சுதந்திர தினமும், குடியரசு தினமும்:
நம்முடைய பள்ளிக்காலம் முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்ற இரு தேசிய நாட்களைப் பற்றி தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இவ்விரு தேசிய விழாக்களின் மூலம் அவற்றின் நடைமுறைகளையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பள்ளிப்பருவத்திற்கான ஆரம்ப புரிதலோடு சேர்ந்து, வளரும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தெரிந்துகொண்டிருக்கும் மிகமிக அடிப்படையான தகவல்களைத் தொகுத்து இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்வது மேலும் ஆழமான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான தூண்டுகோலாக, முக்கியமாகப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
சுதந்திர தினம்:
சுதந்திர தினம் என்பது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள், நம் நாடு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் வரலாற்று உண்மைகளை நமக்கு உணர்த்துகின்ற ஒரு தினம். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே வெடித்த புரட்சிகளின் பலனாக ஒருங்கிணைந்த போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த வெற்றியின் தினம்.
மன்னனாக, இராணியாக வாழ்ந்தவர்களுள் ஒரு சிலரும், மன்னனுக்கு நிகராக செல்வ வளத்தோடு, செல்வாக்கோடு வாழ்ந்தவர்களும், மிக எளிய வாழ்க்கை அமைப்புக் கொண்ட பல இலட்சக் கணக்கான மக்களும் தாய் நாட்டின் சுதந்திரம் என்கிற ஒரு நூலில் கட்டப்பட்ட மலர்களாக இணைந்த வரலாற்றை வழிவழியாகக் கூறவேண்டிய தினம்.
சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று உணர்ந்த இவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ஒரேஒரு வாழ்க்கையைத் தமக்கென வாழாமல், தாய்த் திருநாட்டை மீட்பதே தமது கடமையென அதற்கான பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர்.
இவர்கள், தங்களுடைய கல்வியின் பெருமையை, கிடைத்தற்கரிய வேலையை, இனிய இல்லறத்தை, குடும்பம் குழந்தைகள் என வாழும் வாழ்க்கையைத் துறந்து, உறவு, நட்பு, செல்வம், சொத்து, பொழுதுபோக்கு, உடல்நலன் என தங்களிடம் இருந்த அனைத்தையும் போராட்டம் எனும் கப்பலில் ஏற்றி சுதந்திரம் என்ற சுவாசத்தைப் பெற்ற தினம். இத்தகைய பெருமக்களின் தியாகங்களை, கடந்துவந்த வரலாற்று உண்மைகளை நினைவுகொள்ள வேண்டிய முக்கியமான தினம்.
இந்தியா விடுதலைப் பெற்ற சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் அடையாளமாக, கொடிக்கம்பத்தின் கீழ்ப்பகுதியில் கைக்கு எட்டும் உயரத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கொடி, கம்பத்தின் மேலே ஏற்றப்பட்டு, பின்னர் அங்கு விரித்து, பட்டொளி வீசி பறக்கவிடப்படுகிறது.
இந்தச் சுதந்திரக்கொடி, தாய்நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டையில், மக்களின் முதன்மையான பிரதிநிதியாக விளங்கும் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களால் ஏற்றப்படுகிறது. அதுபோலவே ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மாண்புமிகு முதலமைச்சரால் ஏற்றப்படுகிறது.
பெருமதிப்பிற்குரிய தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்வதும் விழாவின் முக்கியமான கருவாக உள்ளது. ஆயுதப்படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, உள்ளிட்ட பல்வகையான துறைகளின் துணிச்சலான வீரதீரச் செயல்களை மெச்சும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், மூன்று வகையான வேறுபட்ட வண்ணங்களும், நீலநிற அசோக சக்கரமும் முறையாக இணைந்து மூவர்ணக்கொடியாக உருவாகும் சிறப்பைப்போல, மொழி, உணவு, உடை என்று மாநிலங்களின் இயல்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும், இணக்கமான இந்தியராக ஒன்றுபடுகின்ற, சுதந்திரமான நாகரிகமான பண்பை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பாக இந்நாள் அமைகிறது. வேற்றுமையிலும் ஒற்றுமை என்று உணர்த்துகின்ற கூட்டுக்குடும்பத்தின் இயல்பாக வெளிப்படுகின்ற கலாச்சார விழாக்கள் அனைத்து மாநிலங்களின் சார்பாகவும் இடம்பெறுகின்றன.
குடியரசு தினம்:
12 மாநிலங்கள் மற்றும் 565 சமஸ்தானங்கள் கொண்டிருந்த இந்தியா, சுதந்திரம் அடைந்த நாடு என்ற அந்தஸ்த்தைப் பெற்ற பின்னரும், முழுமையான ஆதிக்கத்தைப் பெறாத மேலாட்சி அரசு முறையில் (Dominion of India) இயங்கியது. இந்நிலையில் இந்தியாவுக்கு சட்டமன்ற சுதந்திரம் இருந்தாலும் ஆங்கிலேயர்களிடம் இருந்த சில கட்டுப்பாடுகள் அப்படியே தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டன.
