நகைச்சுவை காட்சிகளும், நல்ல கருத்துகளும். Nakaichchuvai Kaatchigalum Nalla Karuththugalum. Comedy Scenes With Concepts.

நடைமுறை:
வாழ்க்கையில் சந்திக்கும் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குச் சான்றோர்கள் கூறிய நெறிகள் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன.  இத்தகைய அரிய கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான கருத்துகளை நடைமுறையோடு புரிந்துகொள்ளவும் முடிகிறது.
கட்டுப்பாடு:
அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு திருடன் தன்  தாயைப் பார்க்கவேண்டும் என அழுகிறான். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் அவனது தன்மையை உணராத அதிகாரி வடிவேலு, தன் கடமையை மறந்து காமெடியன் ஆகிவிடுகிறார்.
தன் கட்டுப்பாட்டில் இருப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.   ஆனால், கட்டுப்பாடே இல்லாமல் நடந்து கொண்டால், (நல்லவர் போல் நடித்து ஆபத்து ஏற்படுத்தும் வஞ்சகர்களால்) தன்னுடைய கண்ணியத்தை இழக்க நேரிடும் என உணர்த்திய அற்புதமான காட்சி.
 
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் அழுகின்ற கண்ணீர், வணங்கும் கைகளுக்குள் இருக்கும் ஆயுதத்தைப் போல ஆபத்தானது என்று வள்ளுவர் கூறுகிறார்.
 
சுய அறிவு:
தாயை இழந்தவனிடம், கவுண்டமணி பேசிய ஆறுதல் வார்த்தைகளைக் காப்பியடித்த செந்தில், சிறிதும் யோசிக்காமல்,  மனைவியை இழந்தவனிடம் பேசியதால் விபரீத விளைவுகளைச்  சந்திக்கிறார்.  உள்ளுணர்வு இல்லாமல் பேசும் அனர்த்தமான பேச்சு, அவமதிப்பை ஏற்படுத்தும் என்று நகைச்சுவையால் விளக்கியக் காட்சி.
சூழ்நிலைக்கேற்ற வகையில் பொருத்தமாக நடந்து கொள்வதுதான் மனிதனின் நடைமுறை அறிவை வெளிப்படுத்தும்.  சுயமாகச் சிந்திக்காமல்  மற்றவர்களைப்போல் பேசுவதும், நடந்து கொள்வதும் முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டும்.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
சபையோரின் மனநிலையை அறிந்துகொள்ளாமல் பேசுபவர்கள், பேசும்வகை தெரியாதவர்கள் மட்டுமின்றி பேசும் திறமையும் இல்லாதவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
கலையாத கவனம்:
 
“டேக் டைவெர்ஷன்” என்று கவனத்தைத் திசைதிருப்பும் காரணிகளிடம் எச்சரிக்கையாக இருந்து, இலட்சியத்தை நோக்கி கவனமாகச் செல்ல வேண்டும் என்ற கருத்துடன் விவேக்கின் நகைச்சுவை.  
 
இவ்வாறு கவனத்தைத் திசைதிருப்பும் பல்வேறு காரணங்களையும் கடந்து ஒரு செயல் நிறைவேறுவதற்கு ஒருநிலைப்பட்ட திடமான மனவுறுதியே  முக்கிய காரணமாக இருக்கும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
உறுதியான செயல் என்பது ஒருவனுடைய மனஉறுதியைக் காட்டுகிறது.  மற்ற காரணங்கள் எல்லாம் அதற்குத் துணையாக அமைவதுதான்.
 
பணிவு:
 
