ஒரு வியாபாரி சந்தையில் வாங்கியப் பொருட்களைக் கழுதையின் மீது வைத்துகொண்டு நடந்து வந்துகொண்டிருந்தான். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் வழியில் இருக்கும் ஒரு சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு, சற்று ஓய்வெடுக்க நினைத்தான்.
எனவே, அந்தச் சத்திரத்தின் முன்பக்கம் ஒரு மரத்தடியில் கழுதையை நிறுத்தி வைத்து அதன் மீது இருந்த மூட்டைகளை இறக்கி வைத்தான். பின்னர், அந்தக் கழுதைக்குத் தேவையான உணவும் நீரும் கொடுத்துவிட்டு அதை அந்த மரத்தில் கட்டுவதற்கு அதனுடைய கயிற்றைத் தேடினான்.
ஆனால் அந்தக் கயிறு வரும்வழியில் எங்கோ விழுந்துவிட்டது. தான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் கழுதை அங்கிருந்து ஓடிவிட்டால் என்ன செய்வது, என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.
அப்போது அங்கு உட்கார்ந்திருந்த வயதானவர் அந்த வியாபாரியின் நிலையைப் புரிந்துகொண்டு, “கழுதையைக் கயிற்றினால் கட்டு”, என்றார். அந்த வியாபாரியோ கட்டுவதற்கு கயிறு இல்லையே என்றான். அதற்கு அந்தப் பெரியவர் “இருப்பதாக நினைத்துக் கட்டு”, என்றார்.
கட்டளைப்போல அவர் கூறுவதைக் கேட்ட வியாபாரி, கயிற்றினால் கட்டுவதுபோல மரத்திலிருந்து கயிறை இழுத்து அதை கழுதையின் கழுத்தில் கட்டி வைத்தான் (கட்டுவதுபோல நடித்தான்).
பின்னர், வியாபாரி சத்திரத்தில் உணவு உண்டு சற்று ஓய்வு எடுத்தபின் வெளியே வந்து பார்த்தான். அப்போதும் அந்தக் கழுதை இருந்த இடத்தில் அப்படியே இருப்பதைக்கண்டு நிம்மதியோடு அருகில் சென்று மறுபடியும் மூட்டைகளை அதன்மீது ஏற்றி வைத்துவிட்டு, அங்கிருந்து நகருமாறு அதன் மேலே தட்டினான்.
ஆனால், அது ஒரு அடிகூட முன்னே நகராமல் அப்படியே இருந்தது. அவன் முன்னோக்கி இழுத்தாலும் கொஞ்சமும் நகராமல் அப்படியே இருந்தது. இதுவரை நன்றாகத்தானே நடந்துவந்தது இப்போது என்ன ஆயிற்று, என்று அவன் குழம்பினான்.
அப்போது அந்தப் பெரியவர் வியாபாரியைப் பார்த்துச் சிரித்தார். “கயிற்றைக் கழற்றாமல் இழுத்தால் அது எப்படி வரும்”, என்றார்.
அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த வியாபாரி, அந்தக் கயிற்றை அவிழ்ப்பதுபோல நடித்ததும், தான் கட்டப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த கழுதை, அதனுடைய நினைவில் இருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவனோடு சேர்ந்து பயணத்தைக் தொடர்ந்தது.
தன்னைச் சுற்றி உண்மையில் என்ன நடக்கிறது எனும் நிகழ்காலத்தின் விழிப்போடு கவனிக்கப்படாத ஒரு சிறிய எண்ணம்கூட, மனதின் நம்பிக்கையாகப் பதிந்துவிடுகிறது. அதுவே, இயல்பான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்ற நிலையில் அவநம்பிக்கையாக, மானசீகக் கட்டாக மாறிவிடுகிறது என்று அப்போதுதான் அந்த வியாபாரிக்குப் புரிந்தது.
மனிதர்களின் மனதிலும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இதுபோன்ற மானசீகக் கட்டுகள் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கலாம். அத்தகைய மனத்தடைகளை நீக்குகின்ற வலிமை உள்ள மாற்றுச் சிந்தனைகளே மகிழ்ச்சியான வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு துணையாகச் செயல்படுகின்ற நேர்மறையான நம்பிக்கைகளை உருவாக்கும்.
*பொதுவாக நடைமுறையில் உள்ள இந்த மாற்றுச் சிந்தனைகளின் பயன்பாடுகளை வருகின்ற பதிவில் சற்று விளக்கமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். மேலும், உங்களுடைய அன்பான ஒத்துழைப்புக்கு மனதார நன்றி கூறுகிறேன்.
# நன்றி.