உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? Unmaiyaana Makizhchchi Ethil Irukkirathu? Where in Lies True Happiness.

தேடல்:

மகிழ்ச்சிக்கான தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும்  வெவ்வேறாக இருக்கிறது.  மேலும், ஒரு குறிப்பிட்ட வயதில் மகிழ்ச்சி என நினைப்பது பின்னாளில் சலிப்பைத் தரலாம்.  ஒருவர் மகிழ்ச்சிக்காக ஓடி ஓடி தேடும் பொருளை மற்றொருவர் வேண்டாம் என்று உதறித் தள்ளலாம்.  அப்படியானால் பொதுவான, நிலையான, உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்று எப்படித் தெரிந்துகொள்வது.

செய்க பொருளை:

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

நேர்மையான வழிகளில் சேர்த்த செல்வமானது, ஒருவருக்கு அறத்தையும் தந்து, அதனோடு இன்பத்தையும் தரும்;  என்று வள்ளுவர் கூறுகிறார்.  மேலும் பொருட் செல்வமே நம்மை காக்கும் ஆயுதம் என்று கூறி பணம் சம்பாதிப்பது மிக அவசியம் என உறுதியாகக் கூறுகிறார்.

இவ்வாறு பணம் சம்பாதிப்பதும், சேர்ப்பதும் வாழ்க்கையின் தேவைகளுக்கும், உலகியல் மரியாதைக்கும் அவசியம்தான்.  ஆனால் உள்ளுக்குள் இருக்கும் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் இதைக் கடந்த ஒன்று தேவைப்படுகிறது.  இது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொன்றாக வேறுபடலாம்.

இத்தகைய உண்மையான மகிழ்ச்சி நிலையானதாக இருக்க, நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்க்கையில் என்ன செய்தார்கள், அதை எப்படி அடைந்தார்கள் என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்கலாம்.

ஈதலே இன்பம்:

கொடுப்பதிலே இன்பம் உண்டாகும் என்று கண்டறிந்த வள்ளல்கள், பொருள் வேண்டி வந்தவர்களுக்கு வாரிவழங்கி, ஈகையில் உயர்ந்து நின்றார்கள்.  கல்வியின் மாண்பு அறிந்த சான்றோர்கள் கல்வி நிலையங்களை உருவாக்கி மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தினார்கள்.  மக்களுடைய பண்பின் உயர்வையே தம்முடைய மகிழ்ச்சியின் உயர்வாகக்  கருதினார்கள்.  அன்பின் அட்சயப் பாத்திரமாய் விளங்கியவர்கள் பொங்கி வழியும் கருணையால் ஆதரவு அற்றவர்களுக்கு அன்னையாகத் திகழ்ந்தார்கள்.

ஞானமே இன்பம்:

ஆடம்பரமான வாழ்க்கை, அன்பான மனைவி, அழகான குழந்தை அமைந்தாலே பேரின்பமே என்று உலகத்தார் சொல்லும் நிறைவான வாழ்க்கையைத் துறந்தவர் இளவரசர் சித்தார்த்தன்.

உலக உயிர்களின் வேதனையைக் கண்ட அவரால் பஞ்சு மெத்தையில் உறங்க முடியவில்லை, குழந்தையைக் கொண்டாட முடியவில்லை, மனைவியிடம் சொல்லவும் முடியவில்லை.  மனதின் தவிப்பு, சித்தார்தனை  அரண்மனையிலிருந்து ஆரண்யம் நோக்கி செலுத்தியது.

அறுசுவை உணவை மறந்தார், பதவி, பணியாள் எனும் அதிகாரம் துறந்தார், ஞானஒளி தேடி, புத்தம் பெற்றுச் சிறந்தார்.  உலக மக்கள் யாவரும் ஆசையைத்  துறந்து அன்போடு வாழவேண்டும் என்று ஊர் ஊராய் நடந்தார்.

நிலையாமை தெரியாமல், அறியாமையில் சிக்கி தவிக்கும் மக்களைக் காப்பாற்ற அன்பைப் போதித்து அருள் புரிந்தார்.

ஞானஒளியில் உண்டாகும் எல்லையற்ற கருணையே உண்மையான மகிழ்ச்சி என்று உலகம் முழுவதும் உணர செய்தார்.

அன்பின் வழியது உயிர்நிலை:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

வழுக்கலான தரையில் நடக்கும்போது விழுந்து விடாமல் உதவும் ஊன்றுகோல்போல, கற்றறிந்த, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறக்கும் சொற்கள், துன்பத்தில் தவிக்கும் மக்களை அந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்றும். வள்ளுவரின் இந்த வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம் அவர்கள்.

