முயற்சியும் வெற்றியும்:
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதைகளைச் சிறுவயதில் ஆர்வமாகப் படித்திருப்போம். அவை கற்பனையாகக் கூறப்பட்ட கதைகளாக இருந்தாலும், அந்தக் கதைகளில் கேட்கப்படும் புதிரான கேள்விகளுக்குரிய விடைகளை நாமும் சிந்தித்து, நம்முடைய காலத்திற்கும் நடைமுறைக்கும் ஏற்றபடி சரியான விடைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்திருப்போம்.
அந்தக் கதைகளின் அடிப்படை கதாநாயகனாகக் கையில் வாளோடு தோன்றும் மன்னன் விக்கிரமாதித்தன், ஏன் காட்டில் இருந்த வேதாளத்தைத் தூக்கிச்செல்ல தொடர்ந்து முயற்சி செய்தான்? அவனுடைய மனம்தளராத முயற்சியில் அவன் வெற்றி பெற்றானா? அந்த வெற்றியின் மூலம் விக்ரமனுக்குக் கிடைத்த பலன் என்ன? இந்த கேள்விகளுக்கு விடையாக இருக்கும் அடிப்படை கதை, முயற்சி மற்றும் வெற்றியைப் பற்றிய உண்மைகளைக் கூறுகின்றது.
முயற்சி:
விடாமுயற்சிக்கு அடையாளமாகக் கூறப்படும் இந்தக் கதையில், விக்ரமாதித்தன் மீண்டும் மீண்டும் தொடர்ந்து முயற்சிகள் செய்து, வேதாளத்தைச் சுமந்து செல்வதும், அப்போது அது கூறுகின்ற கதையைக் கேட்டபின்னர், அது கேட்கும் விடுகதைக்கு விடை கூறுவதும், என விக்ரமாதித்தன் சந்தித்த சூழ்நிலைகளுக்குக் காரணமாக இருக்கும் அடிப்படை கதையும், அதன் பலனும் பற்றிய ஒரு பார்வை.
உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்ட நாட்டிற்கு மன்னனாக இருந்ததாகக் கூறப்படும் விக்கிரமாதித்தன் எப்போதும் நாட்டுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். அந்நிலையில், ஒரு மந்திரவாதி, முனிவன் போல வேடம்பூண்டு, மன்னனின் நல்ல எண்ணத்தையே தூண்டிலாகப் பயன்படுத்தி, நாட்டின் நன்மைக்காகக் காட்டில் உள்ள கோவிலில் பூசைகள் செய்ய வேண்டும் எனக்கூறி, தந்திரமாகச் சூழ்ச்சி செய்து விக்கிரமாதித்தனைக் காட்டிற்கு அழைத்துச்சென்றான்.
அந்தப் பூசையில் விக்கிரமாதித்தனையே சமர்ப்பிக்க நினைத்த மந்திரவாதியின் சூழ்ச்சியை அறியாத விக்கிரமன் அவனுடைய வார்த்தையை நம்பி ஆள் அரவமற்ற அந்தக் காட்டிற்கு சென்றான். பின்னர், அவன் அன்றைய இரவு கோவிலில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, சற்று தூரத்தில் கேட்ட வீணையின் இசை அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
எனவே, அவன் இசை வந்த திசையில் சென்று, அங்கு சோகமான இசையை வாசித்துக்கொண்டிருந்த பெண்ணைக் கண்டு அவளைப் பற்றிய விவரம் கேட்டான். அவள் தேவலோகத்தைச் சேர்ந்த தேவதத்தை என்றும், வேதாளமாக மாறிவிட்ட தன்னுடைய கணவன் புட்பதத்தனை மீட்கவே அங்கு காத்திருப்பதாகவும் சொன்னாள். ஆனால், அவனை மீட்பதற்கான வழிமுறை மிகக் கடுமையானது என்பதால் மீட்க முடியாமல் தவிக்கும் அவளுடைய கதையை முழுமையாகக் கூறினாள்.
