மென்மை:
ஒருநாள் ஒளவையார் நீண்ட தூரம் நடந்துவந்த களைப்பால் ஒருவீட்டின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறினார். அது அழகான சிலம்புகளை அணிந்திருக்கும் சிலம்பி எனும் நடனமாதின் வீடு. அந்த வீட்டின் சுவற்றில்,
“தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே-“
என்று ஒரு பாடலின் இரண்டு வரிகள் மட்டும் எழுதப்பட்டு, அது முடிக்கப்படாமல் இருந்தது. ஒளவை இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, சிலம்பி ஒளவையின் பசியாற கூழ்க்கொண்டு வந்து கொடுத்தாள்.
அப்போது ஒளவை சிலம்பியிடம் அந்தப் பாடலின் விவரத்தைக் கேட்டார். அவளும் அந்தப் பாடல் பிறந்த கதையைக் கூறினாள். கவியிற் சிறந்த கம்பரிடம் தன்னைப் பற்றி பாடல் எழுதச் சொன்னதாகவும், அவர் ஒரு பாடலுக்கு ஆயிரம் பொற்காசுகளைக் கேட்டதாகவும் கூறினாள்.
“அது சரி, பாட்டு ஏன் பாதியில் நிற்கிறது’, என்று ஒளவையார் மீண்டும் கேட்டார். அதற்கு சிலம்பியோ ‘தன்னிடம் ஐந்நூறு பொற்காசுகள் மட்டுமே இருந்ததால் பாட்டுப் பாதியில் நிற்பதாகக் கூறினாள்’. மேலும், ‘எழுதப்பட்ட அந்த இரண்டு வரிகளும் சோழநாட்டின் வளமையைக் கூறுகிறதேயன்றி தன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட வரவில்லை’, என்று கூறி வருந்தினாள்.
அவளுடைய வருத்தத்தைத் தன்னால் எளிதில் போக்க முடியும் என்ற நிலையில் அதை நிறைவேற்றுவதுதானே நியாயம், என்று நினைத்த ஒளவையார்;
“-பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு”.
என்று சிலம்பியின் சிறப்பைக் கூறும் வகையில் எழுதி அந்தப் பாடலை முடித்தார். ஒரு எளிய பெண்ணின் மனவருத்தம் கண்டு அதைப் போக்கிவிட வேண்டும் என்று நினைத்த அவருடைய மென்மையான மனது நம் மனதையும் குளிர்ச்சி ஆக்குகிறது. ஆனால் இதையறிந்த கம்பர் ஒளவையின் மீது கோபத்துடன் இருந்தார்.
வன்மை:
பல்வேறு ஊரிலிருந்து வந்த புலவர்கள் அனைவரும் ஒரு அவையில் கூடியிருந்தனர். அவர்கள், ஒருவருக்கு ஒருவர் புதிர் கேள்விகளையும் அதற்கு உரிய விடைகளையும் அழகான பாடல்களாகப் பாடிக்கொண்டிருந்தனர்.
அந்த அவையில் ஒளவையாரும், கவியிற் சிறந்த கம்பரும் உடன் இருந்தனர். தனக்குக் கிடைத்த வாய்ப்பில் ஒளவையாரைக் கேள்வி கேட்க பயன்படுத்திய கம்பர்,
“ஒரு காலடி
நால் இலைப் பந்தலடி”
என்று புதிர் போட்டார். இதில், ஒரு செடியின் அமைப்பைக் கூறியதாக ஒரு பொருளும், புதிர் கேள்வியோடு சேர்த்து ஒளவையாரை அவமரியாதையாகக் குறிப்பிடும் வகையில் மற்றொரு பொருளும் இருந்தது.
இந்த முதல் தாக்குதலுக்குச் சரியான எதிர்தாக்குதல் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஒளவை,
“………………………………..
குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!”
என்று, கம்பரை இசை(புகழ்)பாடும் வகையில் ஒருபொருளும், வசைபாடும் வகையில் மற்றொரு பொருளும் உள்ளவாறு பாடினார். புதிருக்கு விடை ‘ஆரை’ என்று கூறி, தன்னை வெல்ல முடியாது என்று ஒளவையார் பதிலடி கொடுத்தார்.
உண்மை:
தமிழின் சிலேடை (இருபொருள்) நயத்தை விளக்க, பாடலோடு சேர்த்துக் கூறப்படும் இந்தக் கதை எந்த அளவு உண்மையோ தெரியாது. ஆனாலும், இதில் அன்பை வெளிப்படுத்தும் நிலையில் மென்மையும், தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில் வன்மையும் வெளிப்படுத்தபடுவதால், இது கோபத்தின் தன்மையைக் கூறுவதோடு பெருவியப்பையும் ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
# நன்றி.