இதனால், இந்தியாவின் இராணுவம், பொருளாதாரம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும், உயர் நீதிமன்றம் மற்றும் கூட்டாட்சி நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதும் ஆங்கிலேயர் வசமே இருந்தன.
அந்த நேரத்தில் இந்தியாவின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, மக்கள் தொகை பரிமாறிக்கொள்ளப்பட்டது, தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன, வாக்காளர் பட்டியல்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் மிகமிக முக்கியமாக, சட்டமேதை அம்பேத்கார் மற்றும் அவரது தலைமையில் அமைந்த குழுவினரின் பெருமுயற்சியால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இத்தகைய அறிவிற் சிறந்த சான்றோர் பெருமக்களின், குடியுரிமை சார்ந்த ஆழமான அறிவு மற்றும் பரந்துபட்ட அனுபவங்களின் ஆற்றலாலும் சுமார் இரண்டரை ஆண்டுகால அயராத உழைப்பினாலும் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் நலத்திற்கும் ஏற்ற அரசியலமைப்பின் வழிமுறைகளை வகுத்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிகாத்து வளர்க்கும் வழியாக, உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் வாய்ப்பைத் தருகின்ற நாட்டின் வளமாக செயல்படும் வகையில் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டது.
சமஸ்தானங்களின் தனிப்பட்ட அதிகாரம் நீக்கப்பட்டு ஒருங்கிணைந்த அதிகார ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற குடியமைப்பு, அரசியல், சமூகம் மற்றும் சட்டப் பாதுகாப்புப் போன்ற நாட்டின் பல்வேறு அமைப்புகளைத் திறம்பட வகுத்துக் கூறுகின்ற இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டமாகத் முழுவடிவம் பெற்றது.
நாட்டின் ஒழுங்கமைப்பின் வரைமுறையைக் கூறுகின்ற இந்தச் சட்டம், 1950 இல் ஜனவரி 26ஆம் நாள் அமுல் படுத்தியதன் அடையாளமாகக் கொண்டாடப்படுகின்ற நாளே இந்திய குடியரசு தினம் ஆகும்.
இது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை, மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றதற்கான அடையாளமாகக் கொண்டாடப்படுகின்ற தினம்.
எனவே, குடியரசு தினத்தின் கொண்டாட்டம் என்பது இன்றைக்கு நிதர்சனமாக உள்ள நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்பை, இராணுவ பலத்தை, தொழில்வளத்தை, குடியுரிமையின் ஆளுமையைப் பெருமையோடு பிரமாண்டமாக வெளிப்படுத்துகின்ற தினமாக உள்ளது.
ஒவ்வொரு குடிமகனும், இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்ட அமைப்பின் கூறுகளை உணர்ந்து, சமூகத்தில் இணக்கமாகச் செயல்படுவதற்கான கடமையும் உரிமையும் உள்ளது என்று உணர்த்துகின்ற தினம். நாளைய இந்தியாவின் வரலாற்றில் இடம்பெறுவதற்கு காத்திருக்கும் இன்றைய சாதனைகளின் அணிவகுப்புகள் அரங்கேறுகின்ற தினம்.
இந்தக் குடியரசு தினத்தில், பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்குப் பத்ம விருதுகளும், இராணுவம் மற்றும் காவல் துறையினரின் வீரதீரமான செயல்களுக்கு வீரவிருதுகள் அறிவிக்கப்பட்டும், உன்னதமான சிறந்த செயல்களுக்கு உயர்ந்த பதக்கங்கள் வழங்கப்பட்டும், அவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து இந்தியாகேட் வரை பரந்துவிரிந்து இருக்கும் இராஜ வீதியில் அமைந்திருக்கும் கொடிக் கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் கொடியை விரித்துப் பறக்க செய்யும் பெருமை நாட்டின் முதல் குடிமகனாகத் திகழ்கின்ற, அரசியல் சாசனப் பாதுகாவலராக விளங்குகின்ற, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரமுள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கே உள்ளது. அதுபோலவே மாநிலங்களில் கொடியை விரித்துப் பறக்க செய்யும் உரிமை அந்தந்த மாநில மாண்புமிகு ஆளுநருக்கே உள்ளது.
28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற இந்தியா என்கிற நம் தாய்த்திருநாட்டின் வரலாற்றுப் பெருமையை உணர்வதற்கும், உலகம் மெச்சுகின்ற நாகரிகமான வாழ்வியலை மேலும் வளமையாக்குவதற்கும், அனைத்துத் துறைகளிலும் நிகழும் அறிவார்ந்த நேர்மையான வளர்ச்சியின் உயர்வுகளை அறிந்துகொள்வதற்கும் சாட்சியாகக் கொண்டாடப்படுகின்ற தேசிய விழாக்கள் மக்களிடம் இருக்கும் நாட்டுப்பற்றை மேலும் உறுதியாக்குகின்றன.
# நன்றி.