மற்றவர்கள் பேசும்போது அமைதியாகக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.  அத்தகைய பணிவு இல்லாமல், தனக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்பதுபோல் “அதான் தெரியுமே” என்று அலட்டல் காட்டினால், அது மரியாதையைத் தராது.  தங்கவேலு, பூரி செய்ய கற்றுக்கொடுக்கும் காட்சி இதை அருமையாகச் சொல்கிறது.
பணிவோடு இருந்தால்தான் எந்த நுட்பங்களையும் கவனமாகவும், பொறுமையாகவும் கற்றுக்கொள்ள முடியும்.  இதுவே மேலும் பல கூடுதலான நன்மைகளையும் தரும்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பணிவோடு வாழ்வது அனைவருக்கும் நன்மையே தரும்.  அதிலும் பல (நல்ல குணங்களான) செல்வங்களோடு இருப்பவரின் பணிவு மேலும் ஒரு செல்வமாக இருக்கும் என்று பொய்யாமொழிப் புலவர் கூறுகிறார்.
தன்னையறிதல்:
“மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்த” வடிவேலுவின் கதைபோல, கவனிக்கத் தவறும் தனிமனித அணுகுமுறைகளும் வாழ்க்கையின் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதை  உணர்த்தியக் காட்சி.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஒருவேளை நம்முடைய தலையில் ஏற்றப்பட்ட, நாம் நம்பிக்கொண்டிருக்கும் சில எண்ணங்களும், நம்முடைய அணுகுமுறைகளும் கூட காரணமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று அவ்வப்போது ஆராய்ந்து நடந்து கொள்வதுதான் எப்போதும் நன்மையைத் தரும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
செய்யக்கூடாத செயல்களைச் செய்வதனால் விளைவுகள் கெடும்.  அதுபோலவே செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் விட்டாலும் கெடும்.
நிதானம்:
ஒரு சில சமயங்களில் சந்திக்கப்படும் தோல்விகள், நிராகரிப்புகள் போன்றவை “கூடை வைத்திருப்போருக்குப் பெட்ரோமாக்ஸ் லைட் இல்லை”, என்று கவுண்டமணி கூறியது போல அர்த்தமற்ற நிராகரிப்பாகவும் இருக்கலாம்.  அது நிராகரிப்பவரின் இயலாமையினாலோ அல்லது அவருக்குப் பொருத்தமற்ற வாய்ப்பாகக் கருதியதாலோ நிகழ்ந்ததாக  இருக்கலாம்.
எனவே, தோல்விகளும், நிராகரிப்புகளும், வெற்றிகளும் பல கூறுகளால் ஒன்றிணைந்து உருவாவது.  இவை தற்காலிகமானவைதான்.  இவற்றைப் பொறுமையாகக் கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.   இவற்றைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு பொறுமையின்றி துவளுவதோ, துள்ளுவதோ தேவையற்றது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் காட்சி.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
பொறுமையின் உறைவிடமாக இருந்து நிதானமாக நடந்துகொள்பவரைதான் நிறைவான, பக்குவமான மனம் கொண்டவர் என்று உலகம் புகழும்.
சுயவிசாரணை:
கலைவாணரிடம் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம்பேசுவார்.  அப்போது கலைவாணர் உன்னுடைய சட்டை பையில் என்ன இருக்கிறது என்று கேட்பார்.  சில்லறை எவ்வளவு உள்ளது?  பேப்பர் என்றால் அது என்ன பேப்பர்? என்று ஒவ்வொன்றாய் கேட்பார்.   தன்னுடைய சட்டைபையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் (தன்னைப்பற்றி தெரிந்துகொள்ளாமல்) மற்றவரைப் பற்றி ஊர்வம்பு பேசி நேரத்தையும் சிந்தனை சக்தியையும் வீணாக்க வந்தவரிடம், உன்னைப் பற்றி முதலில் தெரிந்துகொள் என்று அறிவுரை கூறி அனுப்புவார்.
அடுத்தவர் சங்கதி என்றால் தெரிந்ததும் தெரியாததும் யூகித்துப் பேசியே பொழுதைக் கழிக்கும் மக்கள்,  தன்னுடைய பலம் என்ன, தன்னுடைய குறை என்ன, எது தேவை என்பதில் கவனம் செலுத்துவதில்லை.  இதை நாகரிகமாக சொன்ன கலைவாணரின் நகைச்சுவை நம் சிந்தனைக்கு விருந்து.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பிறருடைய குற்றத்தைப் போல தன் குற்றத்தையும் காணும் பண்பு மக்களுக்கு இருந்து விட்டால், உலகத்து உயிர்களுக்குத் துன்பமில்லை.
மருந்து:
உடல் சோர்வைப் போக்குவதற்கு ஓய்வு மருந்தாகப் பயன்படுவது போல, மனதின் சோர்வைப் போக்க நாகரிகமான நகைச்சுவை விருந்தாகப் பயன்படுகிறது.   அறிவு தெளிவு பெறவும், ஆக்கத்துடன் செயல்படவும்  சான்றோர்களின் கருத்துகளே ஆற்றல் தரும் சக்தியாக உள்ளது.
மரத்தில் நூறு காக்கைகள் இருந்தாலும் ஒன்றை விரட்டினால் அனைத்துமே பறந்து விடுவது போல, நம்முடைய அணுகுமுறையில் செய்யும் ஒரு சிறிய மாற்றம்கூட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைந்து விடலாம்.
பெரியவர்கள் கூறிய நன்னெறிகள் என்றும் நமக்கு நன்மையளித்து நல்வழி காட்டக் கூடியவை.  இத்தகைய நல்லோர் வழியில் நம் சிந்தனைகளைச் சீர் செய்து சிறப்புடன் வாழ்வோம்.
# நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *