நினைவுகளின் வாசனை:
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது. அவர்களுள் சிலரை நாம் கவனிக்கிறோம் பலரைக் கவனிக்க முடியாமல் விட்டுவிடுகிறோம். அவ்வாறு நாம் கவனித்த மனிதர்கள் நமக்குள் சில சிந்தனை மாற்றங்களைச் செய்திருந்தால் அவர்கள் நம்முடைய நினைவில் ஆழமாகப் பதிந்து நம்மோடு பயணிப்பவர்களாக இருப்பார்கள்.
நமக்குள் நடக்கும் சிந்தனை மாற்றங்களுக்கு நண்பர்கள் முக்கியமான காரணமாக இருப்பார்கள் என்பதை உலகமே கூறுகிறது. அதைப்போலவே, எனக்குள் ஏற்பட்ட சில புரிதல்களுக்கு விதைகளாக என்னுடைய தோழிகளின் அம்மாக்களும் இருந்தார்கள்.
அந்தவகையில், தோழிகளின் அம்மாக்கள் மூலமாகக் கிடைத்த அனுபவங்களின் வரிசையில், இன்றும் என் நினைவில் இருக்கும் முதல் வாசனையை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
சுமதியின் அம்மா:
நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாலை விளையாடுவதற்காக நான்கைந்து வீடுகள் தள்ளியிருந்த சுமதியின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவள் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
கிணற்றடியில் ஓரமாக இருந்த சிமெண்ட் தொட்டியிலிருந்த தண்ணீரைக் குவளையில் முகந்து, ஒருபக்கம் கையில் வடிகட்டுவதுபோல அவள் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதை இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நீயும் ஊற்றுகிறாயா? என்று கேட்டபடி மற்றொரு குவளையை நீட்டிய சுமதியிடமிருந்து உற்சாகமாக வாங்கி நானும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினேன்.
அந்தப் பெரிய பூந்தோட்டத்தில் முதல்முறையாகத் தண்ணீர் ஊற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சுமதியும் நானும் தண்ணீர் குவளையோடு ஓடிஓடி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியதில், நான் அணிந்திருந்த அரைப்பாவாடை தொப்பலாக நனைந்துபோயிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். “எங்கே விளையாடினாலும் கிணற்றடிக்குப் போகக்கூடாது”, என்று சொல்லியிருந்த என் அம்மாவின் நினைவு வந்ததும், கிணற்றடிக்குப் போனதாக நினைத்துத் திட்டுவார்களோ என்ற பயம் வந்தது.
அதையே மெதுவாக சுமதியிடம் கூற, அவள் அவளுடைய அம்மாவிடம் கூறினாள். உடனே சுமதியின் அம்மா, என்னுடைய ஈரமான உடையை நன்றாக அழுத்திப் பிழிந்துவிட்டு, ஹாலில் உட்காரச் சொல்லி உடையை உலரவைக்க டேபிள் ஃபேனை அருகில் வைத்து, “சாமியை நினைச்சபடி ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்திரும்மா”, என்று கூறிவிட்டு, ஒரு சாமிபாட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு என் எதிரில் உட்கார்ந்து அந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்.
சில நிமிடங்கள் கழித்துப் பாட்டுப்பாடி முடித்ததும், “இப்போ கொஞ்சம் ஆறிவிட்டது, இனிமே உங்க அம்மா திட்டமாட்டார்”, என்று கூறி அனுப்பினார். மெதுவாக நடந்து வீட்டிற்கு வந்து உள்ளே எட்டிப் பார்த்தால் அம்மா அடுப்படி வேலையில் கவனமாக இருந்தார். வழக்கமாக, ஏன் இவ்வளவு நேரம், எங்கே போய் விளையாடினே, என ஏதோ ஒரு கேள்வி கேட்கும் அம்மா அன்று அமைதியாக இருந்தார்.
சற்று ஆச்சரியத்தோடு உள்ளே சென்றால் அங்கு என்னுடைய அப்பா இருந்தார், அம்மா கேட்காத கேள்விகளை அப்பா கேட்டார். உடனே அவர் அருகில் அமர்ந்து, சுமதி வீட்டிற்கு சென்றது முதல் நடந்த அனைத்தையும் அப்பாவிடம் ஒன்று விடாமல் கூறினேன். அதோடு நிறுத்தாமல் அந்தப் பாட்டிற்கு பெரிய சக்தி இருக்கிறது என்று புதிதாக ஏற்பட்ட அனுபவத்தை ஆச்சரியமாகக் கூறினேன்.
நான் சொன்னதை முழுமையாகக் கேட்ட என் அப்பா “அவங்க, சாமிப்பாட்டு மட்டும் பாடிட்டு விட்டுடல. முதல்ல துணியைப் பிழிஞ்சு, அது உலர வைக்க ஃபேன் போட்டு, அது காயறதுக்கு ஆகுற நேரம் நீ அமைதியா இருக்க ஒரு நம்பிக்கையைக் கொடுத்து இருக்காங்க. இதுல சரியான செயலும், அதுக்கு ஆகுற நேரமும், அது நடக்கிற வரைக்கும் தைரியம் தர நம்பிக்கையும் சேர்ந்து இருக்கு”.
“சாமிக்கு அந்தப் பாட்டும் புடிக்கும், அதைவிட நடந்த எதுவும் மறைக்காம நீ சொன்ன உண்மையும் சாமிக்கு ரொம்ப புடிக்கும்”, என்று என் அப்பா தந்த விளக்கம், பல நேரங்களில் பல சூழ்நிலைகளில் என்னை வழிநடத்தி இருக்கிறது என்பதால் இந்த நிகழ்வு எனக்குள் நன்றாகப் பதிந்துவிட்டது.
சூழ்நிலைக்கேற்ற அறிவுபூர்வமான தகுந்த செயல்பாடுகளும், மனப்பூர்வமான நேர்மறையான நம்பிக்கையும் இந்தப் பிரபஞ்சத்தில் இணைந்து நமக்குத் தேவையான உண்மையான வெற்றிகளாக நிறைவேறும் என்ற ஒரு நல்ல பாடம் கற்றுக்கொள்ள காரணமாக இருந்த என் தோழியின் அம்மாவுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன்.
# நன்றி.