அடையாளம்:
இன்றைய நவீன உலகில் நாம் அனைவரும் சந்திக்கும் கவனச்சிதறல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு சவாலாகவே இருக்கிறது. இது, வயது வித்தியாசமின்றி எல்லோருடைய கவனத்தையும் தன்வசம் ஈர்த்து மனதை மடைமாற்றம் செய்கிறது.
இந்தக் கவனச்சிதறல் முதலில் கவரும் வகையில் மெதுவாக எட்டிப்பார்த்துப் பிறகு மனதையே அடிமைப்படுத்தும் தந்திரத்தோடு செயல்படுகிறது. எனவே, கண்ணைக் கவரும் காரணிகளிடம் (factors) ஆரம்பத்திலேயே விழிப்புடன் இருந்து, அதன் தன்மைகளை ஆராய்ந்து அடையாளம் காணவேண்டியது தனிநபர் பொறுப்பாகி விட்டது.
காரணங்கள்:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்றார் வள்ளுவர். இது உடல் நோய்க்கு மட்டுமல்ல மனதின் பிரச்சனைகளுக்கும் பொருந்தும். கவனச்சிதறல் என்று பொதுவாக ஒரே பெயர் சொன்னாலும், இது ஒவ்வொரு மனிதருக்கும், வெவ்வேறு காரணியாக, வேறுவேறு சூழல்களில் ஏற்படுகின்றது.
இவற்றில் முக்கிய காரணிகளாக நாம் கருதுவது அறிவியல் வளர்ச்சியின் பயனாக, புதிதாக வந்துள்ள தொழில்நுட்பச் சாதனங்களும், வலைதள வாய்ப்புகளும்தான்.
ஏன் இவற்றின் மீது இவ்வளவு வெறுப்பு! இத்தனைக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் இந்தச் சாதனங்கள் செய்யும் சாதகமான செயல்கள் மிக அதிகம். இருந்தும் இவற்றைப் பாதகமான அம்சமாக அனைவரும் கூறுவது எதனால்?
இதற்கு முன்னாலும் பல கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் நம்மை வியக்க வைத்துள்ளன. அதைப்போலவே இப்போது உள்ள வாய்ப்புகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஆனால் இவற்றின் இணைப்பாகத் தோன்றும் சில பக்கவிளைவுகளும், மின்னல் வேகத்தில் பரவும் தகவல்களும்தான் பதட்டத்தை ஏற்படுத்தி கவனத்தைச் சிதறடிக்கின்றன.
வாய்ப்புகள்:
வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான வளர்ச்சிகளைத் தவறாகப் பயன்படுத்தி, அதனால் கவனம் திசைதிரும்பி தடம் மாறியவர்கள் காலம்தோறும் இருந்துள்ளனர். என்றாலும் அதற்கான சூழல்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
பெரும்பாலானவர்கள் புதிய வாய்ப்புகளைக் கட்டுப்பாட்டுடன், நேர்மையாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்து, வழிகாட்டினார்கள். அத்தகைய கட்டுப்பாடின்றி வீழ்ந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்த அளவுதான் இருந்தது. மேலும், எந்தத் துறையாக இருந்தாலும், உழைப்பை ஏணியாகப் பயன்படுத்தி கருத்துடன் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
வருமுன்னர்:
இப்போதுள்ள எல்லைகளற்ற இந்த வலைதள உலகில் வயது, நேரம், இடம், சூழல், அறிமுகம், வேகம், விளைவு என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இப்படி, எதனாலும் கட்டுப்படுத்த முடியாத இந்த உலகம், சின்னஞ்சிறு கைப்பேசிக்குள் அடங்கி விட்டதுதான் தற்போதைய நிலை.
தங்களுடைய வாழ்க்கைதளம் எதுவென்று புரிவதற்குள் வலைதளத்தில் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை நெறிப்படுத்த முடியாமல் பெரியவர்கள் தவிக்கிறார்கள். வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில் ஏற்படும் கவனக் குறைவினால் லேசான தடுமாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
பொருளைத் தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டும் என்பதுபோல் நமக்கு தனிப்பட்ட முறையில் எங்குக் கவனம் மாறுகிறது என்று கவனித்து அந்த இடத்தில் மனதை ஒருமுகப்படுத்தப் பழக வேண்டும்.
கவனச்சிதறல் என்பது புறக்காரணங்களால் ஏற்படுகிறது என்பது ஓரளவு உண்மையாக இருந்தாலும், தன்னிலிருந்து அதை சரி செய்ய முயல்வதுதான் சரியான வழியாக இருக்கும்.
எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு முதலில் நம்மிடம்தான் தேட வேண்டும். எனவே நம்முடைய மனதில் விதைக்கப்படும் “கட்டுப்பாடுதான்” இன்றைக்குத் தேவையான “பாதுகாப்புக்கவசம்”. “எச்சரிக்கை உணர்வும், விழிப்புணர்வும்” தான் இன்று நம்மிடம் இருக்கும் “பாதுகாப்புக் கருவிகள்”.
ஒப்புதல்
உடல்நலம் பாதிக்கப் பட்டவர், தான் குணமாக வேண்டும் என்று நினைத்துச் சிகிச்சைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் எந்த மருந்தும் முழுமையாக வேலை செய்யும். அதுபோல நாமும் உண்மையிலேயே கவனச்சிதறலில் இருந்து விடுபட வேண்டும் என்று உறுதியாக நினைத்து, நம்முடைய சம்மதத்துடன் முயற்சி செய்தால்தான் முழுமையான வெற்றியை நாம் அடைய முடியும்.
கவிஞரின் கவனம்:
புகழ் பெற்ற கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் அவர்கள், ஒருநாள் யமுனை ஆற்றில் பௌர்ணமி நிலவின் அழகை இரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் தோன்றிய சிந்தனைகளைக் கவிதையாக்க நினைத்தார். எனவே, படகில் அமர்ந்தபடி நிலவின் அழகை எழுத ஆரம்பித்தார். ஆனால் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க முடியாமல் சிந்தனை எதனாலோ தடைபட்டது.
தாகூர் தன்னைச் சுற்றி உள்ள சூழலைப்பார்த்தார். படகில் ஒரு அரிக்கன் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நிலவின் அழகை முழுமையாக உணரமுடியாமல் விளக்கொளி தன் கவனத்தைக் கலைக்கிறது என்று உணர்ந்து அந்த விளக்கின் ஒளியை அனைத்து வைத்தார்.
இப்போது அழகான பௌர்ணமி நிலவின் ஒளி அவருடைய மனதில் முழுமையாக ஆக்கிரமித்தது. விளக்கொளி இன்மையால் எழுத்துக்களின் அழகு குறைந்ததோ என்னவோ ஆனால் அவருடைய எண்ணங்களின் அழகு அந்த நிலவைப் போலவே பிரகாசமாக இருந்தது. சிந்தையின் அழகால் சிறந்த கவிதை பிறந்தது.
கவனத்தை ஒருமுகப்படுத்த நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதையே இந்த நிகழ்வு விளக்குகிறது. தாகூரின் சீரிய சிந்தனையைச் சிறிய விளக்குச் சலனத்தை ஏற்படுத்தியது என்பதால் அரிக்கேன் விளக்கு எப்போதுமே கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடியது என்று பொதுவாகக் கூறிவிட முடியுமா.
அவரே, தான் நிலவொளியில் எழுதிய கவிதையைப் பின்னர் திருத்தமாக எழுதுவதற்கு விளக்கொளியைப் பயன்படுத்தி இருக்கலாம். எனவே, கவனச்சிதறலுக்குக் கருவிகள் முழுமையான காரணமல்ல. எல்லாவற்றிற்கும் நேரம், இடம், பொருள் பார்ப்பதுபோலவே கருவிகளுக்கும் பார்த்துச் செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.
மனம் ஒருநிலைப்படுத்துதல்:
கவனச்சிதறலை ஏற்படுத்துவது கருவிகளின் நிரந்தர தன்மையல்ல. அவை பயன்படுத்துபவருக்கு ஏற்ப பலனளிக்கக் கூடியது. அதிக விழிப்புடன் நம் கவனத்தைக் கூர்மை செய்து கொண்டே இருக்க வேண்டிய காலம் இது.
யாருக்கு, எந்த நேரத்தில், எந்த இடத்தில், எது கவனத்தைக் கலைக்கிறது என்பதை உணர்ந்து அவரவர் கூர்மையோடு இருப்பதுதான் நம் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே வழியாகும்.
அறிவியல் வளர்ச்சியையும், தொழில் நுட்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு வெற்றிகரமாக வாழ நினைப்பது சாத்தியமற்ற ஒன்றுதான். ஆனால் அதையே சரியான முறையில் பயன்படுத்துவது சாமர்த்தியமான வாழ்க்கையாக அமையும்.
இன்றைய தொழில் நுட்பங்கள் நமக்குச் செய்யும் நன்மைகளை “முறையாகப் பயன்படுத்துவது நமது கடமை”. அவற்றின் துணை விளைவுகளுக்கு “அடிமை ஆகாமல் இருப்பது என்றும் அறிவுடைமை”.
பயனற்ற கவனஈர்ப்புக் காரணிகளுக்கு அடிமையாகாமல் மனதை ஒருமுகப்படுத்துவதற்கு பயனுள்ள குறிக்கோளே பாதுகாப்பாக இருக்கும். ஆக்கபூர்வமான சிறந்த குறிக்கோளே நம்மை விழிப்போடும் விடுதலையோடும் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது.
# நன்றி.