மாறுகின்ற உண்மைகள்:
ஆரம்ப காலத்திலிருந்து பலவிதமான எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லாமலோ அல்லது நேர்மாறாகவோ இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே நமக்குச் சொல்லப்பட்ட நம்பிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, இன்றைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் பகுத்து, அறிந்துகொள்வது காலத்தோடுப் பொருந்தி வாழ உதவும்.
உதாரணமாக, சூரியன் கிழக்கே தோன்றி, மேற்கே மறைகிறது என்று முதன்முதலில் ஒரு குழந்தையிடம் கூறும்போது, பூமியைச் சூரியன் கிழக்கு மேற்காகச் சுற்றுவதுபோல் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது என்ற அறிவியல் உண்மையைச் சில நாட்கள் சென்ற பின்னர் பள்ளிக்கூடத்தில்தான் புரிந்திருக்கலாம்.
அதுபோல, இயல்பாக பெரிய மரத்தைக்கூட தன் கால்களால் தகர்த்துவிடும் சக்தி கொண்ட யானை, அதனுடையக் காலில் கட்டப்பட்டுள்ள மெல்லிய இரும்பு சங்கிலியை அறுத்தெறிய முடியாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும். இதற்குக் காரணம் அது குட்டியாக இருந்தபோது அந்தச் சங்கிலி மிக வலிமையானது என்று அதன் மனதில் ஏற்றப்பட்ட எண்ணமே அதன் நம்பிக்கையாகி விடுவதால், அது வளர்ந்தபின்னும் அந்த மெல்லிய சங்கிலியால் கட்டுண்டு இருக்கிறது.
பத்து வயதில் அணிந்த உடை, இருபது வயதில் பொருந்தாது என்பதுபோல சிறு வயதில் நமக்குக் கற்பிக்கப்பட்ட ஒருசில நம்பிக்கைகள் தற்போதைய அறிவுபூர்வமான நடைமுறைக்கு ஏற்றபடி “நேர்மையோடு” பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு நம் மனதில் புகுத்தப்பட்டிருக்கும் சில நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்து மாற்றுவது வளர்ச்சியின் நீட்சியாகும்.
கோபமும், குணமும்:
அடிக்கிற கைதான் அணைக்கும், கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற வார்த்தைகளை உண்மையென நம்பி, விளைவுகளைச் சிந்திக்காமல் வெளிப்படுத்தப்படும் வீண் கோபம், தேவையற்றப் பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கும். இதனால், நடைமுறையில் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று கூறுவதற்கே ஏதுவாகி விடும்.
அதாவது, ஒருவர் தான் கோபப்படுவதால் அடுத்தவரின் மனதில் தாக்கம் ஏற்படும் என்று நினைப்பது அவரது நம்பிக்கை. ஆனால், நடைமுறையில் சினம், அது கொண்டவரைதான் முதலில் பதம் பார்க்கும். இதனால்தான் “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க” என்று வள்ளுவரும் நடைமுறை வாழ்வியலைக் கூறியுள்ளார்.
விளைவுகள்:
ஊரோடு ஒத்துவாழ வேண்டும் என்று நினைத்து, எல்லாவற்றிற்கும் மற்றவர்களின் அபிப்பிராயங்களைத் தலையில் சுமந்துகொண்டு இருப்பது, வாழ்க்கையில் சுயமாக முடிவெடுக்கும் திறனைக் குறைத்து விடுவதோடு, வாழ்க்கையில் வெற்றிகளையும் திசைதிருப்பிவிடும்.
கணிதத்தில் சுழியத்தின் (zero) விளைவுகளைப் படித்திருப்போம். தனிப்பட்ட சுழியத்திற்கு மதிப்பு இல்லையென்றாலும், அது மற்ற எண்ணுடன் சேர்ந்து இருக்கும்போது தசம மதிப்புக் கூடியிருக்கும்.
சுழியத்தை, வேறு எண்ணுடன் கூட்டினால் அந்த எண்ணின் மதிப்பில் எந்த மாற்றமும் நிகழாது. ஆனால் அதே சுழியத்தை மற்ற எண்ணுடன் பெருக்கினால் அது எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், மொத்த மதிப்பும் சுழியமாகி விடும்.
அதுபோல, அபிப்பிராயங்கள் என்பது மனநிலைக்கு ஏற்ப விளைவுகளை உண்டாக்கும் தன்மை கொண்டது. விளைவுகளைக் கருத்தில் கொண்டு, நல்ல எண்ணத்தோடு, நேர்மறையாகச் சொல்லப்படும் அபிப்பிராயங்கள் வரவேற்கக் கூடியவை. அவ்வாறு இல்லையெனில் கட்டாயம் அவை மறுபரிசீலனைக்கு உட்பட்டவையே.
ஒருசில வேளைகளில் அபிப்பிராயம் சொல்பவர்களே, அனுபவத்தால் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் நிலையும் உருவாகலாம். எனவே, மற்றவர் அபிப்பிராயங்களை முக்கிய முடிவுகளாக எடுத்துக்கொள்வது அறிவுடைமை அன்று.
