நமக்கு நாமே:
ஒரு சோளக்காட்டில் குருவி ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளோடு இருந்தது. அப்போது ஒருநாள் இரை தேடுவதற்காகத் தாய்க்குருவி வெளியே சென்ற நேரத்தில் சோளக்காட்டிற்கு இருவர் வந்தார்கள். அவர்களுள் ஒருவர், சோளக்கதிர் நல்ல பருவத்திற்கு வந்து விட்டது. எனவே, அறுவடை செய்வதற்குத் தகுந்த வேலையாட்களை நாளை அழைத்து வரும்படி இன்னொருவரிடம் கூறினார்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பயத்தோடு கேட்டுக்கொண்டிருந்த குஞ்சுகள் தாய்க்குருவி வந்தவுடன் அந்தத் தகவலைக் கூறின. குஞ்சுகளுக்குத் தைரியம் சொல்லிய தாய்க்குருவி, தொடர்ந்து தினமும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று இதேபோல கவனித்துச் சொல்லுங்கள் என்று கூறியது.
மறுநாள் காலை அதே இடத்தில் சந்தித்த அவர்கள் இருவரும், இன்று வேலையாட்கள் யாரும் வரவில்லை என்பதால், ‘பக்கத்து ஊர் ஆட்களை நாளை வேலைக்கு அழைத்து வரலாம், அவர்களுக்குத் தேவையான கூலியைத் தந்துவிடலாம்’ என்றும் பேசிக்கொண்டார்கள்.
அடுத்தநாள் சந்தித்த அவர்கள், ‘பக்கத்து ஊர் ஆட்களும் அங்குள்ள தொழிற்சாலையில் வேலைக்குச் செல்வதால் அவர்களால் இந்த வேலைக்கு வரமுடியாத நிலை உள்ளது’ என்று தெரிந்துகொண்டார்கள்.
அப்போது அவர்களுள் ஒருவர், ‘கதிர் நன்கு பக்குவமாக இருக்கிறது. இதற்கு மேல் மற்றவர்களை நம்பி காலம் கடத்தக்கூடாது. எனவே, நாமே நாளை கட்டாயம் அறுவடை செய்து விட வேண்டும்’ என்று கூறினார். இன்னொருவரும் ‘அதுதான் சரி, காலையில் நாம் நம் குடும்பத்தினருடன் அறுவடைக்கு வந்துவிடலாம்’ என்று சொல்ல, இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்கள்.
ஒவ்வொரு நாளும் இவர்கள் பேசியதை தனது குஞ்சுகள் மூலம் அறிந்துக்கொண்ட தாய்க்குருவி, ‘மற்றவர்களின் உதவிக்காகக் காத்திருக்காமல், தானே தன் வேலைகளைச் செய்துமுடிக்க வேண்டும் என நினைப்பவர் காலம் தாழ்த்தாமல் செய்து விடுவார்’. எனவே, நாம் வேறு இடத்திற்கு பறந்து செல்வதுதான் பாதுகாப்பு என்று தன் குஞ்சுகளிடம் கூறியது’.
இது மனிதர்களின் செயல்திறனை அறியும் எளிய வழியாகக் குருவியின் பார்வையில் சொல்லும் சிறிய கதை.
தன் கையே தனக்குதவி:
விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இதற்கு விளக்கமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியின் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார் விவேகானந்தர். சுற்றியுள்ள கடலின் அலைகள் ஓயாமல் மோதினாலும் அமைதியாக இருந்த ஒரு பாறையைக் கண்டார். அந்தப் பாறைக்குச் சென்று தியானம் செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தார்.
அந்தப் பாறை கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் கடலில் இருந்தது. எனவே, கரையோரத்தில் இருந்த மீனவரிடம், தான் அந்தப் பாறைக்குப் படகில் செல்வதற்கு உதவுமாறு கேட்டார். அவர் அதற்குக் கூலியாகச் சிறிது பணம் கேட்டார். அது தன்னிடம் இல்லாததால் காலம் தாழ்த்தாமல் தானே கடலில் நீந்தி அந்தப் பாறையை அடைந்தார்.
