வருகையும் வளர்ச்சியும்:
தொலைத்தூரம் இருந்தாலும்
நிலைபேசியாக நின்றிருந்து
உரத்தக் குரலில் அன்பைக் கூறியது
உருண்டை வடிவ டயல் தொலைப்பேசி.
நாளும் பழகும் நண்பர் என்றாலும்,
நலமே நயத்தல் உறவு என்றாலும்,
உள்ளே அழைத்துப் பேசியது
செல்லிடப்பேசி எனும் சுருள்ஒயர் தொலைப்பேசி.
ஊரின் தூரம் கணக்கிட்டு,
பட்டியல் போட்டு பிரித்து வைத்து,
பகிர்ந்துகொள்ள உதவியதோ
பூத்தில் இருந்த பொதுத் தொலைப்பேசி.
கையடக்கமாக வந்து, பின்
கையோடு ஒட்டிக்கொண்டு,
கண்களைக் கவர்ந்து, கைதாக்கியது
காலத்தின் வரவான புதிய கைப்பேசி.
அது அத்தியாவசியக் கருவியாக
அவதாரம் எடுத்த கதை ஆன்ட்ராய்டு பேசி.
அந்தஸ்த்தை வெளிப்படுத்த
அடுத்துவந்த துணைக்கருவி ஆப்பிள் பேசி.
முந்தைய செல்ஃபிக்கும் இன்றைய செல்ஃபிக்கும்
முன்னேற்றங்களை எடுத்துரைக்க
தன்னாலான தகுதிகளைத்
தரம் உயர்த்திக் காட்டுகின்ற நவீன செல்பேசி.
ஒரு செல்லில் அடங்கிவிடும்
பலசெல் உயிரினமாம் மனிதனுக்கு,
செல்லும் இடமெல்லாம் சிணுங்குகின்ற
செல்லக் குழந்தையாம் செல்பேசி.
புரிதலுக்கேற்ற பொருள்தரும்
புதுமையான ஓவியம்போல,
பார்ப்பதற்கேற்ற பலன்தரும் பூதம்.
பயனாளர் தகுதிகேற்ப, பணிசெய்யும் துணைப்பேசி.
பேச்சுக்குத் துணையென்று உள்ளே நுழைந்து
ஆல்பம், நூலகம், பொழுதுபோக்கு எனவளர்ந்து,
வங்கி, பரிவர்த்தனை, வழிகாட்டல் என்று நிமிர்ந்து,
அனைத்திலும் அதிகாரம் காட்டும் அதிசயப் பேசி.
அன்பின் தூரம் நீட்டல் அளவையில் இல்லை
அது நினைவுகளை மீட்டல் அளவையில் உள்ளதென,
அன்றாட அனுபவத்தின் நிலையைக் கூறி,
அலைமோதும் உணர்வுகளின் சாட்சியாகும் அலைப்பேசி.
தனியே புலம்புகின்ற நிலையினி இயல்பென
தத்தளிக்கும் மனதிற்கு துணையாகும் உலாப்பேசி.
இயற்கை அறிவை இரண்டாம் நிலையாக்கி,
செயற்கை அறிவின் துணையில் ஒளிரும் திறன்பேசி.
கண்ணுக்கும் கைப்பேசிக்கும் தூரம் அதிகமென,
கண்ணாடிகளில் குடிபெயரும் கண்பேசி.
காலத்தின் வளர்ச்சியாகக் காட்சிகள் கட்டமைத்து,
காத்திருக்கும் வாய்ப்பாகத் திறன்மிகு உணர்ப்பேசி.
வாய்ப்புகளின் வகைகள் இன்னும் வளரும்,
வருகின்ற மாற்றத்தில் ஏற்றமே நிகழும்.
செயற்கை அறிவை ஆளுகின்ற இயற்கை அறிவே
வருங்கால நடைமுறைக்கு உதவும் நல்லறிவாக மலரும்.
# நன்றி.