Clock with grand look
The clock shows that the time is precious even though it is placed in beautiful jewellery.

மினிமலிசம், மேக்சிமலிசம்.Minimalism

மினிமலிசம்:

பல வாய்ப்புகள் வெளிப்படையாக விரிந்திருக்கும் சூழ்நிலையிலும், தேவையானவைகளை மட்டும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து, எளிதாகக் கையாளுவதற்கேற்ற வகையில் சுருக்கமாக அமைத்துக்கொள்வதை Minimalism என்று கூறுகிறோம். 

இதில் தேவையற்றவைகளை அறிந்து முறையாக நீக்குகின்ற விழிப்பான செயல்பாடுகளே, தேவையான செயல்களைச் சரியாகச் செய்வதற்கான கூடுதல் வாய்ப்பாக, வெற்றியைப் பெறுவதற்கான பலமான முயற்சியாகத் துணை நிற்கிறது. 

இந்த அணுகுமுறை பெரும்பாலும் பொருட்கள், உடைகள், துணைப்பொருட்கள் (accessories) என்று பணம் சார்ந்த அல்லது இடம் (space) சார்ந்த முடிவுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். 

இதே அணுகுமுறையை மனதில் அலைமோதும் சிந்தனைகளுக்கும், நேரத்தை விழுங்குகின்ற செயல்பாடுகளுக்கும் பொருத்திப்பார்த்துத் தீர்மானிப்பது, வாழ்க்கையை மேம்படுத்துகின்ற அறிவைப் பெருக்குகின்ற சிறப்பான அணுகுமுறையாக இருக்கும்.

சிந்தனையும், செயலும்:

எதிர்மறையான சிந்தனைகள், கட்டுப்பாட்டில் இல்லாதவற்றின் மீது சுழல்கின்ற சிந்தனைகள், சோர்வை ஏற்படுத்துகின்ற பயனற்ற அதீத சிந்தனைகள் போன்றவை தேவையற்றவை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அவற்றை நீக்குகின்ற அணுகுமுறை மன அமைதிக்கு அவசியமான, சிந்தனைகளின் மினிமலிசம் ஆகும். 

ஒரு நாட்டில் மந்திரிகள் பலர் இருந்து, பலவிதமான ஆலோசனைகள் கூறினாலும், அவற்றைக் கலந்தாலோசித்து, நாட்டிற்கு நன்மை செய்கின்ற வகையில், மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற முடிவுகளைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தும் உரிமையும் பொறுப்பும் மன்னனுக்கே உள்ளது.

அதுபோல, நல்ல மனத்தகுதி உள்ளவர்களின் ஆலோசனைகளை, அனுபவங்களைக் கேட்டுப்பெறுவதோடு,  அவற்றை நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சுயஅறிவோடு சிந்தித்து, நியாயமான வழியாகச் செயல்படுத்துவது, நம்முடைய வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு என உணர்ந்து நம்மை நாம் ஆளுகின்ற சிறப்பான நிர்வாகமாக இருக்கும்.

இவ்வாறு, இந்த நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஆக்கபூர்வமான செயல்களைத் தக்கவைத்து, அவற்றை திறமையாகக் கையாளுவதற்கு ஏற்றவகையில் எளிமையாக அமைத்துக்கொள்வது, வாழ்க்கையின் பொறுப்பை விழிப்போடு ஏற்றுக்கொள்ளும் அறிவாற்றல் உள்ள சிந்தனைகளின் ஆளுமையாகச் செயல்படும்.  

ஆரோக்கியம்:

பலவிதமான பெயர்களோடு இனிப்பு வகைகள் அணிவகுத்து நின்றாலும், அவை சர்க்கரை என்ற சுருக்கமான ஒரு பெயரோடு உடலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உண்பவர் உடல்நிலைக்கேற்ப இயல்பானது, தேவையற்றது, தவிர்க்கவேண்டியது என தீர்மானிக்கப்படுகிறது. 

அவ்வாறே, சமூகத்தில் நடைபெறும் செயல்பாடுகளுக்குப் பல்வேறு பெயர்கள் இருந்தாலும், அந்த நடைமுறைகள் அவசியமா, ஆடம்பரமா, ஆர்பாட்டமா என்பதும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை நிலையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. 

ஆரோக்கியமான உணவு என்பது சத்து நிறைந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அலங்கரிப்பாக இருக்க வேண்டியதில்லை.  அதுபோலவே மகிழ்ச்சி என்பதும் ஆரோக்கியமான மனநிலையின் செயல்பாடாக இருக்க வேண்டுமே தவிர போலியான வெளிப்பாடாக இருக்க வேண்டியதில்லை.

இந்த இரண்டு நிலைகளுமே தேவையற்றதை நீக்குகின்ற ஆரோக்கியம் சார்ந்த கட்டுப்பாடுகளுடன் இயங்கும் வழியாக, எளிமையாக ஏற்றம் தருகின்ற மினிமலிசம் ஆகும்.

சிறப்பு:

திருக்குறள், குறைந்தபட்ச வார்த்தைகளோடு மினிமலிசம் என்ற தோற்றத்தில் வெளிப்பட்டாலும் அது உணர்த்துகின்ற பொருள், மனிதகுலம் உயர்வதற்கு தேவையான சிந்தனைகளின் விஸ்வருபமாக, மேக்ஸிமலிசம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.

உலகம் முழுதும் சிறப்பாக அறியப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களுடைய மனிதநேயம் மிக்க அறிவார்ந்த திறமைகளின் மூலமாக மட்டுமே தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.  இவர்களின் கவனத்தைக் கவரும் வகையில்  பல்வேறுபட்ட நவீன வாய்ப்புகள் பல இருந்தாலும், குறிப்பிட்ட குறிக்கோளின் வெற்றிக்காகக் கவனத்தை ஒருமுகப்படுத்தி மினிமலிசத்தின் சிறப்புக்குச் சாட்சியாக வாழ்ந்துள்ளனர்.

பயனற்ற, முக்கியமில்லாத செயல்களில் நேரத்தை வீணாக்காமல், அந்த நேரத்தை வெற்றிக்கான நேரமாகப் பயன்படுத்தி பலன் அடைந்தவர்களின் சிந்தனையில் விளைவுகள் குறித்து ஏற்பட்ட இந்த கிளாரிட்டியே அவர்களுடய வெற்றிக்கான surityயாக செயல்பட்டிருக்கிறது எனத்தெரிகிறது. 

கணிதத்தில் பூஜ்யம் முதல் ஒன்பது வரை உள்ள எண்கள் மட்டுமே அடிப்படையாக இருந்து உலகின் ஒட்டுமொத்த கணக்கியலையும் நிர்வகிக்க உதவுகின்றன. 

அதுபோல, ஒரு நிலையில் பல வாய்ப்புகளில் உள்ள ஆற்றல் மிக்க செயல்பாடுகளைத் தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்ளும் மினிமலிசம் என்னும் விதை, மற்றொரு நிலையில் வெற்றி எனும் விருட்சத்தின் மேக்சிமம் பலனை அடைவதற்கான அடிப்படை முயற்சியாக இயங்குகிறது. 

மேலும், தெளிவான சிந்தனைகளும், தேர்ந்த செயல்பாடுகளும் வெளிப்படுத்துகின்ற எளிமையின் ஆளுமைதான்  மனநிறைவான வாழ்க்கை எனும் வெற்றியை நடைமுறைபடுத்துகின்றது.

 

#   நன்றி. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *