மனநலம்:
உடல்நலம் காப்பதற்குச் சரிவிகித உணவும், அளவான உடற்பயிற்சியும் உதவுவது போல, மனநலம் காப்பதற்கு நல்ல சிந்தனைகளும், சரியான அணுகுமுறைகளும் அவசியமாகிறது. மனச்சோர்வு ஏற்படுத்துகின்ற சில சூழ்நிலைகளை மனவுறுதியோடு கடந்து செல்வதற்குத் தேவையான சில குணநலன்களை இன்றைய நம் சிந்தனையில் பார்க்கலாம்.
பொறுமை:
பெரும்பாலான நேரங்களில் சரியாகக் கையாளப்படாதக் கோபமே பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்து சூழ்நிலையைக் கடுமையாக்குகிறது.
‘நோய் நாடி நோய் முதல் நாடி’, என்பதைப்போல் தனிமனிதக் கோபம் துவங்கும் இடத்திலேயே அதைத் தணிப்பதற்குப் பொறுமை மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.
நற்பெயரைக் காக்க வேண்டும் என நினைப்பவருக்கு மிகுந்த பொறுமை அவசியமானதாகும். கோபத்தில் கூச்சலிடுவது, தண்டிப்பது போன்றவை தன்னுடைய மதிப்பைத் தானே தகர்க்கும் செயல்கள் என்பதை அனைவருமே அறிந்திருப்போம்.
கோபத்தை அறவே தவிர்ப்பது என்பது அரிதான குணம். மௌனத்தின் துணையோடு, சமாதான இடைவெளியுடன் நகர்ந்து செல்வது, அப்போதைய மனப்பதட்டத்தைக் குறைப்பதற்கு ஏற்ற நடைமுறை வழியாகும். ஆனால் இதற்கு ஒருபடி மேலே சென்று ‘அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்பதே நிரந்தரத் தீர்வு என்று வள்ளுவர் கூறுகிறார்.
மேலும், “வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை” என்று, பொறுமையாக இருப்பதே வலிமையிலும் பெரிய வலிமை என்றும் கூறுகிறார். அகந்தையால் பிறரை மனம்நோகச் செய்பவர்களைப் பொறுமையால்தான் வெற்றிகொள்ள முடியும்.
விட்டுக்கொடுத்தல்:
நாம் இயல்பாகவே சில சௌகரியங்களை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், சில அசௌகரியங்களை அனுசரித்துக் கொண்டும்தான் வாழ்கிறோம்.
விட்டுக்கொடுத்தல் என்ற உணர்வுதான் உறவுகளை இணைக்கும் சங்கிலியாகச் செயல்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் சுயவிருப்பு வெறுப்புகளையும், ஈகோவையும் விட்டுக்கொடுத்தால்தான் உறவுகளுடன் சுமுகமாக வாழமுடியும். தேவையில்லாமல் விவாதித்துக் கசந்து போவதைவிட, அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று நினைத்துப் பெருந்தன்மையோடு விட்டுவிடுவது, பூட்டிவைக்கும் இறுக்கமான வலியிலிருந்து மனதிற்கு விடுதலை அளிக்கும்.
மற்றவர்களைக் குறைகூறி, தன்னை உயர்த்திக்கொள்ளும் மனநிலையையும், ஈகோவையும் விட்டுக்கொடுக்கும் நிலையில் மனம் இன்னும் விரிவடைகிறது. சூழ்நிலையை நடுநிலையோடு சிந்தித்துச் சிக்கலை சரி செய்யவும், மீண்டும் நடக்காமல் கவனத்துடன் இருக்கவும் இதுவே நல்ல வாய்ப்பாகவும் அமைகிறது.
நிதானம்:
எந்த நிகழ்வையும் மற்றவர் பார்வையிலும் பார்க்கத் துவங்கும்போது அதன் மற்றொரு பரிமாணம் தெரிகிறது. இப்போது, பகலா, இரவா என்பது அவரவர் இருக்கும் நாட்டைப் பொறுத்து மாறுபடுவதுபோல, சில உண்மைகளும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம்.
சில நேரங்களில் ஒருவர் பார்வையில் தவறாக இருப்பது, மற்றவர் பார்வையில் மிகச்சரியாகவும் இருக்கக்கூடும். எனவே, எந்தவொரு நிகழ்வுக்கும் அதில் உள்ள வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு எண்ணங்களை அவ்வப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, எதையும் மற்றவர் பார்வையில் பார்ப்பதற்கும், சிந்திப்பதற்கும் ‘நிதானமான மனநிலை’தான் அவசியமாகிறது.
இந்த நிலையில்தான், தேவையான விளக்கங்களைப் பெறுவதற்கும், தருவதற்கும், ஏற்ற பக்குவம் உருவாகிறது. இதன் விளைவாக அர்த்தமற்ற பிடிவாதங்களும், அதனால் ஏற்படும் வாக்குவாதங்களும் தவிர்க்கப் படுகின்றன. இவையே சூழ்நிலை சுமுகமாக மாறுவதற்குக் காரணமாக இருக்கின்றன.