தேவதத்தை கூறிய வழிமுறையில் முயன்று, அவளுக்கு உதவி செய்ய நினைத்த விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு காளிகோவில் நோக்கி நடக்க முயற்சிக்கும்போது, அந்த வேதாளம் அவனுக்கு ஒரு கதை கூறி கேள்வி கேட்டு அதற்கு விக்ரமன் விடைகூறியவுடன் தனது இடத்திற்கே திரும்புவதும் என தொடர்ந்து நடந்தது. இதனால் விக்கிரமன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதும் தொடர்ந்து நடந்தது.
அவ்வாறு விக்கிரமாதித்தன் தொடர்ந்து முயற்சி செய்து வேதாளத்தைச் சுமந்து சென்றபோது அது கூறிய இருபத்திநான்கு கதைகளின் புதிர்களுக்கான சரியான விடைகளை அவன் உடனுக்குடன் கூறினான். பின்னர், அந்த வேதாளத்தின் உண்மை நிலையை அறிந்துகொண்டு, அதை வெல்லும் சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டு, சரியான முயற்சியைச் செய்வதுதான் விரும்புகின்ற வெற்றியைப் பெறுகின்ற யுக்தி என்று புரிந்துகொண்டான்.
எனவே, வேதாளம் கூறுகின்ற இருபத்திஐந்தாவது கதையின் கேள்விக்கு விடை சொல்லும் நேரத்தை நீட்டித்துத் காளிகோவில் வரும்வரை விடைகூறாமல் தாமதப்படுத்தினான். அப்போது, விக்ரமனின் தோளில் இருந்த வேதாளம், விக்ரமன் விடை கூறுவதற்கு முன்பே, காளிகோவிலில் இருந்த தன் மனைவியை நேருக்கு நேராக சந்தித்துவிட்டது. உடனே இருவரும் சாபவிமோசனம் பெற்று தேவலோகத்தின் கணவன் மனைவியாக சுயவாழ்வுநிலை அடைந்து, புட்பதத்தன், தேவதத்தை என்ற தேவலோகத் தம்பதிகளாக இணைந்தார்கள்.
தர்மம் தலை காக்கும்:
தேவதத்தையின் நிலை உணர்ந்து உதவுகின்ற நோக்கத்தோடு தானே முயன்று சென்று வெற்றிக்கான நுட்பத்தை அறிந்துகொண்ட விக்கிரமாதித்தன், தனது கடுமையான முயற்சியினால் தேவலோக தம்பதிகளுக்கு பேருதவி செய்தான்.
தங்களுக்கு நன்மை செய்த விக்கிரமாதித்தனுக்கு, புட்பதத்தன் மந்திரவாதியின் இரகசிய சூழ்ச்சியை வெளிப்படுத்தி, அதிலிருந்து வெளிவரும் வழியையும் கூறி, விக்கிரமாதித்தனைக் காப்பாற்றியதோடு அவனுடைய நாடு செழிக்கவும் நல்லவழி காட்டினான்.
உண்மை அறிந்த விக்கிரமாதித்தனும் அவ்வாறே சூழ்ச்சியை அழித்து, சமர்த்தியமாகத் தன்னைக் காத்துகொண்டு, நலமோடு வாழ்ந்து நாடும் செழிக்க நன்மைகள் செய்தான் என்பது மிகவும் சுவாரஸ்யமான விறுவிறுப்பான கதை.
மன்னன் என்பவன் தன் நாட்டு மக்களுக்காக மட்டும் என்ற எண்ணம் இல்லாமல் யாராக இருந்தாலும் அரும்பாடுபட்டு உதவுகின்ற அவனுடைய தர்ம சிந்தனையின் அணுகுமுறையும், ஒரு மன்னனாக அதர்மத்தை அழிக்கும் வீரமும் அவனுடைய முயற்சியில் வெல்லும் வழியைக் காட்டி உண்மையான வெற்றியாக விளைந்தது.
வெற்றிக்கு உதவும் கருத்துகள்:
விக்கிரமாதித்தனின் ஒவ்வொரு கதையிலும் சிந்தனைக்குரிய பல கருத்துகள் இருப்பதுபோலவே, இந்த அடிப்படையான முக்கிய கதையிலும் சில நல்ல கருத்துகள் கூறப்படுகின்றன.
பாதுகாக்கும் பலர் சூழ்ந்திருக்கும் மன்னனாகவே வாழ்ந்தாலும், தனித்துச் செயல்படவேண்டிய சூழ்நிலையில் தானே தனக்குப் பாதுகாப்பாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.
தந்திரவாதிகள், தவறானவர்களின் பார்வையில் (victim) சிக்கியவர்கள், முதலில் தங்களுக்குள் ஏற்படுகின்ற உணர்ச்சியிலிருந்து விரைவாக மீண்டு, அத்தகைய சூழ்நிலையிலிருந்து சமயோசிதமாக தங்களை முழுமையாக மீட்டுக்கொள்வதுதான் தற்காப்பின் முதல்நிலை என்று உணர்த்துகின்ற கதை.
பாதுகாப்பான சூழ்நிலையை அடைவதற்கு தேவைப்படுகின்ற உதவிகளைத் தயங்காமல் கேட்டுப் பெறுவதும், பெறுகின்ற வழிகளைத் தெளிவான சிந்தனையோடு, காலத்துக்கேற்ற, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் செயல்பட்டுத் தற்காத்துக்கொள்வதும் மிகமிக அவசியம் என்று கூறுகிறது.
தவறான முயற்சியில் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காமல், சரியான முயற்சியைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுவதே உண்மையான முயற்சி. நமக்குத் தேவையான வெற்றியைத் தருகின்ற ‘சரியான முயற்சியை’ அறிந்துகொள்ளவே மனந்தளராத விடாமுயற்சி தேவைப்படுகிறது.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தனித்து செயல்படவேண்டிய சூழ்நிலையில் மனம்தளராமல் செயல்படுத்த வேண்டிய சரியான முயற்சியைப் போலவே, பலரது துணையோடு செயல்படுகின்ற கூட்டு முயற்சியும் வெற்றியைத் தருகின்ற சரியான முயற்சியாக இருக்கும்.
சுக்ரீவனோடு அறுவரான இராமனாக இருந்தாலும், அனுமனைத் துணைகொண்டு கடலில் கல்போட்டு, தனிப்பாதை அமைக்க தனிப்படை உருவாக்கிய கதை, கூட்டு முயற்சியின் முக்கியத்துவம் கூறி வெற்றிக்கு வழிகாட்டுகின்றது.
இன்று நாம் பார்க்கும் வானத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டமைப்புகளின் காட்சி, நம்முடைய சாதாரண கண்களை வந்தடைவதற்கு பல ஒளிஆண்டுகள் பயணப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
அதுபோல, எப்போதோ எழுதப்பட்ட பழைய கதைகளும் காப்பியங்களும் வரலாறுகளும்கூட இன்றைய பார்வைக்குத் தேவையான நம்பிக்கை நட்சத்திரங்களை உள்ளடக்கிய கருத்துகளாக தெரிகின்றன.
வானளவு விரிந்திருக்கும் சிந்தனைகளின் சக்தியை உணர்ந்து, வாய்த்திருக்கும் வாய்ப்புகளின் பலம் அறிந்து, சூழலுக்குப் பொருத்தமான கருத்துகளைத் தேர்ந்தெடுத்து, சரியான முயற்சி செய்வதுதான், எந்நாளும் உதவுகின்ற உண்மையான வெற்றியாக இருக்கும்.
# நன்றி.