படகும், பிறர் உதவியும் இருந்தால் மட்டுமே அந்தப் பாறைக்குச் செல்ல முடியும் என்று நினைத்துக் கரையிலேயே காத்திருந்தால் அவர் சுற்றுலாப் பயணிபோல் இருந்திருப்பார். அனைத்தையும் விட தன் மனபலம் சக்திவாய்ந்தது என்று உணர்ந்து செயல்பட்டதால்தான் அவர் விவேகானந்தராக உயர்ந்து நிற்கிறார்.
தாங்களே செய்யக்கூடிய சிறிய வேலைகளுக்கும் மற்றவர்களின் உதவியை நாடி காத்திராமல் காலத்தோடு வேலைகளை செய்ய வேண்டும். இதை நமக்கு உணர்த்தும் விதமாகவும் அந்தப் பாறை இன்றும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கிறது.
நம்முடைய எண்ணங்களைச் செயல்படுத்த நமக்கு ஊக்கம் தேவை. அதற்கு ஏதேனும் உதவி தேவை என்றால் அதை நியாயமாகப் பெறுவதற்கு தயங்காமல் முயற்சிக்கலாம். அப்படிக் கிடைக்காத நிலையில் எண்ணங்களைக் கைவிடாமல் நமக்கு நாமே உதவியாக நின்று, தொடர்ந்து உழைத்து அதைச் செய்து நிறைவேற்றுவதுதான் மனவுறுதியாகும்.
நம் கையே நமக்குதவி என்று நினைத்து, மிகவும் அவசியமான, நமக்கு தெரிந்த வேலைகளை முயற்சி செய்து முடிப்பதும், புதிய வேலைகளைத் தெரிந்து கொள்வதும் மனதின் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இது இன்றைய காலச்சூழலுக்குத் தேவையானதும்கூட.
உதவிக் கரங்கள்:
உதவி கிடைக்காத நேரங்களில் சூழ்நிலையின் அவசியம் கருதி, சில வேலைகளை தானே செய்வது பொறுப்புணர்வை வெளிப்படுத்தினாலும், அதுவே நிரந்தரம் ஆகிவிட முடியாது.
அன்றாட வாழ்க்கையில் அனைவரும் தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அதில் முக்கியமான காரணம், தங்கள் கடமையைச் செவ்வனே செய்வதன் மூலமாக ஒருவருக்கொருவர் இணைந்து, தங்கள் திறமைகளால் துணைபுரியும் சமூக அமைப்பு.
நாம் அனைவரும் ஒரு சமூகமாக, ஒருவரை ஒருவர் சார்ந்து வேலைகளைப் பகிர்ந்து செய்யப்படும் இத்தகைய ஒத்துழைப்பே சமூக வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது.
எல்லாத் துறைகளிலும், பல்வேறு நிலைகளிலும் இருக்கும் உழைக்கும் மக்களே, அந்தத் துறையில் இயல்பான சூழலை ஏற்படுத்தி சமுதாயம் உயரப் பறப்பதற்கு உதவும் சிறகுகளாக இயங்குகிறார்கள்.
இவ்வாறு துறைசார்ந்த அனுபவசாலிகளின் பங்களிப்பு என்பது தருபவருக்கும், பெறுபவருக்கும் மனநிறைவைத் தரும் வகையில் நேர்மையாக, உயர்வாக கட்டமைப்பது சமூக வளர்ச்சியை நோக்கியப் பயணமாகும்.
உள்ளபடியே அவரவர் தகுதிகளை மதித்து இயங்கும் ஆரோக்யமான வளர்ச்சி அடைந்த சமூகச் சூழல்தான், ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் நினைத்தச் செயலை நினைத்தபடியே செய்து முடிப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.
# நன்றி.