மன்னிப்பு:
மன்னிப்பு என்பது மகாசக்தி வாய்ந்த மந்திரம். இதை நமக்காகக் கேட்டாலும், மற்றவருக்குக் கொடுத்தாலும் நமக்கே மனநிம்மதி கிடைக்கும். மன்னிக்கும் அளவுக்கு நாம் பெரியமனிதர்களா என்று நாம் நினைக்கலாம். நடைமுறையில் நம்மையும் பலர் மன்னித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் பலரை மன்னித்துகொண்டுதான் இருக்கிறோம். அவற்றின் ஆழம்தான் வேறுபாடுகள் கொண்டதே தவிர உணர்வு ஒன்றுதான். மனஆறுதலை வேண்டுபவர்களே இந்த மந்திரத்தைச் சரியாக உச்சரிக்கிறார்கள்.
முள்ளாய் குத்தும் மனவேதனையை ஆற்றுவதற்கும், நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதற்கும் மன்னிப்புப் பலவகைகளில் பரிமாறப்படுகிறது. இது, ஈகோ இல்லாத உயர்ந்த மனநிலையின் உன்னத வெளிப்பாடாகவும் இருக்கலாம். அல்லது எல்லா காரணகாரியங்களும் நமக்கு முழுமையாகப் புரிந்து விடாது, என்ற புரிதலின் ஆரம்பமாகவும் இருக்கலாம். இத்தகைய மன்னிப்பு மனதின் வலிமைக்கு அடையாளமாக நிமிர்ந்து நிற்கக்கூடியது.
அறியாமையினால் மனவருத்தம் ஏற்படுத்தியவரை மன்னிப்பதால், மன்னிப்பவரே அதிக நன்மை பெறுவார். இதற்கு வாய்வார்த்தைகள் கூட தேவையில்லை மனதார நினைப்பதும்கூட மனஆறுதல் தரும்.
போகிறபோக்கில் உதிர்க்கும் சாரியாக இருந்தாலும், மனம் உன்னிப்பாகக் கவனிப்பதால் வெளிப்படும் மன்னிப்பாக இருந்தாலும், இவை, மன ஆரோக்கியத்தை உயர்த்தும் உன்னத வார்த்தைகள். மன்னிப்பு மனஉளைச்சலை குறைத்து, ஆரோக்கியம் தரும் மருந்தாகவும், அன்பான சிகிச்சையாகவும் செயல்படுகிறது. இதுவே பல நேரங்களில் மனிதநேயமாகவும் வெளிப்படுகிறது.
புல்லுக்கும் பாயும் நீர்:
மக்கள் நல்ல குணநலன்களுடன் பண்புள்ளவர்களாக இருப்பதால்தான் உலகம் வாழத்தகுந்தாக இருக்கிறது. நல்ல நீர்பாய்ச்சி நெற்பயிர் விளையும் நிலத்தில் சில களைச்செடிகளும் வளர்வதுண்டு. அதுபோல மனிதநேயம் உள்ளவர்களோடு, அதை மறந்தவர்களும் கலந்து இருப்பதுண்டு. பொறுமையை இயலாமையாகப் பார்ப்பவர்கள், விட்டுக்கொடுப்பவரை ஏமாளியாகப் பயன்படுத்துபவர்கள், மன்னிப்பை அடுத்த தவறுக்கான அனுமதியாக நினைப்பவர்கள் என, சூழலுக்குப் பாதகமான பண்பற்ற சிலரும் உண்டு.
தூய்மையான ஆற்றுநீரும், நன்னீரும் தொடர்ந்து கடலில் கலந்து கொண்டிருந்தாலும், கடல் தன் உப்புத் தன்மையை மாற்றிக்கொள்வதில்லை. அது போல இவர்களிடம் எவ்வளவுதான் நல்ல விதமாக மற்றவர்கள் நடந்து கொண்டாலும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ள இவர்கள் சிந்திக்கவும் மாட்டார்கள்.
அமுதமே ஆனாலும்:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
என்று திருவள்ளுவர் கூறுகிறார். மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும். அதுபோலவே மனநலம் காக்கும் நல்ல குணங்களேகூட, நேர்மையான நடுநிலையில் இல்லாமல், அளவுக்கு அதிகமானாலும் அதன் விளைவுகளே சுமையாகி மனநிலை பாதிக்கக்கூடும்.
தெரிந்து செய்தல்:
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
நன்மை செய்யும்போதும் கவனமாக, சூழ்நிலையின் தன்மை உணர்ந்து செய்தால்தான் விளைவுகள் நன்மையாக இருக்கும். அவ்வாறு யோசிக்காமல் செய்தால் நல்ல செயல்களே என்றாலும், விளைவுகள் தவறாகப் போவதற்கும் வாய்ப்புண்டு என்று சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே, பொறுமை, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு போன்ற குணங்கள் அமுதமே ஆனாலும், ‘சுயமரியாதையை உயர்த்தும் வகையில், சூழலைச் சிறப்பாக்கும் முறையில், விழிப்போடு அணுகுவது அவசியம்’ என்கிறார்கள்.
நேர்மையின் எல்லைக்குள், மனிதநேயத்தோடு விட்டுக்கொடுக்கும்போது அது மற்றவர்களுக்கும் உதாரணமாகிறது. இது தவறுகளை மன்னிக்கும் வகையில் இல்லாமல், அதைத் திருத்தும் நோக்கில் இருக்கும்போது மதிப்பிற்குரியச் செயலாகிறது.
உயர்ந்த பண்பின் அடையாளமான இத்தகைய நல்ல குணங்களே ஒவ்வொருநாளும் நம்மை மேம்படுத்துகின்றன. இவற்றை இடம், பொருள் அறிந்து சூழ்நிலைக்குத் தக்கவாறு, கவனமாகக் கையாளும்போது மனநலன் சிறப்பாகக் காக்கப்படுகிறது.
# தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.