எனவே, அபிப்பிராயங்கள் எத்தகையதாக இருந்தாலும், அவற்றை ஒரு எல்லையில் நிறுத்தி, அறிவு என்னும் புள்ளியில் வைத்து ஆலோசித்து “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்” காணவேண்டும். பிறகு, அதற்குத் தகுந்த அளவு மரியாதையோடு நடந்து கொள்வது நல்ல விளைவுகளைத் தரும்.
கடின உழைப்பு:
எந்த நாட்டில், எந்தப் பெற்றோருக்கு, எந்த உறவினர்களுக்கு இடையில், எத்தகைய மரபணு சார்ந்தப் பதிவுகளோடு பிறந்திருக்கிறோம் என்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிகழ்வு. ஆனால், அதை நல்லதாகவோ, அல்லதாகவோ நினைத்துப் பார்ப்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
இந்நிலையில் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு தன்னைப் பெருமையாக நினைப்பது, அல்லது தாழ்வாக நினைப்பது இரண்டுமே நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது.
மேலும், கட்டுப்பாட்டில் இல்லாதவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டால், அது தன்னம்பிக்கையின் மீதும், நிகழ்காலத்தில் உள்ள வாய்ப்புகளின் மீதும் கவனம் செலுத்த முடியாத மனத்தடையை உருவாக்கிவிடும். இது நடைமுறையில் செய்ய வேண்டிய முயற்சிகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி விடும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்.
என்று தெய்வப்புலவர் கூறியிருக்கிறார்.
இறைவனின் திருவருள் இருந்தால்தான் எதிலும் முழுமைபெற முடியும் என்பதும் உண்மைதான். சாதாரண மனித முயற்சி என்பது சுழியம் என்றே இருந்தாலும், அவனது இடைவிடாதத் தொடர் முயற்சிகள் தொடர்ந்த சுழியங்களின் வரிசையாக இருந்தாலும், அத்தகைய மனிதனின் கடினமான முயற்சிகளுக்கும், திடமான நம்பிக்கைக்கும் பரிசாக இறைவனின் அருள் முழு எண்ணாக முதலில் வந்து நிற்கும்.
இப்போது, அந்த முழுஎண்ணும் அதைத் தொடர்ந்து வரிசையாக இருக்கும் பூஜ்யங்களும் சேர்ந்து மிகப்பெரிய தசம எண்ணாகக் கிடைக்கும். இது போலவே, நாம் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து செய்யும் கடின முயற்சிகளின் முழுமையான வெற்றியாக அமையும். முறையான உழைப்போடு, மெய்வருத்தி செய்யும் முயற்சிகளுக்குத் தெய்வத்தின் அருள் பரிசாகக் கிடைக்கும்போது, செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியாக மாறும்.
ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும்:
பிலிப்பைன்ஸ் நாட்டில், ரியா புல்லோஸ் (Rhea Bullos) என்ற 11 வயது பள்ளிச் சிறுமி ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உடையவள். 2019ல் பள்ளிக் குழந்தைகளுக்கான சர்வதேச அளவில் நடக்கும் போட்டிக்கான அறிவிப்பைக் கண்டதும் அவளும் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தன் பெயரைப் பதிவு செய்து விட்டு, தினமும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
ஆனால், அவளுக்கு ஓடும்போது அணிந்து கொள்ளும் ஸ்போர்ட்ஸ் ஷூ போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், வெறும் காலிலேயே தினமும் ஓடி பயிற்சிப்பெற்றுக் கொண்டிருந்தாள். சூழ்ந்திருக்கும் சக மாணவர்களின் கேலியும் கிண்டலும் அவளை உறுத்தாத அளவு மனதைத் திடமாக வைத்திருந்தாலும், ஓடுபாதையில் உள்ள சிறு கற்களும், தரையின் வெப்பமும் அவளுடைய கால்களைத் தாக்கின.
இதனால், ஓட்டப்பந்தயப் போட்டியின் போது தன்னுடைய இரு கால்களிலும் (கட்டு நாடாக்கள்) “பேண்டேஜ் டேப்”களை, ஷூ வடிவத்தில் இறுக்கமாகச் சுற்றினாள். பின்னர், தானே கட்டமைத்த அந்தக் காலனியில் NIKE என்று எழுதியதோடு, அதனுடைய (லோகோ) “டிக் மார்க்” யும் வரைந்துகொண்டு போட்டிக்குத் தயாராகி விட்டாள்.
அன்று நடந்த 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஆகிய மூன்று போட்டிகளிலும் கலந்துகொண்டு, மூன்றிலும் தங்கப் பதக்கங்களை வென்றாள். தன்னம்பிக்கை நிறைந்த இவளுடைய Hard Work & Smart Work இரண்டையும் புகைப்படங்களின் மூலம் தெரிந்துகொண்ட, விளையாட்டு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களுடையத் தயாரிப்புகளை இப்போது ரியாவுக்குப் பரிசுகளாக அள்ளித் தருகின்றன.
“திடமான தன்னம்பிக்கையே, தன்னிகரற்ற வெற்றி தரும்” என்று நடைமுறையில் சாதித்துக் காட்டிய ரியா, நம்முடைய எண்ணங்களே நம் வெற்றியின் எல்லைகள் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறாள்.
# நன்றி.