நினைத்து ஏற்றுக்கொள்வது தொடர்ந்து பயணிக்கும் ஆற்றலைத் தருகிறது.
சிக்கலான சூழ்நிலையிலும் சிந்தித்துச் செயல்படுவதற்கான சக்தியைத் தரக்கூடிய நேர்மறையான மனப்பான்மை, அத்தகைய சூழ்நிலையை முறையாகக் கையாளுவதற்கான தைரியமான அணுகுமுறையையும் கொடுக்கிறது.
ஒரு குருவுக்கும் நல்ல சீடனுக்கு உள்ள வேறுபாடு அனுபவம் மட்டும் அல்ல அணுகுமுறையும்தான் என்று விவேகானந்தர் கூறியது போல ஒருவருடைய அணுகுமுறை அவருடைய அறிவுமுதிர்ச்சியைக் காட்டும் அளவீடாக உள்ளது.
புத்தி எனும் கத்தி:
பள்ளிக்குச் செல்வதற்கு பலமுறை எழுப்பிய பின்னரும் மெதுவாக எழுந்திருக்கும் குழந்தையே விடுமுறை நாள்களிலும், சுற்றுலா செல்வதற்கும் சீக்கிரம் எழுந்து வேகமாக கிளம்புவதற்கு அந்தக் குழந்தையின் மனப்பான்மை முக்கிய காரணமாக இருக்கிறது. இதைப்போலவே பெரியவர்களுக்கும் அவர்களுடைய மனப்பான்மையில் காணப்படுகின்ற மாறுபாடுகள் செயல்வடிவமாக வெளிப்பட்டு வாழ்க்கையை வடிவமைக்கின்றன.
தொடர்ந்து பயன்படுத்தப்படும் கத்தி கூர்மழுங்கிடும் நிலையைச் சரியாக உணர்ந்து, கத்தியின் தன்மைக்கு ஏற்ப முறையாகக் கூர்மை செய்து பயன்படுத்தும்போது எதிர்பார்க்கும் பலனைச் சரியாகப் பெறமுடிகிறது.
அதுபோல, வழக்கமான, ஒரேவிதமான தொடர் செயல்பாடுகளில் இயந்திரத் தனமாகச் சுழல்வதினாலும், உற்சாகத்தைத் தரக்கூடிய புதிய அனுபவங்கள் ஏதும் ஏற்படாத நிலையிலும் மனதில் ஒருவித சலிப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான்.
வாழ்க்கையின் ஓட்டத்திற்கு அவசியமான செயல்பாடுகளின் வீரியத்தைக் குறைக்கும் தன்மையுள்ள இத்தகைய உணர்வுகளை நீக்குவதற்கும், புதிய ஊக்கத்தோடு உற்சாகமான மனநிலையோடு செயல்படுவதற்கும் அணுகுமுறையில் ஏற்படுத்துகின்ற நேர்மறையான மாற்றங்கள் உதவுகின்றன.
புத்தியைக் கூர்த்தீட்டும் சாணைக்கற்களாகச் செயல்படுகின்ற நேர்மறையான சிந்தனைகள், ஆக்கபூர்வமான புதிய செயல்பாடுகள், பயனுள்ள பொழுதுபோக்குகள், நல்ல புத்தகங்கள், இயற்கையை மகிழ்ச்சியோடு கவனிக்கும் பார்வைகள் போன்றவை விசாலமான மனநிலையைத் தருகின்றன
நமக்குள் இருக்கும் விளக்கு:
எத்தனையோ விதமான நவீனக் கருவிகள் இருந்தாலும் இருட்டைப் போக்கும் வலிமை ஒளிரும் விளக்குக்கு மட்டுமே உண்டு. அதுபோல பொழுதைப் போக்குவதற்கு புதுமையான வழிகள் வெளியில் எத்தனையோ இருந்தாலும், சலிப்பு, சோர்வு என மனதில் படர்கின்ற இருளைப் போக்கி உற்சாகத்தைத் தரக்கூடிய விளக்காக சுயம் என்கிற அன்பின் சக்தி விளங்குகிறது.
நமக்குள் ஒளிரும் இந்தச் சக்தி உணர்த்துகின்ற மனதின் தேவைகள் என்பது பல நேரங்களில், நம்மை நாம் அவசியம் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்ற மனதின் மொழியாக இருக்கிறது.
உடல்நலம், மனநலம், அளவான ஓய்வு, பிடித்தவர்களுடன் கலந்துரையாடல், விளையாடுதல், பல நாட்களாக காத்திருக்கும் சின்ன சின்ன வேலைகள், ஆரோக்கியமான பொழுது போக்கு மற்றும் கற்றுக்கொள்ள விரும்பும் கலைகள் என பலவகையான வாய்ப்புகளை வரவேற்கும் சுயத்தின் அன்பு, மனதின் வெளிச்சமாக பரவி, உற்சாகமாக ஒளிர்ந்து முதிர்ச்சியான அணுகுமுறையாக வெளிப்படுகிறது.
ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு, தனிப்பட்ட வகையில் நம்முடைய மனம் ஒளிபெறுவதற்கு தேவையான வாய்ப்பு எது என்ற உள்நோக்குப் பார்வையில், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாகத் தேவைப்படுகின்ற புதிய வாய்ப்பைப் புரிந்துகொண்டு அணுகுவதன் மூலம் மனதை உற்சாகத்தின் வெளிச்சமாக ஒளிரச்செய்ய முடியும்.
தெளிந்த மனம்:
ஒரு துணியை, வெட்ட வேண்டிய இடத்தில் முறையாக வெட்டி, தைக்க வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்த்துத் தைத்து, சில அவசியமான, அலங்காரமான இணைப்புகளைப் பொருத்தி, தனது திருத்தமான செயல்பாடுகளால் கச்சிதமான ஆடையாக உருவாக்கும் வடிவமைப்பாளரின் அணுகுமுறைக்கு ஏற்ப, அந்த ஆடை சிறப்பான வடிவமைப்பைப் பெறுகிறது.
இவ்வாறே, சந்திக்கும் சூழ்நிலைகளின் தன்மையை உணர்ந்து, கோபம், பொறாமை, இயலாமை, ஆணவம், அலட்சியம், பேராசை என மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் தன்மையுள்ள தேவையற்ற எண்ணங்களை முறையாக வெட்டுவதும், மன்னிப்பு, அன்பு, சுயமதிப்பு, நட்பு, பொறுப்பு, நிறைவு என்ற நேர்மறையான சிந்தனைகளை மனதோடு சேர்த்து வளர்ப்பதும், நம்முடைய நடைமுறைகளை மேம்படுத்துகின்ற அவசியமான, அழகான கலைகள், பொழுதுபோக்குகள் போன்ற இணைப்புகளை வாழ்க்கையோடு பொருத்துவதும் மனதை வளமாக வடிவமைக்கும் தெளிவான முயற்சிகளாகும்.
அவசியமான உணவு மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றதை விலக்குகின்ற உணவு கட்டுப்பாடு என்னும் அணுகுமுறை உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. அதுபோலவே அவசியமான உணர்வுகளை மட்டும் மனதில் அனுமதித்து, தேவையற்ற உணர்வுகளைத் தவிர்க்கும் உணர்வு கட்டுப்பாடு என்னும் அணுகுமுறை மன ஆரோக்கியத்திற்கு நன்மை அளித்து நம் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் தங்கமான வாழ்க்கையாக சிறப்பாக உயர்த்துகிறது.
# நன்றி.