உறுதியான ஒழுக்கமும், சுடர்மிகு அறிவும் ஒருங்கே பெற்ற பெருந்தகை.   இவர் தனது ஆராய்ச்சியில் ‘அக்னி, ப்ரித்வி’ போன்ற ‘ஏவுகணைகளை’ கண்டுபிடித்தார்.  அதில் பயன்படுத்தப் படும் மெட்டலை (உலோகம்) விட, (ஏழில் ஒருபங்கு) எடை குறைந்த ‘காம்போசிட் மெடிரியல்’ எனப்படும் புதுவகை மெட்டலை உருவாக்கி பயன்படுத்தி இருந்தார்.

அப்போது, அவருடைய ஆய்வுக் கூடத்திற்கு, மெடிக்கல் சயின்ஸ் துறையிலிருந்து வந்திருந்த Professor பிரசாத் என்பவர் கலாம் அவர்களின் கண்டுபிடிப்பை அறிந்தார்.  பிறகு கலாம் அவர்களை எலும்பியல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.   அங்கு கால்கள் பாதிக்கப்பட்ட சிறிய குழந்தைகள், மூன்று கிலோ எடையுள்ள காலிப்பர் ஷூக்களை அணிந்துகொண்டு நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதைக் கண்டார்.

அப்போது, Professor பிரசாத் அவர்களின் யோசனையின்படி, இந்தக் குழந்தைகளின் வலியை நீக்க வேண்டும் என கலாம் ஐயா நினைத்தார்.  பின்னர், தான் கண்டுபிடித்த காம்போசைட் மெடீரியலை உபயோகித்து, மூன்று கிலோ எடை இருந்த காலிப்பர் ஷூவை முன்னூறு கிராமாகக் குறைத்து, ஒரே வாரத்தில் அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தார்.

அதை அணிந்து கொண்ட குழந்தைகள் ஆடி, ஓடி விளையாடினார்கள்.  இதைக் கண்ட கலாம் அவர்கள் உள்ளம் நெகிழ்ந்தார்.  அந்தக் குழந்தைகளின் வலியை நீக்குவதற்குத் தன்னுடைய அறிவு பயன்பட்டதை நினைத்து உள்ளம் மகிழ்ந்தார்.  இந்த மகிழ்ச்சி, உலகம் பாராட்டிய மற்ற வெற்றிகள் தந்த மகிழ்ச்சியைவிட மிக உன்னதமானது என்று உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்து கூறினார்.

உண்மையான மகிழ்ச்சி:

பணம், பொருள் சம்பாதிப்பது, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவது, உலகம் பாராட்டும் வகையில் வாழ்வது போன்றவை எல்லாம் வாழ்க்கையில் பெறவேண்டிய வெற்றிகள்தான்.  இத்தகைய வெற்றிகள் கடுமையான உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பரிசாகக் கிடைப்பவை.  இவற்றால் ஏற்படும் மகிழ்ச்சி களைப்பு நீக்கி மேலும் உழைக்க நமக்கு சக்தி அளிக்கும்.

ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது மனதில் நிறைவைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.   உள்ளன்போடு மற்றவர்களுக்கு உதவும்போதுதான் அத்தகைய மகிழ்ச்சி உண்டாகும் என்று பெருமக்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

பசித்த வயிறுடன் இருப்பவருக்கு உணவிடுவதுதான் கடமை.  அறிவு தாகம் கொண்டவருக்குக் கல்விதான் கடவுள்.  ஆதரவு வேண்டுவோர்க்கு அன்புதான் ஆதாரம்.  இவ்வாறு, இடம், பொருள், அறிந்து காலத்தோடு செய்யப்படும் உதவி ஞாலத்தினும் பெரிதாகக் கருதப்பட்டும்.

எனவே, யாருக்கு எது தேவை என்று உணர்ந்து உதவும்போதுதான் அந்த உதவி முழுமையானதாக இருக்கும்.  அன்பான செயலால், பெறுபவரும், தருபவரும்  நேர்மையான வகையில் மகிழ்ச்சி அடைவதே சிறந்த மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

எனவே, சுதந்திரமான அன்பே மனிதன் வாழ்வதற்கான ஆதாரம் ஆகும். அத்தகைய தூய்மையான, இனிமையான ‘அன்பை உணர்வதுதான்’ என்றும்  உண்மையான மகிழ்ச்சியாகும்.  இதையே நம் முன்னோர்களும் பலவகையில் வெளிப்படுத்தி, வாழ்ந்து வழிகாட்டியிருக்கிறார்கள்.

 

# நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *